Tuesday, August 07, 2012

சந்தர்ப்பவாத அப்பாடாக்கர்கள்.


முன் அறிவிப்பு:

இப்பதிவு எந்த ஒரு தனி நபரையோ அல்லது குழுமத்தையோ, வலைப்பதிவரையோ குறிப்பிட்டு எழுதப்படவில்லை, வலைப்பதிவுகள், ஊடகங்கள், மற்றும் மக்கள்,சமூகம் ஆகியவற்றின் பொதுப்புத்தி சார்ந்த கருத்தாக்கங்களின் மீதான எனது அவதானிப்பினை வெளிப்படுத்தவே இப்பதிவு.

யாரேனும் தங்களுக்கும் இப்பதிவின் கருத்திற்கும் தொடர்பிருப்பதாக நினைத்தால் அது அவர்களின் கற்பனையே, ஏன் எனில் இப்பதிவில் உலகமகா கருத்து என்ற "வஸ்து" எதுவும் இல்லை, முழுக்க மொக்கையாக கூட இருக்கலாம்.

எனவே விருப்பமில்லாதவர்கள் இம்முன்னறிப்புடன் வெளியேறிவிடலாம், இதனை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை. திறந்த மனதுடன் அனைத்து கருத்தினையும் அவதானிப்பவர்கள் மேற்கொண்டு வாசிக்கலாம்.நன்றி!
**************

வழக்கமாக அல்லது பெரும்பாலும் அல்லது அனேகமாக பதிவர்கள் எப்படி எழுதுகிறார்கள், அவர்கள் நோக்கம் என்னவென்றெல்லாம் விமர்சித்து தனியே என் பதிவில் எழுதி பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்திக்கொள்வதில்லை.என்ன கருத்தாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு சென்று துணிச்சலாக அவர்களிடமே தெரிவிப்பேன், வேண்டியவர்கள் ,வேண்டாதவர்கள் என்ற இரட்டை நிலைப்பாடு எல்லாம் கிடையாது, சரி எனப்பட்டால் சரி என்றும் தவறு என்றால் தவறு என்றும் சொல்ல தயங்கியதில்லை. கறுப்பு அல்லது வெள்ளை மட்டுமே நடுவில் சாம்பல் நிறம் என்று மழுப்புவதில்லை.

ஆனால் சமீபகாலமாக உண்மையை எதிர் கொள்ள அச்சப்படும் பதிவர்கள் சிலர் அதனை விரும்புவதில்லை , அவர்களுக்கு தேவையானது எல்லாம் , நல்லப்பகிர்வு , த.ம.9 என ஓட்டும், ஹிட்டும் மட்டுமே. அதை எல்லாம் வைத்து அண்ணா நகரில் வீடு வாங்கவோ அல்லது அடுத்த முதல்வராகவோ ஆக முடியுமா என்று தெரியவில்லை ஆனால் சிலப்பதிவர்கள் ஹிட்ஸ், ஓட்டு என வெறிப்பிடித்து , பொழுது விடிந்தால் செய்தித்தாளில் சம்பவங்களை தேடுகிறார்கள், தொ.காவில் என்ன சிக்கும் என ரிமோட்டை அழுத்தி தேய்க்கிறார்கள், ஏன் எனில் அப்போது தானே பரபரப்பாக எழுதி சூடான இடுகையில் இடம் பிடிக்க முடியும் :-))

சிலர் அவர்களுக்கு காலையில் மலசிக்கல் வந்து அடைத்துக்கொண்டாலும் அரசாங்கம் சரியாக ஆட்சி செய்யவில்லை அதனால் எனக்கு அடைத்துக்கொண்டது என்ற ரீதியில் புகார்ப்பட்டியல் வாசிக்கிறார்கள், அதற்கும் சிலர் உடனே ஓடிவந்து இப்படித்தான் 1947 இல் எனக்கும் அடைத்துக்கொண்டது ஆட்சி சரியாக இல்லைனா அடைத்துக்கொள்ளும் ,நல்ல சமூக விழிப்புணர்வுள்ளப்பதிவு என்று முதுகு சொறிந்து விடுகிறார்கள்.

அப்படியான பதிவைப்பார்த்துவிட்டு சும்மா போகாமல் மலச்சிக்கலுக்கும் அரசாங்கத்துக்கும் என்ன சம்பந்தம், கொஞ்சம் வெளக்கெண்னை குடிங்க சரியாகிடும்னு சொன்னால் போதும் , என் வயசென்ன தெரியுமா? ,என் அனுபவம் என்ன தெரியுமா? என் புகழ் என்ன தெரியுமா? எனக்கு கருத்து சொன்னவர் என் ஆருயிர் நண்பர் தெரியுமா? என என்ன, என்ன ,என்ன என அவ்வையார் போல நீட்டி முழக்குறாங்க.

என்ன கொடுமை சார் இது, இவருக்கு சொறிந்துவிட்டவர் இவரோட ஆருயீர் நண்பர்னு எனக்கு எப்படி தெரியும்,அப்படியே ஆருயிரோ ,ஓருயிரோவாக இருந்தால் என்ன சொன்ன கருத்து மொக்கையாக இருந்தால் மொக்கைனு சொன்னால் தப்பா சார் ?

முகம் தெரியாத முகமூடியான உன் பின்னூட்டம் வெளியிட்டு உனக்கு மகிழ்வூட்டுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை, உன்கிட்டே ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை ,பாஸ்போர்ட், ஆகியவை இல்லைனு வேற சொல்றாங்க, அடக்கொடுமையே என் பின்னூட்டம் இவர்கள் பதிவில் வருவதால் எனக்கு என்ன மகிழ்ச்சி? அவர்கள் பதிவு என்ன ஒலகப்புகழ்ப்பெற்ற டைம் மேகசினா அதில் என் கருத்து வெளிவந்தால் நான் மகிழ்வுற்று மேகம் ஒன்பதில் மிதக்க :-))

இந்த புண்ணியவான்கள் ,ஜீவா நடித்து வெளிவர இருக்கும் "முகமூடி"படம் கூட பார்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன் , ஏன் என்றால் படம் பேரு முகமூடின்னு இருக்கு என சொல்வார்களாயிருக்கும்.

மாஸ்க் ஆஃப் தி ஸாரோ, ஸ்பைடர் மேன் , மேட்மன் போன்ற முகமூடி நாயகர்கள் படம் கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன் :-))

ஒரு வலைப்பதிவு தமிழில் வைத்துக்கொண்டால் கடவுளாக நினைத்துக்கொள்கிறார்கள், நான் கடவுளையே விமர்சிப்பவன் இவர்கள் என்ன பெரிய சுண்ணாம்பு விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்களா?

இவர்கள் செய்வதெல்லாம் இது தான் , மாதம் முப்பது நாளுக்கு அறுபது பதிவு என எதையாவது எழுதித்தள்ளிவிட்டு பிரபலப்பதிவர் என சொல்லிக்கொள்வது , நடு நடுவே மானே தேனே போல வெள்ளிக்கிழமை ஆனால் வெளியாகும் ஏதேனும் மொக்கைப்படத்தினைப்பார்த்துவிட்டு விமர்சனம் , படம் எதுவும் வரவில்லை எனில் தொலைக்காட்சியில் வரும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைப்பற்றி, பின்னர் செய்தித்தாள், வார இதழ்கள் என அனைத்தையும் சுட்டுப்பதிவாக்குவது மட்டுமே , ஆனால் அவர்கள் பதிவில் ஏதேனும் ஒரு மாற்றுக்கருத்து சொல்லிவிட்டால் போதும் ஏய் ..ஏய் நான் எவ்வளவு பிரபலப்பதிவர் தெரியுமா..என் பின்னாடி தமிழ்ப்பதிவுலகமே இருக்குன்னு சொல்லிக்கொள்ள வேண்டியது .இது போன்ற அப்பாடாக்கர்களுக்கு தினம் குறைந்த பட்சம் ஒரு பதிவாவது எழுதவில்லை எனில் கை,கால் எல்லாம் உதற ஆரம்பித்து விடும் என நினைக்கிறேன்.

அவ்வப்போது இவர்களுக்கு சமுகப்பொறுப்புணர்வு நவத்துவாரத்திலும் பொங்கிட்டு வந்துவிடும் அது போன்ற சமயங்களில், ஒரு ஆட்டோவில் 10 பேருக்கும் மேல் பள்ளிக்குழந்தைகளை திணித்து அழைத்து செல்கிறார்கள், விபத்து ஆனால் என்ன ஆவது, இப்போது தான் ஒரு குழந்தை பள்ளிப்பேருந்தில் சிக்கி உயிர் இழந்தார், எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேருக்கும் மேல் குழந்தைகளை ஏற்றக்கூடாது என மனசாட்சியுடன் முடிவு எடுக்க வேண்டும்,அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரகடனம் செய்து பதிவுபோடுவார்கள் மேம்போக்காகப்பார்த்தால் சமூக அக்கறைப்பீரிட்டது போல தெரிந்தாலும் இதனைக்கட்டுடைத்துப்பார்த்தால் இத்தகைய நிலைக்கு இவர்களே காரணம் என்பது புரியும்,

எப்படி எனப்பார்ப்போம்,

வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியெல்லாம் தரங்கெட்டப்பள்ளி ,என் அந்தஸ்துக்கு அங்கு என்பிள்ளைகள் படிக்குமா என தூரமாக இருக்கும் ஏதேனும் பணம் பிடுங்கும் பள்ளியில் கொண்டு சேர்த்தது இவர்களே.

பெரிய கட்டிடம், எல்.கேஜில் கணினி , யோகா, குதிரையேற்றம் ,யானை ஏற்றம் முதல் அனைத்தும் கற்றுத்தரும் உலகத்தரப்பள்ளி ,அப்பா, அம்மா ரெண்டு பேரும் முனைவர் பட்டம் வாங்கி இருக்கணும் , பிள்ளைக்கும் பெற்றோருக்கும் நுழைவுத்தேர்வு என ஏகமாக மிரட்டிவிட்டு எக்கச்சக்கமாக நன்கொடை,மாதக்கட்டணம் எல்லாம் வசூலிக்கும் பள்ளியே தரமான பள்ளி என தேடிப்போய் சேர்த்து இருப்பார்கள்.

பின்னர் பள்ளிக்கு போக பேருந்து இவர்கள் பகுதிக்கு வரவில்லை என ஆட்டோவில் அனுப்ப முடிவு எடுப்பதும் இவர்களே, ஏற்கனவே 10 பேர் ஏற்றிச்செல்லும் ஆட்டோவில் 11 ஆவதாக பிள்ளையை இவர்களே திணித்து அனுப்பிவிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேருக்கு ஏற்றாமல் இருக்க வேண்டும், என்பதும், அரசாங்கம் நடவடிக்ககை எடுக்க வேண்டும் என்பதும் என்ன நியாயமோ தெரியவில்லை.

ஒரு ஆட்டோவில் 10 பேர் ஏற்றி செல்வதை கண்ணால் பார்த்துவிட்டு தானே அதில் இவர்கள் ஏற்றி அனுப்புகிறார்கள், அதற்கு காசும் கொடுக்கிறார்கள், அந்த ஆட்டோ டிரைவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியா இவர்கள் பிள்ளையை ஆட்டோவில் ஏற்றி சென்றார் ,இல்லையே.

நாம் தான் விருப்பப்பட்டு ஏற்றி அனுப்புகிறோம், பின்னர் ஏன் புலம்பல், குழந்தைகள் மீது உண்மையான அக்கரை இருக்குமானால் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் சேர்த்து இருக்க வேண்டும், அல்லது தினம் பெற்றோர்களில் ஒருவர் பள்ளிக்கு அழைத்து சென்று அழைத்து வர வேண்டும்.அதெல்லாம் செய்யாமல் ஆட்டோ டிரைவரையும் அரசையும் திட்ட வேண்டியது.

மேலும் 10 குழந்தைகளை ஏற்றி செல்வதால் கிடைக்கும் வருவாயை 5 குழந்தைகள் ஏற்றி சென்றாலும் தருவதாக ஆட்டோ டிரைவரிடம் பேசி ஏற்பாடு செய்யலாம். குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் என்றால் கூடுதலாக செலவு செய்ய முன்வர வேண்டும், பிரபல பள்ளிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்த தயாராக இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு செலவா?

அல்லது சிக்கனமாக வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டால் நடந்தே போய்வருவார்கள். துவக்கப்பள்ளிக்காலத்தில் எங்குப்படித்தால் என்ன?அப்துல் கலாம் போன்ற சாதனையாளர்கள் எந்த காண்வென்டில் ஆட்டோவில் போய் படித்தார்? சாதிக்கவில்லையா? ஓரளவு குழந்தைகள் விவரம் வந்த பிறகு தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்பலாமே. அதை விட்டுவிட்டு 3 வயது பச்சிளம் குழந்தையை ஆட்டோவில் 10 பேருடன் திணித்து அனுப்பும் பெற்றோர்கள் ,அரசையும்,ஆட்டோ டிரைவரையும் பொறுப்பில்லாதவர்கள் என விமர்சிப்பது உலகமகா நடிப்புடா சாமின்னு தான் சொல்ல தோன்றுகிறது.

தாம்பரம் பள்ளிப்பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியே விழுந்து ஒரு சிறுமி இறந்த சம்பவத்தினை ஆராய்ந்தோமெனில் பல மட்டத்திலும் தவறுகள் மற்றும் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்திருப்பது தெரிய வரும்.

#முதல் குற்றவாளி பள்ளியினை நடத்தியவர்.

#இரண்டாவது குற்றவாளி அப்பேருந்துக்கு மிக சமீபத்தில் தகுதி சான்று வழங்கிய வட்டாரப்போக்குவரத்து அதிகாரி.

இந்தியன் படத்தில் இதனை ஒத்த ஒரு சம்பவம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.

#மூன்றாவது குற்றவாளி அப்பேருந்தினை இயக்கிய ஓட்டுநர், மற்றும் பராமரிப்பாளர்கள், ஒரு ஓட்டையுடன் அட்டையைப்போட்டு மூடி பள்ளிக்குழந்தைகள் கொண்ட பேருந்தினை இயக்க முன்வந்திருக்கவே கூடாது.

பேருந்தில் சீட்டில்லாமல் நின்றுக்கொண்டே ஓட்டு என சொன்னால் அந்த ஓட்டுநர் ஓட்டியிருப்பாரா?

#நான்காவது குற்றவாளி அல்லது பொறுப்பற்ற செயலுக்கு சொந்தக்காரர்கள் அக்குழந்தையின் பெற்றோர்கள். ஆம் அவர்களே தான்.

அவர்கள் இருப்பது முடிச்சூரில் அது மேற்கு தாம்பரம் ,பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ இருக்கலாம், அக்குழந்தைப்படித்தப்பள்ளி சேலையூர் ,இது தாம்பரம் கிழக்கில் உள்ளது.

ஏன் அவ்வளவு தூரம் உள்ளப்பள்ளியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும், அதுவும் அப்பள்ளியில் எல்.கேஜிக்கு ரூபாய் 40,000 நன்கொடை, ஆண்டுக்கட்டணம் ரூபாய் 30,000 ,ஓட்டைப்பேருந்துக்கு ரூபாய் 10,000 கட்டணம்.

அப்பேருந்தில் ஓட்டையே இல்லை என்றாலும் எல்.கேஜி படிக்கும் 3 வயது குழந்தைக்கு பேருந்தில் தனியே பயணம் செய்யும் பக்குவம் வந்துவிடுமா? சீட்டில் ஏறி அமர்வதே அதற்கு இமயமலையில் ஏறுவது போல அல்லவா இருக்கும்.

மேலும் எதிர் பாராதவிதமாக பிரேக் அடித்தால் கவனமாக பிடித்துக்கொள்ள கூட தெரியாத வயது, ஓட்டை இல்லாத பேருந்தில் பயணித்து இருந்தாலும் இது போன்ற திடீர் நிறுத்தங்களின் போது முன் இறுக்கையில் இடித்துக்கொண்டு மூக்கு, பல் என உடைத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு, ஏன் மண்டை கூட உடையலாம்.

பெரியவர்களே கூட பேருந்து பயணங்களின் போது இடித்துக்கொள்வதுண்டு, மேலும் மேடுப்பள்ளங்கள், வேகத்தடை என தூக்கிப்போட்டு இருக்கையில் இருந்து குழந்தைகள் விழ வாய்ப்புண்டு, எனவே ஒரு மூன்று வயது குழந்தையை தெரிந்தே தொலைதூரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பேருந்தில் அடைத்து அனுப்புவதே தவறு.

ஏன் முடிச்சூர் அருகில் ஒரு பள்ளிக்கூட இல்லையா,அங்கே அனுப்பினால் படிக்காமல் போய்விடுமா? கண்டிப்பாக துவக்கப்பள்ளியிலேயே பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என அக்குழந்தைக்கு ஆசையிருந்திருக்காது.எனவே இது பெற்றோரின் ஆசையே.

எனவே வீட்டுக்கு அருகில் உள்ளப்பள்ளியில் சேர்த்திருந்தாலே இச்சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும்.ஐந்தாம் வகுப்பு வரையில் வீட்டுக்கு அருகில் உள்ளப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தால் கல்வி ஒன்றும் பாழாகிவிடாது.எனவே குழந்தைகளை விவரம் தெரியும் வரையில் தொலைவாக உள்ள இடங்களுக்கு படிக்க அனுப்ப தேவையில்லை.

அரசு சட்டம் இயற்றுவதாக இருந்தால் ,எந்த பள்ளியும் துவக்க நிலை வகுப்புகளில் இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மாணவர்களை சேர்க்க கூடாது என்று தான் சட்டம் இயற்ற வேண்டும். இதுவே பாதிப்பிரச்சினைகளை தீர்த்து விடும்.

பின்னர் வருவது பெற்றோர்களின் கடமையாகும், தங்கள் குழந்தைகளின் மீது உண்மையில் அக்கரையும் பாசமும் இருக்குமானால் அவர்களே பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு அழைத்து வர வேண்டும்.எந்த வித விழிப்புணர்வும் ,பக்குவமும் பெற்றிராத மழலைகளை அடுத்தவரை நம்பி பேருந்திலோ, ஆட்டோவிலோ திணித்து அனுப்ப கூடவே கூடாது.

இதை செய்வதை விட்டு விட்டு நான் பணம் கொடுக்கிறேன் , நீ பொறுப்பாக அழைத்து போக வேண்டும் என தங்கள் கடமையை ,பொறுப்பை பெற்றோர்கள் தட்டிக்கழித்து விடுகிறார்கள், பணத்திற்காக வேலை செய்பவர்களுக்கும் பாசத்துடன் கவனித்து செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.எவ்வளவு பணம் கொடுத்தாலும் பாச உணர்ச்சியையும்,பொறுப்புணர்வையும் ஒரு மூன்றாம் மனிதரிடம் உருவாக்கிவிட முடியாது. அவர்கள் எந்திரத்தனமாக கடமைக்கு என்று வேலை செய்யவே முற்படுவார்கள் என்பதை பொறுப்புள்ள பெற்றோர்கள் உணர வேண்டும்.

************
பின்குறிப்பு:

இப்பதிவினைப்படித்துவிட்டு என்னை திட்ட நினைப்பவர்களும், பாராட்ட நினைப்பவர்களும் தாராளமாக தங்கு தடையின்றி செய்யலாம், எனக்கு கனியும்,காயும் ஒன்றே,கனியிருப்ப காய்க்கவர்ந்தற்று என்றெல்லாம் வேதாந்த விசாரம் எல்லாம் பேசமாட்டேன். ஏன் எனில் தேங்காய் என்னதான் முற்றினாலும் தேங்காப்பழம் என்று சொல்வதில்லை, தேங்காய் என்றே சொல்கிறோம் எனவே காய் வேண்டாம் என்றால் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி என்ற ருசியான சைட் டிஷ் நமக்கு கிடைத்திருக்காது :-))

----------------