Friday, June 15, 2007

செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!





தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு , மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். சென்னை,வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி , சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கபுரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

ஆடு மேய்க்கும் ஒருவர் அந்த வழியே சென்ற முனிவருக்கு பசிக்கு உணவளித்ததால் இங்கே புதையல் உள்ளது என செஞ்சிமலைப்பகுதியை காட்டி சென்றார் அதனை எடுத்த ஆடு மேய்ப்பவர் அந்த பணத்தைக் கொண்டு கட்டிய கோட்டை தான் செஞ்சிக்கோட்டை என்பார்கள்.புதையல் பணத்தில் கோட்டை கட்டியவர் பெயர் ஆனந்த கோன்,அவ்ரது மகன் கிருஷ்ணக் கோன் தான் கிருஷ்ண கிரி உருவாக காரணமாக இருந்தார் பின்னாளில்.

பின்னாளில் செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும் , கதைகளும் உண்டு.

ராஜ தேசிங்கின் வரலாறைப் பார்ப்போம், மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெரிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக , தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப்.இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சாமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார்.அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் மகமூத் கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.

மகமூத் கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப் சிங் , ராஜபுத்திர வீரர் அவரது மகன் தான் ராஜ தேசிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்க சீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்ப்பட்டதால் சொருப் சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து ,அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப்.இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷா ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார்.

ஷா ஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப் சிங்க்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜா தேசிங்கும் சென்றான்.தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான்.வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான் .அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). அவர் சமைந்த நேரம் சரியான நேரம் இல்லை என்பதால் ஆறு மாதக்காலம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்ககூடது என தடை விதித்து விட்டார் பெண்ணின் தந்தை.முகம் பார்க்காமலேயே தான் திருமணம் நடந்து அந்தக்கால காதல் கோட்டை!

-தொடரும்.

சென்னையில் ஒரு மழைக்காலம்!

சென்னையில் என்னைப்போல புனிதர்கள் இருப்பதன் அடையாளமாக இன்று இரவு நல்ல மழை தாராளமாக பெய்கிறது.

ரஜினி ரசிக கண்மணிகள் அவர்கள் தலை படம் வருவதால் தான் சென்னையில் மழை என்று கொஞ்சம் போல உடான்ஸ் விட்டுக்கொள்ளலாம்,யார் கேட்கப் போகிறார்கள்.

மழையைப் பார்த்து ஒரு மாமாங்கம் ஆகப் போகிறது என்பதால் ஆர்வமாக வேடிக்கைப் பார்த்தேன். ஒரு தம் பற்ற வைத்துக்கொண்டு (நமுத்து விட்டது பாதி தம்)

மழை பெய்தால் சினிமாவில் கதாப்பாத்திரங்கள் எல்லாம் ஓடிப்போய் நனைகிறார்கள் (பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கவோ?) நாம் மட்டும் ஒதுங்கி நிற்கிறோமே என்று தோன்றியது ஆனால் நாளைக்கு நமககு தான் மூக்கடைப்பு ,காய்ச்சல் ,இன்ன பிற எல்லாம் வந்து நான்கு விரல் காட்டும் அனாசின் தேவைப்படும்!

மழை பெய்த்ததும் மண் வாசனை வருமே எங்கே காணோம் என்று கொஞ்ச நேரம் மண்டையை பிறாய்ந்துக்கொண்டேன் இந்த கான்கிரிட் காட்டில் அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை என்பதை தாமதமாக விளங்கிக் கொண்டேன்.

சரி அந்த மண்வாசனை வரக்காரணம் ஒரு பேக்டீரியா என்று படித்த நியாபகம் அது என்ன என்று யோசித்து கடைசியில் ஒரு பழைய புத்தகத்தை தேடி கண்டுக்கொண்டாயிற்று, "ஆக்டினோமைசெட்ஸ்" என்ற நுண்ணுயிர் , வறண்ட காலத்தில் ஸ்போர்களை உருவாக்கி மண்ணில் விட்டு செல்லும் மழை நீர் பட்டதும் அவை உடைந்து நுண்ணுயிர் வெளிப்படுகிறது,எனவே மண்வாசனை வருகிறது என ஆழமாக சுவாசித்தால் நுண்ணுயிர் தான் நம் மூக்கில் போகும் ஜாக்கிரதை(பயம் வேண்டாம் நோய் எதுவும் வராது அது ஒரு தாவரங்களுக்கான நுண்ணுயிர்)