Tuesday, May 29, 2012

மாற்று எரிபொருள்-பயோ டீசல்(bio diesel)

(பட உதவி "தி இந்து",நன்றி)


ஏற்கனவே பெட்ரோல் விலையை வெற்றிகரமாக ஏற்றி மக்களுக்கு "பேரின்ப அதிர்ச்சி" கொடுத்த மத்திய அரசு இப்போ அடுத்து டீசல் விலையையும் ஏற்றலாமா என தீவிர சதியாலோசனையில் ஈடுப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

வழக்கமாக கச்சா எண்ணை சர்வதேச சந்தையில் விலை ஏறியதால் உள்நாட்டில் விலையேற்றம் என சொல்லும் அரசு இம்முறை அன்னிய செலவாணி பரிமாற்ற விகிதத்தில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது ,எனவே டாலர் வாங்க கூடுதல் பணம் செலவாகிறது எனவே நட்டம் அதை தவிர்க்கவே விலையேற்றம் என ஒரு காரணத்தினை சொல்லியுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவும் ,அதன் விளைவாக பெட்ரோல்,தங்கம் விலை ஏறும் என பெட்ரோல் விலையேற்றத்திற்கு முன்னரே ஒரு பதிவாக போட்டுள்ளேன்,அதனை இங்கு காணலாம்.


அப்பதிவில் சொன்னது தான்,மீண்டும் ஒரு முறை இங்கே,

ஒரு பொருளை இறக்குமதி செய்ய அதிக அன்னிய செலவாணிக்கு தேவை இருக்கும் நிலையில் ,அன்னிய செல்வாணிக்கு எதிராக ரூபாய் சரியும் போது, அதிகம் விலைக்கொடுக்க வேண்டும், எனவே அன்னிய செலவாணியின் அளவை குறைக்க அது கொண்டு வாங்கும் பொருளின் அளவை குறைக்க வேண்டும், நேரடியாக இறக்குமதி அளவைக்குறைக்காமல் மக்களின் நுகர்வை குறைக்க செய்ய ஒரு எளிய வழி விலையேற்றம் அல்லது இறக்குமதியின் மீது அதிக வரி விதிப்பது ஆகும்.

சந்தையில் ஒரு பொருளின் டிமாண்ட் & சப்ளை நெகிழ்வுடன் (எலாஸ்டிக்) இருக்கும் எனில் விலை உயர்ந்தால் மக்கள் தாங்களாக நுகர்வை குறைப்பார்கள், எனவே இறக்குமதி குறையும், அதனால் டாலர் தேவை குறையும். இதனை மார்ஷல்-லென்னர் தியரி அடிப்படையில் செய்கிறார்கள்.

ஆனால் இந்தியாவைப்பொறுத்த வரையில் என்ன தான் விலை ஏறினாலும் நாம் பெட்ரோல் பயன்ப்பாட்டினை குறைப்பதில்லை, தங்கம் வாங்குவதையும் நிறுத்துவதில்லை, எனவே சப்ளை& டிமாண்ட் நெகிழ்வற்றது( இன் எலாஸ்டிக்).எனவே மார்ஷல்-லென்னர் தியரி அடிப்பட்டு விடும்.

ஆனாலும் மத்திய அரசு விலை ஏற்றினால் தேவை குறையும் ,மேலும் நட்டம் குறையும் என பிடிவாதமாக ஏற்றியது.அப்படியும் தேவை குறைவது போல தெரியவில்லை,எனவே எண்ணை நிறுவனங்களே சப்ளையை குறைக்க முடிவு செய்து விட்டது ,எனவே தான் தற்போது பெட்ரோல்/டீசல் இல்லை என பங்குகள் மூடப்பட்டு கிடக்கின்றன.பெரும்பாலான இடங்களில் தட்டுப்பாடாகவும் இருக்கிறது.

உண்மையில் அரசுக்கோ எண்ணை நிறுவனங்களுக்கோ அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விகிதத்தில் பெரிய நட்டம் வருவதில்லை என்பதே உண்மை,ஆனால் அப்படி சொல்லி விலையேற்ற வழிக்காண்கிறார்கள் எனலாம், எப்படி எனில்,

டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்தது போல ,உலக அளவிலும் உயர்ந்தே வருகிறது,எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும்,இதனால் முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணை 100 டாலருக்கு விற்றது எனில், டாலர் உயர்வுக்கு ஏற்ப குறைந்து 90 டாலர்கள் என்பது போல குறைவான விலையிலே விற்பனை ஆகும்.

அதாவது வழக்கமாகவே டாலரின் மதிப்பு சரிந்தால் கச்சா எண்ணையின் விலை ஏறும், டாலர் உயர்ந்தால் கச்சா விலை குறையும்.

எனவே தற்போது நாம் வாங்கும் கச்சாவுக்கு கொடுக்கும் டாலரின் அளவுகுறைந்து விடுவதால், கூடுதலாக உயர்ந்த டாலரின் மதிப்பு சரி செய்யப்பட்டு விடும். எனவே பெரும்பாலும் எண்ணை நிறுவனத்திற்கு நட்டம் வராது, அல்லது மிகச்சிறிய அளவில் இருக்கலாம். அதனை விலையேற்றாமல்லே சமாளிக்க முடியும்.ஆனால் எப்போது விலை ஏற்றலாம் என ஏங்கிக்கொண்டு இருக்கும் எண்ணை நிறுவனங்கள் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் விலை ஏற்றி மக்களோடு விளையாட ஆரம்பித்து விட்டன.

பெட்ரோல் விலை உயர்வுக்கான உண்மைக்காரணம் முன்னர் 2011 டிசம்பரில் போட்டப்பதிவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது,


விரைவில் டீசல் விலையும் ஏறும் என்ற நிலையில் , அப்படி விலை ஏற்றினால் நமக்கு நாமே ஒரு மாற்று எரிப்பொருளை உருவாக்கிக்கொள்ள முடிந்தால் கவலை இல்லை அல்லவா, எனவே வீட்டிலேயே ஒரு வாகன எரிபொருள் இருப்பதையும் அதைப்பயன்ப்படுத்துவது எப்படி என்பதையும் சொல்லவே இப்பதிவு.

ஹி..ஹி இதைப்படிச்சுட்டு எல்லாம் வீட்டுக்கு வீடு
மூலிகைப்பெட்ரோல் விஞ்ஞானினு கிளம்பிடாதிங்க, இதெல்லாம் உலகம் அறிஞ்ச ரகசியம் :-))

வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிப்பொருளை கனிம எண்ணை(mineral oil) என்பார்கள், சமையலுக்கு பயன்ப்படுத்தும் எண்ணை தாவர எண்ணை (veg oil)ஆகும். கனிம எண்ணையை சமைக்க பயன்ப்படுத்த முடியாது.ஆனால் தாவர எண்ணையை வாகனத்திற்கு பயன்ப்படுத்த முடியும்.

சுத்தமான தாவர எண்ணை;

எந்த ஒரு சுத்தமான தாவர எண்ணையையும் எவ்வித மாற்றமும் செய்யாமல் நேரடியாக டீசல் வாகனங்களில் பயன்ப்படுத்த முடியும்,அல்லது டீசலுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தும் பயன்ப்படுத்த முடியும், அதனை பயோ டீசல் என்பார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பி-80 என்றப்பெயரில் விற்பது 20% தாவர எண்ணை கலந்த டீசல் ஆகும், அதே போல எத்தனால் கலந்தும் விற்கிறார்கள் சதவீதத்திற்கு ஏற்ப ஈ-85 என்பது போல விற்கிறார்கள்.

100% எத்தனால் அல்லது மெத்தனால் கொண்டும் வாகனங்களை இயக்க முடியும்.நாம் நாட்டில் குடிக்கமட்டுமே பயன்ப்படுகிறது, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் பெருமளவில் வாகன எரிபொருளாக பயன்ப்படுகிறது.



அதிக சர்க்கரை ஆலைகள் கொண்ட நம் நாட்டில் மொலாசஸ் அதிகம் கிடைக்கும் இதனை எத்தனாலாகவோ மெத்தனாலாகவோ மாற்றினால் நிறைய அன்னிய செலவாணி மிச்சம் செய்யலாம்.ஆனால் அரசு அதனை செய்யாமல் இறக்குமதி, விலை ஏற்றம் என்ற பழைய பஞ்சாங்கமே பாடிக்கொண்டிருப்பதன் ரகசியம் என்னவோ?


இந்தியாவில் பயோ டீசல் திட்டம் தோல்வியடைந்து விட்டது என சொல்லி அரசே ஊத்தி மூடிவிட்டது.

சுத்தமான தாவர எண்ணையை எதனுடனும் கலக்காமல் வாகனத்தில் பயன்ப்படுத்த முடியும், ஆனால் ஸ்டார்ட்டிங்க் பிரச்சினை, நாசில் அடைத்துக்கொள்வது, குளிர்காலத்தில் எண்ணை கெட்டியாகிவிடுவது போன்ற பிறச்சினை வரும்.

இதனையும் தவிர்க்க வாகனத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும், தாவர எண்ணைக்கு ஏற்ப நாசில், எண்ணை பில்டர், கூடுதல் திறன் உள்ள இக்னிஷன் காயில் ஆகியவை பொறுத்த வேண்டும்.கொஞ்சம் செலவு பிடிக்கும் வேலை.

இதனை தவிர்க்க இரட்டை டேங்க் முறைப்பயன்ப்படுகிறது.இம்முறையில் ஒரு டேங்கில் டீசலும்,இன்னொரு டேங்கில் தாவர எண்ணையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். முதலில் சிறிது நேரம் டீசலில் ஓட்டி எஞ்சின் சிலிண்டரை சூடாக்க வேண்டும், அதே நேரம் தாவர எண்ணையும் சைலண்சரின் வெப்பத்தின் மூலம் சூடாகும் படியாக தாவர எண்ணை டேங்க் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்பொழுது டீசல் டேங்கில் இருந்து எரிப்பொருள் செல்வதை அடைத்துவிட்டு தாவர எண்ணை டேங்கில் இருந்து வருமாறு மாற்றிவிட வேண்டும். மேலும் எஞ்சினை நிறுத்தும் முன்னர் சிறிது நேரம் டீசலில் ஓட விட்டு பின்னர் நிறுத்த வேண்டும்,அப்போது தான் மீண்டும் வாகனம் எளிதில் கிளம்பும்.

இன்னொரு முறையில் தாவர எண்னையை மட்டுமே பயன்ப்படுத்தலாம், டீசல் தேவையே இல்லை. ஆனால் அதற்கு தாவர எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் (transestrification)செய்ய வேண்டும். கொஞ்சம் கவனமாக செய்தால் அனைவரும் அவர்கள் கார் ஷெட்டிலேயே எரிப்பொருளை தயாரிக்க முடியும். வெளிநாடுகளில் பலரும் இப்படி செய்கிறார்கள்.

இம்முறைக்கு சுத்தமான தாவர எண்ணை pure veg oil)அல்லது ஏற்கனவே சமைக்கப்பட்ட எண்ணை (waste veg oil)என எதை வேண்டுமானாலும் பயன்ப்படுத்தலாம்.

சமைக்கப்பட்ட எண்ணை எனில், செலவு மிச்சம் ஆகும் சில உணவங்களை அணுகி சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையை இலவசமாக கேட்டுப்பெறலாம்.வெளிநாடுகளில் பல முறை ஒரே எண்ணையில் சமைக்க தடை எல்லாம் இருப்பதால் கொடுப்பார்கள், நம்ம ஊரில் எண்ணை சட்டி வறண்டு போகும் வரை விடாமல் சமைக்கப்பயன்ப்படுத்துவார்களே :-))

ஆனால் நட்சத்திர உணவகம்,சில தரமான உணவங்களில் மீண்டும் எண்ணைப்பயன்ப்படுத்தாமல் கழிவாக வீணாக்கலாம்,அவர்களிடம் கேட்டுப்பெறலாம் என நினைக்கிறேன்.

அப்படி சமைத்து முடிக்கப்பட்ட எண்ணையை ஒரு கலனில் ஊற்றி சில நாட்கள் அப்படியே வைத்தால் வண்டல் எல்லாம் அடியில் படிந்துவிடும் ,பின்னர் மேலாக உள்ள எண்ணையை மட்டும் எடுத்து நன்கு வடிக்கட்ட வேண்டும், அப்போது தான் உணவுத்துணுக்குகள் நீக்க முடியும்.

இப்போது அடிப்படையான எண்ணை கிடைத்து விட்டது ,

மேலும் தேவையான பொருட்கள்,

சோடியம் ஹைட்ராக்ஸைடு, (Naoh)
சிங்க்,வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் நீக்கப்பயன்படும் ரசாயனமே சோடியம் ஹைட்ராக்சைடு அதனைக்கடையில் வாங்கிப்பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.



மெதனால் எனப்படும் மீதைல் ஆல்ஹகால்.(methanol-ch3oh)


தேவையான அளவில் சில கண்ணாடிகுவளைகள், வடிக்கட்டி, கலன்கள்,டிரம்,

கலக்கி விட சமையலுக்கு பயன்ப்படும் பீட்டர் ,அல்லது கையால் விடாமல் கலக்க முடியும் எனில் மரத்தால் ஆன ஒரு கலக்கி.

செய்முறை:

முதலில் எண்ணையை 120 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சூடாக்க வேண்டும். நம் நாட்டில் ந்ல்ல வெயில் அடிப்பதால் வெயிலில் வைத்து சில மணி நேரங்கள் வைத்து கலக்கிவிட்டாலும் போதும்.

இது எதற்கு எனில் சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையில் நீர் அல்லது ஈரப்பதம் இருக்கும் அதனை நீக்கவே.ஈரப்பதமான எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் செய்தால் எரிப்பொருளுக்கு பதில் சோப் கிடைத்துவிடும்.இதற்கு சோப்பானிபிகேஷன்(saponification) என்று பெயர்.

செய்முறை மாதிரிக்கு இப்போது ஒரு லிட்டர் எண்ணை என வைத்துக்கொள்வோம்.

ஒரு லிட்டர் எண்ணைக்கு 200 மி.லி மெத்தனால், 6.5 அவுன்ஸ் சோடியம் ஹைட்ராக்சைடு தேவை.

முதலில் 200 மி.லி மெத்தானாலை ஒரு கண்ணாடி குவளையில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது சிறிதாக சோடியம் ஹைட்ராக்சைடு பவுடரை கொட்டி கலக்க வேண்டும்.இவ்வேதி வினை ஒரு வெப்ப உமிழ்வு (exothermic)வினையாகும் எனவே சிறிய அளவிலேயே கலக்க வேண்டும். முடிவில் மெத்தாக்சைடு (methoxide)கிடைக்கும்.

இப்படிக்கலக்கும் போது உடலில் பட்டு விடாமல் கவனம் தேவை மேலும் வெளிவரும் புகையினை சுவாசிக்காமல் இருக்க முகத்தில் முகமூடி போல கட்டிக்கொள்ளவும் வேண்டும்.

இப்போது மீத்தாக்சைடை ஒரு லிட்டர் எண்ணை உள்ள குவளையில் கொட்டி நன்கு கலக்க வேண்டும், இப்படி சுமார் 30 நிமிடம் செய்ய வேண்டும், எனவே தான் பீட்டர் பயன்ப்படும் என்றேன்.

எண்ணையில் ஃப்ரி பேட்டி ஆசிட்(free fatty acid) உள்ளது அவை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் மூலம் esters of fatty acid ஆகவும், கிளைசெரால் (glycerol)என்ற உப பொருளாகவும் மாறும்.



கலக்கி முடித்து வினை முழுமை அடைந்ததும் குவலையை சில மணிநேரங்கள் அப்படியே வைத்திருந்தால் போதும் கிளைசெரால் அடியில் படிந்துவிடும், பின்னர் மேல்மட்டத்தில் உள்ள பயோ டீசலை உறிஞ்சு குழல் (syphon)முறையில் தனியாக பிரித்து எடுத்தால் வாகனத்திற்கு பயோ டீசல் தயார்.

இதே முறையை சுத்தமான தாவர எண்ணைக்கும் பயன்ப்படுத்தலாம், அதில் வடிக்கட்டுவது,சூடாக்கி ஈரப்பதம் நீக்குவது எல்லாம் செய்யாமல் நேரடியாக தயாரிக்கலாம் என்பது கூடுதல் வசதி.

வீட்டில் பயோ டீசல் தயாரிக்கும் அமைப்பின் படம்:

விலை அதிகமான சுத்தமான தாவர எண்ணையைப்பயன்ப்படுத்த தேவையில்லை, ஆமணக்கு, கடுகு எண்ணை என மலிவான எண்ணைகளே பெரும்பாலும் பயன்ப்படுத்தப்படுகிறது.

இந்த பயோடீசலை நேரடியாகவும் வாகனத்தில் பயன்ப்படுத்தலாம் அல்லது டீசலுடன் கலந்தும் பயன்ப்படுத்தலாம்.

இம்முறையில் உள்ள ஒரு சிக்கல் என்ன வெனில் 10 நாட்கள் வரைக்கும் பயோ டீசல் முழுத்திறனுடன் இருக்கும், பின்னர் படிப்படியாக திறன் குறைந்து 60 நாட்களுக்கு பின் எரிப்பொருள் திறனை இழந்துவிடும். எனவே பெரிய அளவில் தயாரித்து சேமிப்பது சிரமம்.

ஆனால் வீட்டில் வார இறுதியில் தயாரித்து தினசரிப்பயன்படுத்திக்கொள்ளலாம்.வெளிநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக பலர் வீடுகளிலே இவ்வாறு செய்கிறார்கள் அவர்களுக்கு இதெல்லாம் சிரமமே இல்லை ஏன் எனில் பலரும் அவர்கள் வாகனத்தினை அவர்களே பழுதுப்பார்க்கும் அளவுக்கு தேர்ச்சியுடன் இருக்கிறார்கள்,நம்ம ஊரில் தான் கார் டயர் மாட்டக்கூட மெக்கானிக் தேடுவோம்.

----------
பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள்,விக்கி, இணைய தளங்கள், நன்றி!


*****