Wednesday, October 31, 2012

இசையும்-வசையும்:2 அறமும்,உரிமையும்.



 பாடகி சின்மயி ஶ்ரீபதா மற்றும் துவித்தர்கள் இடையேயான வழக்கின் உண்மையறியும் நோக்கில் முந்தைய பதிவினை எழுதினேன்,அதிலும் முழுமையாக அலசவில்லை எனினும் ஓரளவுக்கு நினைத்ததை சொல்லி இருந்தேன் , எஞ்சியதை எழுத வேண்டாம் என நினைத்தாலும் சில பின்னவினத்துவ எழுத்தாள ஆளுமைகள் , தினத்தந்தி ,மாலை மலரில் வருவதை எல்லாம் அடிப்படையாக வைத்து , சொந்த கருத்தினையும் ஏற்றி மாபெரும் இணையக்குற்றத்தினை எதிர்ப்பது அறம் என்பது போல உண்மை தன்மைக்கு மாறாக கட்டமைப்பதை படிக்கையில் ,இதனை இன்னும் கொஞ்சம் ஆய்ந்து எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

எழுத்தாளர் திரு.மாமல்லன், திரு.மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நடு நிலையுடன் , மனித உரிமை மீறல் இவ்வழக்கில் மீறப்படுவதையும், எதிர்கால இணைய வளர்ச்சிக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் பூட்டுப்போடும் ஒரு முயற்சியின் துவக்க புள்ளி என்பதை உணர்ந்து , ஒரு எழுத்தாளராக ,கருத்தாளராக தத்தம் கருத்துக்களை பாரபட்சமின்றி வெளிப்படுத்தி ,கருத்து சுதந்திரத்தின் முக்கியத்தினையும், அதனை இழந்து விடக்கூடாது என்ற சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளார்கள், போற்றப்பட வேண்டியவர்கள்.

அதே சமயம் தங்களை உலக மகா எழுத்து சிற்பிகள் என பறை சாற்றிக்கொள்ளும் திரு.சாருநிவேதிதா மற்றும் திரு ஜெயமோகன் ஆகியோர் வாய் புளித்ததோ ,மாங்காய் புளித்ததோ என நானும் சொல்கிறேன் கருத்தென , கருத்து சுதந்திரம் ,அடிப்படை மனித உரிமைகளின் மீது ஒரு லாரி லோட் மண் அள்ளிக்கொட்டியிருக்கிறார்கள்.

ஜெயமோகன் அகவயமாக இந்து ஞான மறபின் அடிப்படையில் சிந்தித்து புறவயமாக இணையத்தில் எழுதி இருப்பார் போல :-))

இவர் ஏதோ ஒன்றுக்கு நிதி கொடுங்கள் என்றாராம் இணைய இளைஞர்கள் பைசா அவிழ்க்கவில்லையாம், ஆனால் இந்த "சோ கால்டு " இணைய போக்கிரிகளுக்கு வழக்காட 15 லட்சம் நிதி திரட்டப்பட்டு விட்டதாம் , ஏன் எனில் இணையத்தில் உலாவும் இளைஞர்கள் எல்லாம் ஆபாசமாக பேசுவதில் பெரு வேட்கை கொண்டு அலைபவர்கள் எனவே தம்மினத்தாரை காக்க கொடையளிக்கிறார்கள் என திருவாய் அருளியுள்ளார்.

அது எப்படி அய்யா அட்சர சுத்தமாக 15 லட்சம் என நாகர்கோவிலில் உட்கார்ந்து கொண்டே ஞான திருஷ்டியில் பார்க்க முடிகிறது?இனி இந்திய அரசு அன்னிய செலவாணி வழக்குகளில் உதவி கேட்டு நாகர்கோவிலுக்கு படை எடுக்கும் என்பது மட்டும் உறுதி. ஃபெரா,ஃபெமா வழக்குகளில் ஜெமோ வின் ஞானப்பார்வைக்கு நல்ல தீனிக்கிடைக்கும் :-))

அப்படியே சுவிஸ் வங்கிகளில் யார் ,யார் என்ன தொகையை பதுக்கி வைத்துள்ளார்கள் என கண்டறிந்து சொன்னால் , சென்னை மெரினா பீச்சில் சிலை வைத்து தொழுவார்கள் நாட்டு மக்கள் :-))

சில நாட்களுக்கு முன்னர் ஜெ.மோ தனது பரிவாரத்துடன் கூடன்குளம் சென்று வந்ததாக எழுதியுள்ளார், கூடங்குளத்தில் பெண்களின்  மீது பாலியல் ரீதீயான தாக்குதல்களை அரசு எந்திரம் நடத்தியதாக அய்யா விரும்பி படிக்கும் மாலைமலர்,தந்தி வகையறாவில் கூட செய்தி வந்ததே, அங்கிருந்த மக்களும் சொல்லி இருப்பார்களே, எனவே அதனடிப்படையில் பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான அறச்சீற்றத்தினை அய்யா ஏன் இது வரைக்காட்டவில்லை?

அப்படி எல்லாம் பேசினால் கிடைக்கும் ஒன்றிரண்டு நூலக ஆர்டர்களும் காணாமல் போகும், நஷ்டம் வரும் என தெரியாதா இந்து ஞான மறபின் அடியொற்றி தோன்றிய வேத எழுத்தாளர் ஜெமோ அவர்களுக்கு :-))

ஜெ.மோவாவது ஞான மறபு, அறம் ,புறம்னு சொல்லிக்கொள்ள ஒரு கருத்தாக்கம் வைத்துள்ளார், ஆனால் இணையத்தில் ஊர் சுற்றிப்பார்க்க காசு கொடுங்கள், விருது வாங்கணும் மொழிப்பெயருங்கள் என சொல்லிக்கொண்டு ,கமா,ஃபுல் ஸ்டாப் இல்லாமல் காமசூத்திரம் எழுதும் சாரு நிவேதிதாவும் சொம்பெடுத்து கரகம் ஆடுவது நேற்று புதிதாய் தமிழ் வாசிக்க ஆரம்பித்தவர்களையும் நகைக்க வைக்கும்.

இதற்கே இணைய உரையாடலில் பாலியல் தொல்லைக்கொடுத்து வகையாக மாட்டிக்கொண்டவர். இதே இணைய வெளியில் அனைவராலும் கழுவி கழுவி ஊத்தப்பட்டவர் ,ஆனால் மறதி ஒன்றே மாறாதது மக்கள் மறந்திருப்பார்கள் என திடீர் பெண்ணியக்காவலராக அவதாரம் எடுத்து அருள் வாக்கு சொல்லும் கொடுமைகளை வர்ணிக்க தமிழில் சொற்கள் இல்லை.

பின்னவினத்துவ எழுத்து சிற்பிகளில் சிலர் இப்படி பொங்க அடிப்படை காரணம் என்னவெனில் இவர்கள் எல்லாம் ஆதிகாலத்தில் தங்கள் எழுத்துக்களை வெளியிட முட்டி மோதி மண்டையுடைத்துக்கொண்டவர்கள் , இலக்கிய பத்திரிக்கையில் எழுதினாலும் சன்மானம் கிடையாது, வாசிப்பவர்களோ விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். நூல் வெளியிட சொந்த காசை செலவு செய்து சூனியம் வைத்துக்கொண்டவர்கள். இத்தனை கஷ்டத்திற்கும் பிறகு எழுத்தாளர் என பேர் வாங்கினாலும் மொத்தமாக ஒரு ரெண்டாயிரம் பேருக்கு இவங்க பேரு தெரிந்தாலே அது ஒலக அதிசயம்.

ஆனால் இணையம், வலைப்பதிவு , முகநூல்,துவித்தர் என வந்த பின் பொழுது போக்காக எழுத ஆரம்பித்தவர்களும் நன்றாக எழுதுகிறார்கள், வெகு ஜன ஊடகமும் கவனிக்கிறது ,அவர்களும் இணைய எழுத்தாளர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள் ,பலருக்கும் நன்கு அறிந்தவர்களாக உருவெடுக்கிறார்கள். இதனை எல்லாம் காணும் "சோ கால்டு" பின்னவினத்துவ எழுத்து சிற்பிகளுக்கு அடிவயிற்றில் அமிலம் அபரிமிதமாக சுறக்க ஆரம்பித்ததன் விளைவே சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் இணைய படைப்பாளிகளின் மீது சாணியடிக்க காரணம் எனலாம்.

இணையத்தில் எழுதுபவர்களுக்கு இரண்டு வரிகளுக்கு மேல் எழுத வருவதில்லை, அரைப்பக்கத்திற்கு மேல் படிக்க பொறுமை இருப்பதில்லை என்றெல்லாம் பொருமியுள்ளார், ஜெமோ. பொதுவாக அப்படி ஒரு தோற்றம் இருந்தாலும் நிலைமை அந்தளவு மோசமில்லை எனலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரே ரெண்டு வரியில , ஏழு சீர்களில் 1,330 குறள்களை எழுதி , உலக பெரும் அறத்தினை சொல்லியிருப்பதை ஜெமோ ஏனோ கவனிக்கவில்லை.

அவரைக்கேட்டால் திருவள்ளுவருக்கு ரெண்டு வரிக்கு மேல தமிழ் எழுத தெரியவில்லை என சொன்னாலும் சொல்வாராயிருக்கும் :-))

உலகின் முதல் துவித்தர் திருவள்ளுவர் என்று சொன்னால் மிகையில்லை, துவித்தரை ஆரம்பித்தவர்கள் திருக்குறளை படித்திருப்பார்கள் என நினைக்கிறேன், அதான் 140 சொற்களில் சுருங்க சொல்லி விளங்க வையென துவித்தர் சேவை துவக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
-----------------



அறம் ,பெண்ணியம், என சொல்லி தர்க்கம் செய்பவர்களுக்கும், சட்டம் தன் கடமையை செய்தது என்பவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட முறைகளில் செயல் படுத்தப்பட்டதா என அறிவார்களா?

இதனை சுருக்கமாக காணலாம்.

A &B என இருவருக்கும் ,C என்பவருக்கும் துவித்தரில் விவாதம் நடக்கிறது , ஒரு கட்டத்தில் C உடன் விவாதம் முற்றவே , C இருவரையும் தடை செய்து விடுகிறார், எனவே A&B வெளியிடும் செய்திகள் தெரியாது.

A, மற்றும் B தங்களுக்குள் உரையாடுகிறார்கள் , தடை செய்தவர்கள் உரையாடுவதை ஏன் தொடர்ந்து போய் C கவனிக்க வேண்டும், ஆனால் கவனிக்கிறார், அவ்வப்போது அதனை விமர்சிக்கவும் செய்கிறார்.

பின்னர் தன்னை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார்கள் என சில ஸ்கிரீன் ஷாட்டுகளுடன் சைபர் கிரைமில் புகார் செய்கிறார்.

புகாரினை விசாரிக்கும் காவல்துறை அதன் உண்மை தன்மை என்ன என விசாரிக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பையும் அறிய வேண்டும்.

அவதூறு சொல்லாடலின் ஸ்கிரீன் ஷாட்களின் உண்மை தன்மையை அறியவும், யாருடைய இணைய கணக்கில், ஐ.பியில் இருந்து அந்த தகவல்கள் இணையத்தில் ஏற்றப்பட்டது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

இன்னார் ஐ.பி என தெரியாத நிலையில் , துவித்தர் செர்வரில் இருந்து தகவல்கள் பெற வேண்டும்.

துவித்தர் அமெரிக்காவில் இருந்து இயங்குவதால் ,அவர்களை கேட்டதும் இந்தா எடுத்துக்கொள்ளுங்கள் என தகவல் கொடுக்க மாட்டார்கள் ,குறைந்த பட்சம் கோர்ட்டில் இருந்து ஒரு உத்தரவு பெற்று காட்ட வேண்டும்.

அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட துவித்தர் கணக்குகளின் log in விவரங்களை கொடுப்பார்கள்.

இதிலும் ஒரு தொழில்நுட்ப சிக்கல் உள்ளது, துவித்தரில் ஒருவரை லட்சத்திற்கு மேல் தொடர்பவர்கள் இருப்பார்கள், ஒரு செய்தி வெளியிட்டதும் அனைவருக்கும் துவித்தர் செர்வர் ரிலே (broadcast)செய்யும், எனவே செர்வர் சிறப்பாக இயங்க அதன் டேட்டா பேஸ் விரைவாக இயங்க வேண்டும், இதனால் எந்த துவித்தர் கணக்கிலும் 3,200 துவித்துகளுக்கு மேல் சேமிக்காது.

3,200 துவித்துகள் என்பதனை சிலர் 3 மாதங்களில் அடைந்துவிடுவார்கள் எனவே அவர்கள் இட்ட பழைய துவித்தர் விவரங்கள் அழிக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அழிக்கப்பட்டதை மீண்டும் எடுக்க ரெகவரி வேலை எல்லாம் செய்தால் தான் முடியும், எனவே துவித்தரிடம் சட்டப்படி விவரம் கேட்டு முறையிட்டாலும் உடனே தகவல் கிடைக்காது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

துவித்தரிடம் இருந்து பழைய துவித்துகள், மற்றும் ஐ.பி (internet protocol)விவரங்கள் மட்டுமே கிடைக்கும்.

ஐ.பி வைத்து பின்னர் முகவரி கண்டு பிடிக்க வேண்டும்.

ஒருவர் பல இணைய மூலங்களை பயன்ப்படுத்தினால் ,ஒரே துவித்தர் கணக்கிற்கு பல ஐ.பி, அதுவும் பல நேரங்களில் பதிவாகி இருக்கும்.

மேலும் ஐ.பியில் ஸ்டேட்டிக் ,I.p,டைனமிக் I.P என இரண்டு இருக்கிறது, டைனமிக் ஐ.பி ஒவ்வொரு முறையும் லாக்கின் செய்யும் போது மாறும். எனவே இந்த நாள் ,இந்த நேரத்தில் இந்த ஐ.பி ஐ பயன்ப்படுத்தியவர் பெயர் முகவரி கண்டுப்பிடித்து தாருங்கள் என , இணையம் வழங்கிய ஐ.எஸ்.பி (internet service provider)யிடம் கேட்டு பெற வேண்டும்.

இதுவே பல கணினிகள் ,ஒரே ஒரு இணைய இணைப்பு உள்ள அலுவலகம், பிரவுசிங்க் சென்டரில் இருந்து ,துவித்தரில் உரையாடி இருந்தால் ,இன்னார் என அடையாளப்படுத்துவது இன்னமும் கடினம், அப்பொழு கணினியின் MAC (Media Access Control address)  எண் வைத்து தான் அடையாளப்படுத்தப்படும், இது physical address of the lan card ஆகும். அதன் மூலமே நாம் ஒரு உள் கணினி வலையில்(local network-intranet ) இணைந்து ரூட்டர்/மோடம் மூலம் உலக வலைக்கு(world wide web-internet) இணைப்பு பெருகிறோம்.

எனவே நெட் ஒர்க்கில் உள்ள குறிப்பிட்ட கணினியில் ,குறிப்பிட்ட நேரத்தில் யார் பயன்ப்படுத்தினார்கள் என அறிந்த பின்னரே , இன்னார் என முடிவுக்கே வர முடியும்.

எல்லாம் செய்து முடித்தாயிற்று,இப்போது குறிப்பிட்ட சில ஐ.பிகளின் முகவரி கிடைத்துவிட்டது,முகவரியும் அறியப்பெற்றாயிற்று ,

அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பை அறிய , எழுத்துப்பூர்வமாக ஒரு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வர சொல்ல வேண்டும்.

சம்மன் பெற்றுக்கொண்டவர்கள் நேரில் ஆஜராக உரிய விளக்கம் அளித்து ,அது திருப்திகரமாக இல்லை என்ற பின்னரே கைது செய்து , நீதி மன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் தள்ளமுடியும்.

மேற்சொன்ன நடை முறையினை படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளலாம் , அனைத்தினையும் சட்டப்படி செய்ய சில ,பல நாட்கள் பிடிக்கும் என்பது, ஆனால் தற்போதைய கைதில் என்ன நடந்தது?

புகார் கொடுக்கும் போதே இன்னார் ,இன்னார் , இந்த ஊரு, இங்க வேலை செய்யறார், என சொல்கிறார், அடுத்த நாளே கைதாகி சிறையில்.எப்படி சாத்தியம்?

காரணம் ,பெயர் ,முகவரி கொடுத்து, புகாரும் கொடுத்து அதன் மீதே கைது நடந்திருக்கிறது. கூடவே குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவுமே இல்லாததை வைத்தே இதனை அறியலாம்.

எனவே இவ்வழக்கில் தொழில்நுட்பமும் ,சட்டமும் பின் பற்றப்படவில்லை, சாமனியனை பிடித்துப்போட்டால் ஆதாரம் இருக்கா என்று கேட்டால் உடம்புக்கு சேதாரம் தான் என்பதால் எவ்வித எதிர்ப்பும் காட்ட இயலவில்லை.

புகாரில் அவதூறாக பேசியது , கொலை மிரட்டல்,பாலியல் தொல்லை, ஆபாசமாக படம்ம் வெளியிட்டனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது ஆனால் எதற்கும் முறையான ஆதாரங்கள் இல்லை, இனிமேல் தான் கண்டுப்பிடிப்பார்க்களாயிருக்கும்.

இதில் மிகவும் கொடுமையான விடயம் என்னவெனில் , லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்பவர் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது, அவரோ நான் "ஜின்னாத்தா" என ஒருவருக்கு துவித்தரில் சொன்னேன் அதை தவிர எதுவும் செய்யவில்லை என்கிறார்.

துவித்தரில் பகடி செய்தவர்கள் "சின்னாத்தா" என புனைப்பெயர் சூட்டி செய்தார்கள், எனவே ஜின்னாத்தா என சொன்னதும் மன உளைச்சலை ஏற்படுத்தியது என்ற ரீதியில் குற்றம் சாட்டுக்கிறார்கள்.

சின்னாத்தா என்ற பெயர் காப்புரிமை பெறப்பட்ட பெயரா என்ன?

தி.மு.க தலைவரை கலைஞர் கருணாநிதி என அழைக்கிறார்கள், எனவே கலைஞர் என மற்ற யாரையும் குறிப்பிட கூடாது என சொல்லிவிட முடியுமா?

அப்படி சொன்னால் விஜயகாந்திற்கு புரட்சிகலைஞர் என பட்டப்பெயர் வைக்க முடியாது, மறைந்த நடிகர் ஜெய்சங்கரை "மக்கள் கலைஞர்" என அழைத்திருக்க முடியாது. இவ்வளவு ஏன் இசைக்கலைஞர்,நாட்டிய கலைஞர் என்று கூட எழுதிட முடியாது.

இவ்வளவு ஏன் விகடனில் லூசு பையன் என்ற பெயரில் ஒரு காமெடி கார்ட்டூன் தொடர் வருகிறது, அதில் குலைஞர், ஸ்காலின், போனியா என்றெல்லாம் பெயரில் கேரிகேச்சர் ஓவியங்களை வரைந்து காமெடி செய்வார்கள் ,அதுவும் குற்றமாகிவிடும் :-))

உண்மையில் ஆபாசமாக, வக்கிரமாக பேசி மன உளைச்சல் அளித்திருந்தால் முறைப்படி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கட்டும்,ஆனால் ஜின்னாத்தா என சொன்னதற்கு எல்லாம் மன உளைச்சல் அளித்தார்கள் ,அதுவும் ஆபாசம் தான் என இறங்கினால் ,நாட்டில் அனைவரும் சாப்பிடுவதற்கு தவிர வேறு எதற்கும் வாய் திறக்க முடியாத வாய்ப்பூட்டு நிலையே ஏற்படும்.கொட்டாவி விட வாயை திறக்கலாமா என வழக்குரைஞர் ஆலோசனை கேட்க வேண்டியதாகும்.

--------------------

இணைய வெளியில் கட்டுப்பாடின்றி ஆபாசமாக பேசுவதற்கு ஒரு கடிவாளம் தேவை என நினைப்பவர்களுக்கு இப்பிரச்சினையின் ஆழம் விளங்கவில்லை எனலாம். அரசு எந்திரம், அதிகார வர்க்கம் ஒரு சட்டத்தினை முன்னெடுக்கும் போது அதனால் எத்தனை சதவீதம் நன்மை , தீமை என நோக்க வேண்டும்.

சட்டத்தின் செயல் முறையில் அதன் வீச்சு கடலில் மிதக்கும் பனிப்பாறை போல அதன் ஒரு சிறு முனை தான் வெற்றுப்பார்வைக்கு காண கிடைக்கும் , மறைந்திருப்பதே பெரும்பகுதி.

உதாரணமாக அமெரிக்காவில் அறிவுசார் காப்புரிமைக்கு என அறிவு திருட்டினை தடுக்க ,
"The Stop Online Piracy Act (SOPA) and PIPA/PROTECT IP Act"

என இரண்டு சட்ட முன் வரைவுகளை இவ்வாண்டு ஜனவரியில் அமெரிக்க அரசாங்கம் முன் மொழிந்தது, அதனை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும் ஆதரித்தன ,ஆனால் இணைய ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் என விக்கிப்பீடியா, கூகிள், மோசில்லா, என பல அமைப்புகளும் எதிர்த்தன , ஒரு நாள் முழுவதும் " பிளாக் அவுட்" செய்து கண்டனம் செய்தன.

விவரங்கள் அறிய:

#http://en.wikipedia.org/wiki/Stop_Online_Piracy_Act

#http://www.bbc.co.uk/news/technology-16596577

#http://www.1stwebdesigner.com/design/how-sopa-pipa-can-affect-you/

#http://www.pcworld.com/article/248298/sopa_and_pipa_just_the_facts.html


சோபா&பிபா வுக்கு மாற்றாக ,ஓபன் என்ற ஒன்றினை பரிந்துரைத்தார்கள்.

Online Protection and Enforcement of Digital Trade Act (OPEN)

http://en.wikipedia.org/wiki/Online_Protection_and_Enforcement_of_Digital_Trade_Act

மேல் விவரங்களை சுட்டியில் அறியவும்.

சோபா மற்றும் பிபா நடைமுறைக்கு வந்தால் என்ன ஆகும்.

# காப்புரிமை பெற்ற படைப்பினை பகிரும் இணைய தளங்கள் முடக்கப்படும், மேலும் அவர்களோடு யாரும் வர்த்தக உறவுகள் வைத்திருக்க கூடாது. விளம்பரங்கள் அளிக்க கூடாது.

காப்புரிமை பெற்ற பொருளை பகிரும் இணைய தளம் என அறியாமல் ,நமது தளத்தினை அதில் விளம்பரம் செய்தால் நமது தளமும் முடக்கப்படும்.

விளம்பர வருவாயை பெற்று அளிக்கும் ஒரு அமைப்பு இருந்தால் அதன் மீதும் வழக்கு பாயும்.

ஒரு சமூக வளைதளம் , பல பகிர்வுகளை செய்கிறது ,அதில் யாரோ ஒருவர் காப்புரிமை பெற்ற படைப்பினை பகிர்ந்துவிட்டால் , அதற்கும் அத்தளம் முடக்கப்படும்.

உதாரணமாக நமது வலைப்பதிவில் , காப்புரிமை பெற்ற படைப்பினை பகிரும் சுட்டியை போட்டு விட்டால் , நமது பதிவு முடக்கப்படும், ஏன் பின்னூட்டப்பகுதியில் யாரோ ஒருவர் சுட்டியை போட்டுவிட்டாலும் , வலைப்பதிவு முடக்கப்படும்.

# மைக்கேல் ஜாக்சன் பாட்டு நல்லா இருக்குன்னு அதனை நாமே பாடி வலைப்பதிவு ஏற்றம் செய்தாலும் , காப்புரிமை மீறல் என தளம் முடக்கப்படும்.

மெல்லிசை கச்சேரி செய்பவர்கள் கூட மேடையில் திரைப்பாடல்களை, தனி ஆல்பத்தில் உள்ள பாடல்களை பாடி நிகழ்ச்சி நடத்த முடியாது.

பொது இசை கச்சேரி செய்யும் பாடகி சின்மயி கூட இசை நிகழ்ச்சிகளில் பாடுவது சட்ட விரோதம் என கருத்து சொல்லி இருக்கிறார், நம் நாட்டில் சரியாக காப்புரிமை சட்டத்தினை பின்ப்பற்றவில்லை என்பது அவருக்கு வருத்தமாம்.

அப்படியான சட்டம் நடைமுறைக்கு வந்தால் வருமான இழப்பு அவருக்கு தான் என்பதனை கூட உணரவில்லை.

படம்:-1



---------------------
பாடகி தரப்பினர் ஆரம்பகாலத்தில் இருந்தே இணையத்தில் அனைவரையும் சந்தேகித்தே வந்துள்ளார்கள், பாடகியின் தாயார் எழுதும் வலைப்பதிவில் இசைக்குறித்து சந்தேகம் இருந்தால் மின்னஞ்சலில் கேளுங்கள் என்கிறார், கேட்டவர்களை உங்க ஐ.பி பார்த்தேன் இரண்டு ஐ.பியில் இருந்து ஏன் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் , இரண்டு கேள்விகளை கேட்டவரும் ஒருவரே என கண்டுப்பிடித்துவிட்டேன் என துப்பறியும் சாம்புவாக கேள்விக்கேட்கிறார் :-))

படம்:-2


பாடகி 2009 இல் ஒரு பதிவில் , எனக்கு அனாமதேய கால்கள் வருகிறது, அதை எல்லாம் நோட் செய்து வைத்துள்ளதாகவும், அனாமதேயமாக துவித்தரில் கருத்து சொல்பவர்களின் ஐ.பி எல்லாம் தெரியும் சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என எழுதியுள்ளார்.

இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அவரோடு விவாதம் செய்தால் சைபர் கிரைம் என சொல்வதை ஆரம்பத்தில் இருந்தே வழக்கமாக வைத்துள்ளார்.அதனை எல்லாம் அவதானித்து உரையாடி இருந்தால் மாட்டிக்கொண்டவர்கள் சூதனமாக உரையாடி இருப்பார்கள், பிரச்சினையும் வந்திருக்காது என நினைக்கிறேன்.


படம்:-3



உண்மையில் துவித்தரில் அனாமதேயமாக கருத்து சொல்லி , தொந்தரவு கொடுப்பதாக நினைத்தால் எடுத்ததும் காவல் துறை செல்ல வேண்டிய அவசியமே இல்லை, பிளாக் செய்யலாம் அப்படியும் கோபம் தீரவில்லையா, துவித்தருக்கு "ஸ்கிரீன் ஷாட்" உடன் ,அந்த ஐ.டியை பற்றி மின்னஞ்சல் அனுப்பி முடக்க சொல்லலாம். இது போன்ற நடவடிக்கைக்கே தொல்லை கொடுப்பவர்கள் புரிந்து கொண்டு ஒதுங்கிவிடுவார்கள். அதையும் தாண்டி தொடர்ந்தால் மேல் நடவடிக்கையாக காவல் துறையை அணுகலாம்.

ஆனால் அப்படியான நிதானமான அணுகு முறையே இல்லை, மேலும் மிகப்பெரும் குற்றச்சாட்டினை சொல்லிய அளவுக்கு ஆதாரங்களும் இது வரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை காணும் போது , இந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை, மீனவர் பிரச்சினை, இட ஒதுக்கீடு ஆகிய விவாதங்களின் போது ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என்றே நினைக்க தோன்றுகிறது.

காரணங்கள் வேறாகவும் இருக்கலாம், ஆனால் சட்டப்படி நடவடிக்கை என சட்டத்தின் நடை முறை வழிகாட்டிகள் தனி மனித கருத்து சுதந்திரத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
-------------

மேலும் இந்நிகழ்வு குறித்து எழுத்தாளர் மாமல்லன் எழுதிய பதிவுகளையும் படித்துப்பார்த்தால் இப்பிரச்சினையின் இன்னொரு பரிமாணம் புலப்படும்.

# ஸ்கிரீண் ஷாட்டில் எடிட் செய்து திரிப்பு வேலைகள் செய்ததை விளக்கும் பதிவு:

http://www.maamallan.com/2012/10/blog-post_23.html

#சோ கால்டு தாழ்த்தப்பட்டவர்கள், மாட்டு சாணி போன்ற பதங்களுடன் கூடிய பாடகியின் துவித்தரை அலசும் பதிவு.

http://www.maamallan.com/2012/10/blog-post_28.html

# இயக்குனர் ராஜமவுலியின் வர்ணாசிரம பற்றினை , ரீட்டீவ்ட் செய்து மகிழ்வதை அலசும் பதிவு.

http://www.maamallan.com/2012/10/blog-post_26.html

நன்றி எழுத்தாளர் திரு.மாமல்லன்.
-------------

பின்குறிப்பு:

#தகவல் உதவி மற்றும் படங்கள்,

கூகிள் விக்கி, துவித்தர், மற்றும் பிபிசி. இணைய தளங்கள்,நன்றி!

# ஆபாசமாக உரையாடுதல்,மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் ,ஆனால் போலியான புகார்கள் மற்றும் பழிவாங்கல் ,தனிமனித காழ்ப்புணர்ச்சிகளும், கண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவு எழுதப்பட்டுள்ளது.

#இக்கட்டுரையின் நோக்கம் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ கலங்கப்படுத்தவோ,காயப்படுத்தவோ அல்ல, அப்படியே யாரேனும் பாதிக்கப்படுவார்கள் எனில் அது அறியாமை அல்லது புரியாமை என கருத வேண்டுமாய் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். பின்னூட்டமிடுபவர்களின் கருத்துக்கு இப்பதிவு பொறுப்பாகாது.

# டிஸ்கிளைமர் எப்படி எழுதுவது என தனியா ஒரு பயிற்சி எடுக்கணும் போல இருக்கே ...அவ்வ்வ் :-((
-----------------------------