Thursday, December 01, 2011

வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!



வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!


பதிவுலக நண்பர் சூர்யஜீவா வால்மார்ட், கம்மோடிட்டி மார்க்கெட் பற்றி ஒரு பதிவினைப்போட்டு அதன் வாயிலாக சில கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பி பதில் அளிக்குமாறு கேட்டு இருந்தார். அவர் பதிவில் விரிவான பின்னூட்டம் இட்டு இருந்தாலும், சரியாக விளக்கினேனா என தெரியவில்லை, எனவே இன்னும் கொஞ்சம் விரிவாக அதனைப்பதிவாக இங்கே போட்டுள்ளேன்.

ஏதோ என்னால் முடிந்த அளவு சொல்லி இருக்கேன், இது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல, முயன்றால் இணையம் கற்பிக்கும்.

கம்மோடிடி மற்றும் சில்லரை வர்த்தகம் சேர்ந்து செயற்கை தட்டுப்பாடு:

ஒன்று:

//ஒரு கிலோ அரிசி 40 ரூபாய் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஊக வணிகத்தில் வெறும் காகிதம் தான் என்பதால் எவ்வளவு கிலோ அரிசி வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அடிப்படையில், நான் என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு வாங்கி கொள்கிறேன்.

பின்பு வெளி சந்தையில், என் மளிகை கடைக்கு தேவையான அரிசி என்று பல்லாயிரக்கணக்கான மூட்டை அரிசி வாங்கி அடுக்கி வைத்துக் கொள்கிறேன்.. ஆனால் விநியோகம் செய்யாமல் செயற்கையான தட்டுப்படை உருவாக்குவதின் மூலம் அரிசியின் விலையை இரு மடங்காக ஆகும் வரை காத்திருந்து, ஒரே நேரத்தில் ஊக வணிகத்தில் வந்த விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து விட்டு, வெளி சந்தையில் விற்பதை விட ஐந்து ரூபாய் குறைவாக விற்று லாபம் சம்பாதிப்பதோடு அல்லாமல் வாடிக்கயாளர்களையும் சம்பாதித்து கொள்கிறேன்..//

சூர்யா,

கேள்வி எல்லாம் ஹைப்போதெடிகலாக இருக்கு, இணையத்தில் தேடிப்பார்த்தாலே கிடைக்கும் பதில்கள். தினம் விதம் விதமாக பதிவுப்போடுறவங்க கூட பொருளாதாரம் பத்தி படிக்க பயந்துக்கிட்டு தலைசுத்தும் என ஓடுவது ஏன்,அப்போ உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படினு பதிவு போடுறது மட்டும் தான் அவங்க  செய்வாங்களா :-))

சரி எனக்கு தெரிஞ்சத வைத்து ஒரு ஜல்லி அடிக்கிறேன் புரிஞ்சா உங்கப்பாடு!

கம்மோட்டி, ல வாங்க விற்க மொத்தமாக பொருட்களை வெளிநாட்டினர் வாங்க என தற்போது எந்த தடையும் இல்லை, நீங்க ,அதுக்கு அனுமதிக்கொடுத்தப்ப இந்த கேள்விக்கேட்டு இருந்தா சரியா இருந்து இருக்கும், இப்போ அனுமதி கொடுத்தது சில்லரை வணிகம்,

மொத்தமாக பொருட்கள் ( அரிசி பட்டியலில் இருக்கா) வாங்கும் வசதி முன்னரே இருந்தும் , ஏன் யாரும் வாங்கி முடக்கவில்லை?. மேலும் கம்மோடிடி பட்டியலில் சேர்க்க நீக்க முடியும். எனவே எப்போது பாதகமான சூழல் வருதோ அப்போ நிக்கி பின்னர் நிலமை சீரானதும் சேர்க்கலாம்.

சரி நீங்க லேட்டாக கேட்டாலும் என்ன ஆகும்னு பார்ப்போம்.

யூக வணிகம் என்பது பங்கு வணிகம் என்று மட்டும் இப்ப வச்சுக்குவோம்,இதுல டிமாண்ட், சப்ளை , முதலீடு எப்படி இருக்கும் என பார்ப்போம்,

முதலீடு செய்ய capital asset pricing model என்பதை பயன் படுத்துவாங்க, ஒரு கம்பெனியின் செயல்பாடு 10% உயர்ந்ததாக காட்டினால் அதாவது லாபம் 10% என கணக்கு காட்டுவதாக சொல்லலாம்,அதன் பங்கு மதிப்பு சந்தையில் 15% ஏறும், எனவே அதுக்கு ஏற்ப டிமாண்ட் ஏற்படும்.இது ஒரு விதி

அதே போல ஒரு கம்பெனி 10% நட்டம் ஆச்சுனா பங்கு விலையில் 15% இறங்கவும் செய்யும்.

இதனால் ஒரு நிறுவனம் லாபகரமாக இருக்கும் போது விரைவாக பங்கு சந்தையில் உயரும், நட்டம் வர்ம்பொது விரைவாக சரியும்.

இந்த இடத்தில் ஒரு கம்பெனி பங்கு என்பது ஒன்றே அதே போல இன்னொரு மாற்று இல்லை ,இப்போது ஒரு நிறுவனமே பாலோவ் ஆன் பப்ளிக் ஆஃபர் அறிவித்தால் அவர்களது முந்தய அதே வகை பங்கின் விலை ஏறுவது நின்றுவிடும்.

எனவே கம்மோடிடிட்டியில் விலை ஏறும் பண்டம் என நினைத்து அதிகம் முடக்கினால் அதே பண்டம் வெளி சந்தையில் புதிய வரவாக வரும் போது விலை சரிந்து நட்டம் உருவாக்கும்.

ஏன் எனில் ஒரு பண்டம் என்பது தொடர்ச்சியாக உற்பத்தி ஆகிக்கொண்டே இருப்பது, ஆனால் பங்கின் அளவு ஒரு நிறுவனத்தால் நிலை நிறுத்தக்கூடியது.எனவே கம்மோடிட்டி யூக வணிகத்தில் மிக அதிகம் முடக்கி செயற்கை தட்டுப்பாடினை நீண்ட நாள் உருவாக்க முடியாது.

  ஆனால் பங்கு சந்தையில் காம்ளிமெண்ட் இருக்கும். இது வேறு,

காம்ப்ளீமென்ட் என்பது ஒரு ஆட்டொ மொபல் பங்கு ஏறினா, இன்னொரு ஆட்டோ மொபைல் கம்பெனி பங்கு ஏறுவது போல.எனவே தான் பங்கு வர்த்தகத்தில் பல தரப்பட்ட பங்கு வாங்கி வைப்பாங்க (portfolio management)ஒரே டைப் செக்டார்ல வாங்கினா கவிழ்த்துவிடும்.

இப்போ அரிசி விலை ஏறினா அதே போல பெரும்பான்மை உணவான கோதுமை விலை ஏறும்னு சொல்ல முடியாது. அதே போல வெங்காயம் விலை ஏறினா பிளைன் ஆம்லெட் சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க, அல்லது முட்டைக்கோஸ் கூட கலந்து வெங்காயம் கம்மி பண்ணிடுவாங்க, இப்படி உணவுப்பொருட்களில் உடனே மாற்றுக்கு போய்டுவாங்க.

இப்போ அரிசிக்கு வருவோம், அதன் விலை நுகர்வோர் சந்தைல 10% ஏறினா, கம்மோட்டி மார்க்கெட்ல 15% ஏறுது வைத்துக்கொள்வோம், அப்படியே விலை 10% இறங்கினா , 15% கம்மோடிட்டில இறங்கிடும்.

law of demand ஐ பார்ப்போம், விலை ஏறினா தேவை குறையும், விலையும், தேவையும் எதிர்விகித தொடர்புடையவை. pricing elasticity of demant (PED) என்ற சதவிகிதம் எப்போதும் எதிர் மறையாகவே(-) இருக்கும்.

உ.ம்: பஸ் டிக்கெட் விலை ஏறினா அடிக்கடி பயணம் செய்வதை மக்கள் குறைத்துக்கொள்வது போல.

பால் விலை ஏறினா ஒரு லிட்டருக்கு பதில் அரை லிட்டர் வாங்கி கொஞ்சம் தாராளமாக தண்ணி ஊத்தி காபிக்கு பதில் டீ யாக குடிப்பது.

giffens goods: அப்படி னு ஒன்னு இருக்கு இது தேவை விதிக்கு எதிரானது, விலை ஏறினாலும் தேவைக்குறையாது, ஆனால் அந்த பொருளுக்கு வேறு மாற்றே substituion goods இருக்க கூடாது.

கிப்பன்ஸ் குட் என்பது ஒரு கடை நிலை , மாற்று இல்லாத மலிவான ஒன்றாக இருக்க வேண்டும், பெரும்பாலும் அரிசி, உணவு ஆகியவற்றை சொல்வார்கள்.விலை ஏறினாலும் வாங்குவதை நிறுத்த முடியாது. ஆனால் விலைக்கம்மியா இருக்குனு அதிகமாக சாப்பிடவும் மாட்டார்கள்.

ஆனாலும் இந்தியா என்பது பல தரப்பட்ட மக்கள் , தட்ப,வெப்பம், உணவுப்பழக்க வழக்கம் கொண்ட நாடு, எனவே இங்கே ஒரே உணவு தான் சாப்பிடுவேன்னு யாரும் அடம் பிடிப்பதில்லை,substituion goods பயன்ப்படுத்துவார்கள். அரிசி இல்லையா கோதுமை , அதுவும் இல்லையா மைதா, அதுவும் இல்லையா கம்பு, சோளம் , கப்பக்கிழங்கு என போவார்கள்.எனவே கிப்பன்ஸ் குட்ஸ் தியரி கூட அடி வாங்கும் இந்தியாவில்.

இப்படி மக்கள் உணவுக்கு மாற்றுப்போவதால் செயற்கையாக நீண்ட காலத்துக்கு விலை ஏற்றி வைக்க முடியாது, தேக்கி வைத்தது போதும்னு வெளில விட்டுவிடுவார்கள், அரிசி விலை கீழ வரும்.

மேலும் அரிசி போன்ற உணவுப்பொருட்கள் சீசனுக்கு சீசன் விளைவிப்பார்கள் , மூன்று மாதத்திற்கு ஒரு நடவு, அறுவடை என புதிய விளைப்பொருட்கள் சந்தைக்கு வந்துக்கொண்டே இருக்கும். ஓவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு காலம், உ.ம் தமிழ்நாட்டில் அறுவடை முடிந்து சில காலம் பின்னர் கர்நாடகாவில் அறுவடை நடக்கும், இப்படியே ஆந்திராவிலும், எனவே தொடர்ச்சியாக பொருட்கள் சந்தைக்கு வந்துக்கொண்டே இருப்பதால் அனைத்தையும் முடக்குவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று.

அப்படி வெளிசந்தைல அரிசி விலை கீழ வரும் போது , கம்மோட்டில அரிசி வைத்திருந்தா அதிகமா நட்டம் ஆகிடும்.காரணம் capital asset pricing model .

ரியல் மார்க்கெட்டிலும், கம்மோட்டிலவும் ஒரே ஆளே அதிகம் பணம் முதலீடு செய்திருந்தால் நட்டம் தான் வரும். ரியல் மார்க்கெட்ல பொருளை மக்கள் வாங்கிடுவாங்க, கம்மோட்டில என்ன பொது மக்களா வாங்குறாங்க அத இன்னொரு டிரேடர் தான் வாங்கணூம், எனவே அதிகமான பங்குகளை ஒரே நேரத்தில டிஸ்போஸ் செய்ய முடியாது, எனவே விற்பனை ஆகாம நட்டம் ஆகிடும் முடக்கி வைத்தவனுக்கு, ஏதோ ஒரு இடத்தில் மட்டும் லாபம் கிடைக்கும், கூட்டிக்கழித்துப்பார்த்தால் நட்டம் :-))

உதாரணமாகப்பார்த்தால் வெளிசந்தையில் விற்பனையாளார் என்பது சுமார் ஒரு கோடி வணிகர்கள் என வைத்துக்கொள்வோம், ஆனால் வாங்குபவர் நுகர்வோர் ஆகிய மக்கள் சுமார் 100 கோடி இருக்கும்.எனவே வெளிச்சந்தையில் பங்குப்பெறுவோர் எண்ணிக்கை மிக பெரியது.

ஆனால் கம்மோடிட்டி மார்க்கெட்டில் வாங்குபர், விற்பவர் என பங்குப்பெறுவோர் சில லட்சங்கள் இருந்தாலே அதிகம், அதுவும் அவர்கள் யாருமே நுகர்வோர் அல்ல அனைவருமே வியாபாரிகள்.லாப, நட்டத்திற்காக மட்டுமே வாங்குவார்கள், அங்கே நுகர்வு என்பதே இல்லை. நட்டம் வரும் என்றால் வாங்கவும் மாட்டார்கள் விற்கவும் மாட்டார்கள். ஒரு மணி நேரத்தில் பங்கு விலை சரிய ஆரம்பித்தா அடுத்து வாங்க ஆளே இருக்காது.

நீங்க ஹைப்போதெடிகலா கேட்டாலும் அரிசிக்கு ஒரு வகையில் பேச்சுக்கு சரி, அழுகும் காய்,கனிக்கு என்ன செய்வாங்க கம்மோடிட்டி மார்க்கெட்ல.

மேலும் கம்மோடிடி என்பது ஒரு கால நிர்ணயம் கொண்டது, ஒரு டெர்ம் 3 மாதம் அதற்குள் டெலிவெரி எடுக்க வேண்டும் அல்லது பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.எனவே வெளிசந்தையிலும் வாங்கிப்போட்டு, கம்மோட்டியிலும் வாங்கிப்போடுவதை ஒருவரே செய்தால் பலத்த நட்டம் வரும்.

ஒப்பந்த விவசாயமும், செயற்கை தட்டுப்பாடும்:

//இரண்டாவது:

மொத்தமாக விவசாயிகளை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி விரயம் இல்லாமல் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பார்கள் என்ற பார்வையும் உள்ளது என்பதால்,
மேலே கூறிய காரணம் இங்கும் பொருந்துகிறது...

விவசாயிகளை இந்த பொருள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதின் மூலம் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்க எதுவாக இருக்கும்..//

பாஸ்மதி அரிசி, கோதுமையை தமிழ் நாட்டில பயிரிட முடியாது, கேரட்டை கடலூரில பயிரிட முடியாது, இப்படி நம்ம நாடு பல தட்ப வெப்பம், பருவ காலம், மண் வளம், கலாச்சாரம் கொண்டது.

இன்னும் ஏன், கோதுமைய மட்டும் பெருவாரியா சாப்பிட சொன்ன சாப்பிட மாட்டாங்க ,அரிசி சோறு கிடைக்கலைனா தான் சப்பாத்திக்கு போவாங்க..

அதனால அப்படிலாம் ஒரே வகையா விவசாயத்தை மாற்ற முடியாது.ஏன் இத சொல்கிறேன் என்றால் ஒரு குறிப்பிட்ட வகை நெல்லை விவசாயிகளிடம் அறிமுகம் செய்ய விவசாயத்துறை படாத பாடு பட வேண்டி இருக்கும்.இதற்காக முன்னோடி விவசாயி என ஊருக்கு 10 பேரை தேர்வு செய்து அவர்களை பயிரிட வைத்து ,விளக்கி எல்லாம் செய்தாலும் அடுத்த வருடம், புதிய முறைக்கு மாற ஒரு 2 பேர் தான் வருவாங்க.

உதாரணமாக அமெரிக்க மக்கள் தொகை சுமார் 32 கோடி ஆனால் அவர்களுக்காக உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி இருந்தாலே அதிகம். மேலும் அமெரிக்கா இந்தியாவை விட 3 மடங்கு நிலப்பரப்பு கொண்டது. எனவே ஒவ்வொரு விவசாயியும் சுமாராக 500 ஏக்கராவது நிலம் வைத்திருப்பார்.

ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு 60% மக்கள் உணவு உற்பத்தி செய்யும் தொழிலில் இருக்காங்க, அதாவது இங்கே எல்லாம் சிறிய விவசாயிகள், ஒவ்வொருவரும் சுமாராக 1 ஏக்கர் முதல் சில ஏக்கர்கள் தான் நிலம் வைத்திருப்பார்கள்.இந்தியாவில் நிலங்களை விட வரப்புகள் அதிகம் என நகைச்சுவையாக சொல்வார்கள்.

அமெரிக்காவில் ஒரு விவசாயியுடன் வால்மார்ட் ஒப்பந்தம் செய்தால் சுமார் 500 ஏக்கர் உற்பத்தி கைவசம் ஆகிவிடும், ஆனால் இந்தியாவில் 500 ஏக்கர் உற்பத்தியை கைப்பற்ற சுமார் 250 விவசாயிகளுடனாவாது ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

எனவே பெரிய அளவில் உற்பத்தியை கைவசம் கொண்டு வர நிறைய பேரை ஒப்பந்ததிற்குள் கொண்டு வர வேண்டியது இருக்கும், இதுவே நீண்ட கால செயல் ஆகும்.மேலும் அனைவரும் சிறு விவசாயிகள் என்பதால் வால்மார்ட் ஒப்பந்தம் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்றால் ..மயிராப்போச்சுனு ஒப்பந்ததை முறித்துக்கொள்ள தயங்க மாட்டார்கள். அதே சமயத்தில் அமெரிக்காவில் பெரிய அளவிலான ஒப்பந்தம் என்பதால் விவசாயி அவ்வளவு சீக்கிரம் முறித்துக்கொள்ள மாட்டான்.

இந்தியாவில் ஒப்பந்த விவசாயம் பெரிதாக வர விடாமல் தடுப்பது பல சிறு விவசாயிகள் இருப்பதும் ஒரு காரணம், ஆனால் பெரிய அளவிலான சில்லரை விற்பனை சீராக செல்ல ஒப்பந்த விவசாயம் தேவை என்பதால் வால்மார்ட் போன்றவர்கள் விவசாயிகளைப்பகைத்துக்கொள்ளாமல் செயல்படவே பார்ப்பார்கள்.

எனவே நீங்க சொல்வது நம்ம நாட்டில நடக்காது.

கொள்முதல் சதவீதக்கட்டுப்பாடு:

//மூன்றாவது:

முப்பது சதவிகிதம் உள்நாட்டு உற்பத்திகளை வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த உள்விதி உள்ளது என்கிறது ஒரு அமைப்பு. ஆகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப் படாது என்றும் கூறுகின்றனர்.

அது ஏன் வெறும் முப்பது சதவிகிதம் என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.//

இதுக்கு என்பதிவிலே சொல்லி இருந்தேன், இந்திய உற்பதியை அதிகம் வாங்க செய்ய வேண்டும் என்று. அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது என்று சொன்னால் இந்த 30% கொள்கையில தான், ஏன் நாமளே குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்க கடைய தொறக்கலாம் ஆனால் இங்கே வாங்கி விற்க வேண்டும் என கட்டாயமாக சொல்ல அரசுக்கு ஏன் தைரியம் இல்லை.அரசாங்கம் உள்நாட்டுக்கொள்முதல் என்பதில் கண்டிப்பு காட்ட வேண்டும்.

இப்படி ஒரு சலுகை கொடுத்தாலும் இதனால் உணவுப்பொருளில் அவர்களால் தாக்கம் கொண்டு வரமுடியாது, காரணம் இந்தியாவை விட வெளிநாட்டில் உணவுகள் விலை அதிகம்,அதை வாங்கி இங்கே இறக்குமதி செய்து விற்றால் நட்டம் தான் ஆகும்.

முன்னர் வெள்ளைக்காரன் வணிகம் செய்ய இந்தியா வந்த போதும் நட்டம் தான் ஆனான், பொருட்கள் சரியாக விற்பனை ஆகவில்லை. அதை தவிர்க்க தான் வரி வசூலிக்க உரிமம் பெற்றான், கார்ப்பரேஷன் கக்கூஸ் டெண்டர் எடுப்பது போல நவாப்புக்கு பணம் கொடுத்து பெற்றான்.

இப்போ இருக்கிறவங்க வரிவசூலிக்கும் உரிமையை தாரை வார்க்க மாட்டார்கள் என நம்புவோம்.

மேலும் சில,

ஆனால் நீங்க முதலில்  கவலைப்படுவதாக இருந்தா டோல் ரோடு பத்திக்கவலைப்பட்டு இருக்கணும்,ஆனால் வழ வழ ரோடுனு சந்தோஷப் படுறிங்க போல :-))

விலைவாசி உயர்வுக்கு இந்த டோல் ரோட்களும் ஒருக்காரணம், முன்னர் இலவச சாலைகளாக இருந்தவையே இன்று டோல் ரோட்களாக மாறி இருக்கு. இலவச நெடுஞ்சாலையே இல்லை எனலாம்.

டீசல் விலை உயர்வு கூடவே சாலைகளில் செல்லக் டோல் கட்டணம் ஆகியவை சேர்ந்து உணவுப்பொருட்களை கொண்டு செல்ல ஆகும் செலவு கூடி விட்டது அதனை நுகர்வோர் தலையில் தான் வைப்பார்கள் வியாபாரிகள்.

அமெரிக்காவில் வால்மார்ட் போன்றவை செயல் பாட்டுக்கு வந்ததால் அங்கிருந்த சிறுவணீகர்கள் அனைவருமே அழிந்து விட்டார்கள் என பதிவர் ரெவரி சொல்லி இருந்தார் , இருக்கலாம், ஆனால் அதனால் என்ன நுகர்வு விலைவாசி உயரவில்லையே. மேலும் அமெரிக்காவிற்கும் அல்லது மேலை நாடுகளுக்கும் நமக்குமான ஒரு வித்தியாசத்தினை கவனிக்கவில்லை அவர்.

மேலை நாடுகளில் ஒரு நகரத்தில் ஒரு லட்சம் பேர் வசிக்கும் ஒரு குடியிருப்பு பகுதி இருந்தாலும் அங்கே கடைகள் இருக்காது. கடைகள் எல்லாம் மார்க்கெட் பகுதி என ஒதுக்கப்பட்ட ஒரு ஷாப்பிங் ஸோன் இல் மட்டுமே இருக்கும். சிறு வணிகராக இருந்தாலும் வால் மார்ட் ஆக இருந்தாலும் ஒரேப்பகுதியில் அக்கம்,பக்கமாக இருக்கும்.மக்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கொஞ்ச தூரமாவது காரில் பயணித்தே வாங்க முடியும்.

பொருட்களை வாங்க என வரும் நுகர்வோர் சிறியக்கடைக்கு பக்கத்தில் இருக்கும் பெரியக்கடைக்கு தான் முன்னுரிமை அளிப்பார், அங்கே பல சலுகைகளும் இருக்கும். இவ்வளவு தூரம் வந்தாச்சு அப்புறம் ஏன் சின்னக்கடைக்கு போகணும் என்ற மனோபாகவம் இருக்கும்.

ஆனால் இந்தியாவில் அப்படி மார்க்கெட் பகுதி என ஒதுக்கி அங்கே மட்டும் கடைகள் இருப்பதில்லை, தெருவுக்கு தெரு ஒரு கடை இருக்கும். பெரும்பாலும் 100 மீட்டர் தொலைவில் நடந்து செல்லும் தூரத்தில் ஒரு கடையைக்காணலாம். இப்போதும் சில பல சூப்பர் மார்க்கெட்கள் இருந்தாலும் அங்கே மாதத்திற்கு ஒரு முறை தான் செல்வார்கள், ஆனால் தினசரி தெரு முனைக்கடையில் ஏதாவது வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கான இடம் சந்தையில் எப்போதும் உண்டு. ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் அருகிலேயே பல சிறு கடைகளிலும் கூட்டம் அலை மோதுவதே இதற்கு உதாரணம்.யானை இருக்கும் காட்டில் கண்டிப்பாக எறும்பும் இருக்கும்.

வால்மார்ட்களால் இப்படி தெருவுக்கு தெரு கடை திறக்க முடியாது. எனவே வால்மார்ட்கள் வந்தாலும் சிறுவணிகர்கள் வியாபாரம் தடைப்படாது. என்ன அவர்களும் விற்பனை சதவீதத்தில் பங்கு எடுத்துக்கொள்வார்கள்.ஒரே அடியாக அவர்கள் வழக்கொழிந்து விட மாட்டார்கள்.

ஒரு காலத்தில் அம்பாசிடர் கார்கள் மட்டுமே போட்டியே இல்லாமல் இந்திய சாலைகளில் ராஜ்ஜியம் நடத்தியது, பின்னர் மாருதி வந்த பின் அம்பாசிடர் கொஞ்சம் அடி வாங்கியது.

அப்போதே பிர்லா குருப் சேர்ந்த ஹின்டுஸ்தான் மோட்டார்ஸ் தனது தயாரிப்பினை மேம்படுத்தி இருக்க வேண்டும் எதுவும் செய்யவில்லை. இன்று என்னாச்சு அந்தக்காரை வாங்க ஆள் இல்லை.

சமிபத்தில் கூட ஒரு புதிய அம்பாசிடர் காரில் போய்ப்பார்த்தேன், சென்ரலைஸ்ட் லாக் இல்லை, பவர் வின்டோ இல்லை, இன்டீரியர் மட்டமாக பழைய பாணியில், டேஷ் போர்டும் அப்படியே,கியர் அதே போல கடினமாக விழுகிறது,டீசல் எஞ்சின் அதே போல ரைஸ் மில் கணக்காக சத்தம் போடுகிறது(முன்பு விட கம்மி) 5 த் கியர் எனப்படும் ஓவர் டிரைவ் ஆப்ஷனாக சில மாடல்களில் மட்டும் இருக்கு, மற்ற எல்லாக்காரிலும் சாதாரணமாகவே இருக்கும். இதனால் ஆக்சிலேட்டர் போட்டு மிதி..மிதி என மிதிக்க வேண்டியது இருக்கு, பிக் அப் என்பது பற்றி எல்லாம் கேட்கவே கூடாது.இப்படி மக்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லாத ஒரு தயாரிப்பு எப்படி சந்தையில் இருக்கும். இத்தனைக்கும் அம்பாசிடரின் உறுதிக்கு முன்னால் இன்றைய கார்கள் நிற்க முடியாது. ஆனால் எத்தனைக்காலம் தான் ஸ்ட்ராங்கான பாடி என கார் வாங்குவார்கள்!

இப்போது இந்தியாவில் பல கார் தயாரிப்பாளர்கள் வந்து விட்டார்கள் ஆனால் மாருதி இன்னும் நடக்கிறது, மார்கெட் ஷேர் வேண்டுமானால் குறைந்து இருக்கலாம். ஆனால் அம்பாசிடர் இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறது யார் காரணம், மக்களா, அரசாங்கமா? இல்லை அம்ப்பாசிடர் கார் தயாரிப்பாளர்கள் தான் காரணம், எந்த நவீன மாற்றமும் செய்யாமல் நான் தயாரிப்பது தான் கார் , வாங்குவது உன் கடமை என்றால் யார் வாங்குவார்கள்.

இந்த உதாரணம் நம்ம ஊர் சில்லரை வர்த்தகர்களுக்கும் பொருந்தும்.அவர்களும் நவீனமாக மாறிக்கொள்ளவேண்டும், குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் வைத்து விற்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, அப்போது தான் எத்தனை வால்மார்ட்கள் வந்தாலும் சமாளிக்க முடியும்.