dotEPUB

Tuesday, October 16, 2007

குண்டு துளைக்காத கண்ணாடி!

சாதாரணக்கண்ணாடி நம் வீடு முதல் அலுவலகம் வரை எங்கு பார்த்தாலும் காணக்கிடைக்கிறது. கண்ணாடியை கவனமாக கையாளவும் என்றே சொல்வார்கள் காரணம் அது எளிதில் உடைந்து விடும். ஆனால் சில கண்ணாடி துப்பாக்கியால் சுட்டால் கூட தாங்கும் வலிமை மிக்கதாகவும் இருக்கிறதே எப்படி, அதே கண்ணாடியா அல்லது வேறா?

குண்டுதுளைக்காத கண்ணாடி எதனால் ஆனது?

முதலில் கண்ணாடி என்றால் என்னவென்று பார்ப்போம்.
கண்ணாடி என்பது வேதியல் ரீதியாகப்பார்த்தால் வேறொன்றும் இல்லை "மணல்" தான். சிலிக்காவால் ஆனது தான் மணல். இதனை அதிக வெப்பத்தில் சூடுப்படுத்தி உருகவைத்து குளிரவைத்தால் கிடைப்பது தான் கண்ணாடி.சுத்தமான சிலிக்காவில் இருந்து கண்ணாடி தயாரிக்கலாம் என்றாலும், எளிதாக தயாரிக்க சிலிக்காவுடன், சுண்ணாம்பு, சோடீயம் கார்பனேட் எல்லாம் கலந்து சூடுப்படுத்தி, உருக்கி பின்னர் குளிர வைப்பார்கள்! கண்ணாடி என்பது திடப்பொருளோ, திரவப்பொருளோ அல்ல அது ஒரு உறைந்த திரவம்!(frozen liquid)

இப்படி தயாரிக்கப்படும் கண்ணாடி ஒளி ஊடுருவும் வகையிலும், எளிதில் உடையும் தன்மையுடனும் இருக்கும்.

மேலும் கடினப்படுத்த கண்ணாடி தயாரிக்கும் போது வேகமாக குளிர வைப்பார்கள் , இதற்கு "குயிஞ்சிங்க்"(quenching) என்று பெயர்.

குண்டு துளைக்காதக்கண்ணாடி:

துப்பாக்கி குண்டினை தாங்கும் வலிமைக்கொண்ட கண்ணாடி ஒரேக்கண்ணாடிக்கிடையாது, பல மெல்லிய கடினமாக்கப்பட்ட கண்ணாடி ஏடுகளை ஒன்றன் மீது ஒன்றாக படியவைத்து தயாரிக்கப்படுவது. ஒவ்வொருக்கண்ணாடிப்படிமத்தின் இடையிலும் பாலிக்கார்பனேட் என்ற பிளாஸ்டிக் படிமம் வைக்கப்படும்.எனவே குண்டு துளைக்காத கண்ணாடியில் ஒரு ஏடு கண்ணாடி, அடுத்த ஏடு பாலிகார்பனேட் என அடுத்தடுத்து இருக்கும்.

பாலிக்கார்பனேட் என்பது ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் ஆகும் இதனை பல இடங்களிலும் பார்த்து இருப்போம், சுத்திக்கரிக்கப்பட்ட குடி நீர் கேன்கள் செய்யப்பயன்படுவதும் பாலிக்கார்பனேட் தான்.

பாலிக்கார்பனேட்டின் ரசாயான மூலங்கள்:

பிஸ்பினால் -A (bisphenol-A), சோடியம் ஹைட்ராக்சைடு(NAOH), பாஸ்ஜீன்(phosgene) ஆகியவற்றை வினைபுரியவைத்து கிடைப்பது தான் பாலிக்கார்பனேட்,இதனை பிஸ்பீனால் பாலிக்கார்பனேட் என்பார்கள்.

மற்றொரு வகை பாலிக்கார்பனேட் பாலி மெத்தில் மெத்தாகிரைலேட் (poly methyl-methacrylate)ஆகும்.



இவ்வாறு தயாரிக்கப்பட்ட கண்ணாடி அதன் தடிமனுக்கு ஏற்ப குண்டு துளைக்காத தன்மையுடன் இருக்கும். சாதாரண கைத்துப்பாக்கி முதல் ஏ.கே-47 வரைக்கும் துப்பாக்கியின் சக்திக்கு ஏற்ப கண்ணாடியின் தடிமன் வேறுபடும்.அதிகப்பட்சமாக 50 மி.மீ தடிமன் கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது.

குண்டு துளைக்காத கண்ணாடி செயல்படும் விதம்:

துப்பாக்கி குண்டு மோதியதும் கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள ஏடு மட்டும் விரிசல் விடும் இதன் மூலம் துப்பாக்கி குண்டின் விசை பல திசைகளிலும் பரவி குறையும், அதற்கு அடுத்துள்ள பாலிக்கார்பனேட் ஏடு குண்டினால் ஏற்படும் விசையின் அதிர்வை மட்டுப்படுத்தும், இதனால் வேகம் குறையும் குண்டு துளைக்கும் சக்தி இழக்கும்.

a bullet proof glass after fired

கண்ணாடி என்பது கடினமான ஒரு பொருள், இடையில் உள்ள பாலிக்கார்பனேட் பிளாஸ்டிக் , இரப்பர் போன்று அதிர்வுகளை உள்ளிழுத்துக்கொள்ளும்.

வழக்கமான குண்டு துளைக்காத கண்ணாடி மிக கனமாக இருக்கும் இதனால் இக்கண்ணாடிப்பொறுத்தப்பட்ட வாகனத்தின் செயல் திறன்ப்பாதிக்கப்படும் , இதனைக்குறைக்க தற்சமயம் நவீன வகையிலான லேசான எடைக்கொண்ட ஒருக்கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது. இக்கண்ணடியில் சிலிக்காவுடன் அலுமினியம் ஆக்சைடு, நைட்ரேட் ஆகியவை கலந்து இருக்கும், இதனால் அது குறைந்த எடையில் அதிக கடினமாக இருக்கும்.இக்கண்ணாடியை அலுமினியம் ஆக்சிநைட்ரைட் கண்ணாடி என்பார்கள்.

ஒரு குண்டு துளைக்காதக்காரில் , குண்டு துளைக்காத கண்ணாடி, அதன் உலோகப்பகுதியில் உள்ப்புறமாக இன்னும் தடிமனான இரும்பு தகடுகளும் பொறுத்தப்பட்டு இருக்கும், காரின் அடிப்பகுதியில் "fibre reinforced plastic" பொறுத்தி இருப்பார்கள்.

உங்களுக்கும் குண்டு துளைக்காத கார் வேண்டுமா விலை அதிகம் இல்லை , குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் ஒன்றின் விலை 18 லட்சம் தான்.கண்ணிவெடி தாக்காத கார் எனில் 70 லட்சம் ஆகும். விலையுயர்ந்த மாடல் கார் எனில் அதற்கு ஏற்ப விலை. எல்லாக்கார்களும் குண்டு துளைக்காத கார்களாக மாற்றி அமைக்கபடுவது தான். எந்தக்கார் தயாரிப்பு நிறுவனமும் சொந்தமாக தயாரிக்கவில்லை.

வேகமா எங்கே கிளம்பிட்டிங்க குண்டு துளைக்காத கார் வாங்கவா?