
சேது சமுத்திர திட்டம் பல கால கனவு திட்டம் தற்போது தான் செயல் வடிவம் பெற துவங்கியது , ஆரம்பித்த நாளது முதலாக அரசியல்வாதிகளில் இருந்து போலி சாமியார்கள் வரை அனைவரும் ஆளுக்கு ஒரு காரணத்தினை சொல்லி தடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அத்திட்டம் வருவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பாத பல சக்திகள் உள்ளது.
இந்தியாவிற்கும் , இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்த பட்சம் 25 கீ.மீ இல் இருந்து 107 கி.மீ வரை இருக்கிறது, இந்த கடல் பகுதியில் தான் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படுகிறது.
திட்டம் வர தடையாக சொல்லும் காரணங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
* ராமார் கட்டிய பாலம்.இரண்டு மில்லியன் ஆண்டு பழமையானது எனவே அதனை சேதப்படுத்த கூடாது என்பது!
இது எத்தனை சத வீதம் உண்மை ,
மனித இனம் தோன்றிய வரலாற்றினை அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலக்கட்டத்தில் எல்லாம் குரங்குகளாக தான் இருந்தோம். பின்னர் மனிதனாக பரிமாண வளர்ச்சி அடைந்த பின்னர் நாகரீகத்தின் முதல் கட்டமாக கருவிகளை உருவாக்கியதன் அடிப்படையில் காலம் பிரிக்கையில் , கி.மு 3000க்கு முன்னர் கற்காலம் வருகிறது , பின்னர் தாமிரக்காலம் , இரும்பை பற்றி அறிந்து கொண்டதே கி.மு 1200 இல் தான். அப்படி இருக்கும் போது இரண்டு மில்லியன் ஆண்டுகள் காலத்திற்கு முன்னர் இராமாயண காலம் போல முழு நாகரீகம் பெற்ற இராம ராஜ்யம் இருந்து இருக்குமா? பாலம் கட்டி இருக்க தான் முடியுமா?
நாசா எடுத்தது என ஒரு படம் காட்டுகிறார்களே அது என்ன?
அது ஒரு இயற்கை அமைப்பு , இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நில இணைப்பிற்கு இஸ்துமஸ்(isthmus) என்று புவியியல் பெயர். இப்படிப்பட்ட இணைப்பு வட , தென் அமெரிக்காவிற்கு இடையே கூட உண்டு , அதனை வெட்டி தான் பனாமா கால்வாய் போடப்பட்டுள்ளது.
சில இடங்களில் கடல் மட்டத்திற்கு மேல் இருக்கும் இங்கே கடலில் மூழ்கி இருககிறது. மேலும் அந்த அமைப்பை ஒட்டி மணல் படிவதால் ஆழம் குறைவாக உள்ளது.
இயற்கை, சுற்று சூழல் பாதிப்புகள் வரும் என்பது,
ஏற்கனவே சொன்னது போல இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் அகலம் 25 கி.மீமுதல் 107 கி.மீ வரையுள்ளது. இதில் சேதுக்கால்வாய் அமையப்போவது 300 மீட்டர் அகலத்தில் மட்டுமே , அவ்வளவு பெரிய பரப்பில் இது மிக சிறிய அகலமே. 12 .8 மீட்டர் ஆழம் வெட்டுவார்கள் இதில் சரசரியாக 8 முதல் 10 மீட்டர் ஆழம் கடலில் உள்ளது , எனவே மேற்கொண்டு வெட்டும் ஆழமும் அதற்கு ஏற்றார் போல குறையும்(4-5 மீட்டர்). சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள மணல் திட்டுகள் தான் பெரிதாக தெரிகிறது , கடல் அடியில் மிகப்பெரிய பாதிப்பு வராது.
மன்னார் வளைகுடாப்பகுதி தான் கடல் வாழ் உரினங்களின் முக்கியமான பகுதி , அப்பகுதியில் இயற்கையிலே ஆழம் இருப்பதால் அங்கு கால்வாய் வெட்டப்படவில்லை. பால்க் நீரிணைப்பு பகுதியிலும் , ஆடம் பாலம் பகுதியிலும் இரண்டு பகுதியாக கால்வாய் வெட்டப்படுகிறது. இது செயற்கை ,இயற்கை சேர்ந்த கடல் வழி கால்வாயாக தான் இருக்கும்.
மேலும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் சரியல்ல, இப்பகுதியில் குறைவாக மீன் கிடைக்கிறது எனவே எல்லை தாண்டி மீன் பிடிக்க போய் தானே இலங்கை ராணுவத்திடம் குண்டடிப்படுகிறார்கள் அப்படி இருக்கும் போது இப்போது கால்வாய் வெட்டும் போது மட்டும் எப்படி மீன்கள் காணாமல் போகும். ஆழ்கடலில் தான் அதிக மீன்கள் பிடிக்கபடுகிறது.
சாதாரணமாக புதிதாக சாலை போட்டாலே அதற்காக மரங்கள் வெட்டுவது என எதாவது ஒரு சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் இருக்காது , அப்படி இருக்கும் போது கடலில் கால்வாய் வெட்டும் போது சுத்தமாக பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி. ஏற்படும் பாதிப்பு குறைந்த பட்சமாக இருக்குமாறு பார்த்து செயல் பட வேண்டும்!
இப்படி தற்போது சில எதிர்ப்புகள் உள் நாட்டில் கிளம்பினாலும் , ஆரம்பம் காலம் தொட்டே இதனை இலங்கை அரசு எதிர்க்கிறது காரணம் , அவர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் , கொழும்பு துறை முகம் பாதிக்கப்படும் என்ற பயமே! எனவே இத்திட்டம் வரமால் இருக்க அனைத்து திரை மறைவு வேலைகளையும் செய்வதாகவும் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.வர்த்தக இழப்பு என்ற பயம் மட்டும் காரணம் அல்ல , ஆழமான கால்வாய் அமைய போவது வடக்கு இலங்கைக்கு அருகே அது முழுவதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம்.
ஏற்கனவே வலுவான கடற்படை வைத்துள்ளார்கள் இதனால் அவர்களது கடற்படை கப்பல்கள் எளிதாக சர்வதேச கடல் எல்லைக்கு போய் வர முடியும். மேலும் வழக்கமாக சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து அவர்களுக்கு தேவையான சரக்குகளை சிறிய படகில் போய் ஏற்றி வருவார்கள் தற்போது கால் வாய் வந்துவிட்டால் பெரிய கப்பல்களைப்பயன் படுத்த முடியும்.
மேலும் அவர்கள் இதனைப்பயன் படுத்தி கப்பல் படையை மேலும் வலுப்படுத்த கூடும், தலை மன்னார், ஆனைஇரவு, காங்கேசன் துறைமுகம்,யாழ்பாணம் ஆகியவற்றிர்க்கிடையே கடல் பயணம் எளிதாகவும் , பெரிய படகுகளுக்கும் வசதியாக அமையும் ஏன் எனில் சேதுக்கால்வாய் அப்பகுதிகளுக்கு அருகே செல்கிறது . எனவே இலங்கை அரசு இக்கால்வாயினால் ஆபத்து எனப் பயப்படுவதால் இத்திட்டம் வர விடாமல் தடுக்க முயல்கிறது.
முடிந்த வரை தடுக்க பார்க்கும் இலங்கை அரசு , முடியவில்லை எனில் திட்டம் வந்தால் அதிலும் ஒரு நன்மையை எதிர்ப்பார்க்கிறது , அக்கால்வாய் பாதுக்காப்பு , ரோந்து ஆகியவற்றில் இலங்கை கடற்படையை ஈடுபடுத்த அனுமதி தரவேண்டும் என்று!மேலும் மன்னார் வளைகுடாப்பகுதியில் கப்பல் போக்குவரத்தினை அனுமதிக்கும் நிர்வாக உரிமையையும் கேட்கிறது.சுருக்கமாக சொல்ல போனால மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு வர கடலைப்பயன்படுத்த இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் யாரும் வரமுடியாத நிலை வரும்.
கால்வாய் முழுக்க முழுக்க அமையப்போவது இந்திய கடல் எல்லைக்குள் தான் , அப்படி இருக்கும் போது பாதுகாப்பினை காரணம் காட்டி சந்தடி சாக்கில் நம்ம கடலையும் சேர்த்து கண்காணிக்க ஆசைப்படுகிறது இலங்கை! நாம் செலவு செய்து கால்வாய் வெட்டுவோம் , நிர்வகிக்கும் அதிகாரம் அவங்களுக்கு வேண்டுமாம்!
இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், காரணம் , கால்வாய் வந்து விட்டால் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தும் , கண்காணிப்பும் அதிகம் இருக்கும். தற்போது மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்திய கடற்படையின் கப்பல் போன்றவை அங்கு போகாது , ஏன் பெரிய படகுகளே போவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பைபர் படகுகளில் தமிழ் நாட்டுக்கு வந்து தேவையான பொருட்களை கடத்தி செல்கிறார்கள்.
தற்போது ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருப்பதால் அவர்களுக்கு கடத்துவது எளிதாக இருக்கிறது , ஆழமான கால்வாய் வந்து இந்திய கடற்படையின் நவீன கப்பல், படகு எல்லாம் சுற்றி சுற்றி ரோந்து வந்தால் என்ன ஆகும் அவர்கள் கடத்தல்.
ஆரம்பகாலத்தை விட தற்போது இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பினை சிலர் தமிழ் ஆர்வலர்கள் ,சுற்றுசூழலார் ஆகியோர் பெயரில் காட்டக்காரணம் இது போன்ற அமைப்புகளின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கவே!
ஜெயலலிதா போன்றவர்கள் ஆரம்பத்தில் தேர்தல் அறிக்கையிலேயே இத்திட்டதை கொண்டுவருவதாக சொன்னவர்கள் தற்போது எதிர்க்க காரணம் மிகப்பெரிய இத்திட்டதை கொண்டு வருவதால் கிடைக்கும் கமிஷன் தொகை கை விட்டுப்போகிறதே என்ற வயத்தெரிச்சல் தான்! 2,427 கோடி ரூபாய் திட்டம் ஆச்சே சுளையாக ஒரு தொகை கமிஷனாக வருவது போனால் சும்ம இருக்க முடியுமா!
சேது கால்வாய் திட்டம் பற்றிக்கவலைப்படுவதானால் அதன் பொருளாத லாபம் ஈட்டும் தன்மை குறித்தும் , சுற்று சூழல் பாதிப்பு அதிகம் ஆகாமல் இருப்பது குறித்து மட்டும் தான் இருக்க வேண்டும்.
இக்கால்வாய் மூலம் வருமானம் வரும் வாய்ப்பு அத்தனை பிரகாசமாக இல்லை எனதிட்டத்திற்கு நிதி திரட்டும் ஆக்சிஸ்(uti bank) வங்கியின் சேர்மன் பேட்டி அளித்துள்ளார். இது மிகவும் முக்கியமானது. லாபம் ஈட்டும் வாய்ப்பினை பெருக்க திட்டம் தீட்ட வேண்டும்.