கேள்விக்குறி!
எஸ்.ராமக்கிருஷ்ணன், பிரபலமான சிற்றிலக்கிய எழுத்தாளர், தற்போது வெகுஜன ஊடகங்களாகிய விகடனிலும் தொடர் எழுதுகிறார் கேள்விக்குறி என்ற தலைப்பில், இந்த வார விகடனில் மீதமிருக்கும் வலி என்ற பெயரில் அவரது கட்டுரை வந்துள்ளது அதிலிருந்து என்னை கவர்ந்த ஒரு பகுதி!
எஸ்.ராமகிருஷ்ணனின் நண்பர் கூறியதாக வந்துள்ள பகுதி!
என் நண்பரும் இசை விமர்சகருமான ஷாஜியிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் சொன்னார்...எம்.எஸ்.விச்வநாதன் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர்! தென்னிந்தியாவில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ லட்சம் பேர் அவர் பாடல்களை கேட்டு ரசிக்கிறார்கள்.அவ்வளவு பெரிய இசையமேதைக்கு இது வரை மிகப்பெரிய அங்கீகாரம் என்று எதுவுமே கிடைக்கவில்லை. தமிழ்த்திரையுலகின் இசை அரசனாக இருந்த எம்.எஸ்.வி. க்கு இன்று வரை மானில அரசு விருதோ, தேசிய விருதோ கிடைத்தது கிடையாது.பத்மஷ்ரி,பத்மபூஷன் போன்ற விருதுகள் எதற்கும் அவர் பெயர் பரிசீலனை செய்யப்பட்டதில்லை. திரையிசை சாதனை மட்டுமின்றி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் இசை மைத்தது போன்ற எண்ணிக்கையற்ற சாதனைகள் செய்துள்ள மனிதரையே நாம் தொலைவில் வைத்துதான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
மக்களின் மனதில் நீங்காத இடம் கிடைத்துள்ள அங்கீகாரம் தவிர வேறு விதங்களில் கெளரவப்படுத்தவோ,சிறப்பு செய்யவோ நாம் மறந்து போனோம். அது சரி அவராக வாய்விட்டுக் கேட்கவா முடியும்? என்றார்.
பசிக்கிறது என்றால் வாய்விட்டுக் கேட்கலாம்.ஆனால செய்த பணிக்காக மரியாதையை எப்படி வாய்விட்டுக் கேட்பது?
நம் வாழ்வுடன் ஒன்றுகலந்து விட்ட கலைஞர்களை,நம் மொழியும் வாழ்வும் உயர்வு பெறப் பாடுபட்ட அறிஞர்களை,வல்லுனர்களை, மூதோர்களை அடையாளம் கண்டு கெளரவப்படுத்த வேண்டியது நமது அடிப்படைச் செயல்பாடு அல்லவா?
எவ்வளவு அலட்சியமாக கடந்த காலத்தையும் , மனிதர்களையும் நம் மக்கள் மறந்து விடுகிறார்கள் என்று பார்த்தால் சற்றே பயமாகவும் , வெறுப்பாகவும் உள்ளது இந்த போக்கு எது வரை செல்லும் நாட்டையும் மறக்கும் வரை செல்லுமோ?
இன்று உலக இசை நாள் , எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ....என்ற பாடல் தான் மனதில் கேட்கிறது.கண்ண தாசன் மற்றும் எம்.எஸ்.வி இணைந்தால் இனிமையான பாடல்கள் தான் , அதை இசை அமைத்தவரோ எங்கேயோ மறக்கடிக்கப்பட்டு விட்டார். எம்.எஸ்.விக்கு பின்னால் வந்த கற்றுக்குட்டி இசையமைப்பளர்கள் எல்லாம் பத்மஷ்ரி விருதுகள் வாங்கியுள்ளார்கள் இவரை மட்டும் கவனிக்காமல் விட்டவர்களை என்ன செய்வது என்பது தான் எனது கேள்விக்குறி?