Monday, September 17, 2007

காற்றினிலே வரும் குடிநீர்!

நமக்கு தேவையான நீர் மழை மூலம் கிடைக்கிறது. அந்த மழை எப்படி பெய்கிறது என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள், கடல் நீர் அல்லது மற்ற நீர் ஆதாரங்களில் உள்ள நீர் ஆவியாகி மேகம் ஆகி ,பின் குளிர்ந்த காற்று வீசும் போது மேகம் குளிர்ந்து மழையாகிறது என்று.அந்த மழையை நாம் விரும்பிய போது வர வைக்க முடியுமா ,விமானம் மூலம் மேகங்களின் மீது வெள்ளி அயோடைட் ரசாயனத்தை தூவி செயற்கை மழை பெய்ய வைக்கலாம், ஆனால் நமக்கு தண்ணீர் தேவைப்படும் போது நம் வீட்டுக்குள் அப்படி வர வைக்க முடியுமா?

அழைக்கும் போது உதித்து விட்டால் அதற்கு பெயர் நிலவும் அல்ல , அழைக்கும் போது வீசிவிட்டால் அதற்கு பெயர் தென்றலும் அல்ல, அழைக்கும் போது மழை வந்து விட்டால் அதற்கும் பெயர் மழையும் அல்ல, அப்போ அது என்ன ,எப்படி, அது தான் காற்றில் இருந்து நீர் தயாரிக்கும் எந்திரம்.

அமெரிக்க ராணுவம் ஈராக் போன்ற பாலைவனங்களில் இருக்கும் போது குடி நீர் விமானம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது அதற்கு ஒரு காலனுக்கு 30 டாலர்கள் செலவாகிறதாம் அதனை குறைக்க , நாசா மூலம் ஆய்வு செய்து காற்றில் உள்ள ஈரப்பதத்தை செயற்கையாக குளிர வைத்து , சுருங்க வைத்து நீராக மாற்றும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.ஆனால் நாசாவிற்கு முன்னரே அக்யூவா சயின்ஸ் என்ற இன்னொரு நிறுவனம் அதை விட சிறப்பான எந்திரத்தை உருவாக்கியுள்ளது , இப்பொழுது அதனை தான் அமெரிக்க ராணுவத்தினர் பாலைவனங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ள காற்றின் ஈரப்பதத்தில் சாதாரணமாக 1,000,000,000,000,000 லிட்டர் தண்ணீர் உள்ளதாம்.காற்றில் 14 சதவீத ஈரப்பதம் இருந்தால் கூட போதும் ஒரு நாளைக்கு 600 காலன் நீர் தயாரிக்கலாம். பெரிய அளவு எந்திரங்களைக்கொண்டு 500,000 லிட்டர் கூட தயாரிக்க இயலுமாம்.

இந்த எந்திரம் செயல் படும் முறை, கிட்டதட்ட நம் வீட்டில் உள்ள குளிர் சாதனப்பெட்டி போன்ற முறை தான்.

காற்றினை உறிஞ்சி இழுத்து முதலில் ஒரு வடிக்கட்டி வழியாக செலுத்தப்படுகிறது, இதன் மூலம் தூசுக்கள் அகற்றப்படுகிறது.

பின்னர் காற்று குளிரூட்டும் வாயு கொண்ட குழாய்களுக்கு இடையே செலுத்தும் போது குறைந்த வெப்பத்தில் நீராவி சுருங்கி நீராக மாறும்.

அதனை ஒரு தொட்டியில் சேகரித்து , பின்னர் வழக்கமான , புற ஊதாக்கதிர் , ஒசோன் , சவ்வூடு பரவுதல் முறை மூலம் சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றப்பட்டு பயன் பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த கருவியை வடிவமைக்கும் முறையினைப்பொறுத்து திறனின் அளவு மாறுபடுவதால், எந்த நிறுவனமும் அதன் எந்திரங்களின் செயல் முறையை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளன. மேலே சொல்லப்பட்டுள்ளது அடிப்படை தத்துவம் மட்டுமே.

மேலும் சில நிறுவனங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை கிரகிக்கும் ரசாயனங்களைப்பயன் படுத்தியும் எந்திரங்களை வடிவமைத்துள்ளன.


மற்றொரு நிறுவனம் , காற்றலை வடிவில் மின்சக்தி இல்லாமல் , இயங்கும் வண்ணம் , ஒரு எந்திரம் வடிவமைத்துள்ளது, அதன் உற்பத்தி திறன் சிறிது குறைவாக இருக்கும். இம்முறையில் எவ்வித குளிரூட்டும் பொருளும் பயன் படுத்தாமல் காற்றினை ஒரு சுழல் பாதையில் செல்ல விட்டு குளிர வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

33 comments:

வடுவூர் குமார் said...

இதை படிக்கும் போது எப்போதோ, எங்கோ படித்த ஞாபகம்.
ஆதாவது பானையின் வாயை ஒரு வித துணி/பிளாஸ்டிக் (சரியாக ஞாபகம் இல்லை) கட்டி வெய்யில் வைத்துவிட்டால் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கும் என்று போட்டிருந்தது.அதன் செயல் முறை விளக்கம் கூட படம் போட்டிருந்தது.

Anonymous said...

உமது யோசனையை தமிழ் பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியப்படுத்தினால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பதிலாக இந்த இயந்திரத்தை வாங்குவார்கள்!

அதென்ன காற்றினிலே வரும் குடிநீர்? இப்பொதெல்லாம் அந்த அம்மணியுடன் கடலை போடுவது இல்லையா?

வவ்வால் said...

குமார் ,
நன்றி,
பகலில் வைத்தாலா தண்ணீர் வரும் , இரவில் என்று சொல்லி இருப்பார்கள், சரி பாருங்கள்

வவ்வால் said...

இளா,
நன்றி,

வவ்வால் said...

மு.காளை,

எந்திரத்தின் விலை அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். தண்ணீர் கிடைக்காத இடங்களில் இது ஒரு வரப்பிரசாதம் என சொல்லலாம்.

கடலையா?என்னமோ பக்கத்திலே இருந்து பார்த்தாப்போல சொல்றியே யாருப்பா நீ?

யோசிப்பவர் said...

ஆனால் இந்த இயந்திரங்களின் அடிப்படை தத்துவத்தைப் பற்றிய ஒரு சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக இருக்கிறது. இப்படி சுற்றுப்புற காற்றிலுள்ள ஈரப்பதத்தை தண்ணீராக்கினால், நமது சுற்றுப்புறம் வெகு சீக்கிரம் வறண்டு போகாது? அப்பொழுது சுற்றுப்புற வெப்பம் மிகுதியாகிவிடாது?

வவ்வால் said...

யோசிப்பவர்,

நீங்க ரொம்ப யோசிக்கறிங்க காற்று ஒரே இடத்தில் நிலையாகவா இருக்கிறது வீசிக்கொண்டே இருப்பதால் அத்தனை சீக்கிரம் வறண்டு விடாது, அப்படி பார்த்தால் மழை பெய்தாலும் வறண்டு விடுமே காற்று!

சாதாரணமாகவே காற்றில் 50- 60 சதம் ஈரப்பதம் இருக்கும் அதில் மிகச்சிறிய அளவை தான் எந்திரங்கள் பயன்படுத்தும்.ஒரு சதுர கிலோ மீட்டரில் எத்தனை லிட்டர் நீர் இருக்கிறது என்று போட்டு இருக்கிறேனே பதிவில் பாருங்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
இதைப்பற்றி இப்போதே அறிகிறேன்.
எனினும் இதற்கு மின்சாரம்,எரிபொருள் தேவையுண்டு.
ஆனால் நான் ஓரு தொ.கா விவரணம் பார்த்தேன். நாடு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் பகலில் அதிகம் வெப்பம் இரவில் அதிக குளிர் உள்ள நாடொன்றில் சகல வீட்டிலும் 10'x20' அளவில் வலையை,நிலைக்குத்தாக(கைப்பந்து விளையாடக் கட்டுவது போல்) அதன் அடிப்பாகம் ஒரு ஆள் உயரத்துக்கு கட்டி,அடிப்பாகத்தில் ஒழுகுவது ஒரே இடத்தில் ஒழுகக் கூடியதாக அமைத்துள்ளார்கள். இரவு பூராகவும் காற்றில் மிதந்து வரும் நீர்த்துவலைகள்,அந்த வலையில் பட்டு
அப்படியே வடிந்து, பெரிய பீப்பாவில் சேர்கிறது. அதைக் காலையில் எடுத்து வடிகட்டிக் குடிப்பதுடன்,மிருகங்களுக்கும் கொடுத்தார்கள்.
வலை,உயரமான இரு தடி,கயிறு,துணி இவையே..தயாரிக்கத் தேவை.
இது சிக்கனமானது.
நமது நாடுகளில் பனி காலங்களில் கூரையால் நீர்வடியுமே!!
அவற்றைப் சேகரிப்பது பற்றிச் சிந்திக்கவில்லை.
ஆனால் ஈழத்தில் பனியை நம்பி எள்,உழுந்து விதைப்போம்.

வவ்வால் said...

யோகன் நன்றி,

நீங்கள் சொன்னதும் சாத்தியம் தான் , இன்னும் சொல்ல போனால் மகா பாரதத்தில் கூட இப்படி ஒன்று உண்டு, நான் புராணங்களை நம்புவதில்லை ,, ஆனாலும் அது கொஞ்சம் ஒத்துக்கொள்ள கூடியது தான்,

கவுரவர்கள் 100 பேர் , பாண்டவர்கள் 5 பேர் தான் எப்படி எங்களை விட அவர்கள் சிறப்பானவர்கள் என துரியோதனன் கண்ணனிடம் கேட்பான் , பாண்டவர்கள் உங்களை விட புத்திசாலிகள் என்பார் கண்ணன், எப்படி எனக் கேட்டதற்கு ஒரு போட்டி வைப்பார் கண்ணன்,

ஒரு பானையை ஆளுக்கு ஒன்றாக கொடுத்து அடுத்த நாள் காலைக்குள் இது நிறைய பனித்துளிகளைக்கொண்டு வர வேண்டும் என்பார்.

கவுரவர்கள் ஒவ்வொரு புல் , இலை இவற்றில் சேரும் பனித்துளிகளை சேகரிக்க முயற்சிப்பார்கள்.ஆனாலும் அவர்களால் அதிகம் சேர்க்க முடியாது கடைசியில் கண்ணனுக்கு தெரியவா போகிறது என தண்ணீரைப்பிடித்து வைப்பார்கள்.

பாண்டவர்கள் வேட்டியை இரவில் விரித்து வைத்து அதில் படியும் பனியை பின்னர் வேட்டியை பிழிந்து பிடித்து பானையில் சேர்த்து, முழுப்பானையும் நிறைத்து விடுவார்கள்.

அடுத்த நாள் இரண்டு பேரும் முழுப்பானையுடன் வருவார்கள்.

யோகன் இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி , எப்படி இரண்டும் பனித்துளிகளை சேகரித்த நீர் என்று கண்டுபிடிப்பார் கண்ணன்?

இது மகாபாரதக்கதைகள் என்ற புத்தகத்தில் இருப்பது , மெயின் மகாபாரதத்தில் இருக்காது.


//ஈழத்தில் பனியை நம்பி எள்,உழுந்து விதைப்போம்.//

ஈழத்தில் மட்டும் அல்ல இந்தியாவிலும் அப்படி உளுந்து விதைப்பது உண்டு "rice fallow pulse crop" என்று பெயர் , நெல் அறுவடைக்கு முன்னர் உளுந்து விதைப்பார்கள்.

குமரன் (Kumaran) said...

வவ்வால். இது வரை கேள்விப்படாத முறை இது. கேட்கவும் படிக்கவும் நன்றாக இருக்கிறது.
பாண்டவர் பானையில் இருக்கும் நீர் பகலவன் முன் வைக்க உடனே காணாமல் போய்விடும். கௌரவர் பானையில் இருக்கும் நீர் அப்படி ஆகாது. அதன் மூலம் தான் கண்ணன் கண்டுபிடிப்பார். சரியா?
இந்தக் கதையை நான் இது வரை படித்ததில்லை. ஆனால் பனித்துளி சூரிய ஒளியில் உடனே காணாமல் போய்விடும் என்று படித்திருக்கிறேன்.

வவ்வால் said...

வாங்க குமரன் ,

ஆமாம் இந்த முறை ஒரு வித்தியசமான ஒன்று தான் பாலைவனத்திலும் தண்ணீர் எடுக்கிறது தான் ஆச்சர்யம் தானே~!

சரியா சொன்னிங்க அதே தான் சூரியன் கண்ட பனித்துளி போல சொல்வாங்களே , ஆனா ஒரு குடம் முழுக்க இருப்பதும் உடனே ஆவியாகுமா?
ஆனாலும் காற்றின் ஈரப்பதத்தை சேகரிக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த கதை இடையில் சேர்க்கப்பட்டது என்றாலும் அப்போதே நம்மவர்களுக்கு தோன்றி இருக்கிறதே!

யோசிப்பவர் said...

//காற்று ஒரே இடத்தில் நிலையாகவா இருக்கிறது வீசிக்கொண்டே இருப்பதால் அத்தனை சீக்கிரம் வறண்டு விடாது, அப்படி பார்த்தால் மழை பெய்தாலும் வறண்டு விடுமே காற்று!
//
மழை நீர் காற்றிலிருந்து வருவதல்ல, மேகத்திலிருந்து வருவது. மேகம் வெப்பமான காற்று வழியாக இறங்கும்பொழுது, அந்த வெப்பமான காற்றின் ஈரப்பதன் அதிகரிக்குமேயொழிய குறையாது.

//சாதாரணமாகவே காற்றில் 50- 60 சதம் ஈரப்பதம் இருக்கும் //
வெப்ப பிரதேசங்களில் மிகவும் கம்மியாகவே இருக்கும்

//ஒரு சதுர கிலோ மீட்டரில் எத்தனை லிட்டர் நீர் இருக்கிறது என்று போட்டு இருக்கிறேனே பதிவில் பாருங்கள்!
//

அது சரிதான் வவ்வால். ஆனால், இந்த இயந்திரத்தின் பயன்பாடு அதிகரிக்கும்பொழுது என்ன ஆகும்? இது போன்ற லட்சக் கணக்கான இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும்பொழுது, காற்றின் ஈரப்பதம் குறையுமா, குறையாதா? சென்னை போன்ற பெரு நகரங்களின் 'சராசரி' வெப்ப நிலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணிகளில் ஒன்று - பெரு நகரங்களில் உபயோகப்படுத்தப்படும் அதிகமான ஏர்கண்டிஷனர்களின் பயன்பாடு(அதாவது இதுவும் ஒரு காரணி) என்று படித்திருக்கிறேன்.

சாலிசம்பர் said...

பாலைவனத்தில் வாழும் ஒருசில உயிரினங்கள் காற்றின் மூலம் நீரைப் பெற்று தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

வவ்வால் said...

யோசிப்பவர்,

மழை நீர் காற்றில் இருந்து வரவில்லை எனில் மேகம் என்பது என்ன? அது எவ்வாறு உருவாகிறது ஏன சொல்ல முடியுமா?

ஈரப்பதம் மிகுந்த காற்று இல்லை எனில் மேகம் இல்லை. மழை என்பதை விட ஆங்கிலத்தில் precipitation என்று சொல்வது தான் சரியான வார்த்தை ஆகும். மேலும் ஆகும் அளவுக்கு ஈரப்பதம் இல்லை எனில் அது காற்றாகவே இருக்கும்.காற்றில் உள்ள தூசுகளை சுற்றி ஈரப்பதம் படிந்து மேகம் ஆக மாறுகிறது.

அப்படி பட்ட காற்றை தான் இந்த எந்திரம் பயன்படுத்திக்கொள்ளும்.மேலும் மிக குறைந்த பட்சமாக 14 சத ஈரப்பதம் கூட போதும் நீர் தயாரிக்க.

நீங்கள் சொல்வது போல இந்த எந்திரங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் பெருகினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு அதுவும் ஈரப்பதம் வறண்டு விடுவதால் அல்ல, அதில் பயன் படுத்தப்படும் குளிரூட்டும் ரசயனத்தால்(refrigerants) ஏற்படும் விளைவாக இருக்கும்.

வேறுவகையான குளோரோ புளோரோ கார்பன் அல்லாத குளிரூட்டும் ரசயானம் பயன்படுத்தினால் தீங்கு வராது.

பாலைவனம் தவிர ,சராசரியாக எல்லா இடத்திலும் 50 சதவீத ஈரப்பதம் இருக்கும், அதுவே போதும்.அதுவும் கடலோர பிரதேசங்களில் எப்போதும் அதிக ஈரப்பதம் இருக்கும்.

வவ்வால் said...

ஜாலிஜம்பர்,

பாலைவனத்தாவரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எப்படி கிரகிக்கும் எனத்தெரியவில்லை, ஆனால் இரவில் பாலைவனத்தில் அதிகம் பனி பெய்யும் அதனை பயன் படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கலாம்.

பாலை நில தாவரங்களின் பெயரே ஜெரோபைட்(xerophyte) அதாவது உலர் நில தாவரங்கள் , நாம் எடுக்கும் ஜெராக்ஸ் என்ற பெயர் கூட அதில் இருந்து தான் வந்தது.

பாலை தாவரங்களுக்கு ஆழமான ஆணி வேர், மேலும் இலைகள் முற்களாக மாறி இருக்கும், அதன் தண்டு நீர் சேமித்து வைக்கும் வண்ணம் இருக்கும்.அவற்றின் மீது மெழுகு பூச்சும் இருக்கும் இதனால் நீராவிப்போக்கு மட்டுப்படும்.சப்பாத்திக்கள்ளியில் தட்டையாக தெரிவது தண்டு , அதன் முற்களே இலை.

சிவபாலன் said...

வவ்வால்

நல்ல பதிவு!

பகிர்வுக்கு நன்றி!

வவ்வால் said...

சிவபாலன் ,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

வெற்றி said...

வவ்வால்,
அறிந்திராத தகவல்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

/* காற்றில் உள்ள ஈரப்பதத்தை செயற்கையாக குளிர வைத்து , சுருங்க வைத்து நீராக மாற்றும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். */

வவ்வால், ஒரு சின்ன ஐமிச்சம்[ஐயம்]. இப்படிச் செய்வதால் சுற்றுப்புறத்திற்கு ஒரு தீங்கும் விளையாதா?

வவ்வால் said...

வெற்றி,
நன்றி, இதனால் பெரிய அளவில் தீங்கு வர வாய்ப்பில்லை. அதில் பயன் படுத்தும் குளீரூட்டும் வாயுவினால் தீங்கு வரலாம் , அதையும் "cfc" பயன்படுத்தாமல் தவிர்த்தால் தவிர்க்கலாம். மற்றபடி ஈரப்பதம் என்பது மிகப்பெரிய ஒன்று எந்திரம் எடுத்துக்கொள்ளப்போவது மிகச்சிறிய அளவே.

யோசிப்பவர் said...

சரி படிச்ச புள்ள சொல்றீக! பெரசன இல்லேனா சரிதேன்!;)

வவ்வால் said...

யோசிப்பவர் ,

அதிகம் யோசிப்பவர் உங்களுக்கே தெரியாதா, எந்த எந்திரம் இயங்கினாலும் கொஞ்சம் மாசு வரும்னு. ஆடம்பரமா குளிர் சாதனப்பெட்டிய வைத்து இருக்கும் போது அத்தியாவசியமா தண்ணீர் தயாரிக்கும் எந்திரம் இருந்தா என்ன என்று பார்த்தால் தப்பா தெரியாது.மேலும் காற்று வறண்டு விடும் அபாயம் என்பது வெகு வெகு அரிது அப்படி நடக்க வாய்ப்பு இல்லை.

இது சாதாரணமான எந்திரம் தான் , அதில் பயன்படுத்தப்படும் குளீரூட்டும் வாயு "cfc" ஆக இல்லாமல் இருந்தால் நல்லது. இப்போது வரும் குளிர் சாதனக்கருவிகளில் கூட "cfc free" வருகிறது , ஆனால் அதன் விலை வழக்கமானவற்றை விட இரண்டு மடங்கு அதிகம், காசு பற்றி நினைக்காமல் நாம் என்ன அதனை வாங்கி சுற்று சூழலையா காப்பாற்றுகிறோம்?

இந்த காற்றில் இருந்து நீர் தயாரிக்கும் சாதனமும் விலை அதிகம் என நினைக்கிறேன் அது தான் இந்த பக்கம் இன்னும் வராமல் இருக்கிறது.

RATHNESH said...

யோசிப்பவர் சார் மற்றும் வவ்வால் சார், நவீன செய்தி நல்ல செய்தி. இத்தகைய எந்திரங்கள் காலக் கட்டாயம். காற்றின் ஈரப்பதம் குறித்த யோசிப்பவர் சாரின் கவலைக்கு அறிவியலின் பதில் இதோ: "காற்று அந்த இடத்தின் அப்போதைய தட்ப வெப்பத்துக்குத் தக்கவாறு ஈரப்பதத்தைக் கொண்டிருக்கும். அழுத்தத்தைப் பொருத்து எந்த நீர்நிலையிலிருந்தும் நீர் உறிஞ்சி தன் ஈரப்பதத்தினைத் தக்க வைத்துக் கொள்ளும். மழைக்காலத்தில் ஈரத் துணி காய நேரமாவதும் கோடையில் சீக்கிரம் காய்வதும் சூடு காரணமாக அல்ல; ஈரப்பத அளவின் காரணமே. ராஜஸ்தானின் பத்து டிகிரி குளிரில் ஈரத்துணி காய்ந்து விடும். அஸ்ஸாமின் இருபது டிகிரி குளிரில் காய்வது தாமதமாகிறது. ஈரப்பத வித்தியாசமே காரணம். எப்போது ஈரப்பதம் குறைகிறதோ ஆவியாதல் வேகப்படும். காற்று உள்ளவரை கடல்நீர் உள்ளவரை என்று வாழ்த்துவார்களே அந்த சொலவடையே இந்த அடிப்படையில் தான் வந்திருக்குமோ? அவை இரண்டும் வவ்வால் சாரின் உபகரணத்தையும், யோசிப்பவர் சாரின் சந்தேகத்தையும் பார்த்துக் கொள்ளும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
இந்தப் பாரதக் கதை கேள்விப்படவில்லை. ஆனால் அப்போதே சிந்தித்துள்ளார்கள்.

தங்கள் கேள்விக்கு சூரியவெப்பத்தில் வைக்கவேண்டுமென யோசித்தேன். ஆனால் நான் அந்த விபரணத்தில் அவர்கள் பகலில் அதைப் பாவிப்பதைப் பார்த்ததால், வேறு ஏதாவது விடை இருக்குமோ என நினைத்தேன்.

வவ்வால் said...

வாங்க ரத்னீஷ் ,
நன்றி!
விளக்கமாக காற்றின் ஈரப்பதம் குறித்து சொல்லிவிட்டீர்கள், நான் சதவீதம் ,கடலோரம் என சொன்னாலே புரிந்து விடும் என விட்டு விட்டேன்!

காற்றின் ஈரப்பதம் என்பது வற்றாத ஒன்று , உதாரணமாக நாம் சுவாசித்து வெளியிடும் காற்றிலே அதிக ஈரப்பதம் இருக்கும்! அதனால் தான் கண்ணாஇயில் நமது மூச்சுக்காற்று பட்டால் ஈரம் ஆகும்.

மேலும் தாவரங்களின் டிரான்ஸ்பிரேஷன் காரணமாக அதிகம் ஈரப்பதம் காற்றில் சேரும், அப்புறம் வழக்கமான ஆவியாதல் என அது வற்றாத ஒன்று!

எனவே இந்த எந்திரத்தால் ஈரப்பதம் குறைந்து விடும் அபாயம் இல்லை!

வவ்வால் said...

யோகன்,
சரியாக ஊகித்துள்ளீர்கள், குமரனும் அதையே சொல்லியுள்ளார்.

மகாபாரதக்கதையில் சொல்வது இரவில், ஆனால் இந்த எந்திரங்கள் எப்போது வேண்டுமானாலும் செயல் படும்!

ஆடுமாடு said...

ரொம்ப லேட்டாத்தான் உங்க பதிவை பார்த்தேன். நன்றாக இருக்கிறது காளை மேட்டர் கூட போட்டிருக்கிறீர்கள். முழுவதும் படித்துவிட்டு பின்னூட்டம் எழுதுகிறேன்.
ஆடுமாடு

வவ்வால் said...

வாங்க ஆடுமாடு,
பொறுமையா எல்லாப்பதிவையும் மேஞ்சுட்டு வாங்க, நன்றி!

ஒரு சந்தேகம் நீங்க ஆடு மாடா , இல்லை (டான்ஸ்)ஆடும் மாடா? :-))

Vijayakumar Subburaj said...

ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ள காற்றின் ஈரப்பதத்தில் சாதாரணமாக 1,000,000,000,000,000 லிட்டர் தண்ணீர் உள்ளதாம்.காற்றில் 14 சதவீத ஈரப்பதம் இருந்தால் கூட போதும் ஒரு நாளைக்கு 600 காலன் நீர் தயாரிக்கலாம். பெரிய அளவு எந்திரங்களைக்கொண்டு 500,000 லிட்டர் கூட தயாரிக்க இயலுமாம்.

1 km = 1000 m
1 km = 10000 dm (::1 m = 10 dm
1 km^3 = 1,000,000,000,000 dm^3 = 1,000,000,000,000 lt (::1 dm^3 = 1 lt

1 km நீள, அகல, உயரமுள்ள ஒரு தொட்டியில் நீர் நிரப்பினால் கூட அது 1,000,000,000,000 லிட்டர்தான் இருக்கும்.

காற்றி அளவை சதுர அடியில் அளக்கக் கூடாது, கன அடியில் சொல்ல வேண்டும். :)

வவ்வால் said...

விஜயகுமார்,
நன்றி!

தவறாக சொல்லிவிட்டேன் போல அது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பும் , நம் மொத்த வளிமண்டலத்தின் உயரமும் சேர்ந்தது.

ஒரு இடத்தில் காற்றின் குறுக்கு பரப்பு ஒரு சதுர கிலோ மீட்டர், அதற்கு நேர் மேல் உள்ள மொத்த வளிமண்டலமும் ,என்றால் பெரிய கன அளவு தானே.

அப்படி சொல்ல வந்ததால் தான் சதுர கிலோ மீட்டரில் சொன்னேன். ஆனால் கவனகுறைவாக உயரம் என்ன என்பதை சொல்லாமல் விட்டு விட்டேன்.

ஆடுமாடு said...

நான் ஆடும் மாடல்ல. மேயும் மாடு. மேய்வது ஆடு மாடுதானே.

வவ்வால் said...

ஓ may மாதத்தில் மட்டும் மே"யும் மாடா? :-))

Anonymous said...

http://www.brightcove.
tv/channel.jsp?channel=86240652&firstVideo=32

Wendy said...

நான் ஆடும் மாடல்ல. மேயும் மாடு. மேய்வது ஆடு மாடுதானே.