நமது சரித்திரத்திலும் ,மற்றும் உலக புகழ் பெற்றவர்களையும் நாம் ஒரு பெயரில் அறிந்து வந்திருக்கிறோம் ஆனால் அவர்களுக்கு இன்னொரு பெயர் இருப்பது அவ்வளவாக வெளித்தெரிவதில்லை.(எனக்கு இன்னொரு பேரு இருக்கு "பாட்ஷா"னு ரஜினி சொல்வது போல!)
புகழ்பெற்ற பெயர் - இயற்பெயர்
ஜீசஸ் கிரைஸ்ட் - ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் - காப்பவர் , கிரைஸ்ட் - தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )
பாபர் - ஜாஹிர்ருதின்
ஹிமாயுன் - நஸ்ஸிருதின்
அக்பர் - ஜலாலுதின்
ஜெஹான்கிர் - நூருதின்
ஷா ஜெஹான் - குர்ரம்
அவ்ரங்கசெப் - ஆலம் கிர்
நூர்ஜஹான் - மெஹ்ருன்னிஸா
மும்தாஜ் - பானு பேகம்
ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் - மணிக்கர்னிகா
பூலித்தேவன் - காத்தப்ப துரை
மருது பாண்டி - மருதையன்
வீரபாண்டிய கட்ட பொம்மன் - கருத்தப்பாண்டி
ஊமைத்துரை - சிவத்தையா
தீரன் சின்னமலை - தீர்த்த கிரி
திருப்பூர் குமரன் - குமரேசன்
பாரதியார் - சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)
மருத நாயகம் - கான் சாகிப் யூசுப் கான்
மறைமலை அடிகள் - வேதாச்சலம்
பரிதிமாற்கலைஞர் - சூரிய நாரயண சாஸ்திரிகள்
திரு.வி.க - திருவாரூர் .விருத்தாசலம்.கல்யாண சுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)
கலைஞர் கருணாநிதி - தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)
எம்.ஜி.ராமச்சந்திரன் - ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் - மருதூர், ஜி - கோபால மேனன்)
ஜெ.ஜெயலலிதா - கோமள வல்லி
ரஜினி காந்த் - அனைவருக்கும் தெரியும் "சிவாஜி ராவ் கெயிக்வாட்" என்று ஆனால் அவர் நடத்துனராக வேலை செய்த போது குண்டப்பா என்று செல்லமாக அழைக்கப்பட்டர்!
இப்படி அதிகம் வெளியில் தெரியாத பெயரைக்கேட்டாலே ச்சும்மா அதிருதுல.. ..
Friday, July 06, 2007
சக்ரவர்த்தி அசோகர்!
சந்திரகுப்த மெளரியர்
மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மெளரியர் ஆவார் ,மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு அதன் தலை நகரம் பாடலி புத்திரம், இது தற்போதைய பீகாரின் தலை நகரம், பாட்னா என அழைக்கப்படுகிறது.இவர் இடையர் குலம் , அல்லது சூத்திரர் என சிலர் கூறுவர், மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர் அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர்.காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.
சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார்.தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசி காலத்தில் சமண மத துறவியாகி பெங்களூர் அருகே உள்ள சிரவண பெலகுலாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்கை வாழ்ந்து உயிர் துறந்தார் ,இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது.
பிந்துசாரர்
சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார், பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால் , சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் /மானின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்(பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப்பொருள் படும்).
பிந்து சாரர் திருநெல்வேலி வரைக்கும் படை எடுத்து வந்து வென்றதாக கூறுகிறார்கள்.இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.
பிந்து சாரருக்கு பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.
சக்ரவர்த்தி அசோகர்!(B.c 271 - 232)
அசோகர் பிந்து சாரருக்கும் அவரது பிராமண மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர் , சிலர் அவர் செல்லுகஸ் நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள்.
அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் , சங்கமிதிரையும் ,பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினார்.
கலிங்க போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார், தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார் இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார்.
சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள் , எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார்.
கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸா, மகத நாடு தற்போதையா பிகார்,. கலிங்க நாட்டை ஆட்சி செய்தது கரவேளர்கள் என்ற அரச வம்சம். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை எந்த வரலாற்று நூலிலும்.
கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார் அசோகர். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறி, புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்பார்கள். அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர் , அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார் ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.
அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு அந்த வகையில் ,குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.இதில் குணாளன் அழகு மிகுந்தவர் எனவே அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார், ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பதிற்கு இணங்கவில்லை எனவே வஞ்சகமாக அவரை வெளினாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு வைத்து தனது ஆட்கள் மூலம் கண்களை குருடாக்கி விட்டார் எனவும் ஒரு சில நூல்களில் உள்ளது.
கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்துள்ளார். அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து ,திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார்(இப்படி ஒரு கதையம்சம் கொண்ட சிவாஜிகணேசன் நடித்த படம் கூட உண்டு பெயர் சாரங்கதாரா).
தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் எளிமையாக வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துனபமானதாகவும், தனிமையாவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால், அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டார்.
தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது , பின்னர் ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை மெய்ப்பித்தார் இல்லை எனில் இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்திலேயே சாராநாத் ஸ்தூபி போன்றவை அகழ்வராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது. அது வரையில் அசோகருக்கான வரலாறே இந்தியாவில் இல்லை, வாய்மொழி தகவல்களும், நாட்டுப்புற பாடல்களும் மட்டுமே இருந்தன.
அசோகருக்கு பினனர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படை வீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் மவுரிய அரசர்கள் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்க வம்ச அரசை நிறுவினார். அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
பின் குறிப்பு:-
அசோகர் என்றால் சாலை ஓரங்களில் மரம் நட்டார், குளம் வெட்டினார் , சத்திரம் கட்டினார் என்பது வரைதான் பள்ளிகளில் சொல்கிறார்கள் என்பதால் என்னால் முடிந்த ஒரு சுருக்கமான அசோக சரித்திரம். பிழை இருப்பின் திருத்தம் தரலாம்!
Subscribe to:
Posts (Atom)