Wednesday, February 27, 2013

பரிணாமம் சாத்தியமே- அறிவியல் சான்று.


(ம்ம்..இங்க வச்ச சப்ளாக்கட்டைய காணோமே, யாருப்பா எடுத்தா?)


ஏமக்குறைப்பு நோய் என தமிழில் அழைக்கப்படும் எய்ட்ஸ்(AIDS) நோய் HIV( Human Immunodeficiency Virus) என்ற வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.

HIV வைரசின் முதல் தொற்று தாக்குதல் மேற்கு ஆப்ரிக்க நாடான காங்கோ, கேமரூன் பகுதிகளில் இருந்தே துவங்கியது என அறியப்பட்டுள்ளது, சுமார் 1888 இலேயே முதல் தொற்று தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள், ஆனால் 1927 இல் தான் இப்படி ஒரு நோய் உள்ளது என்றும் ,1980 இல் தான் இந்நோய்க்கு காரணம் HIV, வைரஸ் என்றும் கண்டறிந்தார்கள்.

HIV, the Human Immunodeficiency Virus, என்பது மனிதர்களிடம் முதலில் உருவாகவில்லை, ஆப்ரிக்க சிம்பன்சிகளில் ஒரு வகையான Pan troglodytes troglodytes என்ற குரங்கினத்திடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்கிறார்கள்.

சிம்பன்சி வகைக்குரங்கிடம் காணப்படும் வைரஸ் SIVs (simian immunodeficiency viruses) எனப்படும், இது மனிதர்களுக்கு எவ்வித தொற்றும் உண்டாக்காது, மேலும் அக்குரங்குகளுக்கும் எவ்வித நோயையும் உண்டாக்குவதில்லை, ஆனால் காலப்போக்கில் குரங்குகளின் உடலிலேயே வைரஸ்கள் மியுட்டேஷன் அடைந்து மனிதர்களுக்கும் தொற்றும் வண்ணம் மாறியிருக்க வேண்டும் எனவும், அப்படி மாற்றமடைந்த வைரஸ் தொற்று உள்ள குரங்குகளை வேட்டையாடி ,மாமிசம் உண்டப்போது வேட்டையாடியவர்களின் உடலில் இருந்த வெட்டுக்காயங்களில் சிம்பன்சிகுரங்கின் இரத்தம் பட்டு மியூட்டேஷன் அடைந்த SIVs (simian immunodeficiency viruses) மனிதர்களுக்கு தொற்றினை உண்டாக்கி இருக்கிறது.

தொற்று உருவாகும் வழிகள் என கீழ்க்கண்ட காரணங்களை சொல்கிறார்கள் ,

# சிம்பன்சி வகைக்குரங்குகளை வேட்டையாடிய பொழுது வேட்டைக்காரர்கள் உடலில் இருந்த காயம் மூலம் உள்நுழைதல்.

# காங்கோ நாட்டில் அக்காலத்தில் வாய் வழி மூலம் கொடுத்த போலியோ சொட்டு மருந்து சிம்பன்சி வகை குரங்கின் சிறுநீரகத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது,எனவே போலியோ சொட்டு மருந்து மூலம் பரவியது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை போலியோ சொட்டு மருந்து தயாரித்த அமெரிக்காவை சேர்ந்த "the Wistar Institute in Philadelphia" நிறுவனம் மறுத்துவிட்டது , macaque monkey kidney cells மூலமே மருந்து தயாரிக்கப்பட்டது ,அவற்றுக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என சொல்லிவிட்டார்கள்,ஆனாலும் இக்காரணம் இன்றும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

# காங்கோ பெல்ஜியத்தின் காலனியாகவும் கேமரூன் ஜெர்மனியின்  காலனியாகவும் இருந்தது ,அப்பொழுது அங்கு மலிவாக ரத்தம் சேகரிக்கப்பட்டு ,தேவையான நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது, மேலும் சுத்திகரிக்கப்படாத ஊசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது ,இதனாலும் பரவியிருக்கலாம் என்கிறார்கள்.

# விபச்சாரம்,போதை பொருள் எல்லாம் சகஜமாக உலவிய பகுதி என்பதாலும் எளிதில் பரவியது, அங்கு பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட குறைவாக நிலவியதால் பாலிகேமி எனப்படும் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் என்ற நிலையும் நிலவியுள்ளதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

# அமெரிக்காவின் சி.ஐ.ஏ நடத்திய பரிசோதனைகள் மூலமே ஹெச்.ஐ.வி வைரஸ் பரவியது என்ற கூற்றும் உள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள்,கருப்பின மக்களை அழிக்க செய்ததாக அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்களாம்.

மனித உடலில் தொற்று உருவாதல்:

ஹெச்.ஐ.வி வைரஸ் மனித உடலில் நுழைந்ததும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தாக்கும் என அறிவோம்,ஆனால் அவற்றால் வெள்ளை அணுக்களில் எளிதில் நுழைய முடியாது அதற்கு ஒரு நுழைவு வாயில் தேவை ,அவ்வாறு செயல்படுவது CCR5 (C-C chemokine receptor type 5)எனப்படும் ரிசெப்டார்கள் ஆகும்,இது ஒரு கிளைகோ புரோட்டின் ஆகும். இதன் பின்னர் ஹெச்.ஐவி வைரஸ் CD4 (cluster of differentiation 4)  என்ற மற்றொரு கிளைக்கோ புரொட்டின் ரிசெப்டாரை தாக்கி இணையும், இதன் மூலமே மனித செல்லின் டிஎன்.ஏ வை ஹெச்.ஐவி வைரஸ் சென்றடையும். மனித செல்லின் டி.என்.ஏவின் பிரதி எடுக்கும் அமைப்பை வைரசின் ஆர்.என்.ஏ ரிவர்ஸ் டிரான்ஸ்கிரைப்டேஸ் மூலம் ஆர்.என்.ஏ பிரதி எடுக்கப்பயன்ப்படுத்திக்கொள்ளும், அப்பொழுது தான் பல வைரஸ்கள் பெருக முடியும், ஹெச்.ஐ.வி வைரசால் ஒரு உயிருள்ள செல் இல்லாமல் தனித்து வாழ முடியாது.


CD4 (cluster of differentiation 4) இன் வேலை என்னவெனில்  ஏதேனும் நோய் கிருமி உடலில் நுழைந்துவிட்டால் ,அதனை எச்சரித்து நமது நோய் எதிர்ப்பு அமைப்பினை இயக்குவதாகும். இவ்வாறு CD4 (cluster of differentiation 4) அறிவித்ததும் CD8 என்ற இன்னொரு கிளைகோ புரோட்டின் நோய்க்கிருமியை கொல்ல தேவையான ஆண்டிஜனை உற்பத்தி செய்யும். ஹெச்.ஐ.வி வைரஸ் சிடி4 இனை செயல்பட விடாமல் செய்து விடுவதால் ,நோய் எதிர்ப்பு ஆண்டிஜனை சிடி8 உற்பத்தி செய்யாமல் போய்விடுகிறது ,இதனால் தான் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது, இதனையே எயிட்ஸ் என்கிறோம். எயிட்ஸ் என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை செயல்படாமல் செய்யும் ஒரு தொற்று எனவே எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான வியாதிகளும் வந்து இறக்க நேரிடும், நமது நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படாததால் எந்த மருந்தும் வேலை செய்யாமல் போய்விடும்.

(HIV ON HUMAN CELL-ELECTRON MICROSCOP IMAGE)

இயற்கையில் எதிர்ப்பு:

CCR5 (C-C chemokine receptor type 5) டெல்டா-32 என்ற இன்னொரு வகை அல்லீல் ரிசப்டார்கள் சிலருக்கு இருப்பதை கண்டறிந்துள்ளார்கள், ஐரோப்பிய காக்கேசியன் வகை இனக்குழு மக்களில் சுமார் 20 சதவீதம் பேருக்கு இத்தகைய மாற்று அல்லீல் ரிசெப்டார்கள் உள்ளதாம். அவர்கள் இயல்பிலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியுள்ளவர்கள் என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

டெல்டா-32 வகை அல்லீல் ரெசப்டார்கள் ஹெச்.ஐ.வி வைரசினை நுழைய அனுமதிப்பதில்லையாம், எனவே வைரசால் மனித செல்லுடன் இணைய முடியாமல் அழிந்து விடுகின்றன.

இத்தகைய நோய் எதிர்ப்பு தன்மை உருவாக காரணம் ஆரம்ப நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் பிளேக் மற்றும் தட்டம்மை நோய்கள் பரவலாக பரவியது ,அப்பொழுது அதற்காக தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அவை CCR5 (C-C chemokine receptor type 5) ரிசப்டாரில் தற்செயலாக ஒரு மியுட்டேஷன் ஏற்படுத்தி டெல்டா-32 என்ற CCR5 (C-C chemokine receptor type 5) ரிசெப்டார்களை உருவாக்கி இருக்கலாம் என கணிக்கிறார்கள்.

இத்தகைய அல்லில்கள் இருப்பது ஹெச்.ஐவிக்கு முற்றிலும் பாதுகாப்பு எனவும் சொல்லிவிடமுடியாது ஆனால் எளிதில் நோய் தொற்றாமல் செய்கிறது என்கிறார்கள், எச்.ஐவி யால் பாதிக்கப்பட்டு கேன்சர் வந்தவர்களுக்கு டெல்டா-32 அல்லீல் உள்ளவர்களின் எலும்பு மஜ்ஜையினை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை அளித்த பொழுது, ஹெச்.ஐ.வி வைரசின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளதாம்,எனவே டெல்டா-32 உள்ளவர்களின் ஸ்டெம் செல் கொண்டு சிகிச்சை அளித்தால் ஹெ.எச்.வியை குணமாக்கலாம் என ஒரு ஆய்வு நடக்கிறது.

வைரசின் பரிணாம வளர்ச்சி:

ஆரம்பத்தில் ஏற்பட்ட வைரஸ் தொற்றுக்களை மனித நோய் எதிர்ப்பு சக்தி முறியடித்துள்ளது,ஆனால் தொடர்ந்து சிம்பன்சி வகைகளை வேட்டையாடும் பொழுது தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கவே, SIVs (simian immunodeficiency viruses) மேலும் மியூட்டேஷன் மூலம் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதர்களை தாக்கும் வைரசாக மாற்றமடைந்துள்ளது என்கிறார்கள்.

மேலும் ஹெச்.ஐ.வியிலேயே இன்னொரு வகை ஹெச்.ஐ.வி-2 என உருவாகி இருப்பதையும் 1999 ஆம் ஆண்டு கண்டுப்பிடித்தார்கள். இவ்வைரஸ்  sooty mangabey (the White-collared monkey) என்ற வகை குரங்கின் SIVs (simian immunodeficiency viruses) மூலம் உருவான ஹெச்.ஐ.வி வைரஸ் எனவே இதனை ஹெச்.ஐ.வி-2 என வகைப்படுத்தினார்கள்.

ஹெச்.ஐ.வி-1 வைரஸே மிக அதிக தொற்றினை உருவாக்கியுள்ளது, ஹெச்.ஐ.வி-2 மிக குறைந்த அளவிலேயே தொற்றினை உருவாக்கியுள்ளதாகவும், இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து புது வகை வைரசினையும் உருவாக்கின்றது எனவும் கண்டுப்பிடித்துள்ளார்கள்,இவ்வாறு செய்வதை viral sex" என்கிறார்கள்.

SURVIVAL OF THE FITTEST:

ஹெச்.ஐவி-1 வைரஸ் ஒரே நாளில் பல பில்லியன் எண்ணிக்கையில் பெருக வல்லவை ,இவ்வாறு பல்கி பெருகும் போது ,ஹெச்.ஐ.வியின் மரபியல் பொருளான ஆர்.என்.ஆ வும் பிரதி எடுக்கப்படும், இவ்வாறு அதி வேகமாக ஆர்.என்.ஏ மறு பதிப்பு  செய்கையில் ஆர்.என்.ஏவில் பல பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது,இதனால் பல புதிய வகை ஹெச்.ஐ.வி வைரஸ்கள் உருவாகின்றன ,அவற்றில் மனித உடலில் வாழ தகுதியுள்ளவை பிழைத்து ,மீண்டும் புதிய வைரஸ்களை உருவாக்கும்.

இதனை ஹெச்.ஐ.வி வைரசின் பரிணாம வளர்ச்சி என்கிறார்கள். உலகிலேயே அதி வேகமாக பரிணாம வளர்ச்சி அடையும் வைரசாக ஹெச்.ஐ.வி உள்ளது. இதனாலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு உரிய மருந்தினை கண்டுப்பிடிக்க முடிவதில்லை.

ஒரு வகை மருந்தினை கொடுத்தால் அதனால் பெரும்பாலான வைரஸ்கள் அழிந்தாலும் சில மட்டும் தப்பிப்பிழைக்கின்றன, அவ்வாறு பிழைக்கும் வைரஸ்கள் அம்மருந்திற்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்கின்றன,பின்னர் சில நாட்களில் பல்கி பெருகி நோயை முற்ற வைக்கின்றன.

இது போன்ற  எதிர்ப்பு சக்தியை பூச்சிகளும் உருவாக்கிக்கொள்ள வல்லவை,இதனாலேயே பூச்சி மருந்துகளுக்கு பல பூச்சிகளும் கட்டுப்படாமல் விவசாயத்தில் பெரும் பாதிப்பு உண்டாகிறது, இவ்வாறு எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதும் பரிணாம வளர்ச்சியே.

எனவே ஹெச்.ஐவி தாக்கிய நோயாளிக்கு பலவகையான நோய் எதிர்ப்பு மருந்துகளை கூட்டாக கொடுக்க வேண்டும், பின்னர் தொடர்ந்து கண்காணித்து மேலும் சில நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து புதிதாக உருவாகிய வைரஸ்களை கட்டுப்படுத்த வேண்டும்,ஆனால் முற்றிலும் அழிக்க முடியாது.

படம்-1



ஒரு வகை மருந்தில் முதல் வகை வைரஸ் மட்டுமே அழிக்கப்படுகிறது ,தப்பிய மற்ற வகை வைரஸ் அப்படியே உள்ளது.

படம்-2



மேலும் சில வகை மருந்தினை கலந்து கொடுக்கப்படும் பொழுது மற்ற வகையும் அழிகிறது ஆனால் சில தப்பி பிழைத்து உள்ளது.

வகைகள்:

இவ்வாறு தொடர்ந்து மனித உடலில் ஹெச்.ஐவி வைரஸ் பரிணாமம் அடைந்து புதிய வகையினை உருவாக்கி வருவதால், எயிட்சை கட்டுப்படுத்த பரிணாம உயிரியியலாலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது வரையில் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள ஹெச்.ஐ.வி வைரஸ்களின் வகைகள்.



ஹெச்.ஐ.வி வைரஸ் ஒரு பொது மூதாதையரிடம் இருந்து உருவாகி பல்கி பெருகியதை விளக்கும் பரிணாம மரம்:



இக்காலத்தில் ஒரு செல் கொண்ட நுண்ணுயிரான வைரஸ் பல பரிணாம மாற்றங்கள் அடைவதை ஹெச்.ஐவி வைரைஸ் மூலம் தெளிவாக பார்த்தோம், அப்படி இருக்கையில் ஆதிகாலத்தில் முதல் உயிரினமாக ஒரு செல் உயிரி உருவாகி தன்னிச்சையான மியூட்டேஷன் மூலம் பல உயிர்களாக பல்கி பெருகி இருக்க ஏன் முடியாது?

மேலும் வைரஸ் என்பதே உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் இடைப்பட்ட பாலமாக விளங்கும் ஒரு உயிர் அமைப்பாகும், சாதகமற்ற சூழலில் படிகமாக ஆகிவிடும், அப்பொழுது அது உயிரற்றது போன்றதாகும், மீண்டும் சாதகமான சூழலில் உயிர்ப்பெற்று விடும்,எனவே தான் வைரசினை எளிதில் அழிக்க முடியாது என்கிறார்கள்.

பேக்ட்டீரியா, வைரஸ் போன்றவற்றில் பரிணாம மாற்றம் நடைப்பெறுவதை உயிர் தொழி நுட்ப வல்லுனர்கள் ஆய்வங்களில் நிறுவியுள்ளார்கள்,எனவே உயிர்களிடமும் அத்தகைய பரிணாம வளர்ச்சி சாத்தியமேயாகும் என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதுமானது, பொது அறிவு இல்லாமல் இன்னமும் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு என்பவர்கள் ஹெச்.ஐவி வைரசுடன் வாழ்ந்து பார்த்துவிட்டு ஒரு முடிவு சொல்லவும் :-))

தொடரும்(வவ்வால் நாடினால்)....
----------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://evolution.berkeley.edu/evolibrary/article/medicine_04

http://www.avert.org/origin-aids-hiv.htm

http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(12)61052-6/fulltext

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
------------------------------