செயற்கை கொசுவர்த்தியின் தீமைகளை பார்க்கும் போது அதை விட கொசுக்கடியே மேல் எனத்தோன்றுகிறது.ஆனாலும் கொசு கொடுக்கும் இம்சைக்கு அளவே இல்லை.இயற்கையாக அதை கட்டுப்படுத்த ஏதாவது இருக்கிறதா எனத்தேடியதில் அகப்பட்டது சில இயற்கை வழிகள்.
பல மிக எளிமையான தீங்கற்றவை.
ஒட்டும் கொசுப்பொறி!(sticky mosquito trap):
பெரும்பாலான மளிகை கடைகளில் குழல் விளக்கை தேடி பூச்சிகள் வருகிறது என எண்ணை தடவிய காகிதம் ஒன்றை கட்டி விட்டு இருப்பார்கள், பூச்சிகள் அவற்றில் போய் ஒட்டிக்கொள்ளும். அதே வகை ஒட்டும் பொறி ஒன்றை கொசுக்களுக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள் வண்ண காகிதம் ஒன்றில் எண்ணைக்கு பதில் எளிதில் காயாத பசை ஏதேனும் ஒன்றை தடவி வீட்டில் கட்டிவிட்டால் போதும். பாதிக்கொசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும்.காரணம் மஞ்சள் வண்ணம் கொசுக்களை கவர்கிறதாம்.
கொசு விளக்கு பொறி!
இதனை பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்த்து இருப்பீர்கள் , ஒரு மின் விளக்கும் மின்சாரம் பாச்சப்பட்ட கம்பி வலையும் கொண்டது , வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் கொசுக்கள் , பூச்சிகளை கொல்லும்!
பெரோமொன் கொசு பொறி!
கொசுக்கள் முட்டை இடும் இடத்தை அடையாளப்படுத ஒரு வகையான பெரோமோன் சுரக்கும் அதே போன்ற பெரோமொன் கொண்டு கொசுக்களை கவர்ந்து அழிக்க வல்ல ஒட்டும் தன்மை கொண்ட பொறிகள் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தலாம்.
கொசுவின் இயற்கை எதிரிகள்:
உங்கள் பகுதிகளில் நிறைய தும்பிகள்(dragon fly) இருந்தாலும் கொசுக்கள் வராது , தும்பிகள் கொசுக்கை பிடித்து உண்ணுமாம்.
அதே போல தோட்டத்தில் வவ்வால்கள் brown bats) இருந்தாலும் கொசுக்களை பிடித்து உண்ணுமாம்
நீர் நிலைகளில் கொசு புழுக்களை பிடித்து உண்ணும் மீன்களான டிலாபிய(tilapia), கேம்பூசியா (gambusia affinis), தங்க மீன் வளர்க்க வேண்டும்.
உயிரி்யல் கொல்லி!
பேசில்லஸ் துரிஞ்செனிஸ் இஸ்ரேலியன் (bacillus thuringinsis israeliensis)என்ற நுண்ணுயிர் கொசுவின் லார்வாவை கொல்லும் தண்மை கொண்டது , இதனை குளம் குட்டைகளில் தெளித்தால் போதும் கொசு வளர்ச்சிக்கட்டுப்படுத்தலாம்.
தாவரவியல் கொசு விரட்டி!
சிட்ரொனெல்லா புல்(லெமன் கிராஸ்), கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்
mari gold flower
,ஹார்ஸ்மின்ட் ஆகிய தாவரங்களை தோட்டத்தில் வளர்த்தாலும் கொசுக்கள் குறையும்.இவற்றில் இருந்து பெறப்படும் சாறுகளும் கொசு விரட்டப்பயன்படும்.கொசு விழுங்கும் தாவரம்:
அகஸ்டாச்சா கானா (agastache cana ) பூக்களில் ஒட்டும் தன்மை கொண்ட பிசின் இருக்கும் .இது கொசுக்கள் , பூச்சிகளை கவர்ந்து அப்படியே சுருட்டி விழுங்கிவிடும்.இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுவைக்கட்டுப்படுத்தலாம்.
கடைசியாக ஒரு சின்ன குறிப்பு,
கொசுக்கள் மனிதனை இருட்டிலும் அடையாளம் பார்த்து கடிப்பது மனிதனின் உடல் வெப்பம் ,மற்றும் நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கரியமில வாயு. நம் உடலில் வேறு வாசனை வரும் திரவியங்களை பூசிக்கொண்டாலும் கொசுகடியில் இருந்து தப்பலாம். பூண்டு வாசனை கொசுவிற்கு ஆகாது , நிறைய பூண்டு சாப்பிட்டால் நாற்றம் தாங்காமல் கொசு ஓடிவிடும்!