Tuesday, August 12, 2014

நூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014


(ஆடிப்போனால் ஆவணி வரும் தாவணி வருமா? ஹி...ஹி)


ஆடிப்போய் ஆவணி கூட வந்திரும் போல இருக்கு(அப்படியே ஆவணி வந்திட்டாலும் டாப்புல வர்ராப்போல அவ்வ்) இந்த வவ்வாலு இன்னும் ஒருப்பதிவு கூட எழுதக்காணோமேனு என்னோட ரசிகப்பெருமன்றத்தினர்(அப்படி யாரேனும் இருக்கிங்களா?) இணையப்பெருவீதியில் பெருந்திரளாக கூடி கோஷமெழுப்பியது எமது குகையின் சுவர்களில் பட்டு எதிரொலித்து ரீங்காரமிடுவதான ஒரு கற்பனை மண்டையை உலுக்கவே , சரி எதாவது எழுதி வச்சி "பருவ மழையையாய் கருத்து மழையை" பொழிவோம்னு சிறு மூளையை கசக்கி பார்த்தும் ஒரு சொட்டு "சொற்துளி" கூட கசியக்காணோம் , படைப்பூக்கத்தின் வசந்தகால நதி அசந்து விட்டதா?  அய்யகோ இனி சீறிளமை ததும்பும் கன்னித்தமிழைக்காப்பது எங்கணம்?

அடங்குடா நொண்ணை , வர்ரவன் போறவன் எல்லாம் தமிழைக்காப்பாத்தனும், வாழ வைக்கணும்னு பில்டப் கொடுக்கிறதே வேலையா போச்சு , தமிழ் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா இல்லை தத்துப்பிள்ளையா என கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்து யாரோ அறச்சீற்றம் காட்டுறாப்போல தெரியுது எனவே வந்த வேலைய பார்ப்போம் ..ஹி..ஹி!

ஊரு நாட்டுப்பக்கம் போறப்போலாம் அந்தப்பக்கம் என்ன நிகழ்வுகள் நடக்குதுனு கவனிச்சு முடிஞ்சா ஆஜராகி அட்டென்டன்ஸ் போடுவது வழக்கம் என நான் சொல்லாமலே நம்ம மக்களுக்கு தெரியும் தானே அப்படியாக  இம்முறையும் ஊரோரமா போகச்சொல்லோ நிலக்கரி சுரங்கத்துல இவ்வாண்டுக்கான(2014-ஜூலை) புத்தக சந்தை நடப்பதாக "கரிச்சான் குருவி" ஒன்னு காதோரமாக கூவிச்செல்லவே , நாம அடியெடுத்து வைக்கலைனா சந்தைக்கு காலத்தால் அழியாத தீரா அவச்சொல் உருவாகிடுமே என பெரு முயற்சி செய்து பயணம் புறப்பட மூட்டை கட்டலானேன்.



நிலக்கரி சுரங்க நகராம் நெய்வேலி நகரியத்தின் நடுவண் பேருந்து நிலையம்.  

இம்முறை பேருந்திலேயே சென்று விடுவதாக திட்டமிட்டு ,அங்கிருந்து அழைத்து செல்ல உறவினரின் மகிழுந்தினை பேசி வைத்தாயிற்று , ஏனெனில் நெய்வேலி நகரியத்தின் உட்ப்புற பயணம் அவ்வளவு சிலாக்கியமானதல்ல, பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பச்சைக்கலர் பேருந்துகளை தவிர வேறு பொதுப்போக்குவரத்து கருவிகளை கண்ணில் காணவியலாது ,மேலும் ஒவ்வொரு வட்டமும் பல ஃபர்லாங்குகள் தொலைவில் இருப்பதால் என்னைப்போன்ற சாமானியர்க்கு தானி*க்கு கட்டண தீனி போடுவதும் கட்டுப்படியாகாது அவ்வ்!

*தானி - தானியியங்கி மூவுருளி = ஆட்டோ ரிக்‌ஷா.

சொல்லாக்க உதவி , தமிழ் அறிவியல் கலைக்களஞ்சியம்,மணவை முஸ்தபா.

மேற்கொண்டு வள வளக்காமல் படங்காட்டி கதை சொல்லி செல்கிறேன்.

#

புத்தகச்சந்தை இதுக்குள்ள தான் நடக்குது( நிக்குது).

# நுழைவு வாயில், வள்ளுவரை வச்சு வடிவா செட் போட்டிருக்காங்க( சிவாசியை வச்சு ஏன் செட் போடலைனு எனக்கு தெரியாதுங்க அவ்வ்)



தோட்டக்கலைத்துறையின் அரங்கு.


நுழைவு வாயிலுக்கு எதிர்ப்புறம் தமிழக தோட்டக்கலைத்துறையின் அரங்குகள் இரண்டினை வச்சிருந்தாங்க ,அது மட்டுமில்லாமல் பழ மரக்கன்றுகள் இலவசம்னு கொட்டை எழுத்தில பேனரும் இருக்கவே " பேராசையும், பெரும் ஆவலும் பிடறியில் உந்தித்தள்ள , இலவசம்னா எனக்கு ரெண்டு மரக்கன்று கொடுங்கனு அல்பத்தமிழனாய் அவதாரமெடுத்தேன் (எப்பவுமே நீ அல்பந்தாண்டானு ஒரு வேண்டாத அசரிரீ கேட்குது அவ்வ்)

சுரங்கத்துல கரி அள்ளுறவங்களுக்கு மட்டும் தான் இலவச மரக்கன்று என ஒத்தை சொல்லால் ஊதி அணைத்துவிட்டார் எனது பேராசை பேருந்தீயை அவ்வ்!!!


வழக்கம் போல ஹி...ஹி என அசடு வழிந்தாலும் இதெல்லாம் நமக்கென்ன புதுசா என்னனு , சமாளித்துக்கொண்டு, அப்புறம் எதுக்கு எல்லாருக்கும் இலவசமா கொடுக்கிறாப்போல "இலவச பழமரக்கன்று" என பேனர் வச்சீங்க ,அத மாத்துங்க இல்லைனா டிபார்ட்மெண்ட்ல புகார் கொடுப்பேன் என லைட்டா கெத்துக்காட்டிவிட்டு , சந்தைக்கு தாவினேன்.

சென்ற முறை 3 ரூ நுழைவு கட்டணம் இம்முறை 5 ரூ ஆக உயர்த்தப்பட்டிருந்தது , பா.ஜக ஆட்சியில் விலைவாசி உயர்வுக்கு இதுவே சாட்சி என நுண்ணரசியலாக கம்மூனிஸ்ட் கட்சிக்காரங்க போல "பொங்கல்" வைக்கலாமானு தோன்றியது!

#

இந்த வழியில் தான் பயணம் ஆரம்பம்!

#
கொற்கை.


கொற்கை என்றால் ஏதோ கொக்கிற்கும் காக்கைக்கும் கலப்பினமாக பொறந்த உயிரினமாக இருக்குமோனு பாமரத்தனமாக யாரும் நினைக்கப்படாது, அது ஏதோ தமிழின் ஆகச்சிறந்த சமகால இலக்கியமாம் , ஜோ.டி.குரூஸ் எழுதி இருக்காரு,  மத்திய அரசாங்க அவார்டு வாங்கிய எழுத்தாளர் என்பதால் கனமான கருத்தாக்கத்தினை உள்ளடக்கமாக கொண்டிருக்கும் என நினைக்கிறேன்.

 புத்தகமும் நல்லா "பல்க்" ஆக இருந்தது ,  வாங்கி வைத்துக்கொண்டால் எதிரிகளை தாக்க நல்ல தற்காப்பு ஆயுதமாக பயன்ப்படக்கூடும் , ஓங்கி அடிச்சா "தோர்" சம்மட்டியால் அடிச்சதை விட நல்ல விளைவுகள் கிடைக்கக்கூடும் :-))

புத்தகத்தை கையில் எடுத்துப்பார்க்கும் போதே சுட்டது, அம்புட்டு விலை , இதெல்லாம் படிக்க மனசு மட்டும் இருந்தால் போதாது என்ற நிகழ்கால வாழ்வியல் யதார்த்தம் மாயக்கரங்களால் செவுளில் அறைந்தது.

#
வரலாறு பேசும் பண்டாரம்.

இந்த அரங்கில் சமய நூல்கள், சமயம் சார்ந்து தமிழ், வரலாறு என ஏகப்பட்ட நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, நமக்கு தமிழையும், வரலாற்றையும்  சமய சார்பற்று அணுகவே பிடிக்கும் என்பதால் , அட்டைகளை மட்டும் நோட்டமிட்டு விட்டு கிளம்பியாச்சு.

# விகடன் அரங்கம்.



விகடனில் வெளியான தொடர்கள் எல்லாம் புத்தகங்களாக பரிணாமம் பெற்றிருந்தன , வழக்கம் போல பார்வை மேய்ச்சல் மட்டுமே. பதிவர் அமுதவன் அவர்கள் எழுதிய நூல்களைக்கேட்டுப்பார்த்தேன் , சரக்கு கைவசம் இல்லை என்றார்கள், சும்மா வெறுங்கையோட போவானேன் என " நூல் விலைப்பட்டியலை" கைப்பற்றிக்கொண்டு கிளம்பினேன்!!!

கிழக்கு பதிப்பகம்.

கிழக்கின் அரங்கு மேற்கை பார்த்து அமைந்திருந்ததது, அதை  தவிர பெருசா கவனிக்க தக்க நூல்கள் எதுவும் நம்ம கண்ணில் படவில்லை.

# நிழல்.



  உலக சினிமாவினைப்பற்றி பேசும் ஒரு திரைப்பட பத்திரிக்கை நிழல் என்றப்பெயரில் வருகிறதாம், அதன் அரங்கு ,  நிழலின் பழைய ,புதிய இதழ்களை  நிறைய வைத்திருக்கிறார்கள், ஆனால் எல்லாம் ஒரே விலை தான் அவ்வ்.

 உலக சினிமா , உள்ளூர் சினிமா என அலசும் பல நூல்கள் அங்கிருந்தன , ஆனால் பெரும்பாலான நூல்களை திருநாவுக்கரசு என்ற ஒருவரே எழுதியிருந்தார் , பெரிய உலகசினிமா அப்பாடக்கரா இருப்பார் போல இருக்கே என நினைத்துக்கொண்டே , ஒரு நிழல் இதழை புரட்டினால் ,அதில் ஆசிரியர் என அவர் பெயரே போட்டிருக்கு  ,நல்லா செய்றாங்கப்பா தொழில் அவ்வ்!!!

உண்மைத்தமிழன் அண்ணாச்சிக்கு சொந்தமோ என்னமோ தெரியலை உலக சினிமா பத்தி திறனாய்வுப்பார்வையில் எழுதாமல் "அதோட முழுக்கதையும்" சீன் --1 ,சீன் -2 என போட்டு கதை வசனமாக எழுதி வச்சிருக்கார். நமக்கு எதாவது உலக சினிமா கதைப்புரியலைனா வாங்கிப்படிச்சிக்கலாம், எனக்கு ரொம்ப நாளா அகிரா குரோசோவேயின் " ரோஷமான்" கதைல குழப்பம் உண்டு என்பதால் , அதோட கதை வசன நிழல் இதழும் இன்னும் சில இதழ்களும் பொறுக்கிக்கொண்டேன்.

#
இவ்விடம் கதை திரைக்கதை ,வசனம் பழுதுப்பார்க்கப்படும் என ஒரு புத்தகம் கண்ணில் பட்டது எடுத்துப்பார்த்தால் ,அவதாரை இப்படி எடுத்திருக்கலாம், கஜினி படத்தினை இப்படி மாத்தி எடுத்திருந்தால் இன்னும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் என்பதான கட்டுரைகள், ஒரு வேளை புத்தகத்தை போட்டவர் பதிவரோ அவ்வ்!

புத்தகங்கள் எதுவும் என் சிற்றறிவுக்கு தேவைப்படாத தரத்தில் இருந்ததால் வாங்கவில்லை.

#


வீரப்பன் செத்தது வியாபார ரீதியாக நக்கீரனுக்கு பெரும் பின்னடைவு எனலாம், புதுசா பரபரப்பாக போட சரக்கில்லாமல் ,யட்சிணி வசியம், தேவவசிய முத்திரைகள், ஜாதக பலன்கள் என பளப்பள அட்டையில் புத்தகம் போட்டு விக்குறாங்கப்பா அவ்வ்!

#



 கல்கியை எல்லாம் தூக்கி சாப்பிடுறார் பாலகுமரன், உடையார் நாவல் தொகுதி ரூ 1570 என தெகிரியமாக அட்டையில் எழதி வச்சி விக்குறாங்க, இந்த விலையில் இதெல்லாம் வாங்கிப்படிக்கும் அளவுக்கு தமிழார்வம் மக்களுக்கு இருக்குமெனில் , தமிழில் படிக்கும் விருப்பம் தமிழர்களிடம் குறைந்து விட்டது என எழுத்தாளுமைகள் ஏன் பொலம்புறாங்கனே தெரியலை அவ்வ்!

மேலும் சில படங்கள்.



------------------

பின் குறிப்பு:

# படங்கள் அனைத்தும் அடியேன் சுட்டது தான் , சில படங்கள் கலங்களாக இருக்கும், அதுக்கு உற்சாக பானம் எதுவும் காரணமல்ல, அப்படியே போய்கிட்டே எடுத்தவை, மேலும் இம்முறை "புத்தக சந்தையில் யாரும் புகைப்படம் எடுக்காதீர்கள்"என மைக் கட்டி அவ்வப்போது அறிவிப்பு வேற செய்தார்கள் , சுரங்கம் தோண்டுறவங்க கடமை உணர்ச்சிய நினைச்சா ஃபுல்லரிக்குது அவ்வ்!

# போன மாசம் நடந்த புத்தக சந்தை , இப்போ தான் எனக்கு பதிவு போட வாய்த்தது அவ்வ்.
----------------------------