என்ன கொடுமை சார் இது-4
மங்குனி உத்திரம்:
பங்குனி வெயில் பல்லைக்காட்டுது இதுல ஆறுமுகனுக்கு அரோகரானு ஒரு கோஷ்டி பால் காவடி ,பன்னீர் காவடினு தூக்கிக்கிட்டு ஜிங்கு ஜிங்குனு ஆடிக்கிட்டு போகுதுங்க ,கேட்டா பங்குனி உத்திரமாம், எனக்கு தெரிஞ்சு உத்திரம்னா ஓட்டு வீட்டுல நடுவில போடுற மர பீம் இவங்க எங்கே போய் பீம் போட போறாங்களோ :-))
என்னமோ செய்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு 2-3 நாளாவே கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி போட்டு லூர்து மேரி ராஜேஷ்வரி, தொளுகுவா மீனாட்சி சவுந்தர ராஜன் ஆகியோர் பாடிய பக்தி பழரச பாடல்களை உச்சஸ்தாயில அலரவிட்டு என் காது ஜவ்வுல கடப்பாரைய விட்டு ஆட்டிட்டாங்க மை லார்டு முருகா , இதெல்லாம் இல்லைனா நீ அருள் பாலிக்க மாட்டியா ? இதுக்கே மின் வெட்டினால் அவங்க பக்தி சேவை பாதிக்க கூடாதுனு ஜெனெரேட்டர் வேற வச்சு பாட்டுப்போடுறாங்க வேலைய்யா ,இது என்னய்யா நியாயம்.
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி ஒலி மாசு செய்வது என்று தடைசெய்தார்கள்னு சொல்றாங்க ,ஆனால் ஆன்மீக ,அரசியல் கூட்டங்களில் அதான் கிழியுது ,அதுக்கு காவல் துறை பாதுகாப்பு வேற, என்ன தடையோ ,சட்டமோ அது எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.
ஆறுமுகம்னு சொல்றாங்களே அந்த படம் எப்படி இருக்கும்னு தேடிப்பார்க்கலாம்னு தேடினா பாடாவதி சினிமாக்களான சின்ன தளபதி பரத்தின் ஆறுமுகம், குயிக் கன் முருகன், மூலக்கடை முருகன் போன்ற படங்கள் தான் முதலில் வருது. மூலக்கூடை முருகன் படம் பவர் ஸ்டாரோடது ஸ்டில்லே செம டெர்ரரா இருக்குனா படம் எம்புட்டு டெர்ரரா இருக்கும் ,அத பார்க்கிறவன் உசுரோட வருவான்னு நினைக்கிறிங்க :-))
சரி சமாச்சாரத்துக்கு வருவோம், ஆறு தலையோட ஒரு படத்த பார்த்தேன், ஆனால் பாருங்க ஒரு கழுத்து தான் இருக்கு ,அதுக்கு இடப்பக்கம் ரெண்டு தலை, வலப்பக்கம் மூன்று தலை. அடப்பக்தி பதருகளா நடுவில ஒரு தலைய வச்சு ஒரு பக்கம் 2, இன்னொரு பக்கம் 3 வச்ச எப்படியா பேலன்ஸ் ஆவும், ஒரு சைடுக்க இழுக்காதா? வச்சது தான் வச்சிங்க ஒரு 7 தலைய வைக்க என்ன கேடு? , ரெண்டுப்பக்கமும் தலா மூன்று தலைனு பேலன்ஸ் ஆகும்ல :-))
வாரத்துக்கு ஏழு நாள் , அதான் ஏழு தலை எனவே எங்க மதம் அறிவியல் மதம்னு இந்த மதவாதிகள் பதிவு போட உதவி இருக்குமே :-))
எனக்கு தெரிஞ்சது கூட கடவுளை கற்பனை செய்தவங்களுக்கு தெரியலையே என்ன கொடுமை சார் இது!
*****
பாக்தாத் கஃபே:
ஜெர்மனிய ஹாலிவுட் தயாரிப்பு படம் 1987 இல் வந்தது ,ஆஸ்கார் நாமினேஷேன் வரைக்கும் போன ஒரு ஃபீல் குட் படம்.
ஜெர்மானிய சுற்றுலா பயணியான ஒரு பேரிளம் பெண் ஆன் தி வேயில் கணவனுடன் சண்டைப்போட்டுக்கிட்டு , அமெரிக்க மொகாவோ பாலை , சாலை வழிப்பயண சிற்றுண்டி விடுதிக்கு வருகிறார். அந்த சாப்பாட்டுக்கடைப்பேரு தான் பாக்தாத் கஃபே :-))
பாக்தாத் கஃபே ஏற்கனவே நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கு, சரியான பராமரிப்பு இல்லை, போனா போவுதுனு சில பேர் வந்து பீர் ,காபி குடிக்கிறாங்க அத வச்சு கணவனை பிரிந்த ஒரு பெண்மணி ஒரு மகனோடு வாழ்க்கையை ஓட்டுகிறாள்.
இப்படியான சூழலில் அங்கு வரும் கதாநாயகி அங்கே வேலைக்கு சேர்ந்து சுத்தம் செய்து வாடிகையாளர்களை அன்பாக கவனித்து வியாபாரத்தினை பெருக்குகிறாள்.கொஞ்சம் மேஜிக் வித்தையும் தெரியும் என்பதால் அனைவரையும் கவர்கிறாள்.இதுக்கு நடுவே அங்கே வரும் சினிமா செட் ஆர்டிஸ்ட் கு லேசா ஒரு காதல் வருது.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா ஹீரோயின் வயசான பெண்மணி, அதே போல ஆர்டிஸ்டும் தான். அதாவது மெச்சூர்டான லவ்வாம், காதலுக்கு கண்ணு மட்டும் இல்லை வயசும் இல்லைனு இயக்குநர் சொல்ல வரார் :-))
பாலைவனத்துல அழுது வடிஞ்ச சாப்பாட்டுக்கடை திடிர்னு ஜெக ஜோதியா ஜொலிக்குதேனு அந்த ஊர் ஷெரிப் சந்தேகப்பட்டு வந்துப்பார்த்தா ஜெர்மனிய பெண்மணி தான் காரணம்னு தெரியுது. சுற்றுலா விசா தான் வச்சு இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு இன்னும் 24 மணி நேரத்துல நாட்டை விட்டு போகணும், இல்லை நானே நாடு கடத்துவேன் போல ஒரு மிரட்டல் .
நாட்டுக்கு திரும்ப போறதா ,இங்கேயே எப்படி இருப்பதுனு ஒரு குழப்பம்,அப்போ ஆர்டிஸ்ட் ஒரு ஐடியா குடுக்கிறார் ,என்னை கண்ணாலம் கட்டிக்கோ குடியுரிமை கிடைச்சிடும்னு, அப்புறம் என்னாச்சா போங்கப்பா போய் யுடியுப்பில் படம் இருக்கு பாருங்க ,இலவசமா தான்..
இந்த படத்தோட கதைய கேட்டதும் மாதவர் நடிச்ச நள தமயந்திக் கதை நியாபகம் வந்தா அதற்கு அடியேன் பொறுப்பல்ல,எல்லாம் ஒரு ஒத்த சிந்தனையா இருக்கும்னு எடுத்துக்கணும் :-))
இந்த பாக்தாத் கஃபே படம் மெட்ராஸ் கஃபே, மெரினா கஃபே னு இன்னும் பல வடிவம் தமிழில் எடுக்கும்னு தோன்றுகிறது.
டிவிடி, இணைய படங்கள் எல்லாம் தடை செய்துட்டா தமிழ்ல படம் எடுத்துட்டு ஒலகப்படம் எடுத்தேன்னு சொல்லிக்கிறவங்களாம் காணாமல் போய்டுவாங்க :-))
தமிழ் சினிமாவில மட்டும் தான் தமிழ்ல நடிச்சுட்டு "லோக நாயகன்" எனப்பட்டம் போட்டுக்க முடியும், என்ன கொடுமை சார் இது!
*****
மின் வெட்டு அரசியல்:
மின்சாரம் குறித்து பதிவுகள் சில போட்டிருந்தாலும் , இன்னும் சொல்ல நிறைய இருக்கு, மின் வெட்டு அரசியல் பற்றி இன்னொரு பதிவு வரும், அதுக்கு முன்ன ஒரு டீசர் டிரெய்லர் இது :-))
ஒரு பதிவரின் வலைப்பதிவில் மின்வெட்டு அரசியல் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது , இப்போதைய மின் வெட்டுக்கு பெரிய காரணம் கடந்த 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படலை, 2-3 ஆண்டுகளில் புதிய தலைமை செயலகம் கட்ட காட்டிய வேகத்தில் ஒரு 1500 மெ.வாட் மின் திட்டம் கட்ட காட்டியிருக்கலாம்னு சொன்னேன்.
பிரகாசமான அரசியல் எதிர்காலம் உள்ளவரும் ,பிரபல பதிவருமான அண்ணன் எம்.எம்.அப்துல்லா திடிரென பிரசன்னம் ஆகி , இல்லை நிர்வாகம் செய்ய தெரியலை அம்மையாருக்குனு சொன்னார்.
நான்: 2001 -2006 காலத்தில் தமிழகத்தில் மின்சாரம் உபரியாக இருந்தது, ஆனால் 2006-11 காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது அதன் உச்சம் இப்போது எனவே கடந்த 5 ஆண்டுகாலமாக புதிய மின் உற்பத்தி செய்யாததே காரணம் என்றேன்.புள்ளி விவரங்களும் அளித்தேன்.
அதற்கு அப்துல்லா அண்ணன் சொன்னார் பாருங்க ஒரு பதில் அது போல பிரபல அரசியல்வாதிகளால கூட சொல்ல முடியாதுனா பார்த்துக்கோங்க,
2000 க்கு முன்னர் அய்யா காலத்தில போட்ட மின் திட்டங்களால் தான் 2001 -2006 இல் மின் தட்டுப்பாடு இல்லாம இருந்துச்சாம், ஆகா ...ஆகஃக்கா :-))
அப்போ மின் தட்டுப்பாடு இல்லைனா அது அப்போவே அய்யா செய்த சாதனைனு சொல்லிக்கிறார் சரி ஓ.கே வச்சுப்போம், இப்போ மின் தட்டுப்பாடுக்கு காரணம் முந்தைய காலத்தில் எதுவும் செய்யலைனா அப்போ மட்டும் எங்க ஆட்சி காரணம் இல்லைனா எப்படி?
2000க்கு முன்ன 5 ஆண்டுகளில் செய்தார் எனில் ஏன் 2006-11 இல் எதுவும் செய்யலைனு சொன்னா அதையும் ஒத்துக்க வேண்டாமா அப்போ மட்டும் இல்லைனா எப்படி அண்ணே.
எந்தக்காலத்தில் நல்லது நடந்தாலும் அதுக்கு காரணம் நாங்க தான்னு பெருமை தேடும் போது கெட்டது நடந்தா மட்டும் இவங்க தான் காரணம்னு சொல்வது தான் கழக அரசியலா என்ன கொடுமை சார் இது :-))
கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து வாங்கிய மின்சாரத்துக்கு பணம் கொடுக்காமல் உள்ள நிலுவை தொகை மட்டும் சுமார் 10000 கோடி, எனவே இப்போது தேவைக்கு மின்சாரம் வாங்க முடியாமல் 150 மெ.வாட் மட்டுமே வாங்குகிறது மின்வாரியம். மேலும் காற்றாலை மின்சாரம் குறைந்து விட்டதால் மின் தட்டுப்பாடு 4000 மெ.வாட் ஆகும் எனவே அதிக மின்வெட்டு.
கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் மின்சாரம் வாங்கிவிட்டு காசுக்கொடுக்காமல் டபாய்த்தால்,இப்போ மின்சாரம் வாங்க முடியவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி. சுட்டி
மின்சாரக் கடன்
இப்போவும் கையில காசு கொடுத்தா மின்சாரம் கிடைக்கும் ,அரசு என்னமோ அன்னக்காவடிப்போல செயல்ப்படுது, மின்க்கட்டணம் உயர்த்திய பிறகாவது மின் தடை நீங்குதா என பார்ப்போம்.
எனக்கு என்னவோ , மின் கட்டணம் உயர்த்தினா மக்கள் அதிக எதிர்ப்பு காட்டாமல், கூட வேண்டும்னா காசு தரோம் மின்சாரத்தை கொடுங்கனு சொல்ல கூடிய மன நிலைக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகவே கடுமையான மின்வெட்டினை செயல்படுத்தினார்களோ என்று தோன்றுகிறது.
அரசு நினைத்தார் போல தான் இப்போ நடந்திருக்கு, மக்களும் ரொம்ப பெருசா எதிர்ப்பு காட்டவில்லை.இதற்கு பெயர் தான் அரசியல் இராஜ தந்திரமா?
என்ன கொடுமை சார் இது!
---------------
பின்குறிப்பு: படங்கள் ,செய்திகள் உதவி கூகிள்,விக்கி,IMDB,இணைய தளங்கள்,நன்றி!