Monday, November 09, 2009

பெங்களூரு புத்தக விழா

பெங்களூருவில் பேலஸ் கிரவுண்டில் புத்தக கண்காட்சி நடப்பதாக "முற்போக்கு மற்றும் கலவரப் பதிவர்" தோழர் செந்தழல் ரவி!(இன்னும் பல பட்டங்களுக்கும் தகுதியானவரே, இடம் போதாமையால் இது மட்டும்) "பதிவிட்டிருந்தது சும்மா கிடந்த என் மனச்சங்கை ஊதிவிட்டிருந்தது, அதற்கேற்றவாறு பெங்களூருக்கு செல்லும் வாய்ப்பு வந்தது , அப்படியே புத்தக கண்காட்சியையும் ஒரு நடைப்போய்ப்பார்த்தாச்சு, பார்க்க மட்டுமே செய்தேன் எதுவும் வாங்கவில்லை.

மெஜஸ்டிக் கெம்பே கவுடா பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் சென்றேன் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக 100 வாங்கிக்கொண்டான்(ர்), ஆனால் வரும் போது மீட்டர் போட்ட ஆட்டோவில் 35 ரூபாய் தான் ஆச்சு! (அது வேறு வழி, இது வேறு வழியா எனத்தெரியவில்லை)அப்போது தான் நான் பல்பு வாங்கியது தெரிந்தது!


கண்காட்சி என்றார்கள் ஆனால் அங்கே யாரும் கண்ணை தோண்டி காட்சிக்கு வைத்திருக்கவில்லை(கண்காட்சி என்பது தவறு கருத்துக்காட்சி தான் சரி என நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் சொன்னார்) , புத்தகங்கள் தான் அதுவும் பெரும்பாலும் கனட, ஹிந்தி , ஆங்கிலம் கொஞ்சமே கொஞ்சம் தமிழ் நூல்கள் கொண்ட கடைகளை விரிந்திருந்தார்கள்.

மழைக்கு பயமில்லாத உள்ளரங்குகளில் அமைத்திருந்தார்கள். நுழைவு சீட்டுக்கொடுக்கும் இடம் கொஞ்சம் உள் தள்ளி இருந்ததால் பெரும்பாலோர் /சிலர் அதற்கு முன்னரே இருந்த வாசல் வழி சும்மாவே போய்க்கொண்டிருந்தார்கள்.நான் டிக்கெட் எடுத்து தான் சென்றேன்(மொழி தெரியாத இடத்தில் வம்பு வேண்டாம் என்று தான்), 20 ரூபாய் , இது சென்னை புத்தக விழா கட்டணத்தை விட அதிகம்.ஆனாலும் வழ வழப்பான , மங்கலான அட்டைகளுடன் தடித்த , மெலிந்த என பல ரூபாய் விலைகளில் பல விதமான புத்தகங்கள் கண்களைக்காய்ச்சி எடுத்து விட்டது!

இரவு 8.30 வரைக்கும் என சொல்லி விட்டு 8 மணிக்கே கடையை மூட ஆரம்பித்து விட்டார்கள். அரங்கில் புத்தக விழா பேனர்களில் எல்லாம் ஒரு உப்புமா நடிகர் புத்தகம் வாசிப்பது போன்ற படத்தை பெரிதாக போட்டிருந்தார்கள், விளம்பர யுக்தியாம்!

இதற்கு மேலும் அதிகம் எழுதி எழுத்து வன்கொடுமை எதுவும் செய்யாமல் சுமாராக எடுத்த சில புகை இல்லாத(நிழல்) இல்லாத சில படங்களை மட்டும் பதிவில் போட்டு விட்டு எஸ் ஆகிக்கொள்கிறேன்!





நுழைவுவாயில் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தது!(மழை வந்து எனது திட்டத்தை எல்லாம் கெடுத்திருந்தது)

விஸ்தாரமான உணவகம்! நுழைவுக்கு அருகிலேயே உள்ளது.பிரெட் ஆம்லெட் கிடைக்கிறது வேறு என்ன வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.

அனுமதி சீட்டு வழங்கும் இடம்!

நூல் அரங்கம்.
சாகித்ய அகதமியின் அரங்கம்.

சென்னையை சேர்ந்த டவ் மல்டி மீடியாவின் அரங்கு.(பொதுவாகவே எல்லா அரங்குகளிலும் சொற்ப கூட்டமே இருந்தது) ஹாயாக தேநீர் பருகிக்கொண்டிருந்தார்கள்.
திருமகள் தமிழ் நூல் அரங்கம்

கிழக்கு பதிப்பத்தின் அரங்கம். நான் இங்கே வரும் போதெல்லாம் கடையை கட்டும் நேரம் ஆகி விட்டதால் தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டிருந்தார்கள்.

நேஷனல் புக் டிரஸ்ட்டின் அரங்கம்

ஆனந்த விகடன் அரங்கம்.
ஒரு தமிழ் ஆன்மீக நூல் பதிப்பகத்தின் அரங்கம்.
அரிய , மற்றும் பழமையான நூல் அரங்கம் என்றுப்போட்டிருந்தார்கள், அட்டை பிய்ந்த நூல்கள் எல்லாம் இருந்தது(எவ்வளவு பிய்ந்து இருக்கோ அவ்வளவு அரிய வகை போல).சென்னையில் பெல் ரோட்டில் இது போல பல கடைகள் இருக்கு என்பதால் அரங்கை அதிகம் ஆராயவில்லை.

எதை எடுத்தாலும் 50 ரூபாய் என சகாய விலையில் ஒரு கடை(வாசிக்க பிடிக்காத வகையில் பல நூல்கள் இருந்தது)

எதை எடுத்தாலும் 100 ரூபாய் தான் முன்னர் கூறிய அதே ரக நூல்கள் தான், ஒரு வேலை தம்கட்டி தேடினால் நல்ல நூல்கள் கிடைக்கலாம்.

விவசாயம் சம்பந்தமான குறுந்தகடுகள் வைந்திருந்தார்கள்.

இராம கிருஷ்ண மடத்தின் சார்பில் அனைவருக்கும் இலவசமாக சிறு கையேடுக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள் இங்கே!

இந்த கடையில் சிறிய கையடக்கமான மின்சார தையல் எந்திரங்கள் விற்றார்கள் (படித்துக்கிழிந்த நூல்களை தைக்குமா எனத்தெரியவில்லை, நூல் கொண்டு "நூல்" தைக்க முடியாதா?).

இன்னும் கொஞ்சம் படங்கள் உள்ளன ஆனால் அவை எல்லாம் இன்னும் சுமாராகவே வந்திருக்கு , அதையும் போட்டு மக்களை பரிசோதிக்க விரும்பவில்லை.