Wednesday, May 24, 2006

சிப்பிக்குள் முத்து!



இந்த கவிதையை முன்னரே நான் வெளியிட்டேன் ஆனால் ஏனோ எனது வலைபதிவில் தெரியவே இல்லை எனவே மீண்டும் போடுகிறேன்.


கடலை விட்டுப் பிரிந்தாலும்

கடலோசையை சங்கு துறப்பதில்லை

உன்னை விட்டுப் பிரிந்தாலும்

உன் நினைவுகள் அலையடிப்பது ஓய்வதில்லை!

கடல் நீரின் உப்பு போல கலந்து விட்ட

நினைவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை!

கரையைத் தொட்டு தொட்டு செல்லும் அலைகள்

கடலை விட்டு விலகி செல்வதில்லை

ஒவ்வொரு அலைகளும் மணல் வெளியில்

பதிந்து விட்ட கால் தடங்களை அழித்து சென்றாலும்

என் மன வெளியில் அழிவதில்லை உன் நினைவு தடங்கள்!

மனக்கடலின் ஆழத்தில் சிப்பிக்குள் முத்தென

உன் நினைவுகளை சுமந்து கொண்டு உறங்குகிறேன்!

விடியலை நோக்கி



இரவுக்கும் விடியலுக்கும் இடையே நிறுத்தி சென்று விட்டாய்

இரவு தொடருமா விடியல் வெளிச்சம் தெரியுமா?

யாதொன்றும் அறியாமல் அந்தகாரத்தில் மூழ்கி கிடக்கிறேன்

சுவர்க்கோழியின் ரீங்காரம் செவிகளில் எதிரொலிக்க!

உன் புன்னகையால் சிறு மெழுவர்த்தி ஏற்றுவாய் என

இருளைப்புசித்து உறங்காமல் இருக்கிறேன் விடியுமென!

இழப்பதற்கு ஏதுமில்லாதவன்!



விலகி சென்றாய் விறகாய் எரிந்தேன்

மீண்டும் வந்தாய் மெழுகாய் உருகினேன்!

கடந்து சென்றாய் கண்கள் மூடி கல்லாய் இருகினேன்!

காலம் முழுதும் காத்து நின்றேன்

காலம் என்னை தின்றது

கவலை என்னை கொன்றது!

மரணம் கூட நெருங்க மறுத்தது

இழப்பதற்கு ஏதும் இல்லாதவன்

இதயத்தையும் இழந்தவன் இவனென்று!

போய் வா தென்றலே...



போய் வா தென்றலே...

நீ பிறந்த இடம் பொதிகை என்றாலும்

புகுந்த இடம் என் மனம் அல்லவா

சிறைப் பிடிக்க சிட்டுக்குருவியல்ல தென்றல் நீ!

வலையில் வீழாமல் வானகமே தாயகமாய்

வலம் வரும் தென்றலே

வசந்தமாய் வாராய் என் நெஞ்சில் வீசிட

நித்தம் காத்திருப்பேன் நீ வரும் திசை நோக்கி!