Tuesday, May 08, 2012

கேட்கிறவன் கேணையா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கே.எஸ்.ரவி குமாரா?






கி.பி 1889 ஆண்டில் ஒரு வழக்கமான ஞாயிறாகத்தான் அமெரிக்கவின் லுடிங்டன் நகருக்கும் விடிந்ததிருக்க வேண்டும் ,ஆனால் அன்று அந்நகரம் உணரவில்லை ஒரு நூற்றாண்டு கழித்து இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தலைநகராம் வங்கக்கடல் தரங்கம்பாடும் சிங்கார சென்னையில் இருந்து வவ்வால் எனும் நாமகரணம் கொண்ட ஒருவன் இணையத்தில் லூடிங்க்டனை தேட வைக்கும் சரித்திர புகழ்பெற்ற ஞாயிறு ஆக அமைய போகிறதென்பதை அந்நகர் அறிந்திருக்கவில்லை .ஏன் அவன் தேடினான் ... தேடலின் வரலாறு ,புவியியல் என்ன?


...கேட்கிறவன் கேணையனா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கேரம் கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவியா என
" மக்கள் மகிழ்விப்பான்" சந்தானம் யாரையோ பார்த்து வெள்ளித்திரையில் கேட்டாலும் என்னைப்பார்த்து கேட்டாப்போலவே இருக்கவே தான் இந்த தேடல் துவங்கியது மிஸ்டர் கூகிள் வழிக்காட்டலுடன், அப்படி என்ன தான் தேடிக்கிடைத்தது ... வாருங்கள் காண்போம்!


லூடிங்க்டன் நகருக்கு வழக்கமான ஒரு ஞாயிறாக விடிந்தாலும் பின்னாளில் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வரலாற்றின் பக்கங்களில் அழியாச்சுவட்டினை அந்நாள் பதித்தது என்றால் மிகையில்லை. விடுமுறை தினமான அந்த ஞாயிறும் வார இறுதிப்பள்ளி ஆசிரியரான ஹென்றி ஹேஸ்கலுக்கு வழக்கமாகவே போய் இருக்கும் ஆனால் அப்பள்ளியின் விளையாட்டுக்கூடத்தில் இருந்து பெரும் உற்சாக கூச்சலும் ,கும்மாளவும் வரவே மாணவர்கள் ஏன் இப்படி சத்தமிடுகிறார்கள் எனப்பார்க்க போனது ஒரு புதிய கண்டுப்பிடிப்பை உருவாக்கியது. ஹென்றி அங்கு கண்டது இது தான், ஒரு பில்லியர்ட்ஸ் டேபிளை மாணவர்கள் சூழ்ந்து நின்று கொண்டு உற்சாகமாக விளையாடிக்கொண்டு ஒருவரை இடிப்பது தள்ளுவதுமாக ,கூக்குரல் எழுப்பிகொண்டும் இருந்தார்கள்.

நம்ம ஊரு உபாத்தியாராக இருந்தால் ஏய் இங்கே என்ன சத்தம் ...வகுப்புக்கு போகாம இங்கே என்ன பண்றிங்க ..ஓடுங்க என தொறத்திவிட்டு கடமையை செய்து இருப்பார். ஆனால் அமெரிக்க உபாத்தியார் ஆச்சே ஹென்றி அப்படி எல்லாம் கட்டுப்பெட்டியாக இல்லாமல் கொஞ்ச நேரம் மாணவர்களை கூர்ந்து கவனித்தார் மாணவர்கள் முறை வைத்து வரிசையாக அடங்கா ஆர்வத்துடன் குதுகளமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள். எத்தனையோ கேம்கள் இருக்க பில்லியர்ட்ஸ் மீது ஏன் இத்தனை ஆர்வம் என யோசிக்கலானார்.



காரணம் அறிந்தார்... என்னவெனில் பில்லியர்ட்ஸ் டேபிள் விலை அதிகமானது அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்து விளையாட முடியாது,மேலும் அதிக இடமும் அடைக்கும் , எனவே பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் இருக்கும் டேபிளை பெரிதும் விரும்பி பயன்ப்படுத்திக்கொண்டார்கள்,மேலும் அதிகம் ஓடி ஆடாமல் உள்ளரங்கிலேயே ஆடினாலும் விறு விறுப்பாக ஆடக்கூடிய குழு விளையாட்டாகவும் இருந்தது.


பில்லியர்ட்ஸ் போன்ற ஒரு விளையாட்டு ஆனால் கையடக்கமாக, மலிவாக அனைவருக்கும் வாங்கும் விலையில் வேறு விளையாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார், இல்லை என்றால் என்ன நாம் உருவாக்குவோம் என யோசித்து பில்லியர்ட்சையே கொஞ்சம் மாற்றம் செய்து சிறிய வடிவில் ஒரு விளையாட்டு பலகையை உருவாக்கினார் அதற்கு கேரம் எனவும் பெயரிட்டார் , ஆம் கேரம் போர்டை கண்டுப்பிடித்தவர் ஹென்றி ஹேஸ்கல்(Henry Haskell)என்ற பள்ளி ஆசிரியரே.

பல நாடுகளிலும் கேரம் போர்ட்டு போன்ற விளையாட்டுக்கள் இருந்திருக்கலாம் ஆனால் கேரம் போர்ட் எனப்பெயர் வைத்து அமெரிக்காவில் முதன் முதலில் காப்புரிமை பெற்றவர் இவர் ஒருவரே ,எனவே அதிகாரப்பூர்வமாக அதன் கண்டுப்பிடிப்பாளர் என அறியப்படுவது ஹென்றி ஹேஸ்கல் ஆகும்.

கேரம் போர்ட் உற்பத்தி செய்ய அவரது நண்பருடன் சேர்ந்து லூடிங்க்டன் நாவல்டி ஒர்க்ஸ் என்ற தொழிற்சாலையை கிபி 1890 இல் அமைத்தார்.பின்னர் 1900 இல் அர்ச்சரேனா என்ற நிறுவனத்துடன் இணைந்து கேரம் அர்ச்சரேனா கம்பெனி என மாற்றியமைத்தார்.

பின்னர் பல கூட்டணிகள், மாற்றங்கள் என கண்டு கி.பி 1939 இல் கேரம் இண்டஸ்ட்ரிஸ் என பெயரும் மாறியது. 1940 இல் நிறுவனரான ஹென்றி ஹேஸ்கல் காலமானார். அதன் பின்னர் சொப்பன சுந்தரியின் கார் போல பல கைகள் மாறி கி.பி 1980 இல் லைட்னிங் குருப் எனும் கம்பெனியின் வசம் சேர்ந்தது அது 1996 வரைக்கும் நடத்தியது,பின்னர் கம்பெனி நலிவடைந்ததால் செயல்ப்பாட்டினை நிறுத்திக்கொண்டது. இன்று வரையில் "Carrom" என்ற பெயரின் காப்புரிமை அவர்களிடமே உள்ளது மற்றவர்கள் அப்பெயரினை பயன்ப்படுத்த முடியாது. ஹி..ஹி ஆனால் நான் கேரம் போர்டை பயன்ப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது :-))

பிட்டுகள்:

# கேரம் என்ற சொல் கேனான்(பீரங்கி) இல் இருந்து உருவானது ,அதன் பொருள் ஷாட் -அடி என்பதாகும். ஸ்ட்ரைக்கர் வைத்து அடித்து தானே விளையாடுகிறோம்.

# கேரம் போன்ற விளையாட்டு உலகின் பல நாடுகளிலும் ,பல பெயர்களிலும் விளையாடப்பட்டே வருகிறது. பல நாடுகளில் கை விரல்களுக்கு பதில் கியுஸ் எனப்படும் ஒரு சிறு குச்சியினை பில்லியர்ட்ஸ் போலவே பயன்ப்படுத்துவதுண்டு.

சில நாடுகளில் புழங்கும் பெயர்கள்:

டென்மார்க்-கெரொமா

சீனா -கேரம்

ஃபிஜி- வின்டி வின்டி

கனடா -குரோக்கியோல்

இஸ்ரேல்- ஷே-ஷே

மெக்சிகோ- காயின்களுக்கு பதில் சோடா மூடியுடன் ஆடப்படுகிறது.

# 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அபிசினியாவில் (இன்றைய எத்தியோப்பியா)இதே போன்ற விளையாட்டு இருந்ததாக ஒரு கல்லரை ஓவியம் காட்டுகிறது.

#அக்காலத்தில் போர்த்து கீசியர்கள் கேரம் என்றே கேரளாவை அழைத்துள்ளார்கள்.எனவே இந்தியாவில் கேரளவில் இருந்து கூட தோன்றி இருக்கலாம்.பெரும்பாலோர் சொல்வது,இந்திய,இரான் பகுதிகளில் தோன்றி இருக்கக்கூடும் என்பதே.

#கேரம் விளையாட்டில் இந்தியா தான் முன்னணியில் உள்ளது பல உலக சாம்பியன்களை உருவாக்கியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல சேம்பியன்கள் உருவாகியுள்ளார்கள்.ஒலிம்பிக் போன்ற விளையாட்டு அமைப்புகளால் கேரம் இன்னும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு பொழுபோக்கு விளையாட்டு என்ற அளவிலே சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் விளையாடப்பட்டு வருகிறது.




#தமிழகத்தினை சேர்ந்த மரிய இருதயம் இரு முறை ஒற்றையர் உலக சேம்பியனாகவும் ,இரு முறை இரட்டையர் சேம்பியனாகவும் சாதனைப்புரிந்துள்ளார், ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அர்ஜுனா விருதுப்பெற்ற ஒரே கேரம் வீரர் ஆவார்.

#பி.ஆரோக்கிய ராஜ் ,தமிழ் நாடு , மரிய இருதயத்துடன் சேர்ந்து இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது போன்று ஆர்.நட்ராஜ்,ராதாகிருஷ்ணன் என பல கேரம் சாம்பியன்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

#பெண்களில் ஜீ.ரேவதி,பி.நிர்மலா போன்ற குறிப்பிட தகுந்த கேரம் வீராங்கனைகள் தமிழகத்தில் உள்ளனர்.

# மற்ற நாட்டில் கேரம் போல விளையாட்டு இருந்தாலும் அமெரிக்காகாரன் தான் பேரு வச்சு அதுக்கு காப்புரிமை வாங்கி வைப்பாங்க ,மஞ்சள், வேம்பு, பாஸ்மதி அரிசிக்கு எல்லாம் காப்புரிமை வாங்கியது போல,சும்மா சொல்லக்கூடாது மூளைக்காரன்ங்கய்யா :-))

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

http://www.bestqualitytoys.com

http://www.international-carrom-fed-media-commission.org/

மற்றும் கூகிள், விக்கி நன்றி!