(ஹி..ஹி பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே போனால் காருக்கு இதான் கதி)
பெட்ரோல் விலையை ரூ 7.50 ஏற்றிவிட்டு பின்னர் ரூ 2 இரண்டு குறைத்து அரசு ஆடிய நாடகத்தினை கடந்தப்பதிவில் பார்த்தோம். நடத்திய நாடகத்தினை ஒழுங்காக நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்துவிட்டது என்று சொல்லி தான் விலை ஏற்றினார்கள் , கேட்பதற்கு ஏதோ லாஜிக் இருப்பது போல தோன்றினாலும் அது ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பரிசுத்தமான கலப்பிடமில்லா பொய் என்பதையும் முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தேன்,
அதாவது ரூபாய் மதிப்பு குறைந்து டாலர் உயர்ந்தால் அதற்கேற்றார்ப்போல கச்சா எண்ணையின் விலையும் குறைந்து விடும் என்று. இப்போது அதன் படியே 120 அமெரிக்க டாலர் இருந்த ஒரு பேரல் கச்சா(பிரெண்ட்) இப்போது சுமார் 102 அமெரிக்க டாலர் என்ற அளவில் குறைந்துவிட்டது. மேலும் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
"LONDON (Reuters) - Oil fell towards $102 on Thursday as disappointing data from the United States and India fuelled nervousness around the global demand outlook, compounding eurozone worries and putting oil on course for its biggest monthly percentage drop in two years.
Brent crude futures for July delivery were down $1.19 at $102.28 per barrel by 10:06 a.m. EDT (1406 GMT), after hitting a new seven-month low at $102.07. Prices were on track for the biggest monthly loss since May 2010, after slipping 3 percent on Thursday."
டாலர் உயர்ந்தாலும் ,கச்சா எண்ணை விலை உயர்ந்தாலும் அதனை காரணம் காட்டி விலை ஏற்றம் செய்யும் அரசு குறையும் போதும் அதற்கேற்ப விலையை குறைக்க வேண்டாமா?
இதனை ஒரு கணக்குடன் விளக்கமாக காண்போம்,
ஒரு டாலர்= 55.10 ரூ இருந்த நிலையில்
கச்சா எண்ணை ஒரு பேரல் 120 அமெரிக்க டாலர்கள் எனில்
இந்திய ரூ வில்= 120*55.10=6612 ரூ ஆகும்.
ஒரு பேரல் கச்சா எண்ணை வாங்க 6612 ரூ ஆகிறது எனவே விலை ஏற்றினோம் என சொன்னார்கள்.
தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை 102 டாலர் எனில்
இந்திய மதிப்பில்= 102*55.10=5620 ரூ மட்டுமே.
தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை வாங்க 5620 ரூ மட்டுமே செலவாகும்,தற்போது கிட்டத்தட்ட 1000 ரூ கச்சா எண்ணை வாங்க ஆகும் செலவு குறைந்துள்ளது.
அப்படி எனில் அதற்கு ஏற்ப விலையைக்குறைக்க வேண்டாமா எனக்கேட்டால், டீசல்,மண்ணெண்ணை ,சமையல் எரிவாயுவினை விலைக்குறைவாக விற்கிறோம், இதனை அண்டர் ரெகவரி என்று சொல்கிறார்கள் எனவே விலையுயர்த்துகிறோம் என்கிறார்கள், ஆனால் அதற்கு தான் அரசு தனியாக மாநியம் கொடுக்கிறதே பின்னர் ஏன் விலையை உயர்த்த வேண்டும் எனக்கேட்டால் அப்பவும் சர்வதேச விலையை விட குறைவான விலையில் விற்கிறோம் என மீண்டும் அண்டர் ரெகவரி புராணமே பாடுகிறார்கள்.
அண்டர் ரெகவரி:
பொது சந்தையில் விலை அதிகம் கொடுத்து வாங்கிய பொருளை குறைவான விலைக்கு விற்பது. இதன் மூலம் வாங்க செலவிட்ட தொகையினை மறு விற்பனையின் மூலம் பெற முடியாது என்பதே அண்டர் ரெகவரி என சொல்லப்படுகிறது.
மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றே இப்படி செய்ய அரசு சொல்லும், ஏற்படும் இழப்பினை அரசின் பொது நிதியில் இருந்து கொடுத்து சரிக்கட்டிவிடும், இதுவே மானியம் எனப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் அரசு பெட்ரோலிய துறை மாநியமாக சுமார் 1,38,000 கோடிகள் கொடுத்திருக்கு.
அப்படியும் நஷ்டம் , அண்டர் ரெகவரி ஆகிறது எனப்பஞ்சப்பாட்டுப்பாடி விலையை ஏற்றவே செய்கிறார்கள் எண்ணை நிறுவனங்கள் ,உண்மையில் அண்டர் ரெகவரி ஆகிறதா எனப்பார்ப்போம்.
டீசல் சர்வதேச விலையை விட குறைவாக விற்கிறோம் என்கிறார்கள், எனவே டீசல் விலையில் ஏற்படும் இழப்பை பெட்ரோ விலையில் ஈடுகட்டுவதாகவும், எனவே பெட்ரோல் விலையை அதனால் ஏற்றுவதாகவும் அபாரமாக கணக்கு சொல்லுகிறார்கள் ,அப்படி எனில் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் ஒரு லிட்டர் டீசல் என வாங்கினால் ஆகும் செலவை விட இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க குறைவாக செலவாகிறதா, இல்லை கூடுதலாக ஆகிறதா, மானியம் தேவையான என ஒரு விலை ஒப்பீடு செய்து பார்ப்போம்.
அமெரிக்காவில் கேலனில் சொல்லப்பட்ட விலையை ஒரு லிட்டருக்கு என மாற்றப்பட்டுள்ளது, விலை அனைத்தும் பெட்ரோல் பங்க் விலை,அனைத்துவரிகள் உட்பட.
ஒரு கேலன்=3.78 லிட்டர், ஒரு டாலர்= 55.10 ரூ
அமெரிக்கா:
ஒரு லிட்டர் பெட்ரோல்= 0.95 டாலர்=52.26 ரூ
ஒரு லிட்டர் டீசல்=1.016 டாலர்க்ள்= 55.89ரூ
---------------
108.15 ரூபாய்.
----------------
america fuel price:
இந்தியாவில்,
ஒரு லிட்டர் பெட்ரோல்=74.40 ரூ
ஒரு லிட்டர் டீசல் == 43.95 ரூ
------------
118.35 ரூபாய்
-------------
chennai fuel price:
அமெரிக்காவில் மொத்தம் 108.15 ரூ விலைப்போகும் ஒன்றை இந்தியாவில் 118.35 ரூ என சுமார் 10 ரூ கூடுதல் விலை வைத்து விற்றுவிட்டு சர்வதேச விலையை விட குறைவாக விற்பதால் அண்டர் ரெகவரி ஆகிறது என்று எப்படி சொல்ல முடிகிறது இவர்களால்?
சொல்லப்போனால் உண்மையில் இதனை ஓவர் ரெகவரி என தான் சொல்ல வேண்டும்.
இப்போது உள்ள விலையை விட ரூ பத்து குறைவாகவே பெட்ரோலை விற்கலாம், அண்டர் ரெகவரி ஆக வாய்ப்பே இல்லை.அப்படி இருக்கும் போது ஏன் பல ஆயிரம் கோடி மானியம்? எல்லாம் அரசின் நிதியை கள்ளக்கணக்கு காட்டி சுருட்ட தான்.
மாநியமாக கொடுக்கும் பணத்திற்கு பதிலாக வரி விகிதத்தினை குறைத்துவிட்டாலே பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்து விடும், ஆனால் அப்படி செய்யாமல் வரியை அதிகமாக விதித்து மக்களிடம் கூடுதல் தொகை வசூலித்துவிட்டு பின்னர் ,விலையை குறைக்க மானியம் என்று சொல்வதேன்?
அதில் தான் அரசியலும், வணிகமும் கலந்திருக்கு. மக்களிடம் போய் சேர்ந்துவிட்டால் எப்படி கள்ளக்கணக்கில் சுரண்ட முடியும் அரசியல்வாதிகளால்,எனவே ஒரு சில பொது துறை நிறுவனங்களுக்கு மானியம் என சொல்லிவிட்டு ,அங்கு செல்லும் பணத்தில் அரசியல்வாதிகள் ஆதாயம் அடைகிறார்கள்.
இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் மக்கள் நலனுக்காக என்ற சித்தாந்தமே சிதைக்கப்படுகிறது.
எண்ணை சுத்திகரிப்பு ஆலை
எப்படி சுருட்டுவார்கள் எனில் எண்ணை நிறுவனங்களின் காண்டிராக்ட் பெரும்பாலும் அரசியல் பினாமிகளே செய்வார்கள், மேலும் எண்ணை கொண்டு செல்லும் டேங்கர்களும் அரசியல் பினாமிகளின் வசமே எனவே அவற்றின் மூலம் எண்ணை நிறுவங்களுக்கு கொடுக்கும் பணத்தில் பங்கு அரசியல்வாதிகளின் பாக்கெட்டுக்கு வந்துவிடும்.
மேலும் பெறப்படும் பல ஆயிரம் கோடி மானியம் கூடவே விற்பனையில் லாபம் வேறு , அதனை முறையாக செலவிடாமல் வீண் ஆடம்பர செலவுகளிலேயே எண்ணை நிறுவனங்கள் செலவிடுகின்றன.
அவை என்னவெனில்,
#ஊழியர்களுக்கு ஆறு மாசத்திற்கு ஒரு முறை ஊக்கத்தொகை, அதிக சம்பள உயர்வு.
#தேவைக்கும் மேல் அதிக ஊழியர்கள்
#உயர் அதிகாரிகளின் ஆடம்பர பயணங்கள், நட்சத்திர விடுதி கொண்டாட்டங்கள்.
#பங்கு தாரர்களுக்கு அதிக டிவிடெண்ட் அளித்து தாரளமாக இருப்பது. 100 கோடிமக்களிடம் தினசரி பிடுங்கி சில லட்சம் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபமாக பகிரப்படுகிறது.
#டாஸ்மாக் போல பெட்ரோல்,டீசல் போன்றவை விளம்பரம் இல்லாமலே விற்பனையாகும் ஒன்றாகும் ஆனால் அதற்கும் பல கோடிகளில் விளம்பரம் செய்வது, தோனி,சேவாக் போன்ற கிரிக்கெட்டர்களூக்கு பல கோடி கொடுத்து பிராண்ட் அம்பாசடர்களாக நியமிப்பது என பல ஆடம்பரங்களில் பணத்தினை விரயம் செய்வது.
ஒவ்வொரு சாமானிய இந்திய குடிமகனின் வருமானத்தினை நோகாமல் அண்டர்வேரோடு உருவிக்கொண்டு, அண்டர் ரெகவரி, நஷ்டம் என ஊளையிடுகின்றன ஊதிப்பெருத்த எண்ணை நிறுவனங்கள், இவை பொது துறை நிறுவனமாம், அதற்கு ஜனநாயக அமைப்பில் உருவான அரசாங்கம் தான் காவலனாம் , ஆனால் மக்களுக்கு யாரு காவலன் என ஒருத்தரும் சொல்ல மாட்டார்கள் :-))
நல்லா இருக்குய்யா மன்னு மோகனின் புதிய பொருளாதார கொள்கையும், அன்னை சோனியாவின் சனநாயக கடமையும் :-))
இதை எல்லாம் பார்க்கும் போது கண்டிப்பாக இந்தியா வல்லரசாகிடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திடுச்சு ஏன்னா எதையும் தாங்கும் சக்தியுள்ள மக்கள் இருக்க நாடு தானே வல்லரசாக முடியும்!
--------
பின் குறிப்பு:
தகவல், படங்கள் உதவி,
எக்கனாமிக்ஸ் டைம்ஸ், reuters&msnbc,,eia, google நன்றி!
*****