
மனிதர்களாக நாம் அறிவிற் சிறந்த விலங்குகளே, அப்படியிருப்பினும் பயணம் செய்ய நமக்கு பலவகையான வழிக்காட்டிகள் தேவைப்படுகிறது ,ஏதோ ஒரு ஊர் நோக்கி செல்லும் சாலை என தெரிந்தால் மட்டுமே அதில் பயணம் செய்து அவ்வூரை அடைவோம், வழியில் நான்கு முனை சந்திப்பு வந்தால் கைக்காட்டியில் குறிப்பிட்ட ஊர்ப்படி பயணம் செய்வோம்.
இப்போ ஒரு புதிர்(ரொம்ப பழசு தான்)
மெட்ராஸ் ல இருந்து அறிமுகமில்லாத சட்ராஸ்னு ஒரு ஊருக்கு தீயாய் நானோ மகிழுந்துவில் போறிங்க, போற வழில மாமல்லபுரம் அருகே ஒரு நான்கு முனை சந்திப்பு வருது எந்தப்பக்கம் போறதுனு தெரியலை கைக்காட்டியப்பார்க்கலாம்னு பார்த்தால் அது மணல் சுமையுந்து மோதி கீழ விழுந்து கிடக்கு ,உங்க கிட்டே உலகவழிக்காட்டியும் (ஜி.பி.எஸ்) இல்லை,அருகிலும் யாரும் இல்லை, இப்போ எப்படி சட்ராஸுக்கு சரியான வழிய கண்டுப்பிடிப்பிங்க?
ஹி..ஹி இது எனது பள்ளிப்படிக்கும் காலத்திய புதிர், சும்மா இப்போ ஒரு இடைச்செறுகலா போட்டுவிடுகிறேன், இதை யோசிச்சுக்கிட்டே அடுத்த பத்திக்கு வாங்க... பதிலைப்பின்னூட்டத்தில சொல்லுங்க!
நவீனக்காலத்திய வரவான கூகிள் வரைப்படம், உலகவழிக்காட்டி எல்லாம் பயன்ப்படுத்தி அதிக முக்கல் முனகல் இல்லாம தெரியாத ஊருக்கு கூட இப்போ பயணம் செய்ய முடியும்.
தரையில் பயணம் செய்ய இது போதும் ,அலையடிக்கும் கடலில் வழி தெரிய என்ன செய்வாங்க , மனிதர்கள் அதுக்கும் வழக்கம் போல உலக்கவழிக்காட்டி,திசைக்காட்டி(காம்பஸ்), அல்லது வானியல் படி பகலில் சூரியன் நிலை, இரவில், சந்திரன், நட்சத்திரம்,கலங்கரை விளக்கம்னு பயன்ப்படுத்தி வழிக்கண்டுப்பிடிப்பாங்க.
கடலுக்கு மேல இது வேலை செய்யும், கடலுக்கு அடியில் அதுவும் மீன்கள் எப்படி திசை அறிந்து பயணிக்கும்?
கடலில் நீந்தும் மீன்கள் திசை அறியுமா? பின்ன மனம் போனப்போக்கிலா கடலில் உலாவும். மீன்களும் திசையைக்கணித்து கடலில் பயணிக்கின்றன.
மீன்கள் கடல் வாழ் சூழலில் தடைகளையும், தடத்தையும் எப்படி கணிக்கின்றன எனப்பார்ப்போம்.
மீன்களின் உடலில் பக்கவாட்டில் அழுத்தம் உணரும் குழாய்கள் உள்ளன, அவற்றிள் நீர் நிரம்பியிருக்கும், அதோடு துடுப்புகளில் உள்ள குஞ்சம் போன்றவைகளுக்கும் தொடர்புண்டு. மீன்களின் உடலில் இருக்கும் குஞ்சம் போன்றவை உணர்வு கருவிகள் ஆகும்.

ஒரு கப்பலோ,அல்லது ஒரு மீனோ அருகில் சென்றால் எழும் அலைகள் அழுத்தக்குழாய்களில் மோதியதும் ,அழுத்த வேறுப்பாட்டிற்கு ஏற்ப அப்பொருள் எவ்வளவு பெரிது என மீன் கணித்துவிடும்.மேலும் மீன்களுக்கு சுவை,வாசனை உணரும் சக்தியும் உண்டு அதனை வைத்து இரையா அல்லது திடப்பொருளா என்றெல்லாம் கண்டுப்பிடிக்கும்.
எண்ணைக்கப்பல்கள்,இரசாயன கழிவுகள் கொண்ட கப்பல்கள் விபத்தில் சிக்கி கடலை அசுத்தப்படுத்தும் சமயங்களில் மீன்கள் இறப்பதோடு கடலின் வாசனை மாறுவதால் மீன்களும் வழி மாறி சென்றுவிடுகின்றன சில ஆய்வுகள் சொல்கின்றன.

கடல் மாசுபடுவதைக்கண்டறிய மீன்களைப்போன்றே புலன் உணர்வுக்கொண்ட செயற்கை மீன்களை உருவாக்கி ஸ்பெயினில் கடலில் விட்டு ஆய்வும் செய்துள்ளார்கள் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.ஆனால் மீனின் விலை தான் கொஞ்சம் அதிகம் 20,000 பவுண்டுகள் ஒரு மீனுக்கு மட்டும்!
அழுத்தக்குழாய்களின் மூலம் கடல் நீரோட்டங்களை உணரும்,மேலும் என்ன ஆழம் என்பதையும் உணர முடியும்.கடல் நீர் எல்லா இடங்களிலும் ஒரே வாசனையோடு இருக்காது,எனவே நீரின் வாசனையை வைத்தும், நீரோட்டத்தினை வைத்தும் தங்கள் பயணம் செய்யும் திசையை அறிந்து பயணிக்கும்.
சில நாடுகளில் சட்ட விரோதமாக வெடிப்பொருளை கடலில் வெடிக்க செய்து மீன் பிடிக்கும் பழக்கம் உண்டு, வெடிப்பொருள் கடலில் வெடிக்கும் போது மீன்களின் புலன் உணர்வுகள் பாதிக்கப்படுவதால் மயங்கிவிடும் அல்லது அதிர்ச்சியில் இறந்து விடும்.சில சமயம் வெடிமருந்தும் மீன் உடலில் ஊடுருவி விடக்கூடும்.
இந்தியா,இலங்கைப்போன்ற நாடுகளில் இப்படி வெடிப்போட்டு மீன் பிடிக்கும் பழக்கம் உண்டு, நாம் உண்ணும் கடல் மீன்களிலும் இப்படி வெடி மருந்து கலந்து இருக்க வாய்ப்புண்டு.எல்லாத்திலயும் கலப்படம்,அபாயம், காரணம் அறிவாளி மிருகமான மனிதனின் பேராசையே.
கடல் நீரில் ஒளி ஊடுருவம் தன்மையும் ,பார்வையும் குறைவாக இருக்கும்,அதற்கேற்ப சில மீன்களுக்கு தொலைநோக்கு பார்வை சக்தியும் இருக்கிறது.
மீன்களால் ஒலியை எழுப்பவும்,கேட்கவும் முடியும், அதன் மூலம் மற்ற மீன்களோடு தொடர்பும் கொள்கின்றன. சிறிய மீன்கள் மிக குறைந்த அதிர் வெண் ஆன 100 ஹெர்ட்ஸ் வரையிலும் கேட்க வல்லவை.
டால்பின்கள், திமிங்கிலங்கள் செவியுணர் ஒலி , மீ ஒலி இரண்டையும் உணரக்கூடியவை.இவை 2000 ஹெர்ட்ஸ் வரைக்கும் கேட்க கூடியவை.
வவ்வால்களை போல எதிரொலிக்கொண்டு கடலில் உள்ள தடை,இரை,மற்ற பொருட்களை கண்டறிய வல்லவை. இதற்கு எக்கோலோகேஷன் எனப்பெயர்.
சாலமோன் போன்ற மீன்கள் பிறப்பில் நன்னீர் மீன்களாக இருந்து வளர்ப்பருவத்தில் கடல் நீர் மீன்களாக மாறுபவை, அவை கடல் நீர், ஆற்று நீர் ஆகியவற்றில் உள்ள உப்பின் அளவையும் அறியவல்லவை, அதற்கேற்ப உடலில் உள்ள நீரின் அளவை மாற்றியமைத்துக்கொள்ளும்.
கடலில் இருக்கும் மீன்களின் உடலில் உப்பின் அளவு கடல் நீரை விட குறைவாக இருக்கும், எனவே வெளியில் இருக்கும் உப்பின் அடர்த்திக்கு ஏற்ப மீனின் உடலில் இருந்து தண்ணீர் எதிர் சவ்வூடு பரவல் (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்)மூலம் வெளியேறிக்கொண்டே இருக்கும் ,அதனை சமப்படுத்த தொடர்ந்து கடல் நீரைக்குடித்து அதில் உள்ள மிகை உப்பை வெளியேற்றிக்கொண்டே இருக்கும். அவற்றை நன்னீரில் விட்டால் உயிர் வாழாது ஏன் எனில் உப்பின் அளவுக்கு ஏற்ப நன்னீரில் சவ்வூடுபரவல்(ஆஸ்மாசிஸ்) ஏற்பட்டு அதிக நீர் திசுக்களில் சேரும் ,இபடி சேரும் நீரினை வெளியேற்றவில்லை எனில் கடல் மீன்கள் நன்னீரில் இறந்து விடும்.
இதற்கு எதிர்மாறாக நன்னீர் மீன்களின் உடலில் உப்பு அதிகமாக இருக்கும், அவ்வை வாழும் ஆற்றில் உப்பு இருக்காது, எனவே இப்போது சவ்வூடு பரவல் மூலம் உடலில் நீர் சேரும், அவற்றை தொடர்ந்து வெளியேற்றிக்கொண்டே இருக்கும் நன்னீர் மீன்கள். எனவெ நன்னீர் மீன்களை கடலில் விட்டால் உப்பை பிரிக்கும் ஆற்றல் இல்லாததால் இறந்து விடும்.
அதாவது கடல் மீன்களுக்கு மிகை உப்பை பிரிக்கும் ஆற்றலும், நன்னீர் மீன்களுக்கு மிகை நீரைப்பிரிக்கும் ஆற்றலும் மட்டுமே உண்டு.
ஆனால் சாலமோன் போன்ற மீன் வகைகள் இரண்டையும் செய்யும் ஆற்றல் பெற்றவை.
சாலமோன் போன்ற மீன்கள் இனப்பெருக்க காலத்தின் போது முட்டையிடுவதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் கடலில் பயணித்து ஆற்றை அடையும்.அப்படி பயணிக்க நுகர்வு சக்தியையும், நீரோட்டத்தினையுமே பயன்ப்படுத்துகின்றன.
ஆற்றின் முகத்துவாரத்தினை அடைந்ததும் உப்பின் அளவை ஒப்பிட்டு பார்த்து அதற்கு உடலில் உள்ள நீரை சமப்படுத்த நிறைய நீரைக்குடித்து , பின்னர் அதில் இருந்து உடல் உப்பின் அளவை அதிகப்படுத்திக்கொள்ளும், இதற்கு இடை நிலையான உப்பின் அளவுள்ள முகத்துவாரங்கள் உதவுகின்றன.ஒவ்வொரு சாலமோன் மீன் கூட்டத்திற்கும் அவை எந்த நதியின் வாசனை நினைவிலேயே இருக்கும், எனவே அதே நதிக்கே திரும்ப செல்லும்.
பின்னர் முட்டையிடும் இடத்தினை தேடி ஆற்றிலும் பல கிலோமீட்டர் பயணிக்கும். ஏன் அவைக்கடலில் முட்டையிடவில்லை எனில் குட்டி மீன்களுக்கு பிறந்தவுடன் கடலின் உப்பு சூழலை தாங்கும் சக்தி இருக்காது, ஓரளவு வளர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். குட்டி சாலமோன்கள் ஓரளவு வளர்ந்த நிலையில் அவற்றுக்கு சுமோல்ட் என்றுபெயர். கடலுக்கு திரும்புவதை சுமோல்டிபிகேஷன்(smoltification). என்பார்கள்.
மேலும் சாலோமோன் மீன்கள் முட்டையிடும் வரை உணவே உண்ணாமல் இருக்கும், காரணம் பெரிய மீன்களால் கடல் உணவை மட்டுமே உண்ண முடியும், எனவே தான் வளர்ந்ததும் மீண்டும் கடலுக்கு திரும்புகின்றன.
முட்டையிடும் வரை உண்ணாமல் இருப்பதால் முட்டையிட்டதும் சாலமோன்கள் இறந்து விடும்.முட்டைப்பொறித்து வெளிவரும் மீன் குஞ்சுகள் சிறிது காலம் ஆற்றில் உண்டு வாழவல்லவை சிறிது வளர்ந்ததும் தானாகவே கடலை நோக்கிப்பயணித்து விடும், துருவப்பறவைகள் வலசைப்போதலை இயல்பாக செய்வது போல செய்ய வல்லவை சாலமோன் மீன்கள்.
---------
பின்குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி ,
கூகிள்,விக்கி, தி மெயில், இணைய தளங்கள் நன்றி!
*****