Wednesday, June 13, 2007

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!

இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.

பூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து மதிப்பிடவும் என்ன காரணம் என்று அலசுவதே எனது நோக்கம்!

அப்போதைய தமிழக ஆட்சி முறை பாளையம் அல்லது சமஸ்தானம் என்ற பெயரில் நடைப்பெற்று வந்தது.இந்த பாளையக்காரர் முறை தமிழக முறை அல்ல அதனை இங்கு அறிமுகப்படுத்தியவர் விஜய நகர பேரரசரான கிருஷ்ண தேவ ராயர் ஆவார். மூவேந்தர் காலத்திற்கு பிறகு தமிழகம் விஜய நகர பேரரசின் கீழ் வந்தது,அப்போது தமிழகத்தை நிர்வகிக்க கிருஷ்ண தேவ ராயரிடம் மெய்க்காப்பாளர்கள்,மற்றும் அரண்மனை வாயில் காப்போன் என பணிபுரிந்த 3 பேரை நாயக்கர்களாக தமிழகத்திற்கு அனுப்பினர்.அவர்களை மதுரை நாயக்கர்கள்,தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் என்பர், புகழ் பெற்ற திருமலை நாயக்கர், ராணி மங்கம்மா எல்லாம இவர்கள் வழி வந்தோரே. ,அந்த நாயக்கர்களின் கீழ் வரி வசூலிக்கவும் நிர்வாகம் பண்ணவும் உருவாக்கப்பட்டது தான் பாளையம் முறை.

ஒரு பாளையம் என்பது 96 கிராமங்களை உள்ளடக்கியது. அப்படி ஒரு பாளையத்தை தான் வீர பாண்டிய கட்ட பொம்மன் பஞ்சாலம் குறிச்சியை தலை நகராக கொண்டு ஆண்டுவந்தார்.தந்தை பெயர் ஜக வீர பாண்டியன்.அவர் பால் ராஜு என்ற பாளையக்காரர் வழி வந்தவர் .

வீர பாண்டியனின் இயற் பெயர் கருத்தப் பாண்டி என்பதே. இரண்டு சகோதரர்கள் சிவத்தையா என்கிற ஊமைத்துரை,மற்றும் துரை சிங்கம் ஆகியோர்.இரண்டு சகோதரிகள் ஈஸ்வர வடிவு மற்றும் துரைக்கண்ணு.

தென் மாவட்ட பாளையக்காரர்கள் அனைவரும் மதுரை நாயக்கர்களுக்கு வரி செலுத்த கடமை பட்டவர்கள் பின்னர் முகலாய ஆட்சியின் போது ஆர்க்காடு நவாப்புக்கு வரி செலுதினார்கள்.அப்போதைய ஆர்க்காடு நவாப் முகமது அலி என்பவர் வெள்ளையரிடம் கடன் வாங்கியதால் வரி வசுலிக்கும் உரிமையை தந்து விட்டார்.

வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் ஏன் வரி வசூலிக்கும் உரிமையை வாங்க வேண்டும் , காரணம் வெள்ளையர்களின் அனைத்து வியாபரங்களும் பலத்த நஷ்டம் அடைந்து விட்டது , வெள்ளையர்களின் துணிகளை வாங்க அப்போது யாரும் முன் வர வில்லை நம் மக்கள் மேல் சட்டை அணிவதில்லை , குழாய் மாட்டுவதில்லை பின்னர் அந்த துணிகளை எதற்கு வாங்கப் போகிறார்கள்.இங்கிலாந்தில் இருந்து லாபம் ஈட்ட வில்லை எனில் கம்பெனியை இழுத்து மூடி விட்டு வரவும் என இறுதி ஓலை வந்து விட்டது.எனவே வேறு வழி இல்லாமல் வரி வசூலித்து லாபம் ஈட்ட தலைப்பட்டார்கள்.

வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வெள்ளையர்களுக்கும் மோதல் உருவாகக் காரணம் என்ன என்பதை சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் பார்த்த அனைவரும் அறிவர், படத்தில் முழுவதும் காட்டப்படவில்லை.

இன்னும் சொல்ல போனால் வெள்ளையருடன் இனக்கமனவராக இருந்தவர் தான் கட்ட பொம்மனின் தந்தை ஜக வீரபாண்டியன், பூலித்தேவன் முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த போது வெள்ளையருக்கு ஆதரவாக படை வீரர்களை கொடுத்து உதவியுள்ளார் மேலும் பூலித்தேவன் போரில் தோற்று தலை மறைவாக இருந்த காலத்தில் அவரை தேட திருவிதாங்கூர் ராஜவுடன் சேர்ந்து வெள்ளயருக்கு உதவியுள்ளார், அதாவது எட்டையப்பன் செய்தது போன்று.

இதனால் அப்போது தேவர்களை தலைவராக கொண்ட பாளையங்களும் , சமஸ்தானங்களும் தெலுங்கு பேசும் நாயக்கர் வழி வந்த கட்ட பொம்மனின் தந்தை மீது வெறுப்புற்றிருந்தர் இதையே பின்னாளில் கட்ட பொம்மன் வெள்ளையரை எதிர்த்த போது பிரித்தாலும் சூழ்சியின் மூலம் பயண்ப்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

அப்போதைய பாளையங்களில் மூன்று வகையான படை வீரர்கள் இருந்தார்கள்,

அமரம் சேவகம் -பரம்பரை நில உரிமை பெர்ற்று அதிலிருந்து வரும் வருமானத்திற்கு பதிலாக படையில் பணிபுரிவர்.

கட்டுபுடி சேவகம் - பரம்பரை உரிமை இல்லாமல் நிலம் பெறு சேவகம் புரிவர்.

கூலி சேவகம் அல்லது படை - போர்க்காலத்தில் மட்டும் தினக் கூலி அடிப்படையில் வேலை செய்வர், மற்றக் காலங்களில் இவர்கள் வழிப்பறி ,கன்னம் வைத்து கொள்ளை அடித்து வாழ்வார்கள்.இவர்களின் சேவைக்கு பரிசாக கொள்ளை அடிப்பதை கண்டு கொள்ளாமல் விடுவார் பாளையத்தின் தலைவர் (நம்பித்தான் ஆக வேண்டும !) ஆனால் ஒரு நிபந்தனை உண்டு உள்ளூரில் அதாவது அதே பாளையத்தில் கொள்ளை அடிக்காமல் வெளியில் போய் கொள்ளை அடிக்க வேண்டும்.

இந்த மூன்று வகையான போர்ப்படை சேவைகளை செய்தது முக்குலத்தோர் சமூக மக்களே. இப்படிப் பட்ட படைகளை கொண்டிருந்தால் தான் கட்ட பொம்மனை கொள்ளைக்காரன் எனவும் வெள்ளையர்கள் குற்றம் சாட்டினர். திரைப்படத்தில் ஏன் வரிக்கொடுக்க வேண்டும் என்று வசனம் பேசினாலும் உண்மையில் வரி செலுத்த கட்ட பொம்மன் தயாராகவே இருந்தார். அருகாமை பாளையக்காரர்கள் கட்டபொம்மனை வெறுப்பதும், மேல் உதவிக்கு யாரும் வர மாட்டர்கள் என்பதும் தெரிய வந்ததால் ஒரே அடியாக பாஞ்சாலக்குறிச்சியை தங்க்கள் வசம் படுத்த படை எடுத்து சாதித்துக்கொண்டார்கள்.

எட்டையப்பனுடன் எல்லை தகராறு, தேவர் சமூகத்தினை சேர்ந்த பூலித்தேவனை பிடிக்க கட்ட பொம்மனின் தந்தை உதவியதால் ,பூலித்தேவனின் உறவினரான புதுக்கோட்டை சமஸ்தான ராஜா விஜய ரகுனாத தொண்டை மானுக்கும் வெறுப்பு எனவே அனைத்து வகையிலும் கட்ட பொம்மன் தனிமை படுத்தப் பட்டது தோல்விக்கு வழி வகுத்தது.

மேற்கூறிய காரணங்களினால் இந்திய அளவில் சுதந்திரப் போராட்டம் பற்றி குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவங்குகிறார்களா அல்லது மங்கல் பாண்டே என்ற பிராமண சிப்பாய் துவக்கியதால் முக்கியத்துவம் அளிகிறார்களா என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் விடையை கூறாமல். வாசகர்கள் நீங்களும் கூறலாம் தெரிந்தால்.