Sunday, February 12, 2012

மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .



மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .




எப்போ வரும் எப்போ போகும் தெரியாது, வர வேண்டிய நேரத்தில் வராது, ஆனால் வரும் அது யார் ? ஹி..ஹி சூப்பர் ஸ்டார் அல்ல அது மின்வாரிய மின்சார கண்ணா மின்சாரம் தான்.

முன்னர் அறிவிக்கப்படாமல் 4-5 மணிநேரம் எல்லாம் மின் தடை செய்தார்கள், இப்போ தெம்பாக 8 மணிநேரம் மின் தடை சொல்லிட்டாங்க. உலகம் முழுக்க புவி வெப்பமாதல் தடுக்க 5 நிமிடம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வாங்க அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை ஆனால் தமிழக அரசு தினசரி 8 மணிநேரம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுக்க கடுமையாக போராடி வருகிறது என்று சொன்னால் மிகையல்ல!


அனேகமாக இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபெல், யுனெஸ்கோ சுற்றுசூழல் விருது, கிரீன் பீசின் பசுமை நோபெல் பரிசெல்லாம் தமிழக முதல்வருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.

தமிழக மக்களும் புவிவெப்பமாதலை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும், அப்படியும் சிலர் பதிவெழுத மின்சாரம் வேண்டுமே என தலையை சொறியக்கூடும் அவர்களைப்போன்ற சுயநல கிருமிகளுக்கு உதவவே இப்பதிவு..ஹி..ஹி ஏன் எனில் நானும் ஒரு சுயநலக்கிருமி ஆச்சே :-))

மின்வெட்டை குறுக்கு வெட்டாக வெட்டி புறவழிக்காண சில ,பல மக்கள் தலைக்கீழ் மின்மாற்றி சேமக்கலன் (இன்வெர்ட்டர் தானுங்க)வாங்கக்கூடும் , அப்படி வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்.

இனி நீட்டி முழக்காமல் த.சே என சுருக்கமாக சொல்வோம் , இது பல மின் திறன்களில் கிடைக்கிறது. ஆரம்பம் 600 வா.ஆ. பின்னர் 800va,1200va, 1500 vaஎன காசுக்கு ஏற்ப பல வண்ணங்களில், செயல்முறைகளில், பல நிறுவனங்களின் பெயர்களில் கிடைக்கிறது.

600 , 800 வா.ஆ எல்லாம் இப்போதைய நமது தேவைக்கு காணாது. குறைந்தது 1200 வா.ஆ திறனில் வாங்குவதே சிறந்தது. சில ஆயிரங்கள் மட்டுமே வித்தியாசம், 800 வா.ஆ ரூ 12000 எனில் 1200 வா.ஆ ரூ 15000 வரும்.

பிரபலம் அல்லாத நிறுவன தயாரிப்புகள் மலிவாக இருக்க கூடும், ஆனால் நம்பக தன்மை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.அமரன், கிராம்ப்டன் கிரீவ்ஸ், மஹிந்திரா, மைக்ரோ டெக் எல்லாம் நான் சொல்லும் விலை வரிசையில் கிடைக்கின்றன.


மின்னணு , தூய முழுஅலை தலைகீழ் மின்மாற்றி சேமக்கலன் (pure sinwave digital inverter)வாங்குவதே நல்லது.அப்போது தான் கணினிப்பயன்பாட்டுக்கு உதவும். இதனை இல்ல தடையில்லா மின்வழங்கி (home ups) என்று சொல்வார்கள்.இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யும் போதே ,த.சே இணைப்புக்கு என தனியே ஒரு மின்கம்பி பொருத்திவிடுகிறார்கள். எனவே இணைப்புக்கொடுக்கவேண்டிய சாதனத்திற்கு மட்டும் இணைப்பு வழங்கிவிடலாம் ,மீண்டும் புதிதாக மின் கம்பி இணைப்பு செய்ய தேவை இல்லை.

பொதுவாக ஒரு த.சே வில் ஒரு மின் ஏற்றி அமைப்பு(charging unit), மின்சாரம் சேமிக்க மின்சேமகலம்(12v battery) என இரண்டு அமைப்பு இருக்கும்.

மின் ஏற்றி அமைப்பு (charging unit) என்பது , மாறு மின்சாரத்தை நேர் மின்சாரம் ஆக முதலில் மாற்றி மின் சேமகலத்தில் சேமிக்கும் ,பின்னர் மின் தடையின் போது நேர் மின்சாரத்தை(டி.சி) மீண்டும் மாறு மின்சாரம் (ஏ.சி)ஆக மாற்றி உபகரணங்களுக்கு வழங்கும்.
எனவே தான் தலைகீழ் மின்மாற்றி சேமகலன்(இன்வெர்ட்டர்) என அழைக்கப்படுகிறது.ஒரு த.சே வின் திறன் 800வா.ஆ எனில் அதே அளவுக்கு மின்னேற்றம் செய்யும், அதே அளவுக்கு மின்சக்தியையும் உபகரணங்களுக்கு வழங்கும்.

ஒரு எளிய த.சே மின்சுற்று திட்ட விளக்க படம்.



அப்படிப்பட்ட எல்லா த.சேக்களும் ஒரே போல கட்டமைக்கப்படுவதில்லை. சிலவற்றில் இயங்கா வெப்ப நீக்கி (passive heat removal), இயங்கும் வெப்ப நீக்கி(active heat removal), என எல்லாம் இருக்கும்.த.சே செயல்ப்படும் போது அதிகம் வெப்பம் உருவாக்கும் எனவே வெப்ப நீக்கி அமைப்பு /குளிர்விக்கும் அமைப்பு முக்கியம், இல்லை எனில் மின்சுருள் புகை விடும்.

இயங்கும், இயங்கா வெப்ப நீக்கி என இரண்டும் உள்ளதில் வெப்பம் நீக்க ஒரு வெப்ப தொட்டி(ஹீட் சின்க்) யுடன் ஒரு குளிர்விக்கும் மின்விசிறியும் இருக்கும்.இரண்டும் உள்ளதே நல்லது அப்போது தான் எப்போதும் குளிர்ச்சியாக உங்கள் த.சே வேலை செய்யும்.

இப்போது மின் சேமகலன்(பேட்டரி) பற்றிப்பார்ப்போம். எல்லாமே 12வோல்ட் தான் ஆனால் அவற்றின் மின்னோட்ட திறன்= ஆம்பியர் வேறுபடும். அதைப்பொறுத்தே ஒரு த.சே எத்தனை மணி நேரம் மின்சாரம் வழங்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.

சில த.சே விலைக்குறைவாக இருக்கும் காரணம்  குறைவான மின்னோட்ட திறன் கொண்ட மின்கலத்தை கொடுப்பார்கள்.

ஒரு 800 வா.ஆ த.சே வுடன்
100 ஆம்பியர் /ஹவர் மின்கலம் இருப்பது ஆரம்ப நிலை.மலிவானதும் கூட.

அடுத்து 120 ஆ/ஹ, 150 ஆ/ஹ என்று போகும். அதிகப்பட்சமாக 180 ஆ/ஹ , 12 வோல்ட் தான் சந்தையில் கிடைக்கிறது.

800 வா.ஆ க்கு 120 ஆ/ஹ மின்கலம் பொறுத்தமானது. அதிக திறனில் சேர்த்தால் மின்சாரம் ஏற அதிக நேரம் பிடிக்கும்.

1200 வா.ஆ த.சேவுடன் 150 ஆ/ஹ மின்கலம் என்ற அளவில் வாங்குவது நல்ல மின்வழங்கும் திறனுடன் இருக்கும்.


*1)வா.ஆ= வால்ட், ஆம்பியர்,

2)ஆ/ஹ= ஆம்பியர்/ஹவர்

நாம் வாங்கும் த.சே வில் விரைவு மின் ஏற்றி (குயிக் சார்ஜ்)மற்றும் வழக்கமான மின் ஏற்றி(நார்மல் சார்ஜ்) என இரண்டும் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு 12 வோல்ட், 150 ஆ/ஹ உள்ள மின்கலத்தின் மிந்திறன் என்ன எனப்பார்ப்போம்.

வாட்ஸ்= ஆம்பியர் Xவோல்ட்
=150 X12
=1800 வாட்ஸ்.

எனவே 1800 வாட்ஸ் திறனுக்குள் நாம் மின்சாதனங்களை த.சே மூலம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். குறைவான மின் திறன் உள்ள சாதனங்களைப்பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் கிடைக்கும்.

ஒரு இல்லத்தின் சராசரி மின் உபகரணப்பயன்பாட்டு தேவை:

குழல் விளக்கு -4= 60வாட்ஸ்* 4= 240 வாட்ஸ்

மின்விசிறி -4= 80 வாட்ஸ்* 4 = 320

கையடக்க குழல் விளக்கு--4 = 30 வாட்ஸ் *4= 120

ஒரு 21 இஞ்ச் குழாய் தொ.கா(inch CRT T.V) =100-120 வாட்ஸ்

ஒரு 14 இஞ்ச் மடிக்கணினி=25 வாட்ஸ்
----------------------
மொத்த மின்நுகர்வு =825 வாட்ஸ்/ஹவர்அப்படி எனில் ஒரு 1200 வா.ஆ, 150 ஆ/ஹ ,12 வோல்ட் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் மூலம் மின்சாரம் கிடைக்கும் கால அளவு=1800/825=2.18மணிநேரம்.

எனவே குறைவான மின்சாதனம் பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும். 8 மணிநேரத்திற்கு பயன்ப்படுத்த வேண்டும் எனில் சுமார் 200 வாட்ஸுக்குள் மின்சாதனங்களைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரி மின்கலத்துக்கு மின்சாரம் ஏற ஆகும் காலம் எவ்வளவு இருக்கும்.?

ஒரு முனை மின் இணைப்புள்ள (சிங்கிள் பேஸ்)வீடு எனில்,

220 வோல்ட், 5 ஆம்பியர் மின்சாரம்,

220* 5 =1100 வாட்ஸ்,

காலம்=1800/1100
             =1.63

எனவே 1800 வாட்ஸ் மின்கலம் மின்சாரம் ஏற =1.63 *60 நிமிடங்கள்
= 98 நிமிடங்கள் ,
அதாவது 1 மணி 38 நிமிடங்கள் ஆகும்.

எல்லா தலைகீழ் மின்மாற்றி சேமகலத்துடனும் கொடுக்கப்படும் மின்சேமகலம் பராமரிப்பு தேவையில்லாத அடைக்கப்பட்ட மின்கலம் என்றே சொல்வார்கள் ஆனால் அப்படியல்ல, அவை யாவும் மிக குறைவான பராமரிப்பு மின்கலங்களே (ultra low maintanance sealed battery)எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை கலத்தில் நீர் அளவு பார்த்து வாலைவடி நீர் (distilled water)ஊற்ற வேண்டும் இல்லை எனில் மின்கல சுவர்களில் அரிப்பு ஏற்பட்டு வீண் ஆகிவிடும்.


பின்குறிப்பு:

# பட உதவி கூகிள் படங்கள்,நன்றி!

# மொழிமாற்றம், இன்ன பிற தகவல்களில் பிழை இருக்கலாம் :-))

சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.