Tuesday, November 06, 2007

வளைவுகள் ஜாக்கிரதை-1

கடந்தப்பதிவில் வளைவுகளில் ஒரு நான்கு சக்கர வாகனத்தின் உள், வெளிப்புற சக்கரங்களின் பயண தூரம் வேறுபடுவதால் வேகம் மாறுபடுகிறது என்பதைப்பார்த்தோம். இப்பொழுது எப்படி ஒரு மாறு பட்ட வேகத்தினை சக்கரங்களுக்கு அளிக்க முடிகிறது என்பதைப்பார்ப்போம்.

ஒரு 4 சக்கர மோட்டார் வாகனத்தின் செலுத்தும் சக்கரங்கள் கொண்ட அச்சு வெளியில் பார்ப்பதற்கு ஒரே அச்சு போல தெரிந்தாலும், உட்புறம் இடம், வலது என்று இரண்டு அச்சுகள் இருக்கும். இந்த இரண்டு அச்சுக்களின் மையத்தில் செலுத்தும் தண்டுடன்((driver shaft) இணைத்து சுழல வைக்க ஒரு மாறு படு பல்லிணை சக்கர அமைப்பு (differential gear) இருக்கும்.

"differential gear" படம்.

எஞ்சினில் இருந்து வரும் செலுத்து தண்டு ஒரு வளைய பல்லிணைசக்கரத்துடன் பொருந்தி இருக்கும், இது பெரியதாக இரண்டு அச்சுக்களின் முனையில் இருக்கும் பல்லிணை விட பெரியதாக இருக்கும் வளையச்சக்கரம் பிளானட்டரி வகை கியர் ஆகும், இதனுள் மற்றொரு சிறிய கியர் ஒரே பொது அச்சில் சுழலும் வண்ணம் இருக்கும். வழக்கமாக ஒரு கியர் ,மற்றொன்றுடன் வெளிப்புறமாக பொருந்தி சுழலும், ஆனால் பிளானட்டரி என்றால் உட்புறமாக ஒரே பொது அச்சில் இணைந்து சுழலும் என்ற அளவில் புரிந்துக்கொள்ளுங்கள் அது போதும். இந்தமைப்பில் வெளிப்புற வளைய பல்லிணை பெரிதாகவும், உள்ளே இருப்பது சிறிதாகவும் இருக்கும்.

இப்போது வலப்புற அச்சினை A எனவும் அதன் வேகம் 1 அலகு எனவும் வைத்துக்கொள்வோம்.

அதே போல இடப்புற அச்சினை B எனவும், அதன் வேகமும் 1 அலகு என வைத்துக்கொள்வோம்.

இந்த இரண்டு அச்சுடன் இணைந்த பிளானட்டரி வகை வளையப்பல்லினை சக்கரம் , எஞ்சினின் செலுத்தும் தண்டுடன் இணைந்து இருக்கும். இப்போது இந்த பிளானட்டரி கியரின் வேகம் 2 அலகு ஆக இருப்பது போல வடிவமைத்து இருப்பார்கள்.மேலும் இந்த பிளானட்டரி கியருடன் ஒரே பொது அச்சில் இணைந்த ஒரு மற்றொரு சிறிய பல்லிணை இருக்கும் எனப்பார்த்தோம் அதன் வேகம் 1 அலகு இருப்பது போலவே வடிவமைத்து இருப்பார்கள். அதன் மூலமே வழக்கமாக வாகனம் இயங்கும் போது எஞ்சினின் சக்தி இரண்டு சக்கரத்திற்கும் செலுத்தப்படும்.

தெளிவாக சொல்லவில்லை என்ற பொழுதும் இப்பொழுது ஓரளவு ஒரு டிபரெண்ஷியல் கியர் எப்படி இருக்கும் என்ற ஒரு புரிதல் கிடைத்து இருக்கும்.

டிபரென்ஷியல் இயங்கும் விதத்தினைப்புரிந்து கொள்ள முதலில் கிளட்ச் எப்படி செயல்படுகிறது எனதெரிய வேண்டும்.

கிளட்ச் என்ற பெயரினை அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள், எஞ்சின் சக்கரங்களுக்கு செலுத்தும் சக்தியை தற்காலிகமாக விடுவிக்க, மீண்டும் வழங்க எனப்பயன் படுவது.இது உராய்வு மூலம் செயல் படும் அமைப்பு, எஞ்சினில் இருந்து வரும் கிராங்க் ஷாப்ட், நேரடியாக கியர் உடன் இணைந்து இருக்காது கிளட்ச் வழியாக தான் இணைந்து இருக்கும் .திடிரென்று பிரேக் போடுகிறோம் சக்கரம் சுழல்வது நின்று விடுகிறது , ஆனால் எஞ்சின் நிற்காது , ஏன் ? அப்படி நிற்கவிலலை எனில் எஞ்சின் சேதம் ஆகிவிடும். எனவே தான் கிளட்ச் பயன் படுத்தப்படுகிறது.

இதில் இரண்டு சொரசொரப்பான தகடுகள் ஒன்றோடு ஒன்று அழுத்தமாக பொருந்தி இருக்கும் , அதன் மூலம் ஒன்றாக இணைந்து சுழலும், அதன் பிடிமானத்தை விட அதிகம் அழுத்தம் தரப்பட்டால் ஒரு முனை விடுப்பட்டு சுழலாமல் நிற்கும், மறு முனை மட்டும் சுழலும்.

சரி இதை எதற்கு இப்போது சொல்லி குழப்ப வேண்டும் என்று முறைக்காதீர்கள், கிளட்ச் போன்ற ஒரு அமைப்பும் , இந்த டிபரன்ஷியல் கியர் உள்ளே இருக்கும்.இதில் ஹைட்ராலிக், காற்று, மெக்கானிக்கல் என பல வகை டிபரென்ஷியல் கிளட்ச்கள் உள்ளது.

வாகனம் நேராக செல்லும் போது பிளானட்டரி கியரில் உள்ள ஒரு அலகு வேகத்தில் உள்ள கியர் மூலம் மட்டும் இரண்டு அச்சுகளும் இயங்கும். ஏதேனும் ஒரு அச்சில் அதிக அழுத்தம் வந்து கிளட்ச் அமைப்பு போன்ற விடுவிக்கும் அமைப்பால் ஒரு அச்சு சுழலாமல் நின்றால் அப்பொழுது பிளானட்டரி கியரில் உள்ள இரண்டு அலகு வேகத்தில் இயங்கும் கியர் தானே இயங்க ஆரம்ப்பிக்கும்,அதன் மூலம் , மற்றொரு அச்சு செலுத்தப்படும்.சக்கரங்களில் ஏற்படும் அழுத்தத்திற்கு ஏற்ப " lock & unlock " ஆகிக்கொள்ளும்.

இப்போது , வலப்புறமாக வாகனம் திரும்ப்புகிறது. என வைத்துக்கொள்வோம், உட்புற சக்கரம் குறைவான தூரம் செல்லும், திரும்பும் போது ஏற்படும் அழுத்தம் உட்புற சக்கரத்தில் அதிகமாக இருக்கும், எனவே அதன் காரணமாக வலப்புற அச்சுடன் இணைந்த டிபரென்ஷியல் கியரில் அழுத்தம் உணரப்படும் , ஏற்கனவே கிளட்ச் போன்ற அமைப்பு உள்ளது என்று பார்த்துள்ளோம் அதன் காரணமாக வலப்புற அச்சு சுழலாமல் விடுபடும், அதே நேரம் பிளானட்டரி கியரில் உள்ள 2 அலகு வேகத்தில் சுழலக்கூடிய பல்லிணை சக்கரம் மட்டும் இயங்கும் வண்ணம் இப்போது மாறிவிடும், எனவே அதனுடன் இணைந்த இடப்புற அச்சு இரண்டு மடங்கு வேகத்துடன் சுழலும். எனவே வளைவில் அதிக தூரம் கடக்க ஒரே நேரத்தில் இயலும்.

எளிய உதாரணத்திற்காக ஒரு அலகு வேகம் , இரண்டு அலகு வேகம் என சொல்லப்பட்டுள்ளது.

ரொம்ப சிக்கலாக தோன்றும் இந்த அமைப்பு தேவையா? என்று தோன்றலாம்.

இப்போது ஒரே முழு அச்சாக வைத்து இயக்கும் போது , வளைவில் ஒரு சக்கரம் சுழலவில்லை எனில் அடுத்த சக்கரமும் சுழலாது இழுபடும் இதனால் வாகனம் நிலை குலையும். சமயத்தில் கவிழவும் நேரலாம்.

வளைவில் சக்கரங்கள் சுழல வேண்டும் , சுழலாமல் இழுபட்டால் வாகனம் நிலை தடுமாறி , விபத்து ஏற்படும், அவ்வாறு சக்கரம் சுழலாமல் இழுபடுவதை தடுக்க தான் ABS , Anti Brake lock system என்ற ஒன்றினை நவீன வகைக்கார்களில் வைத்துள்ளார்கள்.வளைவில் பிரேக் போட்டு சக்கரம் இழுபட்டாலோ, அல்லது தானாகவே சக்கரங்களில் அழுத்தம் ஏற்பட்டு இழுபட்டாலோ மின்னனு கருவி மூலம் உணர்ந்து , டிபரென்ஷியல் கியரில் உள்ள கிளட்ச் அமைப்பு தானாகவே விடு பட்டு விடும். சக்கரங்களும் சுழலும்.

பொதுவாக வாகனங்கள் குறைவான டர்னிங் ரேடியஸ் பெற்றதாக இருக்க வேண்டும், பல வாகனத்தயாரிப்பாளர்களும் அவர்கள் வாகனம் தான் குறைவானது என்று சொல்லிக்கொள்வார்கள்,எல்லா வாகனத்திலும் ஒரே போல ஸ்டியரிங்க் தானே எப்படி வளைவு தூரம் மாறும் என்றால், இந்த டிபரென்ஷியலின் திறனைப்பொருத்தும் வளைவு தூரம் மாறும், நன்கு வடிவமைக்கப்பட்ட டிபரென்ஷியல், ஸ்டியரிங்க் இருந்தால் குறைவான தூரத்திலேயே வளைத்து ஓட்டலாம்.

k= 1+T/R

K= turning radious,and track width,
T= constant
R= velocity of the inner wheel

இந்த சூத்திரத்தின் மூலம் ஒரு கார் வளைய எவ்வளவு இடம் தேவை எனக்கணக்கிடலாம்.

சரி வளைவுகள் ஜாக்கிரதைனு சொன்னது எதற்கு என்று புரியவில்லையா, வளைவுகளில் திரும்பும் போது வேகம் குறைக்க பிரேக் போடக்கூடாது, கியர் மாற்றித்தான் வேகம் குறைக்க வேண்டும், இல்லை எனில் "skid" ஆகிப்பக்கத்தில் உள்ள கார் மீது மோத வேண்டியது வரும்! வளைவில் சக்கரம் சுழலாமல் போய்விடக்கூடாது என்று டிப்பரென்ஷியல், ABS, எல்லாம் வைத்துக் கார் தயாரிக்கிறார்கள், நாம் பிரேக் போட்டு காரியத்தைக்கெடுக்க கூடாதல்லவா? எனவே தான் வளைவுகள் ஜாக்கிரதை!

கடிகாரச்சுற்று!

சென்றப்பதிவில் (வளைவுகள் ஜாக்கிரதை) புருனோ, வற்றிராயிருப்பு சுந்தர் ஆகியோர் கடிகாரச்சுற்றினைப்பற்றி பேசினார்கள், அதன் மீதான மேலும் ஒரு சிறிய விளக்கம் அளிக்கவே இப்பதிவு!

கடிகாரச்சுற்று என்பது ஒரு கடிகாரத்தின் முற்கள் இயங்கும் வட்டப்பாதையை குறிப்பது, இதனை நேர் சுற்று என்பார்கள். கடிகாரங்கள் எல்லாம் அப்படி இயங்குவதால் அதனை இயற்கையான ஒன்றாகவும் , அதற்கு எதிரானதை இயல்புக்கு விரோதமாகவும் சொல்ல ஆரம்பித்தார்களா? ஆனால் உண்மையில் இயற்கை எனப்பார்த்தால் உலகம் தன்னை தானே எதிர் கடிகாரச்சுற்றில் தான் சுழலுகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழலும், எனவே தான் சூரிய்யன் கிழக்கில் உதிப்பதாக தெரிகிறது. அப்படிப்பார்த்தால் அது தானே இயற்கை.

கோயில்களில் கூட கடிகாரச்சுற்றில் தான் வலம் வர வேண்டும். சிதைக்கு தீ மூட்டும் போது மட்டும் அப்பிரதட்சணமாக (எதிராக) சுற்றி வந்து தீ மூட்ட வேண்டும் என்பார்கள்.

கடிகார சுழற்சியை நம்பும் மனிதன் பூமியின் சுழற்சியை நம்பாதது ஏன்?


கடிகாரம் அப்படி சுற்றும் படி அமைத்தது மனிதனின் தற்செயலான கவனக்குறைவான கண்டு பிடிப்பே என்பது எனது கருத்து.படத்தில் பார்த்தால் எப்படி செலுத்தும் சக்கரத்தின் திசை , கடிகார முட்களுக்கு வரும் போது மாறுகிறது என்பது புரியும்.

ஒரு பல்லிணைச்சக்கரத்துடன் இணைந்த மற்றொரு பல்லிணை சக்கரம் , முதல் சக்கரத்திற்கு எதிராக சுற்றும். அதாவது செலுத்தும் சக்கரம் சுழலுவதற்கு எதிராக சுற்றும் செலுத்தப்படும் சக்கரம், அதே திசையில் இயங்க வைக்க மூன்றாவது ஒரு பல்லிணை சக்கரம் தேவைப்படும். கடிகாரத்தை கண்டு பிடித்தக்காலத்தில் இதனை கவனத்தில் வைக்க தவறிவிட்டார்கள். உண்மையில் கடிகாரத்தின் ஆதார செலுத்தும் விசை சக்கரம் கடிகார எதிர் சுற்றில் தான் சுழலும்.

நமது பூமியை விண் வெளியில் இருந்து வட துருவம் வழியாக பார்த்தால் எதிர் கடிகார சுற்றாகவும், தென் துருவம் வழியாக பார்த்தால் கடிகார சுற்றாகவும் சுழல்வதைக்காணலாம், காரணம் வட துருவம் என்பது மேல் புறமாகவும், தென் துருவம் கீழ்புறமாகவும் இருப்பதால்( சூரிய மண்டல தளத்தை ஆதாரமாக கொண்டு)பூமியில் இருப்பவர்களால் அதனைப்பார்க்க முடியாது , சாட்டிலைட் மூலம் தான் காணலாம்.

Sunday, November 04, 2007

வளைவுகள் ஜாக்கிரதை!


படத்தில் இருப்பது ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு வட்டப்பாதையில் பயணிக்கும் போது ஏற்படுத்திய தடம், இதில் வளைவான பாதையில் ஒரு 4 சக்கர வாகனம் பயணிக்கும் போது ஒரு உள்வட்டம், ஒரு வெளி வட்டம் என உருவாக்குவது தெரிகிறது. உள்வட்டத்தின் ஆரம் குறைவு , எனவே அதன் சுற்றளவும் குறைவாக இருக்கும், அதே போல வெளி வட்டத்தின் ஆரம் அதிகம் சுற்றளவும் அதிகம், என்பது பொதுவாக அனைவருக்கும் தெரியும்.

இவ்வட்டத்தை வைத்து பார்க்கும் போது ஒன்று தெரிய வரும் ,ஒரு வாகனம் வளைந்தபாதையில் பயணிக்கையில் ,ஒரே சீரான வேகத்தில் செல்லும் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் உள்ள உட்புறமாக இருக்கும் சக்கரங்கள் குறைந்ததூரமும் , வெளிப்புறமாக வரும் சக்கரங்கள் அதிக தூரமும் கடக்க வேண்டும். ஆனால் வாகனம் ஒரே சீரான வேகத்தில் பயணிக்கும்! எஞ்சினின் வேகம் ஒரே சீராக இருக்கும், வாகனத்தின் இரு சக்கரங்கள் மட்டும் வேறு வேறு தூரம் கடக்கும், எப்படி அது சாத்தியம் ஆகும்?

இதற்கான விடையை சொல்லுங்கள் விளக்கம் தருகிறேன்!

இப்படி ஒரு மெக்கானிசம் இல்லை எனில் ஒரு நான்கு சக்கர வாகனத்தை வளைவான பாதையிலோ, அல்லது "U" வளைவு அடிப்பதோ சாத்தியப்படாது , பெயரை மட்டும் சொல்லுங்கள்(கூகிள் இருக்கும் போது என்ன கவலை) மேல் விவரங்களை நான் தருகிறேன்!

பின் குறிப்பு:
சர்வேசன் கியர் பற்றியும் சொல்லுங்கள் என்றார், அதான் கியர்களின் பயன்பாட்டில் சுவாரசியமான ஒன்றை வைத்து ஆரம்பித்துள்ளேன், (கியர்=தமிழில் பல்லிணை சக்கரம்) இதுவே ஒரு பெரிய "குளூ"(அதி மேதாவிகள் இதெல்லாம் ஒரு கேள்வியானு கேட்கக்கூடாது :-)) )

இதன் தொடர்ச்சி :

வளைவுகள் ஜாக்கிரதை-1

காணலாம்.