(ஹி..ஹி ராஜா,ராணி படம் ஒன்னும் கிடைக்கலை...)
முன்னோட்டம்:
மருதநாயகம் என்கிற கான்சாகிப் முகம்மது யூசப் கான் , இந்திய வரலாற்றில் ஹைதர் அலிக்கு அடுத்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் சிரமம் கொடுத்த வீரன் , முன்னால் நண்பன் என ஆங்கில அதிகாரிகளாலும், வரலாற்று ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்டுள்ள ஒரு வீரன். அப்படிப்பட்டவனது அக்கால ஒரு ஓவியம் கூட கிடையாது என சொல்கிறார்கள், இப்போதுள்ள ஓவியங்கள் எல்லாம் பிற்காலத்தில் வறையப்பட்டவையே.ஆங்கிலேயருக்கு நண்பனாக இருந்து எதிரியாக மாறி பின்னர் அவரது 39 ஆம் வயதிலேயே துரோகப்பட்டம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டி எறியப்பட்ட சோக வரலாறு உடையவன்.
இளமைக்காலம்:
இனிமேல் யூசப் கான் என்றே அழைப்போம், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகேயுள்ள பனையூரில் சைவ வேளாள குடும்பத்தில் கி.பி 1725 இல் பிறந்ததாக சொல்லப்படுகிறது. சரியான ஆண்டு தெரியாது, பெற்றோர் பெயரும் தெரியாது, அவரது இளமைக்காலம் பற்றிய விவரம் எதுவுமில்லை என வ்ரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இளம் வயதில் படிக்காமல் சண்டியர் தனம் செய்துக்கொண்டு முரட்டுத்தனமாக ஊர் சுற்றியதால் ஊரார் பொது தண்டனைக்கொடுத்து அதனால் ஊரை விட்டு ஓடியதாகவும், அவரே கோபித்துக்கொண்டு புதுவைக்கு ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கு தான் இஸ்லாம் மதத்தினை தழுவி " முகமது யூசப் கான்" எனப்பெயர் மாற்றிக்கொண்டார்.அப்போது மாஷா (அ) மெர்சியா என்ற போர்த்துக்கீசிய-இந்திய பெண்ணை மணந்துக்கொண்டார்.
புதுவையில் ,படகு ஓட்டுதல், தையல் தொழில், சித்த மருத்துவர் என எண்ணம் போல வேலை செய்து காலம் ஓட்டியிருக்கிறார், பின்னர் புதுவையின் அப்போதைய கவர்னர் மான்சியே ஜாக்கஸ் லா என்பவர் வீட்டில் பணியாளராக சேர்ந்து சில காலம்(3 ஆண்டுகள்) பணிப்புரிந்துள்ளார்.
யூசுப் கான் புதுவையில் வேலை செய்துக்கொண்டிருக்கட்டும், அதற்கிடையே தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் அப்போது நிலவிய அரசியல் ,பகைமைகள், போட்டிகள், இவற்றினை வைத்து வெள்ளையைர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததை எல்லாம் சுருக்கமாக பார்க்கலாம். அப்போது தான் கான் சாகிப் எப்படி அரசியல் மற்றும் ஆட்சியில் முன்னேறி ஒரு வீரனாக பரிணாமம் அடைந்து , வீரனாகவே சதியால் வீழ்ந்தான் என்பது புலப்படும்.
தென்னிந்திய ஆட்சி சூழல்.
(எஞ்சியுள்ள கோட்டையின் பகுதி)
மதுரை நாயக்கர்களில் கடைசியாக ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மறைவுக்கு ,பின் அவரது இளம் விதவை மனைவி "ராணி மீனாக்ஷி" வாரிசு இல்லாமையால் தத்து எடுத்த புத்திரன் சார்பாக ஆள்வதற்கு முன் வந்தார்.அவருக்கு போட்டியாக தத்து புத்திரனின் தந்தை "வங்காரு(பங்காரு) திருமலை நாயக்கர் அரசாட்சி உரிமைக்கோரி சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.
மதுரை நாயக்கர்களுக்கு கீழ் 32 பாளையங்கள் இருந்தன அவர்களிடையே மறவர் பாளையம், தெலுகு நாயக்கர் பாளையம் என பிரிவினையும் ,சண்டையும் காலம் காலமாக ஓடிக்கொண்டிருந்தது.
மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானம் திருநெல்வேலிக்குட்பட்ட களக்காட்டிற்கு உரிமை கோரி ஒரு சண்டையிட்டு வந்தது.
எனவே தென் தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையும் சண்டையும் வழக்கமான ஒன்றாக இருந்த காலம் அது.
அப்போதைய காலக்கட்டத்தில் மதுரை நாயக்கர்கள் ,ஆர்காட் நாவாப்பிற்கும், நவாப் ஹைதராபாத் நிஜாமுக்கும், நிஜாம் தில்லி சுல்தானுக்கும் வரி செலுத்தக்கட்டுப்பட்டவர்கள்.
அப்போதைய ஆட்சியாளர்கள்,மற்றும் உறவின் முறைகள்:
ஆர்காட் நாவப்: முகம்மது அன்வருதீன் அலிகான், ,அவர் மகன்கள் முகமது அலிகான் வாலாஜா, மாபூஸ் கான்,அப்துல் ரஹீம் ஆகியோர்.
கர்நாடிக் நவாப் ஆக தோஸ்த் அலிகான்,அவரது மகன் சப்தர் அலிகான்,மருமகன் சந்தா சாகிப் ,ஆர்காட் நவாப்பிற்கு கீழ் ஆட்சியில் இருந்தார்.
சந்தா சாஹிப் ,அவரது மகன் ரசா அலிகான்,
(மேற்கண்ட பெயர்கள் பெயர்கள் அடிக்கடி புழங்கும் என்பதால் பட்டியலிட்டுள்ளேன்)
டெல்லி சுல்தான் வலுவிழந்ததால் ஹைதராபாத் நிஜாம் "நிஜாம் உல் முல்க்" தன்னாட்சிப்பெற்றவராக செயல்ப்பட ஆரம்பித்தார் ,அதே போல ஆர்காட் நவாப்பும் தன்னாட்சிப்பெற்றவர்களாக செயல்பட்டார். ஆர்காட் நவாப் போலவே கர்நாடிக் நவாப் என மைசூர் மையமாக கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்கள்.
இந்த உறவினர்களான இரண்டு நவாப்புகளுக்கிடையேயும் பகை உண்டு ஆனால் நேரடியாக மோதாமல் ,காலத்திற்கு காத்திருந்தார்கள், இவர்கள் இருவரையும் அடக்க நிஜாம் காலம் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கிழக்கிந்திய கம்பெனி இறங்கியிருந்த காலம் அது.
இப்படியான குழப்பமான தென்னிந்திய அரசியல் சூழலில் , கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு அஸ்திவாரத்தினை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்தவர் இராபர்ட் கிளைவ், அவரின் அப்போதைய வெற்றியில் பெரும் பங்கு வகித்தது வேறு யாரும் அல்ல கான் சாகிப் யூசப் கானே ஆகும்.ஆனால் வரலாற்றில் இராபட் கிளைவிற்கு கிடைத்த புகழும் பெருமையும் கான்சாகிப்பிற்கு கிடைத்ததா என்றால் இல்லை எனலாம். வெகு சில நூல்களும் ஆவணங்களுமே கான் சாகிப்பினைப்பற்றி அறிய கிடைக்கிறது.
கான் சாகிப்பின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பின்னர் காணலாம்.
தொடரும்.
------
பின் குறிப்பு:
கீழ்கண்ட நூல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்நூல்களை தரவிறக்கம் செய்ய கிடைக்கவில்லை, ஆனால் கூகிள் புக் போன்றவற்றில் படிக்கலாம். History of Tinnevelly by R.Caldwell நூலினை பதிவில் பிடிஎப் ஆக இணைத்துள்ளேன் ,பொறுமை உள்ளவர்கள் படித்துப்பார்க்கலாம் :-))
#History of Tinnevelly by R.Caldwell (Bishop Robert Caldwell)
#Yusuf Khan: the rebel commandant By Samuel Charles Hill
#கான் சாகிப் சண்டை- நா.வானமாமலை, வெளியீடு மதுரைக்காமராஜர் பல்கலை.
#தகவல் மற்றும் படங்கள், கூகிள்,மற்றும் கூகிள் புக்,நன்றி!
------------------------
History of Tinnevelly by R.Caldwell :
-------
-----------
பிற்சேர்க்கை:-
எனது சில சரித்திர (தரித்திரம்?)பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பினை ,இணைத்துள்ளேன், ஆர்வமுள்ளவர்கள் படித்து பாருங்கள், ஆனால் அங்கே போய் பின்னூட்டம் போட்டு என்னையை அலையவிடாதிங்க ராசா...எதா இருந்தாலும் இங்கணக்குள்ள பேசித்தீர்த்துப்போம் :-))
# செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!
*****