Sunday, July 08, 2012

நெய்வேலியில் நூல்வெளி-புத்தக சந்தை-2012




வழக்கமாக சென்னை புத்தக சந்தைக்கு போய் வேடிக்கை பார்ப்பதுண்டு, பின்ன வேடிக்கை பார்க்கும் விலையில் தானே நவீன எழுத்துலக பிரம்மாக்களின் படைப்புகள் இருக்கு, இந்த வாரம் ஊரு பக்கமா போய் இருந்த போது தினமலரை தற்செயலா விரிச்சா ,நெய்வேலியில் புத்தக சந்தைனு விளம்பரம் கண்ணில் பட்டது, வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் வைப்பாங்க ,இம்முறை முன்கூட்டியே வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

பதிவர் சுரேகா பதிவில் சொல்லியிருந்தார் ஆனால் இந்த மாதம் தான் என்பதை கவனத்தில் வைக்கவில்லை.இவ்வளவு தூரம் வந்தாச்சு ,அதையும் போய் பார்த்துவிடுவோம் என 2 மினிட்ஸ் பிளான் ஒன்று போட்டாச்சு. சரி வாங்க சுரங்க நகரத்தின் உள்ளே போவோம்.

சுரங்க நகரத்தின் முகப்பு நுழைவாயில் ..ஆர்ச் கேட் பஸ் ஸ்டாப் என்று பெயர், கும்பகோணம் சென்னை பேருந்துகள் உள்ளே செல்லாது இங்கே இறங்கி லோக்கல் பேருந்தில் செல்ல வேண்டும். புத்தக்காட்சியரங்கு 11 ஆம் வட்டத்தில் ,பாரதி விளையாட்டு அரங்கு அருகே உள்ளது.


நெய்வேலி நகரம் அன்புடன் அழைக்கிறதாம், வழி நெடுக யூகலிப்டஸ் மரங்கள் தான் நிக்குது சாலையோரம் ,என்னை வரவேற்று பூமழை தூவ பூவையார் யாரும் காணோம் :-))

புத்தக அரங்கு முகப்பு,கோட்டை போல படம் வரைந்து வெட்டி டி.ஆர் போல செட்டிங் போட்டு இருக்காங்க!


நுழைவு சீட்டு வழங்கும் இடம், கட்டணம் 3 ரூபாய் மட்டுமே, கார் பார்க்கிங் 5 ரூ, 2 சக்கர வாகனம் நிறுத்த 3 ரூ என எல்லாம் சகாய விலையில் , காரணம் புத்தக சந்தைக்கு உபயதாரர் பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்பதால் லாப நோக்கு இல்லை.

சென்னை போல எழுத்து சிற்பிகளும், பதிப்பங்களும் சொந்தக்காசில் வினைல் போர்ட் வச்சு நாசம் செய்யவில்லை என்பது கூடுதல் அழகு. மேலும் அரங்கும் சின்னது எளிதில் ரவுண்டு அடித்துவிடக்கூடியதே ஆனாலும் மத்தியான வேளையில் சென்றதால் செம வெயில் , தொப்பர நனையும் அளவுக்கு வியர்த்துக்கொட்டிவிட்டது.
ஒரு சில அரங்குகளை மட்டுமே கைப்பேசியில் படம் எடுத்தேன் அதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்த செக்கியூரிட்டி படம் எடுக்க கூடாது என எச்சரிக்கை விட்டார், என்ன கொடுமை சார் இது, நான் பெங்களூர்,சென்னையில எல்லாம் டிஜிட்டல் கேமிராவிலே படம் எடுத்து இருக்கேன், இங்கே புதுசா சொல்றாங்களேனு கேட்டேன் அது அப்படித்தான் சொல்லிட்டு போயிட்டார்... சண்டை வந்திருக்கும் , ஆனால் நெய்வேலிக்கு என சில விதிகள் இருக்கு,அங்கு பொதுவாகவே படம் பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. என்பதால் அமைதியா ஆகிட்டேன் ...ஹி ..ஹி ஆனாலும் படம் எடுக்கிறதையும் விடவில்லை...என்ன கொஞ்சம் அமுக்கமா செஞ்சேன் ..நீங்க பார்க்கிறது எல்லாம் திருட்டு படங்கள் (திருட்டு டிவிடி போல)

500 ரூ க்கு மேல வாங்க கூடாதுன்னு முடிவு செய்து போனேன் ,அந்த தொகைக்கு புத்தகத்தோட அட்டைய மட்டும் தான் வாங்க முடியும் போல :-))

வழக்கம் போல அதே ...அதே பதிப்பாளர்களின் அதே ..அதே எழுத்தாளர்களின் ..அதே ..அதே புத்தகங்களே குவிந்திருந்திருந்தன , என்ன ஒன்று சென்னையை விட இங்கே கம்மியா லோடு இறக்கி இருந்தாங்க.

பதிவுலக நண்பர் சுரேகாவோட புத்தம் புதுத்தகம் தலைவா,வா! வெளியிடப்பட்டு இருக்குன்னு சொன்னாரே என தேட ஆரம்பித்தால் கண்ணுல அகப்படுவனானு தண்ணிக்காட்டுச்சு, என்ன பதிப்பகம்னு மறந்து விட்டதால் வந்த வினை, ஒரு வழியா ரெண்டாவது ரவுண்டில் "மதி புத்தக நிறுவனத்தில் " கண்டேன் தலைவனை.

புத்தகம் நல்லா வடிவமைக்கப்பட்டிருக்கு, தரமும் நல்லா இருக்கு, விலையும் குறைவு தான் 80 ரூ, (10% கழிவு போக 72ரூ) பக்கங்கள், 114,(ஒரு பக்கத்தின் விலை எனப்பார்த்தால் கூடுதலோ என நினைக்கிறேன், ஒரு பக்கம் 1 ரூ 58 பைசா வருது)

அட்டைக்கு எல்லாம் காசு சேர்த்து கணக்கு செய்தா கொடுத்த காசு செரிச்சிடும்னு நினைக்கிறேன் :-))
(இந்த கணக்கை எல்லாம் குவார்ட்டர் வாங்கும் போது போட தோன்றுவதில்லை!)

திரும்பி வரதுக்குள்ள ரேண்டமாக அங்கே ,இங்கே என சில பக்கங்கள் படித்துவிட்டேன், இதுல காப்பி ரைட் ஸ்டேட்மென்ட் தான் சூப்பர் ... யாருக்கும் இரவலாகவோ அல்லது வாடகைக்கோ புத்தகத்தை விட கூடாதாம், லெண்டிங் லைப்ரரிகாரங்க வாங்கினா, விற்பனை குறைஞ்சிடும்னு முன்னெச்சரிக்கை போல :-))

தோராயமா திறந்த பக்கத்தில் துருவ ஐஸ் கட்டியில் 20% மேல தெரிவது திறமை, தெரியாம உள்ள மூழ்கி இருப்பது குணாம்சம்னு தத்துவம் சொல்லியிருக்கார் தலைவர், அப்படியே ,காந்தி பார்த்த் வேலை,காமராஜரின் குணம்னு எல்லாத்தையும் தொட்டு போறாபோல இருக்கு.

சந்திர மவுலி, விக்னேஷ் பாத்திரப்படைப்பின் அடிப்படையில் பார்த்தால் " ராபின் ஷர்மா" எழுதின "தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி" போலவோனு தோனுது.காப் மேயர், ,எம்.எஸ்.உதயமூர்த்தி போல கட்டுரை வடிவில் இல்லாமல் "paulo coelho" ராபின் ஷர்மா வகையில் கதையாக கொண்டு போயிருக்கிறார்.

இன்னும் முழுசா படிக்கலை ,படிச்சிட்டு விமர்சனம் எழுதலாம்னு ஒரு எண்ணம், அது சொந்த செலவில் சூனியம் ஆகிடுமோன்னு ஒரு கெவுளி கூவுது , சுரேகா தான் இன்னும் என்னை திட்டாம இருக்கார், அவர் கிட்டேவும் திட்டு வாங்கலாம்னு முடிவு செய்துட்டா ...விமர்சனம் எழுதிட மாட்டோம், ஏன்னா நான் ஒரு தடவை முடிவு செய்திட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் :-))

பக்கத்தில கேபிள்ஜியின் சினிமா வியாபாரமும் இருந்துச்சு(சோடிப்போட்டு வைக்குறாங்கப்பா) எடுத்து புரட்டிப்பார்த்தேன், அட்டை ரொம்ப டல்லா பழுப்பு ,கருப்பு கலரில் கவருவது போல இல்லை,கேபிள்ஜி சினிமா புத்தகம்னா சும்மா ஜிலு ..ஜிலுனு அட்டை போட வேண்டாம்?

சரியாக கவனிக்காமல் போய் இருப்பேன் , புத்தகம் பேரு கடைசி வினாடியில் பிளாஷ் ஆகி நினைவுப்படுத்தியது, எடுத்து பார்த்ததோடு சரி வாங்கவில்லை,
ஏற்கனவே பட்ஜெட் தாண்டியாச்சு அதனால் அப்புறம் பார்க்கலாம்னு வந்துவிட்டேன்.


ஏற்கனவே ஒரு ரவுண்ட் போய்விட்டதால் வந்த வினை, முதல் ரவுண்டில் பாரதி புத்தகாலயம்,விடியல்,அலைகள், நியுசெஞ்சுரி போன்ற பதிப்பக அரங்குகளில் மலிவு விலையில் நல்ல நூல்களாக கொஞ்சம் பொறுக்கிவிட்டேன்.இது போன்ற பதிப்பங்களில் தான் சர்வதேச அளவில் புகழ்ப்பெற்றவர்களின் மொழியாக்க நூல்கள் சல்லீசாக கிடைக்கிறது.

கிழக்கில் எல்லாம் டவுசரை உருவ என்றே ரஜினி,கலைஞர், விஜயகாந்துக்கு எல்லாம் வாழ்க்கை வரலாறு நூல்களை போட்டு காசு புடுங்கிற வேலையை கன கச்சிதமாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எஸ்.ரா.எழுதிய 5 நூல்கள் 150 ரு என ஒரு அறிவிப்பு, ரொம்ப ஆசைப்பட வேண்டாம் பேசும் புலி, அது இதுனு சின்ன குழந்தைகளுக்கு எப்போவோ எழுதி இருப்பார் போல ,அது போன்றவையாம்.

மேற்கொண்டு எதுவும் வாங்காமல் ,வேடிக்கைப்பார்க்கலானேன், சின்னப்பசங்க நிறையபேர் அவரவர் அப்பா,அம்மாவை இழுத்துக்கொண்டு கடை கடையா அலைய விட்டார்கள், நெய்வேலியில் எல்லாருமே உத்தியோகஸ்தர்கள், என்பதாலும் , பசங்களும் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள், பசங்க வேகத்துக்கு பெற்றோர் வளரவில்லை எனலாம்,,இது போன வருஷம் வாங்கின புத்தகம், வேண்டாம் என்றே சொல்லி பசங்களை இழுத்துப்போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பையன் அவசரப்பட்டு பாலித்தின் கவரை பிய்த்து புத்தகத்தை அவங்க அப்பாக்கிட்டே காட்ட எடுத்து போக பார்த்தான், கடையில் இருந்தவர் திட்டிக்கொண்டு இருந்தார். இரு வேறு உலகால் ஆனது வாழ்க்கை.

பாலித்தீன் ஒழிப்போம் என யாரும் கேரி பேக் தரவில்லை, ஒரு பேப்பர் கவரில் போட்டு கொடுத்தார்கள் ,கை வேர்வையிலே ஊறி பிய்ந்துக்கொண்டது, அப்புறம் எதுக்குய்யா புத்தகத்தை மட்டும் பாலித்தீன் கவரில் போட்டு மூடி வைக்குறிங்க :-))

குறைவான புத்தகங்களையே வாங்கினேன் , அதற்கே 1000 வந்துவிட்டது, எப்படியும் 10 நாளில் படித்துவிடுவேன். வாங்கிய புத்தகங்கள் எல்லாம் சராசரியான ஒரு "முட்டாளின்" தேர்வாகவே இருக்கும் என்பதால், வெளியில் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை :-))

மேலும் சில படங்கள்...