ஈ - மெயில் வந்த பிறகு... சாதாரண தபால்களை எல்லாம் ஸ்னெயில் மெயில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த நத்தை அத்தனை சாதாரணமானது இல்லை. படா கில்லாடி. அதற்கென பல சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டது.இதனை வீட்டு தோட்டங்களிலும், வயல் வெளிகளிலும் பார்த்து இருக்கலாம்.
மோலஸ்க் பைலம் என்ற தொகுதியில் ஒரு வகையான கேஸ்ட்ரோபோட்ஸ் (gastropods.) என்ற வகையை சார்ந்தது தான் நத்தை.இதற்கு தூரத்து சொந்தம் ஆக்டோபஸ். கிரீக்கில் காஸ்ட்ரோ என்றால் வயிறு, போடோஸ் என்றால் கால்கள் , வயிற்றில் கால்களைக்கொண்டது என பொருள். நத்தை வயிற்றின் மீது தான் ஊர்ந்து செல்கிறது, அதன் வாயும் அங்கே தான் இருக்கிறது, தட்டு , ஸ்பூன் எல்லாம் வைத்து சாப்பிடாது, அதன் சாப்பாடே தட்டு தான் , எதன் மீது ஊர்ந்து செல்கிறதோ அதனை உண்ணும்.
நில நத்தைகள், கடல் நத்தைகள் என்று இரண்டு வகை உண்டு , வயல்களிலும் தோட்டத்திலும் காண்பது நிலவகை. முன்னால் இரண்டு நுகர் உணர்வு கொம்புகள் உண்டு அதன் முனையில் சக்திவாய்ந்த கண்கள் உண்டு!அவை ஊர்ந்து செல்லும் போது ஒரு கோழை படிவத்தை விட்டு செல்லும் அது எளிதாக நகர உதவுகிறது.மேலும் அதன் உடல் உலராமல் இருக்கவும் பயன்படுகிறது.கோடைகாலத்தில் நீண்டகால உறக்கத்தில்(hybernation) சென்று விடும் நத்தை அப்போது இந்த கோழைபடிவத்தை வைத்து தான் உடலை போர்த்திக்கொள்ளும். மீண்டும் மழை பெய்தவுடன் வெளிவரும்.
* ஒரு நத்தையால் கூர்மையான பிளேடு் ஒன்றின் விளிம்பில் கூட நகர்ந்து செல்ல முடியும் அத்தனை வலிமையானது அதன் பாதங்கள் மற்றும் அடிவயிறு!
*மூல வியாதிக்கு நத்தை கறி சாப்பிடுவது இன்றும் இருக்கும் நாட்டு வைத்தியம்!
* சில நத்தைகள் விஷத்தன்மை கொண்டது , பெப்டைட்(peptides) வகை விஷம்.அதிலும் கடலில் வாழும் கூம்பு வடிவ நத்தையின்
(Conus magus,Conus geographus) விஷம் வீரியமானது அதன் இரைகளை விஷம் கொண்ட நாக்கால் அம்புவிடுவது போன்று விட்டு தீண்டி செயலிழக்க செய்து சாப்பிடும். அதன் விஷம் ஒரு வினாடியில் 10 இல் ஒரு பகுதி நேரத்தில் தாக்கி செயலிழக்க செய்யும், இயற்கை விஷத்தில் வேகமானது இது தான். ஆனால் மனிதர்களை தாக்குவதில்லை. தெரியாதனமாக நாமே கையால் தொட்டு கொட்டு வாங்கினால் உடல் உறுப்புகள் செயல் இழக்கப்படலாம்,மரணம் வெகு அரிதே!
* இந்த விஷத்தையும் விஞ்ஞானிகள் சும்மா விடவில்லை ஆராய்ந்து பார்த்து உடல் வலி நீக்கும் வலி நிவாரணி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.ரியால்ட் (Prialt ) என்று பெயர்.முதுகெலும்பு வலிக்கு நல்ல மருந்தாம்.
*நத்தைகளில் ஆண் பெண் என்று தனியே கிடையாது , ஒரு நத்தையிடமே ஆண்,பெண் பால் உறுப்புகள் (hermaphroditic.) இருக்கும். இரண்டு நத்தைகள் சேர்ந்தும் இனப்பெருக்கம் செய்யும், ஒரே நத்தையே அதன் ஆண்,பெண் உறுப்புகளைக்கொண்டு தனக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்ய முடியும்!