Monday, March 04, 2013

என்ன கொடுமை சார் இது-11


(ஹி...ஹி ஆடைக்கட்டி வந்த நிலவோ?)


வெட்கம் கெட்ட விளம்பர மோகம்!

கராத்தே வீரர் ஷிஹான் ஹீசைனி அடிக்கடி விளம்பரத்துக்காக எதையாவது செய்வார் ,அதுவும் அம்மையார் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காலங்களில் எல்லாம் தன் மீது கவனத்தினை திருப்ப தவறாமல் ரத்தத்தில் படம் வரைவது, அல்லது கோணங்கி தனமாக  எதையாவது செய்து கவனம் ஈர்க்க முயல்வார், அதன் உச்சக்கட்டமாக்க இப்பொழுது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை செய்துள்ளார், சுமார் 11.5 லிட்டர் மனித இரத்தத்தினை மைனஸ் 27 டிகிரி செல்சியசில் உறைய வைத்து அதனைக்கொண்டு அம்மையாரின் மார்பளவு(BUST)  ஒரு சிலை செதுக்கியுள்ளார் , இதற்கு அவர் நடத்தும் வில்வித்தை பயிற்சி நிலைய மாணவர்களிடம் இருந்து  இரத்தம்  சேகரித்துள்ளார்,மேலும் அவர் ரத்தமும் பயன்ப்படுத்தி இருக்கிறார்.



இதற்காக எட்டு ஆண்டுகளாக அவரது இரத்தத்தினை சேகரித்து வைத்திருந்தாராம், இப்படி செய்வதற்கு பதில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்திருக்கலாம், ஒரு யூனிட் இரத்தம் என்பது சுமார் 200 மிலி என நினைக்கிறேன், எனவே 11.5 லிட்டர் ரத்தமும் சுமார் 57 யூனிட் அளவுக்கு வருகிறது, சாதாரணமாகவே 2 யூனிட் இரத்தம் இருந்தாலே ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யலாம்,எனவே சுமார் 114 மேஜர் ஆபரேஷன்களை இவர் சிலை வடிக்க பயன்ப்படுத்திய ரத்தித்தின் மூலம் செய்திருக்கலாம்,அத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்,எத்தனையோ பேர் ஆபரேஷன்களுக்கு ரத்தம் கிடைக்காமல் அலைகிறார்கள், இணையம், தொலைக்காட்சி என விளம்பரமெல்லாம் கொடுக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதன் தனது அல்ப விளம்பர மோகத்திற்காக  விலைமதிப்பில்லா மனித இரத்தத்தினை சிலையாக்கி வீணடித்துள்ளார், இதனையும் தொலைக்காட்சிகள் செய்தியாக்கி மகிழ்கின்றன, இதற்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

என்ன கொடுமை சார் இது!
-------------------

கடலில் கரையும் கண்ணீர் துளிகள்!

இலங்கையில் முள்ளி வாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது ,அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் நக்கீரன் பத்திரிக்கை முதல் பல பத்திரிக்கைகளிலும்,இணைய தளங்களிலும்  வெளியானது,ஆனால் சில  தமிழக அரசியல் தலைவர்கள் இறப்பினை உறுதிப்படுத்தாமல் பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இவ்வாறு செய்வதால் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் என நினைத்தார்களோ என்னமோ,ஆனால் அப்படிப்பேசியது ,நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை   உணரவிடாமல் மக்களை செய்து விட்டது என்பேன்.



சில ஆண்டுகள் கடந்த பின் இப்பொழுது சேனல் நான்கில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கியால் துளைக்கப்பட்டு இறந்த காட்சியினை வெளியிட்ட உடன் , தமிழக அரசியல் தலைவர்கள் இது நாள் வரையில்  கேள்வியேப்படாமல் இன்று தான் கேள்விப்பட்டது போல பேசுவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது, இவர்கள் ஈழ மக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது  எல்லாம் கட்டுக்கதையா?

கோரச்சம்பவம் நடந்த அன்றே உண்மையை விளக்கி  பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கும், ஆனால் மொன்னையாக ,தெளிவில்லாமல் பேசி நடந்த கோரச்சம்பவத்தின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்.

ஒரு போராளி ஒரு அதிகார மையத்திற்கு எதிராக போராடினால் அவனை மட்டுமே  எதிரியாக பார்க்க வேண்டும், ஆனால் அவனது குடும்பத்தினரையும் எதிரியாக நினைத்து ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் அழித்துவிட்டு ,சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் அதிபர் என தலை நிமிர்த்தி ஒரு  மனிதன் நடக்கிறான்,அதனை உலக நாடுகளும் வேடிக்கைப்பார்ப்பதை எல்லாம் பார்த்தால்,மனித குலம் நாகரிமடைந்துவிட்டது, நாம் வாழும் உலகம் ஜனநாயக விதிகளுக்குட்பட்டு இயங்குகிறது என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரக்காயாக கற்பிக்கப்படும் சித்தாந்தங்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

மேலும் இராச பக்சே, பாலச்சந்திரன் படுகொலைக்கும் இலங்கை இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்கிறார் விட்டால் இலங்கைக்கும் ,இலங்கை இராணுவத்துக்குமே தொடர்பில்லை என்று சொன்னாலும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போமாக :-))

நல்ல வேளை சின்னப்பையன் ,அப்பா போன துக்கம் தாங்காமல் ,ஒரு துப்பாக்கிய எடுத்து நெஞ்சில ஐந்து முறை அவனே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டான் என சொல்லாமல் விட்டார்களே என நிம்மதியடையலாம்.


இதில் சேனல் நான்கு பல தவணைகளாக ஆண்டுக்கணக்கில் காணொளிகளை வெளியிட்டு வருவதும் சரியல்ல, ஒரு கோரச்சம்பவத்தினை தங்கள் சேனலின் டி.ஆர்பி ரேட்டிங்க் அதிகரிக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பயன்ப்படுத்துகிறார்கள் ,மேலும் படுகொலைகளை படமெடுத்தவர்களோ நல்ல விலைக்கு பேரம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக விற்பதாகவும் தெரிகிறது, இதனை போர்க்குற்ற ஆவணமாக கருதி சரியான காலத்தில் முழுமையாக வெளிப்படுத்தினால் தான் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன் தரும், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலியாக அமையும், ஏன் எனில்  சேனல் நான்கின் காணொளிகள் மட்டுமே இப்பொழுது உள்ள ஒரே போர்க்குற்ற ஆவணம், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்த ஆவணப்படங்கள் காட்டப்பட்டுள்ளது, ஆனால் முழுமையாக காட்டாமல் பகுதியாக காட்டுவதால் சரியான தாக்கம் ஏற்படுத்தாமல் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு சேனல் நான்கு செயல்ப்பட வேண்டும்.

பாலச்சந்திரன் படுகொலை குறித்து, விரிவாகவும் தெளிவாகவும் தனது கருத்துக்களை மூத்த பத்திரிக்கையாளரும் ,வலைப்பதிவருமான திரு. அமுதவன் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளார்,அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அமுதவன் பக்கங்கள்: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்

# இதில் நம்ம ஊர் அரசியல் கட்சிகள் இன்னமும் வழக்கம் போல மேடைக்கச்சேரி மட்டுமே செய்துக்கொண்டுள்ளன. கழகமோ ராஜ்ய சபாவில் பேசி அதன் மூலம் மற்றக்கட்சிகளுக்கு புரிய வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வைப்போம் , ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவை ஓட்டளிக்க செய்வோம் என்கிறது, எனக்கு ஒன்னு விளங்கவில்லை  தி.மு.க மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தானே , கூட்டணிக்கட்சியாக மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி ஒரு முடிவெடுக்க  வைக்க  முடியாதா? அப்படி பேசக்கூட முடியாத நிலையில் என்ன கூட்டணி வேண்டிக்கிடக்கு?

இதில் உட்சபட்ச கொடுமை என்னவெனில் ராஜ்யசபாவில் விவாதம் முடிந்த அன்றே காங்கிரசை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் (சல்மான் குர்ஷித்) சொல்கிறார் ,இலங்கை எதிரி நாடல்ல, ஜெனிவாவில் என்ன முடிவெடுப்போம் என்பதை இப்பொழுது சொல்ல முடியாது என்கிறார், இதன் மூலமே ராஜ்யசபாவில் தொண்டைக்கிழிய பேசினால் எல்லாம் வேலைக்காவாது என்பது நன்கு புலப்படும்.

தி.முக இப்படி செய்வதற்கு பதில் கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிக்க முயற்சிக்கலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
--------------

படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம்!

வழக்கமாக மார்க்கப்பந்துக்கள் பரிணாமம் இல்லை ,உலகம்,உயிர்கள் அனைத்தும் அல்லா படைத்தார், விரித்தார் என கதை விடுவது வழக்கமே, ஆனால் அவர்களோடு சோடிப்போட்டுக்கொண்டு சில வைதீக மதப்பற்றாளர்களும் இப்பொழுது பரிணாமம் இல்லைனு கிளம்பி இருக்கிறார்கள்.

இதில் என்ன காமெடி எனில் , மார்க்கப்பந்துக்களை பொறுத்த வரையில் அறிவியல் பார்வைக்கொண்ட நாத்திகர்களும் காஃபீர்கள் தான் , இறை நம்பிக்கைக்கொண்ட வைதீக மதப்பற்றாளர்களும் காஃபீர்கள் தான்,ஆனால் நாத்திகர்கள் முன் வைக்கும் பரிணாமவியல் கோட்ப்பாட்டினை எதிர்க்க மட்டும் மார்க்கப்பந்துக்கள் வைதீகர்களுடன் கைக்குலுக்கிக்கொள்கிறார்கள் :-))

வைதீக மதப்பற்றாளர்கள் பரிணாமத்தினை கேள்விக்குள்ளாக்க ,மார்க்கப்பந்துக்கள் கேட்ட அதே கேள்வியான , பரிணாமத்தில் இடைப்பட்ட உயிரினத்தின் படிமம் இருக்கிறதா எனக்கேட்கிறார்கள், அதாவது மனிதன் குரங்கிலிருந்து உருவானவன் என்றால் மனிதனுக்கும் குரங்குகிற்கும் இடைப்பட்ட வடிவில் ஒரு உயிரினம் இருக்க வேண்டும்,அதன் படிமம் எங்கே என கேட்கிறார்கள்.

இக்கேள்வியை அரேபிய மதத்தினை பின்ப்பற்றுபவர்கள் கேட்கலாம்,ஏன் எனில் அவர்களுக்கு இராமாயணமெல்லாம் தெரியாது, படித்திருக்க மாட்டார்கள்,ஆனால் சதா சர்வகாலமும் ,எம்பெருமான் கிருஸ்ணாவின் சரச சல்லாப லீலைகளை நினைத்து புளகாங்கிதம் அடையும் வைதீகர்கள் அப்படி எல்லாம் கேட்கலாமோ?

பகவான் பெருமாளின் தசாவாதரங்களில் ஒன்றான இராமாவதாரத்தின்  மகிமையை போற்றிப்பாடும் இராமாயணத்திலேயே பரிணாமத்திற்கு ஆதரவான சான்றுகள் உள்ளது, நம்பாதாவர்கள் கீழ்க்கண்ட படத்தினை காணவும்.



அனுமார் மனிதனைப்போல் இருகால்களில் நிற்கிறார், உடலும் மனித உடலை ஒத்துள்ளது ,ஆனால் குரங்கு போல முகமும்,வாலும் உள்ளது,இதன் மூலம் குரங்கிற்கும்,மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் இருந்தது தெளிவாகிறது, அனுமான் படத்தினை பார்த்த பின்னும் பரிணாமத்தினை நம்பாதவர்கள், பகவான் எடுத்த தசாவதாரத்தினையும் நம்பாதாவர்கள் ஆவார்கள் :-))

இராமாயணத்தினை படித்துவிட்டு பரிணாமத்தினையும் எதிர்க்க நினைக்கும் வைதீகர்கள் படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம் என்ற செயலை செய்யலாமா?

என்ன கொடுமை சார் இது!
---------------

மதமெனும் போதை!




புதுவை அண்ணா சாலையில் இராஜா திரையரங்கம் அருகில் இப்புண்ணியமிகு திருக்கோவில் உள்ளது, மாலை வேளையில் பக்த கோடிகள் பெரும் திரளாக வருவது வாடிக்கை. கோபுர தரிசனம் கோடி புண்ணியமாம் எல்லாம் கன்னத்துல போட்டுக்கோங்க!


கோயிலைபார்த்து பரவசமானீர்களா,வாங்க அப்படியே பக்தி பரவசமாகி ஏகாந்தமான பக்தர்களையும் தரிசிப்போம் ..........


பக்தி பெருக்கெடுத்த சில பக்தர்கள், புதுவையின் புகழ்மிகு புண்ணிய தீர்த்தம் அருந்திவிட்டு அம்மனிடம் அடைக்கலமாகிவிட்டார்கள் போலும் :-))

என்ன கொடுமை சார் இது!
----------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி ,

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------