(புத்தகம்னா ரொம்ப புடிக்கும்,புத்தகம் படிக்கிறவங்களையும் ரொம்ப புடிக்கும்,பொதுவாத்தான் சொன்னேன்...ஹி..ஹி)
வாரக்கடைசியில ஊர்ப்பக்கமா போயிட்டு வரலாமேனு கிளம்பினேன் , கடற்கரையோரமா போனால் காத்து சிலு சிலுனு ஜில்பான்ஸா அடிக்கும் , அப்பிடியே போற வழியில புதுவையில தொண்டைக்கு இதமா நல்லத்"தண்ணி" கிடைக்கும் தொண்டைய கொஞ்சம் நனைச்சிக்கலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டு வச்சால் என்னிக்கு நாம நினைச்சது நடந்திருக்கு இன்னிக்கு நடக்கனு நொந்துக்க வேண்டியதா போச்சு, கடைசி நேரத்துல நம்ம வாகன ஓட்டி வேற வேலை இருக்குனு காலை வாரிட்டார்(சீப்பு வச்சு வாரினாரானுலாம் கேட்கப்படாது)சரினு கடைசியில பஸ்ஸ புடிக்கலாம்னு கிளம்பினா , ஊருல இருக்க எல்லாருமே அன்னிக்குனு ஊருக்கு கிளம்பிடுறாங்கய்யா அவ்வ்!
ஒரு வழியா தமிழர்களின் கலாச்சாரப்படி சன்னல் வழியா துண்டப்போட்டு எடம்புடிச்சு ,ஏறியாச்சு ,புதுவையில இறங்கியும் ஆச்சு, இறங்கியதும் நம்ம கண்ணில பளிச்சுனு ஒரு வெளம்பரம் பட்டுச்சு , புத்தி வேண்டாம்னு சொன்னாலும் ,மனசு மசால் வடை தேடிப்போற எலி மாதிரி சொன்னப்பேச்சு கேட்க மாட்டேங்குது அவ்வ்!
யே யப்பா ஏதோ அஜால் குஜால் விளம்பரம் பார்த்து எங்கியோ போய் மாட்டிக்கிட்டான்னு குஜாலாக வேண்டாம், நான் பார்த்த வெளம்பரம் "புதுவை புத்தகக் கண்காட்சி-2013" என்பது தான்!
ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் மைதானத்தில் நடப்பதாக போட்டிருந்தது, இவ்விடத்தில் தான் புதுவையில் பெரும்பாலான பொருட்காட்சி &கண்காட்சிகள் (கண்ணை தோண்டி வச்சிருப்பாங்களானு கேட்கப்படாது) நடக்கும் ,அல்லது பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா திடலில் நடக்கும்.
சரி இம்புட்டு தூரம் வந்தாச்சு ,ஒரு எட்டு புத்தகச்சந்தைக்கு போயிட்டு அப்பாலிக்கா தாகசாந்தி செய்துக்கலாம்னு ஒரு தானீயங்கி மூவுருளிய புடிச்சா , ரொம்ப நியாயமா ஒரு கொள்ளைரேட்டு சொல்லுறாங்க, பேருந்து நிலையத்தில இருந்து ஏ.எஃப்டி மில் திடல் சுமார் 1.5 கி.மீ தான் இருக்கும் அதுக்கு ரூ 60 னு சொல்லுறாங்க, ஹே...ஹே நாம கேட்ட ஆளு எப்புடினு பாவம் பயப்புள்ளைக்கு தெரியலை , போட்ட பிளேடுள , வேற எதாவது வண்டிப்புடிச்சுக்கோங்க , ஆளைவிடுனு அப்பீட் ஆகிட்டாப்படி, அப்புறம் 30 ரூவாய்க்கு சல்லீசா ஒரு தானியப்புடிச்சு சந்தைக்கு போயாச்சு, இனிமே சந்தை நிகழ்வுகளை ஒளிப்படங்களாக காணுங்கள்!
ஏ.எஃப்.டி திடல் என்பது புதுவை கடலூர் சாலையில் , புதுவை உயர்நீதிமன்ற கிளைக்கு எதிரில் உள்ளது.
வலப்புறம் உணவகம் என்ற பெயரில் ஒரு தகர கொட்டாயில இமாச்சலப்பிரதேஷின் ஆப்பிள் சூசு கடையும்,பஜ்ஜி,போண்டா கடையும் வச்சிருக்காங்க. சாப்பிடத்தூண்டும் வகையில் பெருசாவோ,சிறுசாவோ அல்லது திரிசாவோ இல்லை,எனவே ஒரு ஆப்பிள் சூசு மட்டும் குடிச்சு பார்த்தேன் , 20 ரூபா , காசுக்கு பழுதில்லைனு சொல்லலாம்.
#இந்த மஞ்சக்கலர் போர்டை படிக்காம உள்ள போயிட்டு , வரும் போது ஒரு சலசலப்பை கிளப்பிட்டேன் , ஹி...ஹி கடமையே கண்ணா படம் மட்டும் எடுத்திருந்தேன் அவ்வ்!
# போர்டில் என்னா போட்டிருக்குனு படிச்சு வச்சுக்குங்க,நான் என்னா பண்ணேன்னு கடசீல சொல்லுறேன்!
# இந்த கடையில ,பொன்னியின் செல்வன்,காவற்கோட்டம், பாலகுமரனின் உடையார்னு ஏகப்பட்ட சரித்திர புதினங்களாக இருந்துச்சு ,ஆனால் விலை தான் என்ன போல தரித்திரங்கள் வாங்க முடியாத வகையில இருக்கு , சரி போட்டா எடுக்க காசா ,பணமானு போட்டா மட்டும் புடிச்சிக்கிட்டேன், வேற வழி அவ்வ்!
# இந்த கிளக்கு படிப்பகம் காரங்களுக்கு ஆனாலும் ரொம்ப குசும்பு, புத்தக சந்தையை புதுச்சேரி கலைப்பண்பாட்டு துறை நடத்துகின்றது,ஆனால் இவங்க என்னமோ "சிறப்பா" தனியா நடத்துறாப்போல ஒரு பேனர் வச்சிருக்காங்க அவ்வ்!
கடையில சுஜாதா எழுதிய அந்தக்கால புத்தகங்களை மறுபதிப்பு போட்டு கொள்ளை விலையில விக்குறாங்க, ஆனால் அதே புத்தகங்களே வேற பதிப்பகங்களில் மலிவாக கிடைக்குது, இதையும் குறிப்பிட்டு கேட்டேன் ,பேப்பர் குவாலிட்டியா இருக்காம், ம்ஹூக்கும் அப்படியே வாங்கிட்டு போய் ஃப்ரேம் போட்டு வைக்கவா போறோம், படிச்சு கிழிக்க பேப்பர் எப்படி இருந்தா என்ன?
ஒரு காலத்தில "மணிமேகலை பிரசூரம்" உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி முதல் ,நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள் வரை எல்லா தலைப்பிலும் புத்தகங்களை போட்டு தள்ளுவாங்க, அப்போ நினைச்சுக்கிறது இதெல்லாம் யாரு வாங்குவாங்கனு ,அதே போல கிளக்கும் எல்லா தலைப்பிலும் புத்தகம் போடுறதுனு கிளம்பிடுச்சு ,எல்லாருக்கும் வாழ்க்கை வரலாறு, மேலும் ஆயக்கலைகள் 64 க்கும் புக்கு இருக்கும் போல :-))
# பாரதியார் கலைக்கூடம்னு ஒரு நுண்கலை பயிற்சி மையம் அரியாங்குப்பம் அருகே இருக்கு, அவர்கள் ஒரு கடைப்போட்டிருக்காங்க,, அங்கே போய் உட்கார்ந்து "போஸ்' கொடுத்தா நம்மளை அழகா படம் வரைஞ்சு கையிலவே கொடுத்தனுப்புறாங்க, ஏற்கனவே நாம சுமார் மூஞ்சி என்பதால் ,படம் வரையிறவங்களை சோதனைக்குள்ளாக்காமல் நழுவிட்டோம், அங்கே ஒரு குட்டிப்பையனும் படம் வரைஞ்சிக்கொடுத்துக்கிட்டு இருக்காரு ,வருங்காலத்துல ஹீசைன் போல்ட்(ஹி...ஹி தப்பா சொல்லிட்டேன்னு பின்னூட்டத்தில் என்னை திருத்தவும்) போல பெரிய ஓவியரா வருவாராக்கும்!
#எதிர் வெளியீடு (பொள்ளாச்சி) பேரே ஒரு மார்க்கமாக இருக்குனு யாரும் கடைக்குள்ள போகவேயில்லை போல , நான் போய் ஒரு புக்கு வாங்கினால் , சார் நீங்க தான் முதப்போணி சில்லறையில்லைனு சொல்லிட்டார்(அப்போ மணி மாலை 5 அவ்வ்) பெரும்பாலான கடைகளில் இதான் நிலை சில்லறையில்லைனு சொல்லி அனுப்பிடுறாங்க, வர்ரவன் எல்லாம் 50 ரூவா புக்கு வாங்கிட்டு ஆயிரம் ரூவா தாளை நீட்டுனா என்ன செய்யனு என்ன முன்ன போக விட்டு பின்னாடி பொலம்பினத நானும் கேட்டுட்டு கேட்காத மாரியே வந்துட்டேன் அவ்வ்!
ஹி...ஹி அப்படியும் ஒரு கடையில பிடிவாதமா சரி ரெண்டு புக்கு வாங்குறேன்னு சில்லறைய மாத்தி கொடுக்க வச்சிட்டோம்ல!
# விகடன் வெளியீடு கடையில சுஜாதா, மதன் எழுதிய நூல்கள், விகடனில் தொடரா வந்தது எல்லாம் போட்டு கடைய ரொப்பி வச்சிருக்காங்க, பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், பதிவருமான அமுதவன் அவர்கள் சமீபத்தில் எழுதிய " என்றென்றும் சுஜாதா" என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. ஆனால் அங்கே இன்னொரு புக்கு கண்ணில் சிக்கியது, திருப்பூரின் பிரபல தொழிலதிபதிவரான 'ஜோதிஜி" எழுதிய டாலர் நகரம் தான் , ஆனால் விலை தான் டாலரில் சம்பாதிக்கிறவங்களுக்கு ஏத்தாப்போல வச்சிட்டாங்க , சரி போட்டாவாச்சும் எடுத்துப்போம்னு எடுத்துக்கிட்டேன்.
டாலர் நகரம் பக்கத்தில சோடிப்போட்டாப்போல அம்மையாரின் புகைப்பட ஆல்பம்னு ஒரு புக்கு இருந்துச்சு,அட்டையில இருந்த ரெண்டுப்படமும் பார்த்தால் "டாலர் நகரம்" படிக்கும் முன்,படித்த பின் காட்டும் ரியாக்ஷன் போலவே இருந்துச்சு ! நல்லாத்தான் சோடிப்போட்டு வச்சிருக்காங்க அவ்வ்!
"We tamilan" செபாஸ்தியன் சீமான் செவுளிலேயே அப்பிடுவேன் என்பது போல கைய ஒங்கிட்டு படம் போட்ட ஒரு புக்கு, ஏன் இம்புட்டு கோவமா இருக்கார்ன்னு பார்த்தால் ,பக்கத்தில "லிங்கூ' என்ற ஒலக மகா கவித புக்கு அவ்வ்!
உண்மையில விகடனுக்கு அசாத்திய துணிச்சல் தான் ஓசில கொடுத்தாக்கூட வாங்க மாட்டாங்க லிங்கூ புக்க ,அதுவும் விலை 60 ஓவா, பக்கத்துக்கு நாலு வரி கவித, எதிர் பக்கத்தில , மசிய பூசிட்டு எச்சித்தொட்டு அழிச்சாப்போல ஒரு படம்,
சாம்பிளுக்கு ஒரு சில பக்கங்கள் புரட்டி பார்த்தேன், தேர் வடம் புடிக்க நீ நடந்து வந்தாய், தேர் நகர்ந்தது...! இத மடக்கி ஒன்னுக்கீழா ஒன்னா எழுதி மூனு புள்ளி ஒரு ஆச்சர்ய குறி போட்டிருக்கு , கவிதயாம் , முடியலடா சாமி! செபாஸ்தியன் சீமான் கோவமா கைய ஓங்கிட்டு நிக்குறதுல தப்பேயில்லை :-))
சின்ன குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் கொண்ட கடை,அடியேன் மனசளவில் இன்னும் ஒரு கொழந்தை தான் என்றாலும் ,அங்கே வச்சிருந்த டிர் டிர் கிளு..கிளுப்பைக்கூட வாங்க என்னிடம் காசில்லையே அவ்வ்வ்!
நாளு புக்கு 200 ரூவானு போர்டு தொங்கிச்சேனு பார்த்தேன் ,எல்லாம் ஆங்கில பாக்கெட் நாவல்கள், இதெல்லாம் பைகிராப்ட்ஸ் ரோட்டில 25 ரூவாய்க்கே கிடைக்கும்!
புதுமைப்பித்தன் ,இப்பவும் புதுசாத்தான் இருக்கார்!
# ஜெமோவின் எழுத்தாள பிம்பம் அவரை விட பெருசா வளர்ந்து போச்சு போல , என்னமோ கவர்ச்சி நடிகை படம் போட்டு விக்குற வார இதழ்கள் போல அவரு படத்தை வித விதமா டிசைன் செய்து எல்லா புக்கிலும் போட்டிருக்காங்க, ஆனால் யாரும் எடுத்துக்கூட பார்த்தாப்போல தெரியலை.
இதே கடையில "பிரபல இலக்கியப்பதிவர்"ராஜா சுந்தர்ராஜனின் "நாடோடித்தடம்" புக்கும் கண்ணில பட்டிச்சு , அட்டைப்படம் தான் அந்தக்கால 'ராணி முத்து" போல ஒரு பொண்ணு படத்தை பெருசா போட்டிருக்கு ,வரைஞ்ச படம் போல, இன்னும் அதே போல "அடாசான" அட்டைப்பட வடிவமைப்பில ரமணிச்சந்திரன் நாவல்கள் மட்டும் தான் வந்துக்கிட்டு இருக்குனு நினைச்சேன், ஏன் நானும் இருக்கேன்லனு ராஜா சுந்தரராஜன் ஆஜாராகிட்டார் அவ்வ்!
அடுத்தப்பதிப்பில "இலக்கியத்தரமாக " அட்டைப்படம் போடுங்க சார், இல்லை பொண்ணு படம் தான் போடுவேன்னு அடம்பிடிச்சிங்கனா ,ஹி...ஹி நான் சொல்லுற படத்த போடுங்க! நானே எல்லாரையும் புக்கு வாங்க சொல்லி ரெக்கமண்ட் செய்வேன்!
# கண்ண தாசன் புத்தக நிலையத்தில், கவிஞர் கன்னத்தில கைய வச்சு ரொம்ப தீர்க்கமா சிந்திச்சுக்கிட்டு இருந்தார், அப்பாலிக்கா தான் நாம எதுக்கு வந்தோம், என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்னு உறைச்சது ஹி...ஹி!
# மஞ்ச போர்டை படிக்காம ,படம் மட்டும் எடுத்துட்டு போனாதால ,சல சலப்பாச்சுனு சொன்ன மேட்டருக்கு வருவோம்.
வெளியில் வரும் வழியில் , புக்கு எல்லாம் வாங்கி ,பில்லு இருக்கானு செக் பண்ணுறாங்க, பில்லின் ஒரு காப்பியும் வாங்கி வச்சிக்கிறாங்க, சரி அது போகட்டும், ஆனால் புக்கு மேல "மறு விற்பனைக்கல்ல, 15% தள்ளுபடி"னு ரப்பர் ஸ்டாம்ப் வச்சி சீல் போட்டு தராங்க, அது என்ன தள்ளுபடில கொடுத்தாலும் ,என்னமோ இலவசமா கொடுக்கிறாப்போல இப்படி முத்திரைக்குத்துறிங்களேனு கேட்டால் ,அதான் வாசலில் போர்டு வச்சிக்கீறோமேனு சொல்லுறாங்க, அப்படியும் விடாம சீல் போடக்கூடாதுனு சொன்னேன், சீல் போடலைனா 10% மட்டும் தள்ளுபடி, சீல் போட்டால் 15% கூடுதல் தள்ளுபடியாம், சீல் வேண்டாம் என்றால் 15% இல்லைனு தான் போர்டுல போட்டிருக்கு, 15% பணத்தினை திரும்ப செலுத்த வேண்டும் என வெளக்கினார்கள், அவ்வ்!. மேலும் சில விவரங்களும் சொன்னார்கள்,
புதுவை புத்தகச்சந்தையில் மொத்தம் 25% தள்ளு படி அளிக்கிறார்கள், இதில் 10% தான் புத்தக விற்பனையாளர்கள் அளிப்பது, மீதி 15% ஐ புதுவை அரசு அளிக்கிறது, முதலில் இப்படி சீல் எல்லாம் போடாமல், பில்லின் ஒரு காப்பியை மட்டும் வாங்கிக்கொண்டு தான் இருந்தார்களாம், ஆனால் புத்தக விற்பனையாளர்கள், சும்மா பில் போட்டு வெளியில் எடுத்து போய்விட்டு மீண்டும் உள்ளே எடுத்து வந்து விற்கிறார்கள், இதன் மூலம் புத்தகங்களை விற்காமலே , 100 ரூவாக்கு 15 ரூபா லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதை தடுக்கவே , வெளியில் எடுத்து செல்லும் புத்தகங்களில் சீல் போடுவதாகவும் சொன்னார்கள்.
புதுவை அரசு படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கவும், மக்களுக்கு மலிவாக புத்தகங்கள் கிடைக்க வேண்டும் எனவும் , நிதி ஒதுக்கி தள்ளுபடி அளிக்க செய்வதிலும் ,இந்த புத்தக விற்பனையாளர்கள் குறுக்கில் புகுந்து கைய வைக்கிறாங்களே, அப்புறம் என்ன அறம்,முறம்னு பினாத்த வேண்டியது,அரசு புத்தக வெளியீட்டாளர்களுக்கு உதவியே செய்யலைனு பொலம்ப வேண்டியது?
தமிழகத்தில் எல்லாம் இப்படி கூடுதல் தள்ளுபடி கொடுக்க அரசு நிதியே ஒதுக்குவதில்லை, புதுவையில் ஏதோ பெரிய மனசு செய்து நிதி ஒதுக்குறாங்க, அதிலும் இப்படி குழப்படி செய்தால் ,வருங்காலத்தில் ஒரே அடியாக அரசு சார்பான தள்ளுபடியே இல்லை என அறிவிக்க கூடும், இது மக்களுக்கு தான் இழப்பு, புத்தக வெளியீட்டாளர்கள் வழக்கம் போல 10% தள்ளுபடியில் கடைப்போட்டுக்கொண்டு ,மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைஞ்சுப்போச்சுனு சொல்வதில் அர்த்தமேயில்லை!
-------------------------------------------------------------
பின் குறிப்பு:
யாருக்காச்சும் நன்றினு சொல்லியாகனும் இல்லைனா , சண்டைக்கு வந்தாலும் வருவாங்க போல எனவே,
# வாகன உதவி, த.நா போக்குவரத்து கழகம்,குடந்தைக்கோட்டம்,
# தள்ளுபடி அளித்துதவியவர்கள், பபாசி மற்றும் புதுவை அரசு கலைப்பண்பாட்டு துறை!
# ஒளிப்படங்கள் உதவி,அடியேன்!
# பதிவேற்ற உதவி, பிலாக்கர்.காம் இணைய தளம்.
நன்றி!
--------------------------