(பிளாட்டோ)
அரேபியா என்பதான பெயரில் இப்பகுதி முதன் முதலில் வரலாற்றில் பதிவானது ,அசிரியன் அரசன் சால்மானேசர் கி.மு 853 இல் இப்பகுதி மீது படை எடுத்து வென்றதனைக்குறிப்பிடும் கல்வெட்டில் ஆகும்,அப்போது அரிபி என இப்பகுதியை அராமைக்கில் குறிப்பிட்டுள்ளார், அரிபி என்றால் சூரிய உதயம் ஆகும் பகுதி, என்பதை குறிக்கும் வகையில் கிழக்கு என சொல்வது.
ஏன் எனில் அசிரிய தேசம் என்பது தற்போதைய இராக்,இரான் அடங்கியப்பகுதியில் உள்ள நாடு ஆகும், அரேபிய தீபகற்பம் அவர்களுக்கு கிழக்கில் உள்ள நிலப்பரப்பு.
அதன் பின்னர் திக்லாத்-பைலேசர்-3 (கி.மு.745-727) என்ற அரசனின் ஆட்சியின் போதும் அரிபியா என குறிப்பிடப்பட்டுள்ளது, கிமு ஏழாம் நூற்றாண்டின் இறுதி வரை அசிரியர்கள் ஆட்சியின் கீழ் அரேபியா இருந்தது.
கி.மு.ஏழாம் நூற்றாண்டின் முடிவில் பாபிலோனிய மன்னன் நபடோனியஸ் அரேபிய பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்யலானான், இன்றைய மெதினா வரைக்கும் நபடோனியஸ் ஆட்சியின் கீழ் இருந்தது.இந்த அரசாட்சியின் தலைநகரம் பெட்ரா ஆகும், இதன் காரணமாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு நபதியான் என்ற பெயரும் உண்டு. இவர்கள் ஆட்சிக்குட்பட்ட அரேபியாவை பெட்ரா அரேபியா என்றும் சொல்வதுண்டு.
--------------------------------------
அரேபிய தீபகற்பத்தில் நாடுகளை உள்ளடக்கியப்பகுதிகளை மூன்று பிரிவாக பிரித்துள்ளார்கள்,
தெற்கு கடற்கரைப்பகுதி -இந்திய கடற்பகுதியை நோக்கி இருக்கும் நாடுகள், இதில் தற்போதைய யேமன், ஓமன் ஆகிய நாடுகள் வரும்.
மத்திய அரேபியா- நாடோடிகள் பகுதி எனப்படும் ,இது இன்றைய சவுதி அரேபியா போன்ற பகுதிகள் அடங்கியது.
வடமேற்கு பகுதி- ஜோர்டான்,சிரியா போன்ற நாடுகள் கொண்ட பகுதி, இதுவே ஆசியா மைனர், பகுதிக்கு அரேபியாவின் நுழைவு பகுதி ஆகும்.
இப்பகுதிகளை ஹீரோடட்டஸ்,ஸ்டார்போ போன்ற இலத்தின் வரலாற்று அறிஞர்கள் கீழ்கண்டவாறு பெயரிட்டு அழைத்தனர்.
அரேபியா ஃபெலிக்ஸ்- அப்படி என்றால் மகிழ்ச்சியான அரேபியா. ஏன் எனில் அக்காலத்தில் இந்தியாவுடன் அதிகம் கடல் வாணிபம் புரிந்து வசதியாக வாழ்ந்த பகுதி, எனவே வளமான நாடுகள், மகிழ்ச்சியான நாடுகள் என பெயரிட்டார்கள்.
அரேபியர்கள் இந்தியாவோடு கடல் வாணிபம் புரிந்தார்கள் என சொல்வதெல்லாம் கடற்கரையோர அரேபிய நாடுகளான ஏமன்,ஓமன் போன்ற தேசத்தவர்களே.
அரேபியா டெசெர்ட்டா: பாலைவன அரேபியா எனப்படும் மத்திய அரேபியா,இன்றைய சவுதி அரேபியா ஆகும், வளம் குன்றிய நாடோடிகளை கொண்ட நிலப்பரப்பு.
அரேபியா பெட்ரா:
பாறை நில அரேபியா எனப்பொருள், ஆனால் இதற்கான காரணம் அப்போது பெட்ரா என்ற ஒரு தேசமாக இப்பகுதி இருந்ததும் ஒரு காரணம். இப்பகுதியே ரோமானிய,கிரேக்கர்களுடன் அதிகம் தொடர்பில் இருந்த பகுதி, பின்னாளில் ரோமானிய ஆட்சிக்கு வந்தது.இதில் ஜோர்டான்,சிரியா,பாலஸ்தீனம், போன்ற பகுதிகள் அடக்கம்.
#மத்திய கிழக்கு:
அப்போதைய இலத்தின் நாடுகளுக்கு கிழக்கில் உள்ளப்பகுதியை ஆங்கில வழக்கில் மத்திய கிழக்கு நாடுகள் என பொதுவாக அழைக்கப்படுவதும் உண்டு,இப்பகுதி மத்திய தரைக்கடலின் மோராக்கோ, அரேபிய தீபகற்பம் மற்றும் இரான் அதன் பகுதிகள் அனைத்திற்கும் பொதுவான பெயர்.
முதன் முதலில் மத்திய கிழக்கு நாடுகள் எனப்பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தது இங்கிலாந்து ஆகும், இரண்டாம் உலகப்போரின் போது ,ராணுவ தகவல் தொடர்பின் போது இப்பகுதி நாடுகளை மிடில் ஈஸ்ட் என குறிப்பிட ஆரம்பித்து பின்னாளில் அதுவே மேற்கத்திய நாடுகளின் வழக்கமாக போய்விட்டது.
இங்கிலாந்து மிடில் ஈஸ்ட் என பட்டியல் இட்ட நாடுகள்,
territories of Turkey, Cyprus, Syria, Lebanon, Iraq, Iran, Palestine (now Israel), Jordan, Egypt, The Sudan, Libya, and the various states of Arabia proper (Saudi Arabia, Kuwait, Yemen, Oman, Bahrain, Qatar, and the Trucial States, or Trucial Oman [now United Arab Emirates]. & The three North African countries of Tunisia, Algeria, and Morocco .
பொதுவாக அனைத்து நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகள் என சொன்னாலும் ,அவற்றினை மூன்று பிரிவாக பிரித்தார்கள்,
அண்மை கிழக்கு:
பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து தென்கிழக்கு ஆசியா பகுதி,அதாவது இந்தியாவை நோக்கியுள்ள பகுதிகள்.
தூர கிழக்கு:
இரானுக்கு அந்த பக்கம் பசிபிக் பெருங்கடலை நோக்கியுள்ள நிலப்பரப்பு.
--------------------
அரேபிய மொழி மூலம்:
அக்காடியன் மொழி ஆப்ரோ-செமிட்டிக் மொழிக்கலவையை மூலமாக கொண்டது.
(அக்காடியன் கியுனீஃபார்ம் எழுத்துக்கள்)
Semitic (western Asia) மொழியில் இருந்து Akkadian, Aramaic, South Arabic, Arabic, Hebrew, Eblaite, Amorite, Maltese, Ugaritic, Amharic, Canaanite, Phoenician ஆகிய மொழிகள் பிரிந்து உருவாகின.
இதில் அக்காடியன் மொழி சார்கோன் எனப்படும் அக்காடியன் அரசாட்சியின் போது(கி.மு 2234-2279) உருவானது, இது அசிரியன் -பாபிலோனிய அரசாட்சியின் வழி உருவான மொழி. பின்னர் சுமேரிய அரசாட்சியின் போது சுமேரிய மொழியாக உருவானது. சுமேரிய அரசாட்சி நடைபெற்ற இடம் மெசபடோமியா , இருந்த போதிலும் அக்காடியன் அதன் பூர்வ மொழி வழியான அசிரியன் மற்றும் பாபிலோனிய மொழிய மெசபடோமியாவின் வடக்கு, தெற்கு பகுதியில் பயன்ப்பட்டு வந்தது.
பின்னர் கி.மு 6-7 ஆம் நூற்றாண்டுகளில் அராமைக் மொழியாக உருவெடுத்து நின்றது.
அரபிய தீபக்கற்ப நாட்டில் உள்ள பலநாடுகளின் மூல மொழியாக அக்காடியனும், அதன் பின்னர் அராமை மொழியின் தாக்கமுமே இருந்தது. ஏசு கிருத்து பேசிய மொழி கூட அராமைக் தான்.
மெசபடோமியா ,மெசோ- இடையில் ,படோமியா இரண்டு ஆறு,இரண்டு ஆறுகளான ,யூப்ரடீஸ் மற்றும் டைகரீஸ் நதிகளுக்கு இடைப்பட்ட நிலம்,இதுவே தற்கால இராக் ஆகும் ,இதனை அசிரியன், சுமேரியன் அரசாட்சி செய்தாலும் , அசிரியன் சுமேரியன் அரசாட்சி பாராசிகத்திலும் பரவி இருந்தது. பாரசீகம் என்பது தற்கால இரான்.
பொதுவாக இரான்,இராக்கின் பகுதிகளிலும், வலுவாக இருக்கும் போது அருகில் உள்ளப்பகுதிகளிலும் அசிரியன்,சுமேரியன் ஆட்சி நடைப்பெற்றது.
எனவே பாராசிக மொழியின் மூலமாகவும் அக்காடியன் விளங்கியது. அந்தந்த நாட்டின் அரசாட்சிக்கு ஏற்ப மொழியின் கூறுகள் கொஞ்சம் மாறி ஒரு புதிய டயலெக்ட் ஆக உருவெடுத்து பின்னர் ஒரு மொழியாக நிலைப்பது வழக்கம்.
சிரியா,ஜோர்டான்,ஓமன்,அம்மான் , மத்திய அரேபியா என அரேபிய தீபக்கற்பம் முழுவதும் புழங்கிய மொழிகளுக்கு மூலமாக பாராசிகம், அராமைக், அக்காடியன் ஆகியன விளங்கின.ஒவ்வொன்றும் கொஞ்சம் வேறுபட்ட டயலெக்ட் ஆகும்.
சமஸ்கிருதம், பிராம்மியின் வழியாக இந்தி ,பிஹாரி, குஜராத்தி, பஞ்சாபி,மராத்தி(புரொட்டொ இன்டோ -திராவிடன்) சவுராஷ்ரா ,போஜ்புரி என பல இந்திய மொழிகள் இப்படித்தான் உருவாகின. இந்தி என்பது இந்தியா முழுவதுக்குமான மொழியல்ல, ஒவ்வொரு மக்களுக்கும் தனி மொழி உள்ளது. ஆனால் அனைவரும் இந்தி மொழி பேசும் மக்கள் போல ஒரு தோற்றம் உண்டு.இதற்கு காரணம் இந்தி, இந்தியா என நாட்டின் பெயரோடு இணைந்து காணப்படுவதே.
அனைத்து அரேபிய மொழிகளும் பாரசீகம், அராமக் இன் வழி வந்த டயலெக்ட்டுகளாக இருந்த போதும் இன்றும் சிரியா ,இரான்,இராக், ஜோர்டான் ,ஏமன் போன்ற பகுதிகளில் ஒற்றுமையின்மை நிலவக்காரணம், அரேபிய மொழியை முதன்மையான மொழியாக கருதி மற்றவர்கள் பூர்வீமாக அரபிய மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் இல்லை என இன்றைய சவுதி அரேபியர்கள் நினைப்பதும் ஒரு காரணம் ஆகும்.
மற்ற நாட்டு மக்கள் வீட்டில் யேமனி, சிரியன், பெர்சியன் என பேசினாலும், அவர்கள் பொதுவில் அரேபியும், முதன்மையான மொழியாக அரபியை புழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுதாகவும் சொல்கிறார்கள்.
---------------------
அட்லாண்டிஸ்:
இன்றைய நாளில் இருந்து சுமார் கி.மு 10,500-12,000 ஆண்டுகளுக்கு முன்னால் அட்லாண்டிக் கடலில் மிகப்பெரும் சாம்ராஜ்யம் இருந்தது என்றும் நிலநடுக்கம்,சுனாமி, போன்ற ஏதோ ஒன்றால் ஒரு இரவு மற்றும் பகல் பொழுது காலத்திற்குள் கடலில் மூழ்கி அழிந்து விட்டது என ஒரு எடுகோள் அல்லது கிரேக்க புராணம் சொல்கிறது.
முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றி தனது நூலில் விரிவாக எழுதியவர் கிரேக்க தத்துவஞானி மற்றும் அறிஞர் பிளாட்டோ (கி.மு.427-347) ஆவார். அவரது நூலான Timaeus, & Critias ஆகியவற்றில் அப்பெயர்களை கொண்ட கதாப்பாத்திரங்களின் உரையாடலின் வழியாக அட்லாண்டிஸ் பற்றி பேச வைக்கிறார், பிளாட்டோவின் நூல்களில் அவரது குருவான சாக்ரட்டிசும் உரையாடுவதாகவும், கேள்விகளை துவக்கி ,பதில் கொடுப்பது போல வருவதுண்டு,எனவே இவை எல்லாம் பிளாட்டோ தனது கற்றல் மற்றும் சாக்ரட்டீஸுடன் உரையாடிய போது கிடைத்த ஞானத்தின் வெளிப்பாடாக இப்படியாக ஒரு கற்பனையான மிக உயர்ந்த ஞானம் , கலாச்சாரம் கொண்ட மக்களைப்பற்றி எழுதி இருக்கலாம்,அல்லது அப்போதைய கிரேக்க அரசின் அதிகார துஷ்பிரயோகம் கண்டு வெறுப்படைந்து அதன் விளைவாக மிகப்பெரும் சாம்ராஜ்யம் ஒன்று உருவாகி காலத்தால் அழிந்தது என்று கிரேக்க சாம்ராஜ்யத்தினை மறைமுகமாக அறிவுறுத்தி இருக்கலாம் என பல வரலாற்று ஆசிரியர்களும் கருதுகிறார்கள்.
ஏன் இப்படி எழுத வேண்டும் என கேள்வி எழும், காரணம் இருக்கிறது,சாக்ரட்டிசின் (கி.மு.469-399)தத்துவப்பள்ளியில் தான் பிளாட்டோ மாணவராக பயின்றார், கிரேக்க மன்னர்கள் தங்களின் கடவுளின் நேரடி வாரிசாக கருதிக்கொண்டு தங்களையே கடவுளாக கருதி செயல்பட்டு வந்தார்கள், ஆனால் சாக்ரட்டீஸ் ,உன்னையே அறிந்து கொள், ஏன் எதற்கு என கேள்வி கேள் என அப்போதைய கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசினார். இதனால் அவர் கடவுள் இல்லை என பேசுவதாகவும், அரச நம்பிக்கையான கடவுளை விட புனித தன்மையை அடைய முடியும் அல்லது இருக்கிறது என இளைஞர்களை தவறான வழிக்கு திருப்புவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். சாக்ரட்டீசே வரலாறு அறிந்த ஆதாரப்பூர்வமான பகுத்தறிவாளர் எனலாம். இந்த நவீன காலத்திலேயே பகுத்தறிவுப்பேசினால் அவாளுக்கும் பிடிக்கமாட்டேங்குது ,இவாளுக்கும், பிடிக்கமாட்டேங்க்குது :-))
ஒரு மாத விசாரணைக்கு பின் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது, அவருக்கு கருணையுடன் அவரே ஹெம்லாக் என்ற நச்சு செடியின் விஷத்தினை அருந்தி மென்மையாக மரணத்தினை தழுவ அனுமதி அளிக்கப்பட்டது. விஷம் அருந்தி மரணம் நேரிடப்போகும் நேரத்திலும் வெகு சில நெருக்கமான மாணவர்களுடன் சாக்ரட்டீஸ் மரணத்திற்கு பின் மனித ஆத்மாவிற்கு என்னவாகும், ஆத்மா அழிவில்லாதது என்பவற்றை மரணம் நேரிடும் போது தனக்கு உண்டான அனுபவத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார், அவ்வுரையை கேட்ட வெகு சிலரில் பிளாட்டோவும் ஒருவர்.பிளாட்டோ அப்போது அங்கில்லை என்றும் ,மஞ்சத்துண்டு திமுக ஆரம்பித்தபோது ராயபுரம் ராபின்சன் பூங்காவிற்கு போனாரா என்பது போல ஒரு கேள்வியும் உண்டு :-))
மரணத்திற்கு பின் சிலரின் ஆன்மா பாதல லோகத்திற்கு செல்லும், சிலரின் ஆன்மா மேல் உலகம் செல்லும், மேல் உலகத்தில் பசுமையான மரங்கள்,உண்மையான ஒளி,நிலம், மாசுபடாத தாதுக்கள், என அனைத்தும் தூய்மையான நிலையில் இருக்கும், நாம் வாழும் உலகில் மிக பரிசுத்தமானது என நாம் நினைக்கும் ஒன்றே அசுத்தமானது என்றெல்லாம் சாக்ரட்டீஸ் மரண தருவாயில் ஏற்பட்ட காட்சியினை பகிர்ந்துள்ளார்.
உண்மையான உலகம் என்பதே மேல் உலகம் தான் என்றும் ,பூலோகம் ஆனது மேல் உலகின் மோசமான பிரதி ,நம் ஆன்மா மேல் உலகில் இருந்து கீழ் இறக்கம் அடைவதே மனித பிறப்பு ,மரணத்திற்கு பின் அடையும் மறு பிறப்பு என்பது மேல் உலகிலோ அல்லது பாதாள உலகிலோ நடக்கும் என்பதே சாக்ரட்டீசின் சித்தாந்தம்.
இதன் பாதிப்பு மற்றும் , சாக்ரட்டீஸுடன் மேற்கொண்ட உரையாடல்கள் இவற்றின் அடிப்படையிலேயே "republic" என்ற நூலை எழுதி இருக்க வேண்டும் என்கிறார்கள்.
மனிதன் பிறப்பது மேல் உலகத்தில் மாசு அடையும் ஆன்மாவினால் அவன் ஆன்மா கீழ் உலகான பூமியில் பிறக்கிறது ,மரணத்திற்கு பின் மீண்டும் மறுபிறப்பாக மேல் உலகம் செல்கிறது .அதற்கு அவர்கள் கீழ் உலகில் பரிசுத்தமான வாழ்வினை வாழ்தல் வேண்டும் என சாக்ரட்டீசின் அடிப்படையிலேயே ,பிளாட்டோவும் வலியுறுத்தினார் என்கிறார்கள்.
கிரேக்க மன்னர்கள்,சண்டை, அதிகார வெறி என மாசடைந்து விட்டதால் அழிவை அடைவார்கள் என்பதனை மறைமுகமாக உணர்த்தவே அட்லாண்டிஸ் என்ற பரிசுத்தமான ,சகல வல்லமை படைத்த தேசத்தினை தனது நூலில் உருவாக்கி அழிவினை சந்திப்பதாக காட்டியுள்ளார் அப்படியான நகரம் உண்மையில் இல்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்கள் கருத்து.
அட்லாண்டிஸ் புராணம்;
கடல் தெய்வம் போசிடானுக்கும் மனித பெண் கிளிட்டோவுக்கும்(Poseidon and the mortal woman Cleito) 5 இரட்டைக்குழந்தைகள் பிறந்தார்கள் ,அவர்களில் மூத்தவர் அட்லாஸ், அவரது மற்ற சகோதரர்கள் புரோமெதியாஸ்,எபிமெத்தியாஸ்,மெனோஷியஸ்(Menoetius) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவர்களுக்காக அட்லாண்டிக் கடலில் மூன்று வளையங்களாக நீர் சூழந்த உள்வட்டங்களை கொண்ட ஒரு நாட்டினையும் ,அதன் மத்தியில் ஒரு மலையும் கொண்ட தீவினை கிரேக்க கடவுள் ஸீயஸ் உருவாக்கி தந்தார் , அதனை பத்து சகோதரர்களும் சமமாக 10 பாகங்களாக பிரித்து ஆண்டு வந்தார்கள்.
காலம் செல்ல செல்ல சாதாரண மனிதர்கள் போல போட்டி பொறாமை கொண்டு சச்சரவுகளில் ஈடுப்பட்டு, சண்டையிட்டுக்கொண்டார்கள், பின்னர் அவர்கள் ஏதன்சின் மீது போர் தொடுத்து சண்டையிட்டார்கள் என்றும் , இம்மக்களின் பொறுப்பற்ற தன்மை கண்டு கிரேக்க கடவுள்களின் தலைவரான ஸீயஸ் இடி ,மின்னலை ஏவி விட்டு அழித்ததோடு அல்லாமல் பெரும் நில நடுக்கம் ஏற்பட வைத்து அட்லாண்டிஸ் தீவினை ஒரு இரவு மற்றும் பகலில் கடலில் மூழ்க வைத்தார் என்றும் கூறுகிறார்கள்.
இது பிளாட்டோ கூறும் சம்பவம், இதனை சலோன் என்ற கிரேக்க துறவி, எகிப்துக்கு சென்றிருந்த போது அங்கிருந்த துறவி சொன்னதாகவும் அதனை கேட்டு கிரியோஸ் ,டைமெனோஸிடம் சொல்வதாகவும் கூறியுள்ளார்.
இது முழுக்க கற்பனையாகவும் இருக்கலாம் ,அல்லது உண்மையில் நில நடுக்கம்,சுனாமியால் அழிந்த ஒரு தீவின் வரலாற்றினை பொதுவாக சொல்லி அதற்கு அட்லாண்டிஸ் என பிளாட்டோ பெயரிட்டு அழைத்தும் இருக்கலாம்.
பிளாட்டோ காலத்திற்கு முன்னரே அட்லாஸ், புரோமெத்தியாஸ் போன்ற கிரேக்க டைட்டான் கதைகள் உண்டு, அவை எல்லாம் கொஞ்சம் மாறுபட்டவை.
அட்லாஸ்-கிரேக்க புராணம்:
கிரேக்க புராணப்படி அட்லாஸ் , கேயா என்ற பூமிக்கும், குரோனாஸ் என்ற வானத்திற்கும் பிறந்த ஒரு டைட்டான் அவரது சகோதரர்கள் தான் புரோமெத்தியாஸ்,மெனிஷியஸ் போன்றோர்.
மெனிசியஸுக்கும் ,ஸீயஸ் தலைமையிலான கிரேக்க கடவுள்களுக்கும் சண்டை வரவே ,அப்போது அட்லாஸ் மெனிஷியஸ் சார்பாக சண்டையிட்டு , கடவுள்கள் வாழும் புனித மலையான ஒலிம்பஸில் ஏறி சண்டையிடவே பொறுமை இழந்த ஸீயஸ் தனது சக்தி வாய்ந்த ஆயுதமான இடியை ஏவி அனைவரை அழித்து , சகோதர டைட்டான்களுக்கு கடும் தண்டனை விதித்தார்.
மெனிஷியஸை டார்டாரஸ் எனப்படும் பாதாள உலகில் அடைத்தார், புரோமெத்தியாசை காக்கஸ் மலையில் சங்கிலியால் கட்டிப்போட்டு ,ஒரு கழுகை விட்டு கொத்தவைத்து துன்புறுத்தி பின்னர் டார்டாரஸில் அடைத்தார்.
அட்லாசை வானத்தினை தோளில், அல்லது தலையில் தாங்கிப்பிடித்து ,மீண்டும் பூமியோடு சேராதபடி எப்போதும் சுமந்திருக்க வேண்டும் என சபித்தார். இதன் தாத்பரியம் என்ன வென்றால், வானமும், பூமியும் சேர்ந்து டைட்டான்களை உருவாக்கியதால் தான் இப்பிரச்சினை எனவே இனி எக்காலத்திலும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து டைடான்களை குழந்தைகளாக பெற்றுக்கொள்ளக்கூடாது, எனவே அவர்களின் மகன் அட்லாசை வைத்தே பிரித்துவிட்டார்.
இது மட்டும் அல்லாமல் இன்னும் பல கிளைக்கதைகள், மாறுபட்ட வடிவங்கள் என அட்லாசின் கதைகள் கிரேக்கத்தில் புழக்கத்தில் உண்டு.
வழக்கமாக படங்களில் சித்தரிக்கப்படுவது போல அட்லாஸ் பூமியை தோளில் தூக்கிக்கொண்டு நிற்க தண்டிக்கப்படவில்லை, பின்னாளில் ஒரு பிரஞ்ச் /இத்தாலி உலக வரைப்பட தயாரிப்பாளர் Antonio Lafreri தனது சின்னமாக அட்லாசை வைத்திருந்தார், அதனை வரைப்படத்திலும் பெயராக போட்டு வெளியிட்டார் "Gerardus Mercator" என்ற வரைப்பட தயாரிப்பாளர், ஆனால் அவர் வானியலில் புகழ்ப்பெற்ற மரிஷியானா அரசர் அட்லாஸ் என்பவரையே பெருமை படுத்த அப்படி செய்தார்.மேலும் ஃபார்னெஸ் என்ற நிறுவனம் உலக உருண்டையை தயாரித்து அட்லாஸ் என்றப்பெயரிலும் விற்க ஆரம்பித்தால், அனைவரும் அட்லாஸ் உலகத்தினை தோளில் தூக்கிக்கொண்டு நிற்பது போல வரைய ஆரம்பித்துவிட்டார்கள்.
அட்லாண்டிஸ் குறித்த பிளாட்டோவின் குறிப்புகள்.
# ஏதன்சில் இருந்து அட்லாண்டிஸ் 2,500 மைல்கள் தொலைவில் உள்ளது.
# ஜிப்ரால்டர் வளைகுடாவில் பில்லர்ஸ் ஆப் ஹெர்குலசில் இருந்து மேற்கில் உள்ளது.
#அதன் பரப்பளவு ஆசியா மைனர் மற்றும் லிபியா சேர்ந்த அளவுக்கு இருக்கும்.
# மூன்று உள்வட்டங்களில் ஏரி சூழ அமைந்த நாடு, கடற்கரையோரம் உள்ளது. தீவின் மத்தியில் ஒரு மலை உள்ளது அதில் கடல் அரசன் போசிடான் கோயிலும் ,ஆறு குதிரைகளை இழுக்கும் தேருடன் கூடிய போசிடான் சிலையும் உள்ளது.
# அட்லாண்டிஸ் நிலம் மிக வளமானது, நல்ல விளைச்சலும்,உயர்ந்த பசுமையான மரங்களும், கொண்ட வளமான நாடு.
#அட்லாண்டிஸ் மக்கள் , வீரமும், அறிவும் நிரம்பியவர்கள், தொழில்நுட்பத்தில் மிக முன்னேறியவர்கள்.
# கடல் பயணத்திலும், கப்பல் கட்டுவதிலும் வல்லவர்கள், மூன்று அடுக்குகளை கொண்ட மிகப்பெரிய கப்பல்களை பயன்ப்படுத்தி வந்தார்கள்.
#கட்டிடக்கலையில் வல்லவர்கள், பிரமிட் போன்ற கட்டுமானங்களும், உயர்ந்த கட்டிடங்களும் கட்டினார்கள்.
அனைத்து வகையிலும் பரிபூரணமானவர்களும், மிக நல்ல நாடாகவும் ஏதன்ஸுக்கு 9000 ஆண்டுகளுக்கு முன்னரே விளங்கியது எனக்குறிப்பிட்டுள்ளார்.
முன்னரே சொன்னது போல கிரேக்க ஆட்சியாளர்களுக்கு அழிவு வரும் என குறிப்பால் உணர்த்த எழுதப்பட்டதாக இருக்கலாம் ,ஆனால் பின்னர் ஏன் வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் மிக தீவிர ஆய்வுகளும் , தேடல்களும் செய்கிறார்கள், அதுவும் இது வரைக்கும் மனித வரலாறு நன்கறிந்த பழமையான மனித நாகரீக வரலாற்றின் காலம் கிமு 4500 தாண்டிப்போகவில்லை, அவர்களைப்பற்றி கிடைக்கும் சான்றுகளும் மிகவும் பின் தங்கிய நாகரீகமாகவே காட்டுகிறது.
அப்படி இருக்கும் போது இன்றைக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் மிக மேம்பட்ட நாகரீகம் என எழுதப்பட்டதை வைத்து தேடுவானேன்?
காரணமுள்ளது, பிளாட்டோ குறிப்பிட்ட காலமான 12,000 ஆண்டு என்பது தான், ஏன் எனில் சுமார் அதே காலக்கட்டத்தில் தான் கடைசி பனிக்காலம் முடிவுற்று பெரு வெள்ளம் ஏற்பட்டு, உலகின் கடல் மட்டம் சராசரியாக்க 100 மீட்டர் உயர்ந்தது, மேலும் பெரும்பனி உருகியதால் பூகம்பம்,சுனாமி என பல இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டது.
மேலும் பெரு வெள்ளம் , உலக அழிவு என உலகின் அனைத்து புராணங்களிலும் தவறாமல் ஒரு கதை உள்ளது,
இந்தியாவில் பார்த்தால் லெமுரியா கண்டம் ,பஹ்ருளி ஆறு என தெற்கேவும், கிழக்கு கடற்கரை பகுதியில் கடல் கொண்ட பூம்புகார் எனவும், மேற்கு கடற்கரைப்பகுதியில் கட்ச்,காம்பே வளைகுடாவில் மதுரா நகரம் கடல் கொண்டது பற்றி எல்லாம் நிறைய இலக்கிய ,புராண குறிப்புகள் உள்ளது.
கியுபா, அருகே கடல் அடியில் சில கட்டுமானங்கள் கண்டுள்ளனர், ஜப்பானில் யோங்குமுனி என்ற இடத்தில் கடல் அடியில் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கிரேக்கம், ரோம் அருகேயே சில கடல்கோள் நிகழ்வுகள் நடந்துள்ளது, எனவே 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டம் பொதுவாக உயர்ந்து பல இடங்களை அழித்து இருக்கலாம், அது போல அட்லாண்டிசும் அழிந்து இருக்கலாம், இதெல்லாம் செவிவழிக்கதைகளாக பரவி பிளாட்டோ நூலாக எழுதி இருக்கலாம், மேலும் அவர் காலத்தில் நான்காம் பனிக்காலம் ,அதன் முடிவு 12,000 ஆண்டுகளுக்கு முன் என்பதெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது தோராயமாக சொன்னாலும் ஆண்டு கணக்கும், இன்ன பிற நிகழுகளும் சரியாக ஒத்திருப்பதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்,எனவே தான் இன்றளவும் அட்லாண்டிஸ் ரகசியம் மிகவும் ஆர்வத்தினை தூண்டுவதாக உள்ளது.
-----------------
திரும்பிப்பார்த்தல் தொடரும்...
------------
படங்கள்,செய்திகள் உதவி,
கூகிள்,விக்கி,என்சைக்கிளோ பீடியா,பிபிசி,sron.nl,atlantisquest,national geography இணைய தளங்கள் ,நன்றி!
*********