Tuesday, September 18, 2012

KKNP-கூடங்குளம் அணு உலை அரசியல்.



அணு சக்தி வேண்டுமா? வேண்டாமா ? என்றக்கேள்விக்கான விடையை கண்டறிவது கடினம் இல்லை ஆனால் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பதிலை சொல்வதில் தான் உண்மையான சவாலே இருக்கிறது.

சென்னையில் இருப்பவர், கூடங்குளத்தில் இருப்பவர், தினந்தந்தி படித்தவர், இந்து, டெக்கான் குரோனிக்கல் போன்றவற்றை வாசித்தவர்,சன் ,ஸ்டார் ,பிபிசி என தொலைக்காட்சி பார்ப்பவர்கள், அடுத்தவர்கள் பேசியதை ஐந்து நிமிடம் செவிமடுத்தே ஞானம் பெற்றவர்கள், வலைப்பதிவில் எழுதியவர்கள், எழுதியதைப்படித்தவர்கள், படிக்காமலே நல்ல பகிர்வு ,த.ம.9 என பின்னூட்டியவர்கள் , என சகலருக்கும் அணு உலைக்குறித்தான அறிவு தலையை குலுக்கினால் பொல பொலவென கொட்டும் அளவுக்கு பெருகிய சூழலில் ,நானும் கொஞ்சம் கொட்டலாம்னு பார்க்கிறேன் :-))



இந்திய அணு சக்திக்கான முதல் அடி 1944 இல் ஹோமி பாபா, ஜாம்ஷெட்ஜி டாடா கூட்டணியில் துவங்கி , 1956 இல் ஒரு செயல்படும் ஆய்வு அணு உலையை ,ஆசியாவிலேயே முதல் நாடாக இந்தியா தான் அமைத்தது என்ற பெருமையும் பெற்று பல ஆண்டுகள் ஓடியாச்சு.

இப்போது மொத்தம் 20 அணு உலைகள் செயல் பாட்டில் உள்ளன, 4780 மெ.வாட் மின் உற்பத்தி நடந்து கொண்டுள்ளது.அணு சக்தி உற்பத்திக்கு ரஷ்யா தான் நமக்கு அதிகம் உதவிக்கொண்டிருப்பதாக பெரும்பாலும் ஒரு நம்பிக்கை நிலைவுகிறது, ஆனால் கூடங்குளம் திட்டத்திற்கு முன்னர் ரஷ்யா நமக்கு செய்த அணு சக்தி உதவி என்பது ஒரு அணுசக்தி நீர்மூழ்கி வடிவமைக்க உதவியது மட்டுமே. மேலும் சின்ன சின்ன உதவிகள் மட்டுமே.

பெருமளவில் நமக்கு இது வரையில் உதவிய நாடுகளைப்பார்ப்போம்.

9 அணு உலைகளும்,அதற்கான எரி பொருளையும் அளித்தது கனடா,

2 அணு உலைகளும் ,எரி பொருளும் ஃபிரான்ஸ் அளித்துள்ளது.

2 அணு உலைகளும் எரி பொருளும் அளித்தது அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் ஆக்கும்.

மீதம் 7 அணு உலைகளும் மேற்கண்ட நாடுகளில் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தினை வைத்தும் ,இந்திய தொழில் நுட்ப்பத்தினை வைத்துமே செய்துள்ளோம்.

அப்போ ரஷ்யா என்ன தான் செய்தது? நமக்கு யுரேனியம் தேவைப்படும் போது கொடுத்தது, மேலும் யுரேனியம் என்ரிச்மெண்ட், புளுட்டோனியம் பிரிக்க என கொஞ்சம் சொல்லிக்கொடுத்துள்ளது.

கூடங்குளம் அணு உலைத்திட்டமே ரஷ்யா நமக்கு அளித்த மிகப்பெரிய அணு உலை தொழில்நுட்பம்.

அப்போ இத்தனை நாளும் அமெரிக்க நிர்பந்தம் , அதனால் மேலை நாடுகள் தடை என்று சொல்வதெல்லாம், என்ன?

அமெரிக்க ஒரு பக்கம் சில நிபந்தனைகளை சொன்னாலும் மறுபக்கம் நமக்கு வேலை நடந்து கொண்டு தான் இருந்தது.ஏன் எனில் நமக்கு அணு உலையை விற்ற நாடுகளே அவை, அவற்றிடம் யுரேனியம் வாங்கினால் அவர்களுக்கு தான் லாபம், ஆனால் அணு ஆயுதம் தயாரித்ததால் சில நாட்களுக்கு மிரட்டிவிட்டு மீண்டும் வியாபாரம் செய்து கொண்டே இருந்தார்கள் என்பதே உண்மை.

இந்தியா ஏன் அடுத்தவர்களிடம் யுரேனியம் வாங்க , வளைந்து, நெளிய வேண்டும் என சொந்தமாக யுரேனியம் என்ரிச்மெண்ட் செய்ய ஆரம்பிக்க ரஷ்ய உதவியை நாடியது, உதவியும் கிடைத்தது, சும்மா உதவ முடியுமா வியாபாரம் பேசினார்கள் , அதன் விளைவே கூடங்குளம்.(1986 இல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது என்றாலும்,அதற்கான பேச்சு வார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைப்பெற்றே வந்தது என்பதனை நினைவில் கொள்ளவும்)

அமெரிக்காவின் நிலை என்னவெனில் ,இந்தியா அணு உலை,அணு குண்டு என்ன வேண்டுமானாலும் தயாரிக்கட்டும்,ஆனால் இந்தியா அந்த தொழில்நுட்பத்தினை சில குறிப்பிட்ட நாடுகளுக்கு கொடுக்க கூடாது. காரணம் ஏற்கனவெ இந்தியா இரானுக்கு உதவ போவதாக பேச்சு கிளம்பியதே.

இந்த கட்டுப்பாட்டிற்கு ஒத்துக்கொண்டிருந்தால் நமக்கு ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ், வெஸ்டிங் ஹவுஸ் , கனடா, ஃபிரான்ஸ் எல்லாம் வழக்கம் போல உதவி செய்திருப்பார்கள்.

இந்தியாவோ இத்தனை கோடி செலவு செய்து அணு உலை எல்லாம் கட்டுறோம், அதை வச்சு வியாபாரமும் செய்யலாம்னு ஆசைப்படுகிறது.

இப்போது நாம் பயன்படுத்தும் அணு உலைகள் எல்லாம் மேற்கத்திய வடிவமைப்புகள், கன நீர் பயன்பாடுள்ள அணு உலைகள், மேலும் இதனை மறுவடிவமைப்பு செய்து விற்க அனுமதியில்லை. அதனை விட எல்லாமே 500 மெ.வாட் திறனுக்கு கீழானவை, இதனை வணிக ரீதியாக இந்தியா தயாரித்து விற்க நினைத்தாலும் பெரும்பாலான நாடுகள் வாங்காது.

நமக்கு பயன்ப்படுத்த, தயாரிக்க, விற்பனை செய்ய என முழு உரிமையோட அணு உலையும் ,தொழில்நுட்பமும் தேவை, யாரு கொடுப்பா? ரஷ்ய அண்ணாத்தை மட்டும் தான் கொடுப்பாரு.

ரஷ்யாவிடம் பேரம் பேசியதில் , அப்படி கொடுக்கணும் என்றால் இன்னும் சில நிபந்தனைகளும் போடப்பட்டது அவை என்னவென ஆரம்பத்தில் தெரியவில்லை, முதல் கட்டமாக 3 பில்லியன் டாலர் அளவுக்கு அணு உலையினை விற்கப்போடப்பட்ட ஒப்பந்ததில் 2 பில்லியனை கடன் எனவும் அதுவும் சுலப தவணைகளில், 12% ஆண்டு வட்டி மட்டுமே. ஒரு பில்லியன் மட்டும் முதலில் பணமாக தவணைகளில் கொடுத்தால் போதும் என்ற கவர்ச்சியான வியாபாரம் என்பதால் இந்தியாவும் அதி ஆர்வம் காட்டியது, ஆனால் ரஷ்யாவில் பொருளாதாரம் சரிந்ததால் கடனுக்கு விற்க முடியாத நிலை, காசு கேட்டால் இந்தியாவால் கொடுக்க முடியாத நிலை,இப்படித்தான் இத்திட்டம் தூங்க தொடங்கியது, மேலும் ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தைகளின் போதும் ரஷ்யாவிடம் இருந்து ஏதேனும் கூடுதலாக வாங்க நிர்பந்திக்கவும் பட்டோம், ஆரம்பத்தில் மிக் விமானம், துப்பாக்கி ,பிற ஆயுதங்கள், சுகோய் போர் விமானம், பீரங்கிகள், எனப்போய் கடைசியில் பழைய விமானம் தாங்கி கப்பல் குர்ஷ்கோவ் என நம் தலையில் கட்டியது ,


குர்ஷ்கோவ் என்ற விமானந்தாங்கி கப்பல் ,ரஷ்ய கடற்படையில் இருந்து ஓய்வுப்பெற்ற ஒன்று, அது கயலான்கடை சரக்கு, ஆனால் இந்தியா தொழில்நுட்பத்தோடு அணு உலை கேட்டதும் அதனையும் விற்றுவிட்டது,அக்கப்பலை பழுப்பார்த்து , புதிப்பித்து தர என 1.8 billion dollar கொடுத்தோம் , ஏன் இந்தியாவுக்கு வேற வழியே இல்லையா எனலாம், கடனுக்கு ரஷ்யாவை விட்டால் யாரு தருவா, அதுவும் சுலப தவணை, மேலும் நாம் வாங்கியப்பொருட்களுக்கு பாதிக்கு மேல் கோதுமையாக கொடுத்து கழித்தாயிற்று, அதாவது உணவுக்கு ஆயுதம்,அணு உலை என ஒரு பண்டமாற்று திட்டம்.

மிக் விமானங்கள் அடிக்கடி விபத்தானாலும் அதனையே மீண்டும் புதுப்பித்து ஓட்டிக்கொண்டிருக்க காரணம் , கோதுமையோ, சக்கரையோ, கொடுத்து கொஞ்சம் பணமும் கொடுத்தால் விமான உதிரிப்பாகம், விமானம் என எல்லாமே ரஷ்யா கொடுப்பதால் தான்.

உணவுக்காக ரஷ்யா ,ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விற்க தயார், மற்ற நாடுகள் அப்படி செய்யாது என்பதாலே இந்தியா பல எதிர்ப்புகளுக்கிடையேயும் வாங்கத்தயாராக உள்ளது.

இது வரை இந்தியாவில் உள்ள அணு உலைகள் எல்லாம் கன நீர் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டவை, அவற்றை மீண்டும் தயாரித்து விற்கவும் முடியாது.

ரஷ்யா கொடுப்பது இலகு நீர் அணு உலை, மேலும் முழு தொழில்நுட்ப உரிமையும் நமக்கு கொடுக்கப்பட்டு விடும், எனவே இந்தியா அணு சக்தி நாடாக மட்டுமில்லை, அணு சக்தி வியாபார நாடாகவும் மாறிவிடும். இதனை ஏற்கனவே அணு சக்தியில் வல்லரசாக உள்ள நாடுகள் விரும்பவில்லை எனவே தான் மேலை நாடுகளில் இருந்து பலத்த கூச்சலும் அதிக அழுத்தமும் கொடுக்கப்படுகிறது.

இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுவது NPT, NSG என பல ஒப்பந்தங்களை,அவற்றில் கை எழுத்திடவில்லை எனில் யுரேனியம் இறக்குமதி செய்ய முடியாது. இந்தியாவில் யுரேனியம் என்ரிச்மெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டாலும் நமது தேவைக்கு உற்பத்தி இல்லை. எனவே வெளிநாடுகளை குறிப்பாக ஃபிரான்ஸ்,ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டும், அவையோ அமெரிக்கா சொல்வதை கேட்கும் நாடுகள்.எனவே தான் 1.2.3 ஒப்பந்தம் எல்லாம் போட்டு தாஜா செய்யப்பட்டது.

பிரான்ஸை குளிர்விக்க பிரான்ஸின் அரேவா அணுசக்தி நிறுவனத்துடன் 2008 இல் ஒரு ஒப்பந்தம் போட்டு ஜெய்தாப்பூரில் வேலை ஆரம்பிக்க பார்த்து அதுவும் பிரச்சினையில் இருக்கிறது.

இந்தியா காலா காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலே பிரச்சினை இருந்திருக்காது, அல்லது சொந்தமாக யுரேனியம் என்ரிச்மெண்ட் செய்தே தேவையை பூர்த்தி செய்திருக்கணும். இதெல்லாம் செய்ய முடியாதுன்னா அணு உலையே வேண்டாம்னு சும்மா இருந்திருக்கணும், ஆனால் ஆடி அசைந்து வேலை செய்து எல்லாப்பக்கமும் சிக்கலாக்கிக்கொண்டாச்சு.ஒரு 2000 மெகா வாட் அணு உலை அமைக்க 5-7 ஆண்டுகளே மற்ற நாடுகளில் பொதுவாக ஆகும்.

அணுசக்தி அழிவு சக்தி வேண்டாம் என கிளம்பும் எதிர்ப்புகள், மற்றும் ஊடக பிரச்சாரங்களில் பெரும்பாலும் அணுசக்தி வியாபார நாடுகளின் கையே பின்னால் இருக்கும் என்பது பொதுவான ஒரு நியதி.

செல் போன் தயாரிக்கும் சாம்சங்க் நிறுவனம் தென் கொரியாவில் ஒரு முக்கியமான அணு சக்தி நிறுவனம், அவர்கள், அமெரிக்க, ரஷ்ய நுட்பம் எல்லாம் காப்பி அடிச்சு, தென் கொரியாவில் அணு உலையும் கட்டி இருக்காங்க ,இப்போ அதன் அடிப்படையில் அணு உலை விற்பனையும் செய்றாங்க, UAE இல் ஒரு அணு உலை அமைக்க ஒப்பந்தமும் போட்டுள்ளார்கள்.அமெரிக்கா ஒன்னுமே சொல்லக்காணோம் :-))

காரணம் தென் கொரியா அமெரிக்காவின் நட்பு வளையத்தில் இருக்கு, மேலும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுக்கு விற்பனை செய்யாது.வட கொரியா அணு ஆயுத சோதனை செய்யப்போகுதுன்னு சும்மாவே கொதிக்கும் அமெரிக்கா, தென் கொரியா அணு உலைக்கட்டியதை ஒன்றுமே சொல்லவில்லை, இதெல்லாம் நடந்து ரொம்ப நாளாச்சு,ஆனாலும் உலக அளவில் அணுசக்திக்கு எதிரா எதிர்ப்பு கிளம்பினால் பின்னாடி அமெரிக்கா இருக்கும் என்பது எழுதப்படாத விதி.

அணுசக்தி பயன்பாடு மற்றும் விற்பனை என்பது அமெரிக்க வழிக்காட்டுதலின் படி இருக்க வேண்டும் என்பதே பெரியண்ணனின் ஆசை, அதற்கு எதிராக போனால் ஆப்பு தான்.

இந்தியா அணு ஆயுதத்திற்காக தான் அணு உலை மீது ஆர்வம் காட்டுதுண்ணு சொல்கிறார்கள், ஆனால் இப்போது சுமார் 4320 டன் யுரேனியம் ஆண்டுக்கு செலவழிக்குது அதன் மூலம் கிடைக்கும் புளுட்டோனியத்தினையே முழுசா பிரிச்சு எடுக்க வசதியில்லை, எனவே பெரும்பாலான ஃப்யூல் ராட்கள் சும்மா பாதுகாக்கப்பட்டே வருது.

அணுசக்தி ஆபத்தானது தான் ஆனால் அதனை யாரோ ஒரு சில அணு வியாபாரிகள் சொல்வதால் எதிர்ப்பது சரியல்ல. அதுவும் 99% வேலை முடிந்த திட்டத்தினை எல்லாம் அரசு கைவிடுவது சாத்தியமில்லாதது.

இன்னும் சொல்லப்போனால் இந்தியா உரிய காலத்தில் முழு முதலீட்டையும் செய்திருந்தால் கூடங்குளம் திட்டம் 2000 இலேயே செயல்பட ஆரம்பித்திருக்கும். புதுசா 2011 இல் போராட கிளம்பியவர்களுக்கு பிம்பிளிக்கு பிளாக்கி தான் :-))

வெள்ளம் வந்த பின் அணையை மூடினால் நிற்குமா?
*******
#கடந்த ஆண்டு கூடன் குளம் அணு உலை குறித்து ஒரு மாற்றுப்பார்வை என ஒரு பதிவிட்டிருந்தேன் அதனை இங்கு காணலாம்.


# உலகில் மிக பாதுகாப்பான அணு உலை வடிவமைப்பு என்பதே இல்லை, மிக சிறிய அளவில் கதிர்வீச்சு கசிவு இருக்கவே செய்யும்,மேலும், பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் கையாண்டு ,விபத்தினை தவிர்க்க முடியும் என்பதனை விளக்கும் ஒரு பதிவு.


ஹி...ஹி எவ்ளோ நடு நிலைமையா எல்லாவற்றையும் சொல்லி இருக்கேன்னு என்னை யாரும் பாராட்ட வேண்டாம் ,திட்டாமல் இருந்தாலே போதும் :-))
----------
பின் குறிப்பு:

படங்கள்,தகவல் உதவி,

கூகிள்,விக்கி, DAE,NPCIL, இணைய தளங்கள்,நன்றி!
-----------------