Thursday, June 22, 2006

ஆராரோ ஆறு யாரோ ....



ன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று பென்ச் மேல் நிக்க வைக்கும் டீச்சர் போல் எங்கே அந்த ஆறு என்று என்னை கடுமையாக விரட்டி விரட்டிக் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடாங்க பொன்ஸ்(உன்னை எல்லாம் ஆறு போட சொல்லி கூப்பிடனே என் புத்திய... அப்படினு புலம்புறாங்க) ,இதுக்கு மேலே தாமதம் செய்தால் யானைக்காலால் இடறி சிரச்சேதம் செய்தாலும் செய்வார்கள் என்று உடனே போட்டு விட்டேன் எனது ஆறை.ஒரு வவ்வாலையும் ஆட்டத்திற்கு அழைத்தற்கு நன்றி! ஆர்.டி.ஓ கிட்டே கூட 8 போட்டு லைசென்ஸ் எளிதாக வாங்கிடலாம் போல இருக்கு இந்த ஆறு செமையா படுத்துது.ஒரு தடவை தட்டச்சு செய்து பிளாக்கர் சொதப்பலால் காணாம போய்டுச்சு (சி.பி.ஐ கிட்டெ தேட சொல்லனும்)ஒரு வழியா நானும் களத்தில் ஆறோட குதிச்சுட்டேன்!

I)பிடித்த நூல்கள்/எழுத்தாளர்கள்:

1)காதெலுனும் தீவினிலே- குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி:

குமுதத்தில் தொடராக வந்த நாவல்.குமுதம் ஆசிரியர் அதிகம் எழுதிக்குவிப்பவர் அல்ல ஆனால் எழுதிய சிலக்கதைகளில் முத்திரைப்பதித்தவர்.ஏழைக்காதலன் பணக்காரப்பெண்ணை காதலிக்கும் எவர் கிரீன் பார்முலா தான் ஆனால் வித்தியாசமா இருக்கும்.

2)சங்கர்லால் கதைகள்- தமிழ்வாணன்:

தமிழ்வாணனின் தொப்பி,கருப்புக்கண்ணாடி படு பிரசித்தம் அவரது சங்கர்லால் போல. தமிழ் நாட்டின் ஷெர்லாக் ஹோம்ஸ் சங்கர்லால்.அடிக்கடி தேநீர் அருந்துவது ,சத்தம் கேட்காத ரப்பர் காலணி என்று ஒரு மார்க்கமான துப்பறியும் நிபுணர் ஆக வருவர்.நியுயார்க்கில் சங்கர்லால், ஹாங்காங்கில் சங்கர்லால் என உலகம் சுற்றி துப்பறிந்தவர்.

3)கடல் புறா - சான்டில்யன்:

சாண்டில்யனின் அனைத்து நாவல்களும் பிடிக்கும் ,அதுவும் அவரது பெண்களைப்பற்றிய வர்ணனை தீப்பிடிக்க வைக்கும்.புரவி,மரக்கலம் எல்லாம் இல்லாமல் ஒரு சமூக நாவல் கூட எழுதியுள்ளார் படித்துள்ளேன் பெயர் நினைவில்லை.இவரைப் பின்பற்றி கோவி.மணிசேகரன், மு.மேத்தா(சோழ தீபம்) எல்லாம் எழுதிப்பார்த்தார்கள் சாண்டில்யனின் நிழலை கூட தொடமுடியவில்லை.

4)கரித்துண்டு- மு.வரதராசன்:

கரித்துண்டு சாலையோரத்தில் படம் வரைந்து ஜீவனம் செய்யும் ஒரு ஓவியனின் கதை.இதில் ஒரு உளவியலை சொல்வார் அவன் வரையும் படங்களில் கால் இருக்காது ஏனெனில் அவனுக்கும் கால் இல்லை என.இப்பொழுதும் சாலையில் படம் வரைந்து காசு கேட்கும் ஓவியர்களைப்பார்த்தால் இந்த கதை தான் நிழலாடும்.பெரும்பாலும் கடவுள் படங்களையே வரைகிறார்கள் இத்தகைய ஓவியர்கள்

5)சுஜாதா கதைகள்:

இவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை சகலகலா வல்லவர்.இவரின் அனைத்து கதைகளும் பிடிக்கும். ஸ்ரிரங்கத்து தேவதைகள் கதைகள் சிலிர்ப்பானவை.சுஜாதாவும் மெக்ஸிகோ சலவைக்காரியும் பிரிக்க முடியாதவர்கள் :-)).விஞ்ஞானக்கதைகளில் வித்தகர்.கணேஷ்- வசந்த் என்ற இரட்டையர்களை வைத்துக்கொண்டு சமகாலத்தையும் பேசுவார் சோழர் காலத்தில் பெண்கள் மார்கச்சை அணிவதில்லையாம் பாஸ் என்றும் ஜொள்ளுவார் வசந்த் மூலமாக!

6)வீரப்பிரதாபன் கதைகள்- வாண்டுமாமா:

வாண்டுமாமா என்ற குழந்தைகள் கதாசிரியர் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஜே.கே ரவ்லிங் கின் ஹாரிப்பாட்டர்களுக்கு எல்லாம் தாத்தா இவர்.வீரப்பிரதாபனின் குதிரையின் காதில் ஒரு மந்திரம் சொன்னால் வானில் பறக்கும்.ஒரு குளிகையை வாயில் அடக்கிக் கொண்டால் மாயமாக மறையலாம். ஆலோசனை சொல்ல கூட ஒரு கட்டை விரல் சைஸ் குள்ளன் வேறு இருப்பான்.

II) பிடித்த திரைப்படங்கள்

1)கர்ணன் - சிவாஜி:

சிவாஜியின் கலக்கலான நடிப்பில் வந்த படம்.கர்ணன் கதாப்பாத்திரம் ஒரு சூழ்னிலைக் கைதி அதனை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பர்

2) முள்ளும் மலரும்-ரஜினி:

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற கிரீடம் எல்லாம் சூட்டப்படாத காலத்திய படம் இயல்பான நடிப்பைக் காட்டி இருப்பார். செந்தாழம் பூவில் ...என்ற பாடல் கேட்டால் காதுகளை விட்டு நீங்காது ஒலிக்கும்

3)ரத்தக்கண்ணீர்-எம்.ஆர்.ராதா :

வில்லத்தனமாக நடித்தே சமூகத்திற்கு மெஸ்ஸேஜ் தந்தவர்.அள்ளி அள்ளி கொடுத்தேனே அடியே காந்தா ... வசனமும் குற்றம் புரிந்தவன் ..பாடலும் மறக்க முடியாதவை

4)ஒரு தலை ராகம்:

சோகமான காதலை இனிமையான பாடல்களுடன் சொன்னப் படம் .இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ராஜேந்தரா இப்படியெல்லாம் படம் எடுத்தார் என்று ஆச்சரியப்படுவார்கள்.இப்போது முரளி செய்த வேலையை அப்போது செய்தவர் சங்கர்

5) மூன்றாம் பிறை-கமல்:

உணர்வுப்பூர்வமான படம், கமலின் கிளைமாக்ஸ் நடிப்பு பிரமாதம் என்பார்கள் ஆனால் அந்த கிளைமாக்ஸ் எனக்கு நாடகத்தனமாகவே தோன்றியது. இயக்குனர்களை கமல் இயக்காத காலத்தில் வந்த படம் என்பதால் பாலுமகேந்திராவின் இயக்கதில் ராஜாவின் இசையில் இயல்பாக இருக்கும் .கண்ணே கலைமானே... எந்த காலத்திலும் தெவிட்டாத பாடல்

6)காதலுக்கு மரியாதை-விஜய் :

காதலியுடன் கனவுப்பாட்டு பாடும் போது ,அது வரைக் குடும்ப குத்து விளக்காக காட்டிய நாயகியை குறைந்த பட்ச உடையில் ஆடவிடுவார்கள்.அப்படியில்லாமல் நாகரீகமாக காதலை சொல்லி மரியாதை செய்து மரியாதை வாங்கிய படம்.என்னை தாலாட்ட வருவாளா... பாடல் காதுகளுக்கு உண்மையான தாலாட்டு.

III)பிடித்த விளையாட்டு

1)கோலிக்குண்டு :

கோலிகுண்டில் பேந்தா என்று ஒரு வகை சுவற்றுக்கு பக்கத்தில் செவ்வக பெட்டி போல கோடு போட்டு இரண்டு சின்ன கோலி ஒரு பெரிய கோலி வைத்து ஆடுவார்கள் அதில் அய்யா சூரப்புலி. ஒலிப்பிக்கில் இதை எல்லாம் சேர்க்க மாட்டேன்கிறார்கள். சேர்த்தால் ஒரு தங்கம் நிச்சயம்.ஆட்ட விதி, பந்தய தொகை என சந்தேகம் இருந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்!

2)காத்தாடி விடுவது:

காத்தாடி விட்டு டீல் விடுவதிலும் எக்ஸ்பெர்ட் தான். இப்போ கூட பலரது வலைப்பதிவில் போய் பின்னூட்டமிட்டு டீல் விடுவதெல்லாம் அங்கே கத்துகிட்டது தான் :-))

3)கிரிக்கெட்:

கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் நாம். அதிலும் ஸ்பெஷல் ஒரு ஓவரில் 3 பந்துகளை வலது கையாலும் 3 பந்துகளை இடது கையாலும் வீசி ரொம்ப டார்ச்சர் தருவேன்.(எனக்கு நோ பால் தந்துடுவானுங்க ரூல்ஸ் தெரியாத தத்திங்க)

4)சதுரங்கம்:

விஸ்வநாதன் ஆனந்த் வரவில்லை என்றால் அவர் இடத்தை நான் தான் நிரப்பி இருப்பேன் :-))

5)டேபிள் டென்னிஸ்: இந்த இரண்டு விளையாட்டும் நேரம் கிடைத்தால் ஆடுவது.
6)பேட்மின்டன்

IV)பிடித்த உணவு

1) பழைய சாதம், மோர், மாங்கா ஊறுகாய்:

மோர் ஊத்தி பழைய சாதத்திற்கு மாங்கா ஊறுகாய் தொட்டுகிடு சாப்டா ஜம்ம்னு இருக்கும். உடம்புக்கும் நல்லது.


2)முட்டை தோசை:

முட்டை தோசை மேல மிளகு பொடி தூவி ,காரசட்னி வைத்துகொண்டு சாப்டா சும்ம நச்சுனு இருக்கும்

3) இட்லி காரசட்னி:

இட்லி கூட கார சட்னி இல்லைனா கத்திரிக்கா கொத்ஸ்து இருந்தா ஒரு டஜன் இட்லி சகஜமா உள்ள இறங்கும்.

4)மாகி நூடுல்ஸ்(நானே செய்வதால் நல்லா இருக்கும்):

ஆபாத்பாந்தவன் இந்த மாகி நூடில்ஸ் அதனாலேயே நமக்கு புடிக்கும்

5)ரசம் சாதம் -தக்காளி ரசம் அரிசி வத்தல் அல்லது உருளை கிழங்கு வருவல். எதேஷ்டம். நல்லா எளிதா ஜீரணம் ஆகும்.

6)பிரெட் ஆம்லெட் :

இதுவும் அப்படி தான் எப்போ வேனா பசிக்கு உடனே தயார் ஆகிடும் சமயத்தில சைட் டிஷ் ஆகவும் பயன்படும்.

V)பிடித்த பானங்கள்:

1)ஏலக்காய் போட்ட டீ:

மழைக்காலத்திலே கொதிக்க கொதிக்க ஊதி ஊதி குடிக்கணும். தம் டீ என்று கேன் ல இருக்க டீ சொல்வாங்க நாங்க எல்லாம் ஒரு தம் அடிச்சுட்டு டீ குடிக்கிற ஆளுங்க!(கடைசில மறக்காம ஒரு ஹால்ஸ் இல்லைனா மெந்தோ போட்டுகணும் வாய்ல)

2) சுக்கு காபி/பிளாக் காபி:

சுக்கு காபியும் தொண்டைக்கு இதமானது. வீட்டில போட்டு குடிக்கிறது சமயத்தில ரோட்ல சைக்கிளில் சுக்கு காபி வித்துகிட்டு போவங்க அதையும் வாங்கி குடிக்கிறது.(அவங்க எப்படி போடுவாங்கனு ஆராய்ச்சிலாம் பண்ணா குடிக்க முடியாது)

3) சாதம் வடித்த கஞ்சி:

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சூடான கஞ்சி தண்ணி குடிக்கிறது உண்டு. சாதத்தில இருக்க சத்தெல்லாம் தண்ணில போகுது அதனால அதை மீண்டும் அடைய ஒரு வழி. சூப்பரா இருக்கும்

4)மோரில் எலுமிச்சம் பழம் பிழிந்து:

இப்படிக்குடித்தால் உடல் குளிர்சியடையும் ,காலையில் வெறும் வயிற்றில் குடிக்கணும்.

5)ராயல் சேலஞ்ச் (விஸ்கி):

நம்ம வசதிக்கு இதான் சரிப்படும் அயல்னாட்டு சரக்குலாம் கைய கடிக்கும். இதிலும் நான் பல பரிசோதனைகள் செய்து இருக்கேன் அதெல்லாம் சொன்னா இடம் போதாது. சாம்பிளுக்கு சில. மிக்ஸிங்கு கோக்/பெப்சி லாம் பயன்படுத்த மாட்டேன் ,கொய்யா ஜூஸ்,(பொன்ஸ் உங்களுக்கும் கொய்யா ஜூஸ் மட்டும் தானே பேவரைட்) ஆப்பிள் ஜூஸ், மாதுளம் ஜூஸ் என்று பழச்சாறுகளை தான் பயன் படுத்துவேன்.
ஆல்கஹாலின் தீமையை குறைக்க :-))

ஒரு நாள் கொஞ்சம் வித்தியாசமாக குளுக்கோஸ் ஆரஞ்ச் கலந்து கூட குடிச்சாச்சு (இப்படி குடித்தா அதிகமா கிக் வந்து தூக்கிடும் கவனமா ட்ரை பண்ணனும் )

6)புல்லட் பீர்:

புல்லட் பீர் நல்லா ஸ்ட்ராங்க் ஆக இருக்கும் சமயத்துல அதுல வே சரக்கையும் மிக்ஸ் பண்ணி இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்க் ஆக்கிடுவேன் :-))

VI) அழைக்க விரும்பும் ஆறு

1)சுப்பிரமணிய பாரதி
2)இராமலிங்க அடிகளார்
3)கவிஞர் கண்ண தாசன்
4)நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ்
5)ஆல்பிரெட் ஐன்ஸ்டீன்
6)நெப்போலியன் போனபார்ட்.

இவர்களை எல்லாம் அழைக்க முடியாது ,அழைத்தாலும் வரமுடியாத இடத்தில் இருக்கிறார்கள்.வலைபதிவுலாம் இல்லாத காலத்திலேயே நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க!
எனவே வலையுலகில் இருக்கும் ஆறு பேரை அழைக்கிறேன்..

1)வெளிகண்ட நாதர்
2)திராவிடதமிழர்கள்

3)பத்ரி
4)மா.சிவக்குமார்
5)யாத்திரிகன்
6)பாடும் நிலா பாலு சுந்தர்

இப்படி ஆறு பேரை அழைப்பதில் தான் பெரும் சிக்கலே யாரை அழைக்க ,விட என முடிவெடுக்க முடியவில்லை.முன்பே சிலரை அழைத்து விட்டார்கள். எனவே என்னால் முடிந்த வரை ஒரு 6 பேரை அழைக்கிறேன் பெரிய மனசு பண்ணி வந்து உதவுங்கள்.