விலையுயர்வை சமாளிக்க சில வித்தக குறிப்புகள்!
அந்தக்காலத்தில வெண்ணிர ஆடைப்படத்தில் செவப்புக்கலர் புடவைல உங்கள பார்த்தப்போதே அடுத்த முதல்வர் கிடைத்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்த நம்ம மக்கள் தற்ப்போது மீண்டும் ஒரு மாற்றம் வேண்டும் என ஆட்சியை அலேக்காக தூக்கீ அம்மா கையில் கொடுத்தார்கள,அவரும் ஏமாற்றாமல் மக்கள் திக்கு முக்காடும் வகையில் அதிர்ச்சியளித்தார் .
ஆனால் இவ்வளவு மிக நல்ல மாற்றம் வரும் என மக்கள் கனவிலும் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள்.
அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் உலகமே வியக்கும் வகையில் திடீர் என தமிழக மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்தது எல்லாரும் மானாவாரியாக செலவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், இதனால் பணவீக்கம் அதிகரித்து அதற்கு அயோடக்ஸ் போட வேண்டிய நிலை வந்தது.
பணவீக்கத்தைக்கட்டூப்படுத்த பல பொருளாதாரப்பெருச்சாலிகளும் திணறிய நிலையில் அம்மா சுலபமாக பேருந்து,பால்,மின்சாரம் என கொஞ்சம் மட்டும் விலை உயர்த்தி பணப்புழக்கத்தினைக்கட்டுப்படுத்தி இந்தியாவை பெரும் பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார். இதனைப்பாராட்டி மண்டைல சிக்கு அலுவால் அம்மாவுக்கு ரகசியமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் அதில் ரூபாய் 32 இருந்தாலே ஒரு மனிதன் இந்தியாவில் சுகபோகமாக வாழ முடியும்,அதை விட அதிகம் பணம் கையில் இருந்தால் ஆடம்பரமாக செலவு செய்வான், பணவீக்கம் அதிகம் ஆகும், உங்கள் செயல்பாடுகள் பணவீக்கத்தினை வடிய வைக்க உதவுகிறது எனப் பாராட்டியதே அம்மாவின் நிர்வாகதிறனுக்கு சான்று.
தங்க தாரகையின் ஆட்சில இவ்வளவு நல்லது ஒரு பக்கம் நடந்தாலும் , நன்மையிலும் தீமைப்போல கொஞ்சம் பேருக்கு இதனால பாதிப்பும் வந்து இருக்கு , சுமாராக 6.5 கோடி பேர் மட்டுமே இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருப்பாதாக செய்தி, இந்த மைனாரிட்டிகும்பலுக்கு விலையுயர்வை சமாளிக்க தெரியலை.எனவே அவர்களுக்காக சில தொழில் ரகசியங்களை இலவசமாக சொல்லித்தரலாம்னு இருக்கேன்.
பேருந்துக்கட்டண உயர்வு சமாளிப்பு வித்தை:
ஃபிராட்வே தொழில்நுட்பம்:
# உதாரணமாக நீங்க பல்லாவரத்தில இருந்து பிராட்வேக்கு போகனும் என்று வைத்துக்கொள்வோம், முன் வாசல் வழியே பிராட்வே பஸ்ஸில் ஏறிக்கொள்ளுங்கள், டிக்கெட் எடுக்காமலே கொஞ்சம் நேரம் கடத்துங்கள் அதற்குள் கிண்டி நெருங்கி இருக்கும், இப்போ அரியாசணத்தில் அமர்ந்திருக்கும் நடத்துனரிடம் போய் தாம்பரத்துக்கு ஒரு டிக்கெட் என கேளுங்கள்! அவரும் ரொம்ப அன்பா,மரியாதையா யோவ் அறீவு இருக்கா இது பிராட்வே வண்டி என கத்திக்கொடுப்பார் பாட்டு, ஹி..ஹீ நான் ஊருக்கு புதுசு பஸ்ல தாம்பரம்-பிராட்வே போட்டு இருந்துச்சா ஏறிட்டேன் என சமாளித்து , தாம்பரம் எப்படி போறது என அவரிடமே வழிக்கேட்டு ,ஒருவழியாக சமாளித்து முடிக்கும் போது கிண்டி வந்திருக்கும் , இறங்கிக்கொள்ளுங்கள்!
மேற்சொன்ன கதைய அடுத்து அடுத்து இரண்டு, மூன்று பேருந்தில் சொல்லி அப்படியே பிராட்வே வரைக்கும் நீட்டிப்பது உங்கள் வாய்ஜாலத்தில் இருக்கு. வாயுள்ள பிள்ளை பிழைக்குமாம்!
#ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்:
உங்க மாமனார் கிட்டே சீதனமாக நீங்க வாங்கிய ரெண்டு சக்கரமோ, இல்லை தவணைல வாங்கிய நாலு சக்கரமோ உங்களிடம் இருந்தால் கிடைத்த விலைக்கு வித்துடுங்க.கிடைக்கிற காசுல ஒரு பழைய ஆட்டோ ,ஷேர் ஆட்டோனா இன்னும் வசதி வாங்கிக்கோங்க, வண்டி வாங்கியதும் ஆட்டோ பின்னாடி அம்மா படத்தை பெருசா போட்டுக்கோங்க, ஆட்டோக்கு பெர்மிட் இல்லைனா சமாளிக்க உதவும்!
இல்லை எனில் பிரைவேட் என போட்டுக்கொள்ளலாம், ஆட்டோ எதுக்கா இனிமே அலுவலகம், இன்ன பிற சவாரிலாம் ஆட்டொல தான். இப்போ செயல் முறைக்கு வருவோம். அலுவலகம் கிளம்பிப்போற டைம் பீக் அவர்ஸ் என்பதால் எப்படியும் வழில நிறையப்பேர் கடன் வாங்கியாவது பஸ் காசு வைத்துக்கொண்டு நிற்பாங்க, உங்க அலுவலகம் போர ரூட் வரவங்களா பார்த்து சவாரிப்பிடிங்க அப்படியே ஆங்காங்கே பிக் அப் ,டிராப் னு அலுவலகம் போய் சேருங்க.திரும்ப மாலையிலும் இதே சவாரி தான்!
இப்போ கூட்டிக்கழித்துப்பார்த்தா கணக்கு லாபமாகவே இருக்கும் பெட்ரோல் காசும் கிடைச்சுடும். உங்களுக்கு அலுவலகம் போக வர ஆகிற செலவும் மிச்சம்.
இரண்டு சக்கரம் என்றால் மனைவி(கள்), குழந்தைகள்னு தாரளமாக கூட்டிப்போக முடியாது இப்போ ஆட்டோவில் தாரளமாக போய் வரலாம்.மேலும் உங்க பசங்களை பள்ளிக்கு கொண்டு போய் விட்டு வரும் வேலையும் சேர்த்து செய்தால் (அக்கம் பக்கம் குழந்தைகளையும் சவாரிப்பிடித்தால் இரட்டிப்பு லாபம்), வழக்கமாக ஆட்டோக்கோ ,வேனுக்கோ கொடுக்கும் காசும் மிச்சம் ஆகும்.மேலும் வார இறுதிகளில் உபத்தொழிலாக ஆட்டொ சவாரி ஓட்டினா நல்ல வருமானம் உறுதி.
இல்லைனா இருக்கவே இருக்கு சங்க கால லிப்ட் பாலிசி, கூடுதலாக ஒரு ஹெல்மட் வாங்கி வைத்துக்கொண்டு கைய காட்ட வேண்டியது தான்!
பாலுக்கு கல்தா:
பால் விலைக்கொடுத்து வாங்க முடியாத பிலோவ் பால் லைன் மக்களா(BPL) நீங்க , உங்களுக்காக சில வித்தைகள்.
முதல் வழி பாலைக்கட் (கவரை அல்ல)செய்து விட்டு , கடுங்காபி என்கிற வரக்காபி குடிக்கப்பழகிக்கொள்ளலாம்.
காகிதம் பொறுக்கு காபி குடி:
காபிக்குடிக்கலைனா கக்கா போக முடியாது என்ற தீவிர குடி வெறியர் எனில், காலைத்தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டி இருக்கும், சீக்கிரமாக எழுந்து பக்கத்து வீட்டுக்கு போங்க , அவங்க வீட்டுக்கு போட்டு இருக்க செய்தித்தாளைக்கைப்பற்றிக்கொண்டு வரவும்..
பின்னர் கொஞ்ச நேரம் கழித்து ஒன்றும் தெரியாத பாலகன் போல பக்த்து வீட்டுக்கு போய் ஹி..ஹி உங்க பேப்பரை எங்க வீட்டுல தெரியாம போட்டுட்டாங்க, இந்தாங்க என்று சொல்லிக்கொடுத்து விட்டு , அப்படியே காபி வாசம் மூக்கை தொலைக்குதே ஹி..ஹி பில்டர் காபியா என்று அடிப்போடவும்,கூடவே என் பொண்டாட்டியும் காபினு ஒன்னு போடுவா கழனி தண்ணிப்போல என்று சொல்லி வாய் மூடி இருக்க மாட்டிங்க, உங்க சம்பாஷணையை ஒட்டுக்கேட்டுகொண்டிருக்கும் ,பக்கத்து வீட்டு மாமி கையில் காபியுடன் உங்க முன்னர் பிரசன்னம் ஆகிடுவாங்க!எல்லாம் பெண்களின் ஈகோ தான் உங்க மனைவிக்கு காபி போட தெரியலைனு கேள்விப்பட்டதும் அவங்களுக்கு அதில ஒரு அல்ப சந்தோஷம்.
இந்த பேப்பர் பொறுக்கும் தத்துவம் எல்லா நாளும் கைக்கொடுக்கும்னு சொல்ல முடியாது, அடிக்கடி ,பக்கத்து வீடு, எதிர் வீடு என்று மாற்றி ,மாற்றி செய்ய வேண்டும்.
ஆபீஸில் சகலாகலா வல்லவன்:
பெரும்பாலும் கஷ்டமான வேலை,இல்லை மத்தவங்களூக்கு தெரியாத ஒன்றை செய்து காட்டி சகலகலா வல்லவன் என்று அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்று ஒரு ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும்.ஆனால் பெரும்பாலும் இப்படி எக்ஸ்ட்ராவாக எனர்ஜி காட்டி பல்ப் வாங்குவோம். சரி ஆனால் இப்போ நாம அவங்களுக்கு பல்ப் கொடுக்கலாம்.
ஆபீஸ் பாயை விட்டு பிளாஸ்கில் காபி வாங்கி வர சொல்லும் வழக்கம் உங்கள் அலுவலகத்தில் இருக்கா , அப்போ இனிமே நீங்க தான் காபி பாய், காபி குடிக்கும் நேரமாக பார்த்து , ஆபிஸ் பாய் காபி நல்லாவே வாங்கி வர மாட்டேன்கிறான் ,நானே வாங்கி வரேன்னு வாலண்டியர் வடிவேலாக கிளம்புங்கள்.காபிக்கடைக்கு போய் 10 காபி வேண்டும் எனில் 8 காபி மட்டும் வாங்கிக்கொண்டு(2 காபி காசு உங்களூக்கே) , அங்கேயே ஒரு கப் ஊற்றிக்குடிச்சுட்டு வரவும்.சிலக்கடைகளில் கடைக்காரனே ஒரு கப் காபி தருவான்.
அலுவலகம் திரும்பியதும் உஸ்ஸ் அப்பாடா என்றபடியே மீண்டும் ஒரு காபியை உள்ளே இறக்குங்கள்! உங்களுக்காக ஸ்பெஷல் காபி வாங்கி வந்தேன் என்று பில்ட்-அப் கொடுக்கவும் தவறக்கூடாது. இனிமே என்ன ஆசைப்பட்டாப்போல சகலகலா வல்லவன் பட்டமும் கிடைச்சாச்சு, ஓசிக்காபியும் ஆச்சு! ஒரே கல்லில ரெண்டு காபி!
மின் கட்டண உயர்வு ஏப்ரலில் தானாம் அதுவரைக்கும் ஜமாய்க்கலாம், அப்போ உங்களூக்காக சில அதிநவீன தீவட்டி டெக்னாலஜிகள் வழங்குகிறேன்.