ரொம்ப நாளாக சர்வேசர் ஒரு பதிவை போட்டு கடல் ஏன் உப்பா போச்சுனு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கார் , இணையத்துல் விடை கிடைக்கும் என தெரிந்தும் அவர் பகுத்தறிவை நம்பாமல் கடவுளை கேட்கிறார் நான் எனக்கு தெரிந்த பகுத்தறிவை வைத்து (இணையத்தின் உதவியுடன்) ஒரு விளக்கம் சொல்கிறேன்.
கடல் உருவானது எப்படி:
ஆதி காலத்தில் பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல் .
கடல் உப்பானது ஏன்:
1)ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப்பார்த்தோம், மழை பெய்து குளிரும் போது ,வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது.
2)கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன , அவை வெளியிடும் லாவக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்பு தன்மையை அதிகரிக்கும்.
3)கடல் வாழ் ஜீவாராசிகள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும்.
4)கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கிறது. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும்.
மேலும் கடலில் தான் நதிகள் கலக்கின்ற , கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை இதனால் நீர் வெளியேற்றம், சேர்ந்த உப்பு என எதுவும் வெளியேறது.
சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி.அவ்வாறு ஆவியாகும் போது , உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும். இது போன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்து கடல் நீரில் உப்பு தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில்ஆவியாதல் தவிர வேறு வழியில் நீர் வெளியேறி கொண்டு இருந்து இருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது.
தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும் , சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலைப்பு விகிதத்தில் இருக்கிறது.
கடல் மட்டும் அல்லாது சில ஏரிகளும் நீர் வெளியேற்றம் இல்லாது , ஆவியாதல் மட்டுமே நீர் இழப்பு என இருப்பதால் உப்பு மிகுந்து இருக்கிறது.great salt lake , dead sea ஆகியவை கடல் நீரை விட அதிகம் உப்பு அளவினைக்கொண்டுள்ளது.
கடல் நீர் உப்புக்கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும் , வியர்வையும் உப்பு கரிப்பது ஏன்?
கண்ணீர்:
கண்ணீர் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வருகிறது. அதில் உப்பு வரக்காரணம். நம் உடலில் இருக்கும் உப்பு தான்.நம் உடலில் உள்ள செல்கள் , மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வரும் திரவம் ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது!
வியர்வை:
வியர்வை உடலை குளிரவைக்க உதவும் ஒரு தகவமைவு. வியர்வையும் உடல் சுரப்பிகளில் இருந்து தான் வெளியேறுகிறது அதிலும் நம் உடலில் இருக்கும் உப்பு இருக்கும், மேலும் உடல் செயல் படுவதால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் யூரியாவும் கலந்து வரும் அதனால் வியர்வையும் உப்பு கரிக்கும்! அதிக வியர்வையினால் உடல் உப்பு சத்தை இழந்து உடல் தளர்ச்சி , தசை பிடிப்பு ஏற்படும் அப்பொழுது அதனை ஈடு செய்ய உப்பு சத்துள்ள திரவங்களை உட்கொள்ள வேண்டும்.