Monday, January 07, 2013

கற்றது தமிழ்-4.


(அய்யோடா ....என்னையும் தமிழ்படிக்க சொல்வானோ?)

தமிழில் பிற மொழிச்சொற்களை தவிர்ப்பது, மேலும் பிழையாக திரிந்து விட்ட சொற்களை திருத்துவது என பலர் இணையத்தில்  முயற்சிக்கிறார்கள்(hi...hi) ,மிகவும் நல்ல முயற்சி,ஆனால் சிலர் பிழையை திருத்துவதாக நினைத்துக்கொண்டு  புதிய பிழைகளை உருவாக்கவும் செய்கிறார்கள், அப்படிப்பட்ட சில  பிழையான பிழை திருத்தங்கள் (அப்படினு நினைக்கிறேன்)என் கண்ணில் சிக்கின ,அவற்றை என் பங்கிற்கு கொஞ்சம் அலசி முடிந்தளவு  சீராக்கும் முயற்சியே இப்பதிவு.

சில்லரை:

சிறிய அளவிலான ஒரு தொகையை,பணத்தினை சில்லரை என்பார்கள், ஆனால் சில்லரையில் "ரை" என சிறிய "ர"வராது, "றை" என பெரிய "ற" பயன்ப்படுத்த வேண்டும் என சிலர் சொல்கிறார்கள், ஆரம்பத்தில் நானும் "சில்லறை என்றே பயன்ப்படுத்தினேன். ஆனால் அதன் பொருள் வேறாக இருப்பதை பின்னர் கண்டறிந்தேன்.

சில்லறை தான் சரி என்பவர்களின் வாதம் என்னவெனில்,

சில்லரையை , சில +அரை ,என பிரித்து ,சிலப்பாதிகள் என பொருள் வருகிறது இது தவறு ,

ஆனால் அறை என்றால் பகுதி எனவே

சில +அறை =சில்லறை

என்பதே சரி என்கிறார்கள்.

ஆனால் அறை என்றால் ஆங்கிலத்தில் ரூம் (Room)என சொல்லப்படுவதை குறிக்கும்,  எனவே சில +அறை என்றால் "Few rooms" ஆகிவிடுமே :-))

மேலும் "சில்" என்றால் குளிர்ந்த எனப்பொருள் வரும், அப்படி எனில் சில்லறை என்பதற்கு குளிர்ந்த அறை ,"Airconditioned Room" அல்லது cold room, என சொல்வதாகிவிடுகிறதே?

சில்லரை என்ற சொல் தமிழில் மட்டும் இல்லை பல மொழிகளிலும் இருக்கிறது , வடமொழியில் சில்லர் வியாபார் (chillar vyapar,chillar=coin)என சில்லரை வியாபாரியை சொல்கிறார்கள்.

ஸ்பெயினில் sillar என்றால் ஒரு துண்டு கல் எனப்பொருள். chillara = making noise,நாணயங்கள் ஒலி எழுப்புவதால் சில்லரை நாணயம் என சொல்வதும் புழக்கத்தில் வந்திருக்கலாம். சல்லிக்காசு என அக்காலத்தில் நடுவில் ஓட்டை உள்ள நாணயத்தினை சொல்வதுண்டாம், சல்லிப்பைசா கிடையாது என பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. காசு என்பதில் இருந்து தான்  cash என்ற சொல் உருவானது என்றும் சொல்கிறார்கள்.

ஆங்கிலத்தில் "silly" என்றால் அற்பமான என்ற பொருள் உள்ளதையும் கவனத்தில் கொள்ளலாம்,எனவே உலக அளவில் மொழிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே இருந்துள்ளது, பின்னர் தனித்தனியே வளர்ச்சியடைந்து தனி வடிவம் பெற்றிருக்கலாம் என பல மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

எனவே சில்லர் என்ற சொல் பல மொழிகளிலும் சிறிய அளவை(பொருள்) குறிக்க பயன் படுகிறது எனலாம்.

தமிழிலும் "சில்லு" என்ற சொல் சிறிய, துண்டான ஒரு பொருளை குறிப்பதாக பயன் பாட்டில் உள்ளது.

உடைந்த பானை துண்டு, கூறை வேயும் மண் ஓட்டின் துண்டுப்பகுதியை எல்லாம் "ஓட்டாஞ்சில்லு" என்போம், அதனை வைத்து கட்டம் போட்டு ஆடும் விளையாட்டுக்கு "பாண்டியாட்டம்" என்று கூட பெயருண்டு.

தேங்காயை சிதற விட்டால் கிடைக்கும் சிறிய துண்டினை தேங்காசில்லு என்று சொல்வதுண்டு. அதை பொறுக்குபவர்களை தேங்கா சில்லு பொறுக்கி என அழைப்பதுண்டு ,அமைதிப்படை படத்தில் சத்யராஜ் தேங்காசில்லு பொறுக்கியாக வந்து அரசியலில் விசுவரூபம் எடுப்பார் :-))

எனவே சில்லு என்றால் சிறிய அளவினை குறிப்பது என்பது தெளிவாகிறது.

அரை என்றால் பாதி என்பது அனைவருக்கும் தெரியும், எனவே ரொம்ப சிறிய அளவிலான ஒரு தொகை என்பதை குறிக்க சல்லி,சில்லு ஆகியவை வழுவி சில்லு +அரை = சில்லரை என புழக்கத்தில் வந்திருக்கலாம்.

ஒரு வேலை பாதியில் நின்றுவிட்டால் "அரை" வேலை நடந்திருக்கிறது என சொல்லாமல் அரையும் குறையுமா நடந்தது என்பது வழக்கம், முழுவதுமாக முடியவில்லை என்பதை அழுத்தமாக சொல்ல கூடுதலாக "குறை" என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்வது போல, எனவே பெரிய தொகை இல்லை ரொம்ப சிறிய தொகை அதுவும் சிறிய அளவிலான நாணயங்களாக என சொல்ல "சில்லரை காசு"என்ற பதம் பயன்படுத்தப்பட்டு ,புழக்கத்தில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

எனவே சிறிய அளவிலான தொகைக்கு பொருட்களை விற்பதை ,சிறு வணிகம் அல்லது சில்லரை வணிகம் என்பது சரியானதே.

அருகாமை:

பக்கத்தில் இருக்கும் ஒன்றை அருகாமையில் உள்ளது என சொல்வதுண்டு,ஆனால் அச்சொல் தவறானது , எதிர்மறையான பொருளினைக்கொண்டது என சிலர் சொல்கிறார்கள்.

அதற்கு அளிக்கும் விளக்கம் என்னவெனில்,

ஒன்றை தெரிந்து இருப்பது அறிவது, தெரியாமல் இருப்பது அறியாமை,

அருகு என்றால் பக்கத்தில் இருப்பது, அருகாமை என்றால் பக்கத்தில் இல்லை எனவே அருகாமை என்றால் தொலைவில் உள்ளது,அதனை பக்கத்தில் இருக்கு என சொல்லப்பயன்ப்படுத்தக்கூடாது என்கிறார்கள்.

ஆனால் "அருகாமை" என்ற சொல் சரியான தமிழ் சொல் என தமிழ் இணைய பல்கலையும், சென்னைப்பல்கலை அகரமுதலியும் சான்றுரைக்கின்றன.

அப்படி எனில் அருகாமை என்ற சொல் சரியா,தவறா?

அருகு என்ற சொல்லின் பல வடிவங்களை காண்போம்.

அருகல்,அருகன்,அருகர்,அருகிய,அருகுதல்,அருகாமை,அருகாண்மை.

http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=130&x=0&y=0

அருகு என்றால் குறைந்து வருவது, சுருங்கி வருவது என்றப்பொருளில் பயன்ப்படுத்தப்படுகிறது.,

சிட்டுக்குருவிகள் நகரத்தில் அருகி வருகின்றன என சொல்வதுண்டு.

தூரம் குறைவாக இருப்பதை அருகில் என சொல்லலாம் என்பது சரியே ஆனால் அதனை வைத்து அருகாமை தவறு என சொல்ல முடியாதே.

அறிவின் எதிர்ச்சொல் அறியாமை  ,மை,ஆமை என முடிவது எதிர்ச்சொல்லை குறிக்கும்னு வேற ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள்.

அப்படி எனில் ,

இல் என்றால் இல்லை எனப்பொருள்,

தமிழில் "இல்பொருள் உவமையணி "என ஒன்று உண்டு.

அப்படி எனில் இல்லைக்கு எதிர்ச்சொல் இல்லாமை ஆகிவிடுமா?எதிராகப்பொருள் அளிக்க வேண்டும், அதாவது இருக்கு என :-))

ஆனால் இல்லாமை என்றால் இல்லை என்று தான் பொருள் ,அப்படி எனில் அருகாமை என்றால் மட்டும் அருகில் இல்லை என எதிர்மறையாக எப்படி பொருள் வரும்?

"மை" என்ற விகுதி எதிர்ப்பொருளை அளிப்பதல்ல, "மை" என்றால் உடையது, அங்கு உள்ளது என சுட்டப் பயன்படுவது.

உதாரணம்.

கறுப்பு , கரிய நிறமாக இருப்பது ,இதனை "கறுமை" என்பார்கள்.

ஆ+மை என விகுதியில்  சேர்த்தால் எதிர்மறைப்பொருள் தரும் என்றால்,"இல்= இல்லை"க்கு எதிர்மறையாக இல்லாமை வர வேண்டும் அப்படியும் வரவில்லை.

ஒரு சொல்லின் விகுதியில் "ஆ" சேர்ப்பதால் எதிர்மறை சொல்லாக்கலாம் என தமிழில் ஒரு விதியுண்டு ஆனால் அதுவே பொதுவிதியன்று.

கனி= பழம்

கனி +ஆ= கனியா என்றால் பழமில்லை எனலாம், ஆனால் அது மட்டுமே எதிர்ச்சொல் என ஆகி விடாது.ஏன் எனில் காய் என தனித்த எதிர்ச்சொல் ஒன்றும் உள்ளது.

ஹி..ஹி ...அப்போ காய்+ஆ = காயா என்றால் பழம் ஆகிடுமா?

காயா(த) கானகம் என்றால் வெயில் படாத காடு என்று பொருள் வரும்!

ஒரு சொல்லுடன் ஆ,ஏ,ஓ என விகுதியில் சேர்ப்பதால் வினா,வியப்பு போன்ற சொற்களை உருவாக்கலாம்னு வேற தமிழ் இலக்கணம் சொல்லுதே !!!

இலக்கிய ரீதியாக  கனியா என சொல்வதை பொதுமைப்படுத்தி ஒரு சொல்லின் விகுதியில் " ஆ +மை" சேரும் போது எதிர்மறைச்சொல் ஆகிவிடும் என அருகாமைக்கும் சொல்வது சரியல்ல,எப்படி எனப்பார்ப்போம்.

அருகு என்றால் பக்கமாக இருப்பது, அருகாமை என்றாலும் பக்கத்தில் இருப்பதே,

அருகு என்பது வினைச்சொல் , அதற்கு வினைப்பெயர்ச் சொல் "அருகம்" ஆகும்.



அருகம்புல் என சொல்வது கூட இதனால் தான் ,அருகம்புல் ஒன்றோடு ஒன்றாக தொடர்ச்சியாக ,நெருக்கமாக,கிளைத்து வளரும் புல். அருகம்புல் ஒரு இடத்தில் வளர்ந்து விட்டால் அழிக்கவே  முடியாது , ஒரு புல்லின் கணுவில் இருந்து இன்னொரு புல் முளைத்து "வலை"ப்போல பரவி விடும். அதாவது அருகருகே புல் முளைத்துக்கொண்டே போகும், அழிக்க இயலாத புல் அருகம் புல்.

இப்படி வலைப்போல அருகருகே உருவாகும் புல் என்பதால் மண் அரிப்பு உள்ள இடங்களில் இப்புல்லினை வளர்ப்பார்கள்.

ஏரி ,குளக்கரை, பாலங்கள் கட்டிய இடங்களின் சரிவில் ,மழையால் மண் அரிக்காமல் இருக்க ,அருகம்புல்லினை நடவு செய்வது வழக்கம்.

தொடர்பு அற்றுவிடாமல் இருக்க வேண்டும், உறவு நிலைத்து நிற்க வேண்டும் என்பதனை சூசகமாக சொல்லவே கல்யாணம், இன்ன பிற சடங்குகளின் போது அருகம்புல்லினை பயன்படுத்துகிறார்கள், அதே போல வாழை மரம் கட்டுவதும், வாழையடி வாழையாக வம்சம் தொடர வேண்டுமாம்!

ஒரு புல்லுக்கு கூட எப்படிலாம் யோசித்து பெயர் வைக்கிறாங்க பாருங்கய்யா :-))

எனவே ,

அருகாமை=அருகம்+ அமை

புணர்ச்சி விதிகளின் படி, ஒற்றெழுத்து செல்ல ,வரு மொழியில் உள்ள "அ" நிலை மொழியில் உள்ள "க"உடன் சேர்ந்து நெடில் "கா"ஆகி ,அருகாமை ஆகிவிடுகிறது.

அருகில் அமைந்துள்ள இடம் என்பதை அருகாமை இடம் எனலாம்.

இது எப்படினு இன்னும் புரியவில்லை எனில் ,

வெங்கடாஜலம் என்பதையோ ,விருத்தாஜலம் என்பதையோ பிரித்து எழுதிப்பாருங்கள் :-))

********

முயற்சிக்கிறேன்:

முயற்சி =effort.

இது ஒரு வினைப்பெயர்ச்சொல் , ஒரு செயலை செய்ய முற்படுவதை  முயற்சிக்கிறேன் என சொல்வார்கள்.

இதுவும் தவறு என்கிறார்கள், சரி எப்படினு பார்ப்போம்.

முயல் என்பது தான் வேர்ச்சொல் எனவே முயல்கிறேன் என சொல்ல வேண்டும் முயற்சிக்கிறேன் என்றால் முயல் சிக்கப்போகுது என சொல்வதாகும் என்கிறார்கள்.

அடடா இப்படிலாம் கூட பிரிச்சு பொருள் உண்டாக்கலாமா :-))

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

என திருக்குறளிலும் முயற்சி என்ற சொல் உள்ளது.

முயற்சி என்ற வினைப்பெயர்ச்சொல்லின் வழக்கு  வடிவம் தான் முயல் என சென்னைப்பல்கலை அகரமுதலி சொல்கிறது.

http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=38&GO.y=15

 முயற்சி என்பது தனிச்சொல் , அதனை முயற்சிக்கிறேன் என எழுதினால், முயல் +சிக்குறேன் என பிரிக்க கூடாது,

தட்டு, தட்டுகிறேன்,

ஒட்டு , ஒட்டுகிறேன்,

பாடு ,பாடுகிறேன்

என்பது போல முயற்சிக்கிறேன் எனவும் சொல்லலாம்.

முயல் என்பது ஒரு தனிப்பெயர்ச்சொல், முயல்கிறேன் என சொன்னால் முயலாக போகிறேன் என சொல்வதாகுமே :-))

மேலும் , முயற்சி செய்யாமல் இருப்பதை முயல்+ஆமை=  முயலாமை என உதாரணம் காட்டுகிறார்கள்.

அயல் என்றால் வேறு, அடுத்த எனப்பொருள்.

வேற்று நாட்டினை அயல்நாடு என்பார்கள்.

அப்போ வேற்று நாட்டுக்கு போகாமல் இருப்பதை "அயலாமை" எனலாமா?

அயர்ச்சி = சோர்வு.

அயர் +ஆ =அயரா, அயராது,அயராமை என எதிர்மறையிலும் சொல்லலாம்.

அயர்ச்சி  என்பதன் எதிர்ச்சொல் எழுச்சி ,எனவே எழுச்சியுடன் என சொல்லிவிட்டாலும் அயராமை என்ற பொருள் கிடைக்கிறது, எனவே ஒரு சொல்லுடன் ஆ+மை என சேர்த்து உருவாக்குவது எல்லாம் எதிர்ச்சொல் என்ற அடிப்படையில் எல்லா சொல்லுக்கும் பொறுத்த தேவையில்லை.

முயற்சிக்கு முயல் தான் வேர்ச்சொல் என கண்டுப்பிடித்தது போல அயர்ச்சிக்கு அயல் தான் வேர்ச்சொல், என கண்டுபிடித்து அயலாமை என்றால் சோர்வின்மை என சொன்னால் என்னாவது :-))

கடல் , அது இல்லை என  எதிர்க்கூற்றாக சொல்ல கடல்+ஆ+மை =கடலாமை என சொன்னால் கடலில் இருக்கும் "tortoise" வந்து கடிச்சிடாதா :-))

(கனி= Fruit (n), கடல்=sea(n) , எனவே கனிக்கு எதிர்ச்சொல் கனியாமைனு சொல்வதன் அடிப்படையில் இவ்வுதாரணம், மக்கள் பெயர்ச்சொல்லுக்கு ஆ+மை சேர்த்தால் எதிர்மறை ஆகாது என இலக்கணம் சொல்லக்கூடும்  என்பதால் இந்த பின் ஜாமீன்)

------------------------

கோர்த்து:

கோர்த்தல்,கோர்வை என்றால் ஒன்றோடு ஒன்று சேர்ப்பது.தொடர்ச்சியாக இருப்பது.

ஆனால் அப்படி எழுதுவது தவறு ,கோவை என்ற சொல்லின் அடிப்படையில் ,"கோத்து"என்பதே சரியான சொல்  என "ர்" அ விட்டுவிட சொல்கிறார்கள், ஆப்பீசர்ஸ் இங்கே யாரு "ர்" அ விட்டாங்கன்னு கவுண்டர் போல தான் கேட்கணும் :-))

கோர்வை என்பதன் வழக்கு சொல் தான் கோவை ,அதனடிப்படையில் சொல்லப்படும் கோத்து என்பதும் வழக்கு சொல்லே.

கர்நாடக இசையில் ஒரு இசைக்குறிப்பை மூன்று முறை சொல்வதை கோர்வை என்கிறார்கள்.

“Korvai” is a Tamil word used in South Indian
Carnatic music to designate a pattern or composition that is usually
played three times."

அதனால் தான் இசையமைத்து வாசிப்பதை இசைக்கோர்வை என்கிறார்கள். பல இசைக்குறிப்புகள் தொடுக்கப்படுகின்றன என்பதை கோர்வை என்ற சொல் குறிக்கின்றது.

ஒன்றாக தொடுப்பதை கோர்வை எனலாம் ,இதனை வழக்கில் கோவை எனவும் சொல்லலாம், ஆனால் இலக்கணப்படி கோர்வை என்ற சொல்லே சரியானது.

எனவே கோர்ப்பது என்பதுவும் சரியான சொல்லே.

நான்மணிக்கோவை,ஆசாரக்கோவைனு நூல்கள் உள்ளதால் கோவை சரியான சொல் என்கிறார்கள்.

சில்லரை கோர்வை என்ற நூலை டி.எஸ்.ராமானுஜம் அய்யங்கர் எழுதி இருக்கிறாரர்னு கூகிள் வேற காட்டுது,அப்போ கோர்வை என்ற சொல் இலக்கிய ரீதியாகவும் இருக்கு என தெரிகிறது.

சரம் என்ற சொல் சர்த்தல் என்ற சொல்லில் இருந்து உருவானது.

சேர் - சேர்த்தல்,சேர்வை.

போர்- போர்த்தல் ,போர்வை.

பார்- பார்த்தல்,பார்வை.

வியர்- வியர்த்தல்,வியர்வை.

எல்லாவற்றிலும் "ர்" விட்டு சொன்னால் கொச்சையான வழக்கு மொழி தான் கிடைக்கும்.
--------------

உண்மை:

உள் +மை =உண்மை.

உள் என்றால் உள்ளே ,உள்ளம் ,ஆன்மா, இதயம் என்பதை எல்லாம் குறிக்கும்.

மை என்றால் இருப்பது.

அதாவது ஒன்றின் உள் பொதிந்து இருப்பது உண்மை. உள்ளதை உள்ளபடியே சொல்வதே உண்மை எனலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

உண்மை என்பதற்கு ஆங்கிலத்தில்  "Fact" என பலரும் நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் இலத்தினீல் ஃபேக்ட் என்றால் செய்,செய்வது,செயல்படுவது,

 Fact= action,from Latin word factum "event, occurrence," lit. "thing done,".செயற்கையாக செய்யப்படுவதை "Factitius" என்பார்கள். எனவே தான் தொழிற்சாலைக்கு Factory  என்று பெயர், மனிதன் உற்பதி செய்வதை Manufacture என்கிறோம்.

அப்புறம் எப்படி உண்மைக்கு ஃபேக்ட்  எனப்பெயர் வந்தது ?

Fact =செய்யப்பட்டது ,  அதாவது செய்யப்பட்ட செயலில் என்ன செய்தார்கள் ,எப்படி செய்தார்கள் என்பதை கவனிக்க ,பார்க்க முடியும், மீண்டும் செய்து பார்த்து இப்படித்தான் நடந்தது என நிறுவ முடியும். எனவே நடைப்பெற்ற ஒரு செயலில் என்ன நடந்தது என  கண்டுப்பிடிப்பதை "Fact finding" என சொல்வதால் , காலப்போக்கில் ஃபேக்ட் என்பது உண்மை என்ற வழக்கில் ஆங்கிலத்தில் புழங்கலாயிற்று.
------------------------------------
பின் குறிப்பு:

இணையத்தில் வாசித்ததன்  அடிப்படையில் எனக்கு எழுந்த அய்யங்களை மய்யமாக வைத்து எனக்கு புரிந்த அளவில் இப்பதிவு, சரியான விளக்கம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை, யாரேனும் விளக்கினாலும் தன்யனாவேன்,நன்றி!
--------------------------