Saturday, November 24, 2012

2G Spectrum Scam: real or Fabricated



(வழக்கம் போல் மிஸ்டு கால் தான்...ஹி...ஹி எனக்கா இருக்குமோ)


2ஜீ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல் நடைப்பெற்று இருப்பதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை சொன்னதும், அதன் தொடர்ச்சியாக ஆ.ராசா, கனி மொழி,நீரா ராடியா ஆகியோர் கைதானதும் , மொத்தம் 122 உரிமங்களை பெற்ற ஒன்பது அலைப்பேசி நிறுவனங்களின் உரிமங்கள் இரத்தான முன் வரலாறு அனைவரும் அறிந்ததே.

இரத்து செய்யப்பட்ட உரிமங்களை ஏல முறையில் விற்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் கடந்த 13 ஆம் தேதியன்று ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது ,ஆனால் எதிர்ப்பார்க்கப்பட்ட விலைக்கும் கீழாக 9,401 கோடி அளவுக்கு சில பகுதிகள் மட்டுமே விற்பனையானது.

இதன் அடிப்படையில் முன்னர் ஆ.ராசா தொலைதொடர்பு அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடைப்படையில் அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக சொல்லப்படும் 1.76 லட்சம் கோடி என்ற தொகை மிகைப்படுத்தப்பட்டது ,தற்போதிய ஏலத்தில் பெரும் தொகை ஈட்டப்படவில்லை எனவே பொய்யான குற்றச்சாட்டு என்பது நிருபணம் ஆகிவிட்டது , என ஊழலோட சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெருமிதமாக நெஞ்சு நிமிர்த்தி முழக்கமிடுகிறார்கள்.

கூடவே மத்திய தணிக்கை குழுவின் தொலைத்தொடர்ப்பு பிரிவின் தலைவராக பதவி வகித்த அதிகாரி திடீர் என முன்னர் அவ்வாறு அறிக்கை அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என பேட்டிக்கொடுத்துள்ளார், இதுவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு தேனாமிர்தமாக இனிக்க, கூடுதல் சக்தியுடன் உரக்க முழக்கமிட ஆரம்பித்துள்ளார்கள்.

அலைக்கற்றை வழக்கினை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்திருப்போருக்கு தெரியும் தணிக்கை குழு சொல்லும் தொகை  ஒரு கணிப்பின் அடைப்படையில் உத்தேசமாக  கணக்கிடப்பட்ட தொகை என்பது ,குற்றம் சாட்டப்பட்டவர்களும் இந்நாள் வரையில் அவ்வளவு ஊழல் நடக்கவில்லை என்று மறுத்தார்களே ஒழிய ,ஊழலே நடக்கவில்லை என ஒரு போதும் மறுத்ததில்லை. தற்போது தான் திடீர் உத்வேகத்துடன் பேச ஆரம்பித்துள்ளார்கள்.

நம் நாட்டில் இயற்கை வளங்களை ஏலம் அல்லது உரிமம் வழங்கும் நடைமுறையில் கையூட்டு இல்லாமல் ஒரு காகிதம் கூட கை எழுத்தாகாது என்பது அனைவருக்குமே தெரிந்த ரகசியம். அப்படி இருக்கையில் ஊழல் நடக்கவில்லை என சொல்வதே மிகப்பெரும் பொய், இப்பொழுது ஏலத்தொகை குறைவாக கேட்கப்பட்டதை வைத்து மட்டுமே மறுக்கிறார்களே ஒழிய மற்றபடி ஊழல் நடக்கவில்லை என்பதை மறுக்க வேறு ஆதாரம் காட்டவில்லை.

எதிர்ப்பார்க்கப்பட்டதை விட ஏலத்தொகை ஏன் குறைவாக கேட்கப்பட்டது என்பதை ஆராய்ந்தால் ,அலைக்கற்றை ஒதுக்கிட்டில் ஊழல் நடந்ததா இல்லையா என்பதை நாமே கண்டறிய முடியும், அதனை இப்பதிவில் காணலாம்.

அலைக்கற்றை ஒதுக்கீடு , ஏலம் போன்ற வியாபார நடைமுறைகளை காணும் முன்னர் அலைப்பேசி வலையமைப்பு (Telecom network)செயல்படும் முறையினை சுருக்கமாக காணலாம், அப்பொழுது தான் எளிதாக நடைமுறை சிக்கலையும், சில வியாபார நோக்கங்களையும் புரிந்து கொள்ள முடியும்.

அலைப்பேசி வலை அமைப்பு(Cell Phone structure)

உலகம் முழுவதும் GSM ,CDMA (global service mobile and Code division Multiple Access) என இரு வகை தொழில்நுட்பத்தில் அலைப்பேசி அமைப்புகள் இயங்குகின்றன. தற்போதுள்ள ஜிஎஸ்.எம் அமைப்பு 2ஜீ தொழில்நுட்பம் ஆகும். 3ஜீ என்பது அடுத்த தலைமுறை CDMA (WCDMA) தொழில் நுட்பமே, தற்போது  இது போதும் ,பொதுவாக அலைப்பேசி அமைப்பினை அணுகலாம்.

அனைத்து அலைப்பேசி நிறுவனங்களும் இவ்விரண்டு முறையில் ஏதோ ஒன்றிலோ அல்லது இரண்டும் கலந்தோ அலைப்பேசி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

பொதுவாக ஒரு அலைப்பேசி வலையமைப்பில் உள்ள அம்சங்களை காணலாம்.

# அலைப்பேசி(Mobile phone)

# அலைப்பேசி கோபுரம்(mobile tower or Base Transciver Station-BTS)

# தரைக்கட்டுப்பாட்டு மையம்(Base station controller-BSC)

# மையக்கட்டுப்பாட்டு மையம்.(Mobile switching Service centre or Main Station Ccontroller-MSC)

# பொது தொலைப்பேசி வலையமைப்பு இணைப்பு.(Pulic Switched Telephone Network-PSTN)

ஆகிய அலகுகள் அனைத்து அலைப்பேசி வலையமைப்பிலும் இருக்கும்.

இவற்றை தொலைதொடர்பு நிறுவனங்கள் அமைத்துக்கொண்டு, பின்னர் அலைக்கற்றை உரிமம் பெற்று ,தொலைத்தொடர்பு சேவையை உருவாக்குவார்கள்.

அலைக்கற்றை அகலம்(Spectrum Bandwidth):

வானொலி, தொலைக்காட்சி, ரேடார் , ராணுவம் என பலவற்றுக்கும் பல அலைவரிசையில் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டிருக்கும், அதே போல அலைப்பேசிகளுக்கு என சில குறிப்பிட்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டு இருக்கிறது, உலகம் முழுக்க அக்குறிப்பிட்ட அலைவரிசைக்குள் தான் அலைப்பேசிகள் இயங்க வேண்டும், எனவே தான் குறைந்த அளவில் கிடைக்கும் அலைக்கற்றைக்கு மதிப்பு அதிகம் ஆகிறது.

பொதுவாக அலைப்பேசிக்கு ஒதுக்கப்படும் அலைக்கற்றை அகல எல்லைகள்,

872-960 MHz, 1710-1875 MHz and 1920 - 2170 MHz. ஆகும்,

இதில் 800,900,1700,1800,1900,2100 (சில இடங்களில் 2,200,2,300 உண்டு,அமெரிக்காவில் 300 முதல் 3,000 மெ.ஹெர்ட்ஸ்)என அடிப்படையாக ஒரு அதிர்வெண்ணை  வைத்துக்கொண்டு ,முன்னால் ,பின்னால் உள்ள அதிர்வெண்களில் அலைப்பேசிகள் இயங்குமாறு வடிவமைப்பார்கள், இதனை Band  என்பார்கள்,ஒரு  நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் "Band overlap " ஆகாதவாறு அலைக்கற்றை பேண்ட்கள் தேர்வு செய்யப்படும்.

 ஆரம்பக்கட்ட அலைப்பேசிகள் ஒரே ஒரு அதிவெண் வீச்சில் செயல்பட்டது , அதனை Mono band என்றார்கள், பின்னர் Dual Band, Try Band கைப்பேசிகள் உருவாயிற்று , இப்போழுது அனைத்து கைப்பேசிகளும் Quatra band  வசதியுடன் உருவாக்கப்படுகிறது.

ஏன் எனில் உலகில் உள்ள பல நாடுகள் அனைத்து பேண்ட்களிலும் அலைப்பேசி சேவையை இயக்குவதில்லை, இரண்டு அல்லது மூன்று பேண்டுகளில் இயங்குவார்கள், எனவே கைப்பேசிகளை நான்கு பேண்ட்களில் தயாரித்தால் ஏதேனும் ஒரு நாட்டில் இயங்கும் பேண்டுடன் ஒத்து இயங்கிவிடும், எனவே ஒவ்வொரு நாட்டுக்கும் தனியாக கைப்பேசிகள் தயாரிக்க வேண்டியதில்லை.

முன்னர் எல்லாம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கைப்பேசிகள், ஐரோப்பாவில் இயங்காத நிலை எல்லாம் இருந்தது. காரணம் இது போன்ற மாறு பட்ட பேண்ட்களில் இயங்கியதே.

பொதுவாக 2ஜீ  800, 900 பேண்ட்களிலும் , 1800,1900 பேண்ட்களில்  3 ஜீக்கும் பயன்ப்படுத்தப்படுகிறது, 2100,2200 ஆகிய பேண்ட்கள் இணைய பயன்ப்பாட்டிற்கு பயன்ப்படுகிறது. இணையம்,3ஜீ ஆகியவற்றுக்கு பயன்ப்படும் பேண்ட்கள் நாட்டைப்பொறுத்து மாறி அமையும்.

இப்போதுள்ள கைப்பேசியில் குறிப்பிட்ட பேண்ட்களை எல்லாம் நாம் தேர்வு செய்யவேண்டியதில்லை தானே தேர்வு செய்துகொள்ளும், மேலும் குறிப்பிட்ட அலைப்பேசி சேவையின் அதிர்வெண்ணை தேர்ந்தெடுக்க ,SIM Card (Subscribers Information Module)ல் உள்ள குறியீடு(code) பயன்ப்படுகிறது, இதன் மூலம் நமது கைப்பேசியின் அதிர்வெண் டியூன் செய்யப்படும்.

இதனை  வழக்கமாக ஒரு வானொலியில் குறைந்த அலைவரிசை,மத்திய அலைவரிசை,பண்பலை, என தேடி நாம் வைப்பது போல ,ஆனால் கைப்பேசியில் அனைத்தும் தானாக செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

872-960 MHz, 1710-1875 MHz

மேற்கண்ட இரண்டு அலைக்கற்றை அகலத்தில் , 900,1800 வரிசையில் 2ஜீ க்கும், 2100 வரிசையில் 3 ஜீக்கும் இந்தியாவில் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டு செயல்படுகிறது.

உலக அளவில் பயன்ப்படுத்தப்படும் அலைக்கற்றை அகல வரிசைகள் பட்டியலை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.

http://www.worldtimezone.com/gsm.html

கி.பி 1994 இல் இந்தியாவில் முதன் முறையாக அலைப்பேசி உரிமங்கள் வழங்கப்பட்ட போது ,ஒவ்வொரு அலைப்பேசி நிறுவனத்திற்கும் GSM வகைக்கு 10 மெ.ஹெர்ட்ஸ் , CDMA  வகைக்கு 5 மெ.ஹெர்ட்ஸ் என அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது .

பொதுவாக  ஒவ்வொரு அலைப்பேசி நிறுவனமும் செயல்பட GSM இல் 4.5 மெ.ஹெர்ட்ஸ் உம், CDMA  வில் 2.5 மெ.ஹெர்ட்ஸ் அலைக்கற்றையே போதுமானது ,அப்போது அதிக போட்டியில்லாத நிலை எனவே கணக்கு பார்க்காமல் தேவையை விட இருமடங்கு அலைக்கற்றையை மலிவாக கொடுத்தார்கள்.எனவே அனைத்து நிறுவனங்களிடமும் உபரி அலைக்கற்றை இருந்தது, அதனையும் அவர்கள் வேறு வகையில் பயன்ப்படுத்தி வந்தனர், , இத்தனை நாளும் அவ்வாறே இருந்தது, இந்தாண்டு அக்டோபர் மாதம் புதிய 2ஜீ ஏலத்திற்கு முன்பாக இம்முறையில் ஒரு மாற்றத்தினை தொலைத்தொடர்பு துறை அறிவித்தது, இம்மாற்றமும் ஏலம் சரியாக போகாதற்கு ஒரு காரணம் ஆக்கும், என்ன மாற்றம், அதன் விளைவுகள் என்ன? அனைத்தும் பின்வரும் பகுதியில் அலசலாம்.

THE CELL:




இப்பொழுது அலைக்கற்றை உரிமம் இருக்கிறது , நிறுவனம் துவங்கியாகிவிட்டது, வாடிக்கையாளர் ஒரு அலைப்பேசியை வாங்கி ஒரு சிம் கார்டினையும் போட்டுவிட்டார், இப்போது எப்படி அலைப்பேசி சேவையை பயன்ப்படுத்தி அழைப்புகளை ஏற்படுத்துவார்?

அலைப்பேசி என்பது ஒரு கம்பியில்லா  Full duplex தொலைதொடர்பு கருவி ஆகும். அலைப்பேசி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டால் மட்டுமே இன்னொரு அலைப்பேசியை அழைக்க முடியும், ஆனால் அனைத்து இடத்திலும் ஒரு அலைப்பேசி நிறுவனம் செயல்பட முடியாது எனவே அலைப்பேசி நிறுவனம் -அலைப்பேசியுடன் தொடர்பை உண்டாக்க ஒரு இடை நிலை அமைப்பு தேவை ,அதுவே அலைப்பேசி கோபுரம்(Base transciver -BTS).

நாடு முழுக்க அலைப்பேசி பயனாளர்கள் இருப்பார்கள் ,அங்கு எல்லாம் ஒரு அலைப்பேசி கோபுரம் அமைத்தால் ஏகப்பட்ட செலவு ஆகும், எனவே எங்கு அதிக பயனாளர்கள் இருக்கிறார்களோ அங்கு மட்டும் அமைத்தால் போதும், அதற்கும் எத்தனைக்கோபுரம் அமைப்பது என கேள்வி எழும், இங்கு தான் ஜி.எஸ்.எம் அலைப்பேசியின் வீச்சு தூரம் பயன்ப்படுகிறது.

திறந்த தடங்கல் அற்ற வெளியில் 2ஜீ அலைவரிசை 35 கி.மீ வரையில் பரவும், ஆனால் 10 கி.மீக்கு அப்பால் மெல்ல வலுவிழந்து , தொடர்பு நிலையாக இருக்காது, எனவே 10 கி.மீ சுற்றளவுக்கு ஒரு கோபுரம் என அமைப்பார்கள், மேலும் கட்டிடங்கள்,மரங்கள் ஆகியவை அலைவரிசையை கிரகித்து வலுவிழக்க செய்யும் என்பதால் நகரப்பகுதியில் 5 கி.மீ சுற்றளவுக்கு ஒரு கோபுரம் அமைக்கலாம்.

ஒவ்வொரு கோபுரத்திலும் 120 டிகிரி கோணத்தில் மூன்று அலைபரப்பி வட்டுகள்(Antenna) வைக்கப்படும், இதனால் கோபுரத்தில் இருந்து சுற்றிலும் பரவும் அலைவரிசை அறுங்கோண வடிவில் பரவும் எனக்கண்டுப்பிடித்துள்ளார்கள், இப்படி ஒரு அலைப்பேசிக்கோபுரத்தினை சுற்றி உருவாகும் அறுங்கோண அலைபரப்பு பகுதியை செல் எனப்பெயரிட்டார்கள்.ஒரு செல் அமைப்பு இன்னொரு செல் அமைப்புடன் ஒன்றின் மீது ஒன்றாக படியாமல் திட்டமிட்டு அலைப்பேசி வலையமைப்பை அமைப்பார்கள்.

ஒரு செல் பகுதியில் இருக்கும் அனைத்து அலைப்பேசி பயனார்களும் அச்செல்லின் மையத்தில் உள்ள  குறிப்பிட்ட கோபுரத்துடன் இணைப்பில் இருந்து  மற்ர அலைப்பேசிகளுடன் தொடர்பினை உருவாக்கிக்கொள்ள முடியும்,இது போல அறுங்கோன செல்கள் , கோபுரங்கள் என தேவைக்கு ஏற்ப ஒரு அலைப்பேசி வலையமைப்பில் உருவாக்கப்படும். எனவே தான் அலைப்பேசியை செல் போன் என அழைக்கிறார்கள்.

அழைப்பு செயல்படும் விதம்:

பல செல்கள் ,அவற்றில் பல கோபுரங்கள் என அமைத்து ,அக்கோபுரங்களை சேட்டலைட், அகலப்பட்டை வடம் / கண்ணாடி இழை வடம் என இரு முறையிலும், அலைப்பேசி நிறுவனத்ததின் மையக்கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட வேண்டும்.

பரந்த நிலப்பரப்பில் எண்ணற்ற அலைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொன்றையும் நேரடியாக மையக்கட்டுப்பாட்டு (Main Station Controller-MSC)அறையுடன் இணைப்பது கடினம், செலவு பிடிக்கும் எனவே அதற்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள கோபுரங்களை ஒன்றிணைத்து ஒரு கட்டுப்பாட்டு மையம் உருவாக்குவார்கள், இதனை  தரைகட்டுப்பாட்டு மையம்(Base station controller-BSC) என்பார்கள்,இது போன்று பல சிறு மையங்கள் உருவாக்கப்பட்டு  , பின்னர் மத்திய மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.



இம்முழு வலையமைப்பும் ஒரு அலைப்பேசி நிறுவனத்தின் வலைக்குள் தகவல் பரிமாறிக்கொள்ள உதவும். இன்னொரு அலைப்பேசி வலையில் உள்ள கைப்பேசியை அழைக்க ,அதன் மையக்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்வார்கள் ,இதற்கு பொது தொலைபேசி கட்டுப்பாட்டு அறை (PSTN) இடை இணைப்பாக உதவுகின்றது. இச்சேவையை  BSNL,MTNL  போன்றவை செய்கின்றன.

ஒரு அலைப்பேசி பயனாளர் அழைப்பு ஒன்றை ஏற்படுத்துகிறார், அவரது கைப்பேசியானது ஒரு அழைப்பு கோரிக்கையை(Request) அப்பகுதியில் உள்ள அலைப்பேசி கோபுரத்திற்கு அனுப்பும், அங்கிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்படும்,

தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் மையக்கட்டுப்பாட்டு மையம்:
( Base station and Main switching Centre)

ஒரு அலைப்பேசி நிறுவனத்தின் சிம் கார்டை வாங்கி செயலாக்கியவுடன், அவ்வெண் ஆனது மத்தியக்கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணினியில் பதியப்படும் , இதனை இல்ல பயனர்ப்பதிவு (Home  location Register)என்பார்கள். இதனை வைத்தே ஒருவரது கணக்கில் உள்ள பணத்திற்கு ஏற்ப பேசும் நேர அளவு, எவ்வளவு நேரம் பேசினார், இன்ன பிற பயனர் தகவல்கள்,கணக்குகள் பராமரிக்கப்படும்.

இந்த எண் தமது அலைப்பேசி எண் தான் என மற்ற தரைக்கட்டுப்பாட்டு மையங்களுக்கும் பகிரப்பட வேண்டும், அப்போது தான் அலைப்பேசி கோபுரங்கள் ஒரு கைப்பேசியின் அலைவீச்சினை பெற்று தொடர்பு உண்டாக்கும், எனவே பயனர் விவரம் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணினியிலும் பதியப்ப்படும், இவ்விவரங்களை,விருந்தினர் பயனர்ப்பதிவு (Visitor Location Register)என்பார்கள். ஏன் எனில் ஒரு பயனாளர் தொடர்ந்து ஒரே அலைப்பேசிக்கோபுர எல்லையில் இருக்கமாட்டார்கள், அடிக்கடி இடம் மாறுவார்கள் அல்லவா .

பெயர் தான் மாறுகிறதே ஒழிய விவரங்கள் ஒன்றே, மேலும் இப்படி மாறுப்பட்ட பெயர் வைப்பது ரோமிங் பயன்ப்பாட்டின் போது உதவும், வேறு அலைப்பேசி நிறுவனத்தின் எண் எனில் விருந்தினர் பயனர் பதிவில் மட்டும் பதியப்படும், மத்தியக்கட்டுப்பாட்டு மைய கணினியில் இல்லப்பயனர் என பதியமாட்டார்கள்,இதன் மூலம் மாறுப்பட்ட அலைப்பேசி சேவைகளை அடையாளங்காண முடியும். அதற்கேற்ப கட்டணம் வசூலிக்க முடியும், அவ்வாறு அடையாளப்படுத்தாமல் இணைப்பினை உருவாக்கினால் யாருடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பது என்ற குழப்பம் வரும், அனைத்து கைப்பேசி சேவையும்,அனைத்து வலையமைப்பிலும்  இயங்கிவிடாதா?

இப்பொழுது அலைப்பேசியில் இருந்து அழைப்பு கோரிக்கை(Request)  கோபுரம் மூலம் தரைக்கட்டுப்பாட்டு கணினிக்கு வந்துவிட்டது, அழைப்பு விடுத்த எண் VLR பட்டியலில் இருக்கிறதா என கணினி சரிப்பார்க்கும், இருந்தால் அழைப்பை செயல்படுத்தும், இப்பொழுது அழைக்கப்பட்ட எண் அதே சேவையின் எண்ணா  என பார்க்கும், அதே சேவை எனில் மேற்கொண்டு அவ்வெண் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோபுரங்களின் எல்லையில் இருக்கிறதா என பார்க்கும், அப்படி இருந்தால் தரைக்கட்டுப்பாட்டு மையமே இரண்டு அலைப்பேசிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தி பேச வழி செய்யும்.

வேறு நிறுவன எண் அல்லது தனது எல்லைக்கு அப்பால் உள்ள எண் என அறிந்தவுடன், அழைப்பை மையக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும், அங்கும் எண் யாரை சேர்ந்தது என சோதிக்கும் ,பின்னர்,அதே சேவை எண் எனில் அழைக்கப்பட்ட எண் எந்த தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் உள்ள எந்த கோபுரத்தின் எல்லையில் இருக்கிறது என தேடி அங்கு அழைப்பை அனுப்பும்.

வேற்று நிறுவன எண் எனில் அந்நிறுவன மையக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும், அங்கிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையம் ,கோபுரம் என அழைப்பு செல்லும், டிங்க்டாங்க் என அழைப்பு மணி அடித்ததும் பச்சை பித்தானை அழுத்தி உரையாடலை துவக்கலாம்.

தரைக்கட்டுப்பாட்டு மையம் தேடும், மையக்கட்டுப்பாட்டு மையம் தேடும் என்று எளிதாக புரிய சொல்லி இருக்கிறேன், ஆனால் அப்படி எண்ணை தேடிக்கொண்டிருக்காது, தரைக்கட்டுப்பாடு மையம் தனக்கு வந்த அழைப்பு கோரிக்கையை அதன் கீழ் உள்ள அத்தனை கோபுரங்களுக்கும் Broadcast  செய்யும், அங்கு அழைக்கப்பட்டவர் இருந்தால் அழைப்பு ஏற்கப்படும், இல்லாத நிலையில் ,இல்லை என திரும்பி வரும் ,உடனே அடுத்தக்கட்டமாக மையக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும், அங்கும் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கும் ஒரே நேரத்தில் அழைப்பு கோரிக்கை Broadcast  செய்யப்படும்,எங்கு அழைக்கப்பட்டவர் இருக்கிறாரோ அங்கு அழைப்பு ஏற்கப்படும் ,மற்றவை திரும்பிவிடும், இது ஒரு Request token Pass  அமைப்பு ஆகும், அனைத்து அழைப்புகளும் என்கிரைப்ட் செய்யப்பட்ட சிறிய பொதிகளாகவே (encrypted packs)அனுப்பப்படும், அதற்கு முன்னர் இந்த ரெக்வஸ்ட் டோக்கன் பொதி அனுப்பட்டு இசைவு தெரிவிக்கப்பட்ட பின்னரே அழைக்கப்பட்டவரின் அலைப்பேசியில் மணி அடிக்கும் . இதெல்லாம் நடக்க அதிக நேரம் ஆகாது, சில மைக்ரோ வினாடிகளில் முடிந்துவிடும்.

அலைப்பேசியில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும் முன்னர் சில நொடிகள் அமைதியாக இருக்கிறதே அந்நேரமே இணைப்பினை உருவாக்க ஆகும் நேரம், உள்ளூர் அழைப்பு , ஒரே நிறுவனம் எனில் உடனே இணைக்கப்படும், நீண்ட தூரம் எனில் சிறிது தாமதம் ஆவதும் உண்டு.

ஒவ்வொரு அலைப்பேசி நிறுவனத்தின் குறுகிய அலைக்கற்றை பட்டையிலே (4.5 M.HZ spectrum)பல பயனாளர்கள் பேச முடியும், அனைத்து தகவல் பொதிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்தடுத்து அனுப்பப்படுவதால் , அலைவரிசை மீண்டும் பயன்ப்படுத்த முடியும்.

4.5 மெ.ஹெர்ட்ஸ் என்பது வலையமைப்பு முழுக்க இருக்கும் அலைவரிசை அகலம், இதற்குள் சுமார் 5 லட்சம் பயனாளர்கள் தகவல் பரிமாற முடியும்,ஆனால் அனைத்து பயனாளர்களும் ஒரே இடத்தில் இருப்பதில்லை என்பதால் , ஒரு குறிப்பிட்ட கோபுர எல்லையில் எப்போதும் அதிக பட்ச எல்லைக்குள் பயனாளர்கள் இருந்தாலே போதும்.அதனை தாண்டும் போது தான் இணைப்பில் சிக்கல் உண்டாகும், மேலும் கூடுதல் எண்ணிக்கையில் பயனாளர்கள் இருந்தாலும் அனைவரும் ஒரே நேரத்தில் அலைப்பேசியை பயன்ப்படுத்துவதில்லை, எனவே Network congestion பிரச்சினை அதிகம் உருவாகாது.


ஒரே நிறுவனத்தின் எண்ணை அழைக்க மலிவாக கட்டணம் நிர்ணயிக்க காரணம், அழைப்பினை அவர்கள் மையக்கட்டுப்பாட்டு அறைமூலமே வழங்குவதே, மாற்று நிறுவனம் எனில் அந்நிறுவன மையக்கட்டுப்பாட்டு அறையை அணுக , ஒரு இடை நிலை ஊடகம் தேவை , பெரும்பாலும் கம்பிவட /கண்ணாடி இழை இணைப்பினைப்பயன்ப்படுத்துவார்கள், இது பி.எஸ்.என்.எல் போன்றவற்றின் கம்பிவட இணைப்பாகும் , இதற்கு ஆண்டுக்கட்டணம் செலுத்த வேண்டும், இதனை network migration charges/network interconnecting charges  என்பார்கள்.

கம்பிவடத்தின் இரு முனையில் உள்ள நிறுவனங்களும் கட்டணம் செலுத்துவதால், உள் அழைப்பினை பெற்ற மாற்று நிறுவனத்தின் எண்ணை அழைக்கும் போது அவ்வழைப்பினை செயல்படுத்த மாற்று நிறுவனம் கட்டணம் கேட்கும், இதை எல்லாம் சேர்த்து மொத்தமாக பேசியவரின் கணக்கில் கழிக்கப்ப்டும்.  ரோமிங் அழைப்பின் போது ,ஒரு நிறுவன அலைப்பேசி முழுக்க இன்னொரு நிறுவன அலைப்பேசி தொடர்பு எல்லையில் இருப்பதால் , அழைப்புக்கட்டணம் அதிகம் ஆகும், அதனை அழைத்தவரிடம் வசுலீக்காமல் அழைக்கப்பட்டவரிடம்  ரோமிங் அழைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது செலவை இருமுனையிலும் பரவலாக்குகிறார்கள்.

அப்படி செய்யவில்லை எனில் ஏதேனும் ஒரு நிறுவனம் அனைத்து அழைப்பும் ஒரு நொடிக்கு ஒரு பைசா என சொன்னால், அந்நிறுவனத்தின் மூலம் அதிக அழைப்புகள் இன்னொரு நிறுவனத்திற்கு போகும், ஆனால் அந்நிறுவனத்தின் பயனாளர்கள் அழைப்பு விடுக்காமல் சும்மா இருக்க ஆரம்பித்துவிட்டால் , only incoming ,No out going calls  என்ற நிலையில் வருமானம் பாதிக்கப்பட்டுவிடும்.

இவ்வாறான ஒரு பக்கம் இருந்தே அதிக பயன்ப்பாட்டினை அதிகரித்ததால்  சமீபத்தில் மாறுபட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு உதாரணமாக இச்சம்பவத்தினை சொல்லலாம்.

ஏர்செல் குறுஞ்செய்தி சேவை மூலம் ஏர்டெல்,வோடாபோனுக்கு அதிகம் செய்திகள் அனுப்பப்படுகிறது ஆனால் அதே அளவுக்கு ஏர்டெல்,வோடா போனில் இருந்து ஏர்செல்லுக்கு குறுஞ்செய்திகள் போவதில்லை இதனால் அவர்களுக்கு  வருமான  இழப்பு  என்பதால் ஏர்செல் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் 10 பைசா தரவேண்டும் ,இல்லை எனில் செய்தியை அனுப்பமாட்டோம் என தடை செய்துவிட்டார்கள்.

அலைப்பேசிக்கோபுரங்கள்(Cell Phone Towers)



ஆரம்பத்தில் அனைத்து அலைப்பேசி நிறுவனங்களும் தங்களுக்கான கோபுரம், தரைக்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை நாடு முழுவதும் சொந்த செலவில் அமைத்து இயங்கினார்கள்.

2008 இல் ஒரு அலைப்பேசி கோபுரம்,அதன் மின்னணு உபகரணங்கள் என அமைக்க 2 கோடி செலவானது, இருந்த போதும் பல கோபுரங்கள் அமைத்தே செயல்பட்டார்கள், 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு கோபுரம் என அமைக்க வேண்டும், இதே போல எத்தனை அமைக்க முடியும்? இவ்வளவு செலவு செய்வதற்கு ஏற்ப அங்கு வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும், எனவே அதிக வாடிக்கையாளர் இருக்கும் பகுதிகளில் தான் கோபுரங்கள் அமைக்கப்பட்டது, எனவே கிராம புரங்களில் சிக்னல் கிடைக்காமல் கூப்பாடு தான் போட வேண்டிய நிலை.

மேலும் அதிக வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப்போட்டுக்கொண்டு கோபுரங்களை அமைத்தன , 5 கி.மீ சுற்றளவுக்கு ஒரே கோபுரத்தின் மூலம் கவரேஜ் வழங்க முடியும், ஆனால் ஆளுக்கு ஒரு கோபுரம் அமைத்துக்கொண்டாலும் ஒரு கோபுரத்தின் கையாளும் திறனுக்கு தேவையான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் பெரும்பாலான  இடங்களில் இருப்பதே இல்லை.

சொற்ப வாடிக்கையாளர்களுக்கு என கோபுரம் அமைத்து இயக்குவதால் அதிக செலவு ஆவது நிறுவனத்தின் லாப விகிதத்தினை குறைக்கும். எனவே ஒரே கோபுரத்தில் பல நிறுவனங்கள் தங்கள் கருவிகளை நிறுவிக்கொள்ளலாம் என கலந்து பேசி முடிவுக்கு வந்தார்கள்.

ஒரு கோபுரத்தில் ஆறு அலைப்பேசி நிறுவனக்கருவிகளை பொருத்த முடியும். இந்நிலையில் தான் அலைப்பேசி கோபுர கட்டமைப்பு வசதி வழங்கும் நிறுவனம்(Telecom Tower Business) என்ற ஒரு புதிய வியாபாரம் பிறந்தது. இவ்வியாபாரம் ஏற்கனவே மேலை நாடுகளில் உண்டு, ஒரு நிறுவனம் அலைப்பேசி கோபுரங்களை சொந்த செலவில் நிறுவும் ,தேவையானவர்கள்  வாடகைக்கொடுத்துவிட்டு பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட நிறுவனங்கள் புதிதாக கோபுரங்களை உருவாக்கியதோடு ,ஏற்கனவே கோபுரங்களை வைத்திருந்த அலைப்பேசி நிறுவனங்களின் கோபுரங்களையும் நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டன.

கையில் இருக்கும் கோபுரங்களை ஏன் விற்க வேண்டும்?

காரணம் ஒவ்வொரு கோபுரங்களுக்கும் இடத்திற்கு வாடகை, தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனெரேட்டர், பராமரிக்க இருவர் , உபகரண செலவு, கட்டுமான செலவு என அதிகம் முதலீடு தேவை, ஆனால் ஒரே ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களும் குறைவு எனும் போது வருவாயை விட செலவு அதிகம் ஆகிவிடும். இதனாலேயே  ஒரு கட்டத்திற்கு மேல் புதிதாக கோபுரங்களை அமைக்க முடியாமல் அலைப்பேசி நிறுவனங்கள் தடுமாறின.

மேலும் 2008 இல் ஒரு கோபுரம் அமைக்க 2 கோடி செலவானது, இப்போது 50 லட்சமே போதும், எனவே நல்ல விலை கிடைத்ததும் விற்றுவிட்டார்கள், மேலும் பலரும் ஒரே கோபுரத்தினை பயன்ப்படுத்துவதால் வாடகையும் குறைவாக இருக்கிறது,எனவே 50 லட்சம் கூட செலவழிக்காமல் தங்கள் அலைப்பேசி வலையமைப்பை விரிவாக்க முடிகிறது.

தரையில் அமைக்கப்பட்ட அலைப்பேசி கோபுரத்திற்கு வாடகை மாதம் 30,000 ரூ, கூரை மீது அமைக்கப்பட்ட கோபுரத்திற்கு 21,000 ஆகும்.

ஐடியா, ஏர்டெல், வோடா போன் ஆகியவை ஒன்றாக சேர்ந்து அலைப்பேசி கோபுரங்கள் அமைத்து பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றன. இப்பொழுது நாட்டில் BSNL  தவிர அனைவரும் வாடகை கோபுரங்களையே பயன்ப்படுத்துகிறார்கள்.அவர்களும் விரைவில் வாடகை முறைக்கு மாறிவிட இருக்கிறார்கள்.

இவ்வாறு கோபுரங்களின் கட்டமைப்பினை மட்டும் பயன்ப்படுத்திக்கொள்வதை Passive sharing  என்பார்கள், அலைக்கற்றை , தரைக்கட்டுப்பாட்டு கணினி ஆகியவற்றையும் பகிர்ந்தால் Active sharing  என்பார்கள்.

அமெரிக்க போன்ற நாடுகளில் இடத்திற்கு ஏற்ப முழு பகிர்தல் உண்டு,AT&T  பெரு நகரங்களில் மட்டும் நேரடியாக கவனம் செலுத்திவிட்டு , சிறு நகரங்களுக்கு அலைக்கற்றை, தரைக்கட்டுப்பாட்டு கருவி எல்லாம் வாடகைக்கு விட்டு விடும், ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டணம் வசூலிப்பார்கள்.

வாடகைக்கு எடுத்தவர்கள் ஏபிசி செல் என பெயர் கூட வைத்துக்கொள்ளலாம், அந்த பகுதிக்கு அவர்கள் ஒரு அலைப்பேசி நிறுவனம்.

கிட்டத்தட்ட இந்நிலை இப்பொழுது இந்திய தொலைத்தொடர்பு சந்தையிலும் வர இருக்கிறது, எப்படி என்பதனை முழுவதும் படிக்கும் போது அறியலாம்.

இந்தியாவில் உள்ள அலைப்பேசி கோபுர நிறுவனங்கள்.

Indus Towers a joint venture of Vodafone, Bharti Airtel and IDEA is formed.

Indus Towers = Ortus Infratel Holding (Vodafone – 42%) + Bhart Airtel (42%) + IDEA (16%)

American Tower Corp has acquired Xcel Telecom towers for 700 crores.

Quippo Telecom has acquired Spice Telecom’s tower business and Tata Teleservices WITIL is merged into it.


மேற்கண்ட விளக்கங்களுக்கும்  2ஜீ ஏலம் குறைவாக போனதற்கும் என்ன தொடர்பு என நினைக்கலாம், மைய கருத்தினை சரியாக புரிந்து கொண்டவர்கள் எளிதாக ஊகிக்க முடியும்,அல்லது தொடர்ந்து படியுங்கள்.

2ஜீ ஏலம் குறைவான மதிப்புக்கு விலைப்போனது ஏன்?

அலைப்பேசி நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை ஓரளவுக்கு புரிந்து கொண்டு இருப்பீர்கள், மேற்கண்ட விளக்கங்கள் இம்முறை ஏன் ஏலம் குறைவாக போனது என்பதை புரிந்துக்கொள்ள உதவும்.

# ஒரு அலைப்பேசி நிறுவனம் இயங்க 4.5 மெ.ஹெர்ட்ஸ் போதும் எனப்பார்த்தோம்,உபரியாக இருக்கும் அலைக்கற்றை குறித்து சமீபத்தில் அரசு ஒரு மாற்றம் செய்தது அல்லவா, அது என்னவெனில் உபரி அலைக்கற்றைக்கு இனிமேல் ஒரு முறை உரிமக்கட்டணம் (one time license fee)என ஒன்றை செலுத்த வேண்டும் என்பதே.

அதாவது ஆரம்பத்தில் 10 மெ.ஹெர்ட்ஸுக்கு செலுத்திய பணம் 4.5 M.HZ மட்டுமே, எனவே மீதி இருக்கும் 5.5 M.HZ ஆரம்பத்தில் செலுத்திய கட்டண அடிப்படையில் செலுத்த வேண்டும்.

ஆயிரம் கோடி செலுத்தி இருந்தால் இப்போது அதே அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும், இப்படி அறிவித்ததன் மூலம் அரசுக்கு கூடுதலாக 270 பில்லியன் ரூபாய்கள் வருவாய் கிடைத்துள்ளது.

இந்த உத்தரவு அலைப்பேசி நிறுவனங்களுக்கு பெரும் அடியாகும், இதனை சமாளிக்கவே தற்போதைய 2ஜீ உரிமத்தினை யாரும் வாங்கவில்லை அப்படி வாங்கவில்லை என்றால் எப்படி அலைப்பேசி நிறுவனங்களை செயல்படுத்துவார்கள் என கேட்கலாம்?

இங்கு தான் அலைப்பேசி கோபுர வாடகை முறை ,கோபுர பகிர்வு எனும் Active and passive infrastructure sharing  முறை உதவப்போகிறது.

முன்னர் தனித்தனி கோபுரம் ,தனித்தனி தரைக்கட்டுப்பாட்டு மையம் என்பதால் , இரண்டு அலைப்பேசி நிறுவனங்களுக்கிடையே பயனாளர் கணக்கினை பகிர்ந்து கொள்வதில் சிரமமும், பேசியதற்கான கட்டணத்தினை பிரிப்பதிலும் குழப்பம் வரும் எனவே தனி தனியே கணக்கினை பராமறித்தார்கள்.

இப்பொழுது கோபுரத்தில் உள்ள ஆண்டெனா மட்டுமே தனி, மற்ற உபகரணங்கள் அனைத்தும் அலைப்பேசி கோபுர நிறுவனத்திற்கு சொந்தமானது, இப்பொழுதும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் என தனி கணினி,டிரான்ஸ்மீட்டர் என உண்டு.ஆனால் உரிமை மற்றும் நிர்வாகம் கோபுர நிறுவனம், எனவே அனைத்து அலைப்பேசி நிறுவனங்களும் , கணினி முதல் அலைக்கற்றை வரை பகிர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டார்கள்.

இதன் மூலம் முதலீடு மற்றும் செலவு வெகுவாக  குறையும், புதிதாக அலைக்கற்றை உரிமமும் பெறத்தேவையில்லை.

அதாவது தமிழ்நாட்டினை மையமாக வைத்து செயல்படும் நிறுவனம் ,மும்பையினை மையமாக வைத்து செயல்படும் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் அதன் அலைக்கற்றையில் கொஞ்சம் இடம் கொடுக்கும், பதிலுக்கு மும்பையில் தமிழ்நாட்டு நிறுவனத்திற்கு அலைக்கற்றையில் இடம் கிடைக்கும்.

மும்பை நிறுவனம் தமிழ்நாட்டில் உரிமம் பெற தேவையில்லை , ஆனால் அலைக்கற்றையை உள்வாடகையாக அல்லது பகிர்வு முறையில் பெற்றுக்கொள்ளும், அதே போல தமிழ்நாடு நிறுவனமும் மும்பையில் உரிமம் இல்லாமல் இயங்கிக்கொள்ளும். இது கிட்டத்தட்ட  National Roming on infrastructure sharing அடிப்படையில் எனலாம்.

இதனால் கிடைக்கும் அனுகூலம்  என்னவெனில்  ,புதிய 2ஜீ அலைக்கற்றை ஏலத்தின் விலை உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல் படி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது அடிப்படை விலையே 14,000 கோடி ரூபாய் எனவே ஏலம் கேட்டால் அதனை விட அதிகம் கேட்க வேண்டும்.இதனை தவிர்த்தாலும் தொடர்ந்து அலைப்பேசி சேவையை வழங்க முடியும் என்பதே

 உபரியாக இதுநாள் வரை இலவசமாக வைத்திருந்த 5.5 M.HZ பழைய விலையின் அடிப்படையில் அக்டோபர் 13 இல் இருந்து உரிமக்கட்டணம் செலுத்த சொல்லிவிட்டார்கள்.கட்டவில்லை எனில் திரும்ப ஒப்படைக்க வேண்டும், அதனை மீண்டும் அரசு ஏலம் விடும்.

ஆனால் எந்த நிறுவனமும் திரும்ப ஒப்படைக்கவில்லை, கூடுதல் கட்டணத்தினை செலுத்த தயாராகிவிட்டார்கள் ஏன் எனில் பழைய விலை ரொம்ப குறைவு ,ஆனால் அதனை வைத்தே இன்னொரு அலைப்பேசி நிறுவனமே இயக்க முடியும் எனும் பொழுது ஏன் அதிக விலையில் அலைக்கற்றையை புதிதாக வாங்க வேண்டும், எனவே தான் இப்போதைய அலைப்பேசி ஏலத்தினை புறக்கணித்துவிட்டார்கள்.

இத்தனை நாளாக நிறைய அலைக்கற்றை உபரியாக வைத்திருந்ததை ,வைத்து தாரளமாக இயங்கிவந்தார்கள்,எங்கு அதிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களோ அங்கு மட்டும்  network congestion  குறைக்க கூடுதல் அலைக்கற்றைக்கும் ஒரு மையக்கட்டுப்பாட்டு அறை உருவாக்கி கொண்டார்கள்.

நாம் பயன் படுத்தும் அலைப்பேசி எண்ணின் முதல் இரண்டு இலக்கம் ஒரு நிறுவனத்தின் மையக்கட்டுப்பாட்டு அறையை (Mobile Services Switching Centre-MSC)குறிப்பது, ஒரே நிறுவனத்திற்கே இரண்டு தனிப்பட்ட முதல் இலக்கம் இருப்பதை பார்த்திருப்பீர்கள் ,அது அதே நிறுவனத்தின் இரண்டு வேறுபட்ட அலைக்கற்றைகளுக்கான மையக்கட்டுப்பாட்டு எண் ஆகும்.எத்தனை உரிமங்கள் இருக்கிறதோ அத்தனை எண் வரிசை ,மையக்கட்டுப்பாட்டு அறைக்கு என வழங்கப்படும்.

ஒவ்வொரு தொலை தொடர்பு வட்டத்திலும் ஒரு தொலைத்தொடர்பு உரிமத்திற்கும் ஒரு மையக்கட்டுப்பாட்டு அறை, அதில் இருக்கும் உபரி அலைக்கற்றையை தேவைப்படும் இடத்தில் இரண்டாக பிரித்து இரண்டு மையக்கட்டுப்பாட்டு அறை(Mobile Services Switching Centre-MSC) அமைத்து பயன்ப்படுத்திக்கொள்ள முடியும்.

இலவசமாக இருந்த நிலையில் தேவைப்பட்டால் பயன்ப்படுத்தினார்கள், விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இனிமேல் கட்டாயம் பயன்ப்படுத்த வேண்டும் என்பதால் ,உபரி அலைக்கற்றையை இன்னொரு நிறுவனத்துடன் பகிர்ந்து வருமானம் பெறலாம் என முடிவு செய்துள்ளார்கள்.

ஒவ்வொருவரும் போட்டியாளர்களுக்கு இடம் கொடுக்காமல் இந்த பகுதிக்கு நாம் மட்டுமே முழுக்கட்டுப்பாட்டினை வைத்திருக்க வேண்டும் என்று முன்னர் போட்டிப்போட்டவர்கள், அரசின் விலையேற்றத்தினை சமாளிக்க ஒன்று கூடி ஒரு குழுமம் ஆக செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள்.இதன் மூலம் புதிய 2ஜீ ஏலத்தில் அரசு எதிர்ப்பார்த்த அளவுக்கு வருமானம் வருவதையும் தடுத்துவிட்டார்கள் எனலாம்.

ஏற்கனவே இவர்கள் The Cellular Operators Association of India(.coai ) என்ற பெயரில் குழுமம் ஆக தான் செயல்ப்பட்டு வருகிறார்கள் ,ஆனாலும் போட்டி இருந்தது , இப்போது போட்டியை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள், இக்குழுமம் மூலம் தான் Passive infrastructure sharing  திட்டம் இயங்கிவந்தது,இனிமேல் Active Sharing  நடக்கும், ஏற்கனவே அதனை தான் இக்குழும உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்தார்கள், இதற்கென "PROJECT MOST" (Mobile Operators Shared Towers))என்ற பெயரில் ஒரு திட்டமும் செயல்படுகிறது.

http://www.coai.in/projectDetails.php?id=2

3G FACTOR:


2008 இல் 3ஜீ என்பதே இல்லை , எனவே அனைவரும் 2ஜீக்கு போட்டியிட்டார்கள், மேலும் அக்கால கட்டமே 2ஜீ தொழில்நுட்ப பயன்ப்பாட்டின் உச்ச கட்டம் எனலாம்.

2ஜீ வந்த போது மக்களுக்கு அலைப்பேசி பயன்ப்பாட்டினை பற்றிய அறிமுகமே இல்லை ,எனவே பயன்ப்படுத்த ஆட்களே இல்லை, அப்பொழுது அதிக விலைக்கு அலைக்கற்றையை விற்றால் ஒருவரும் வாங்க மாட்டார்கள்.

உதாரணமாக ஒரு கதாநாயகன் அறிமுகம் ஆகிறார் அப்பொழுது அவருக்கு என்ன சம்பளம் கொடுத்திருப்பார்கள், அனேகமாக சோத்தை போட்டு வேலை வாங்கியிருப்பார்கள், ஆனால் இரண்டு படம் ஹிட் கொடுத்தப்பிறகும் அதே போல சோத்துக்கு மட்டும் நடிப்பாரா?

நல்ல சம்பளம் கேட்பார், கொஞ்ச நாளுக்கு உயர்ந்த சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார், வயசாகி அல்லது நான்கைந்து தோல்வி கொடுத்த பின் மீண்டும் உயர்ந்த சம்பளம் கேட்க முடியுமா? சம்பளத்தை குறைத்து கொள்வார் அல்லவா?

அதே போல தான் 2ஜீ நிலையும் , ஆரம்பத்தில் குறைவான விலை ,ஆனால் நல்ல பயன்ப்பாட்டு விகிதம் அதிகரித்து அனைவரும் வாங்க தயாராக இருக்கும் போது அதற்கேற்ற விலை 2008 இல் நிர்ணயிக்கவில்லை.

இப்பொழுது 3ஜீ அலைக்கற்றை உரிமம் விற்பனையாகி பயன்ப்பாட்டில் இருக்கிறது, அதில் அதிக முதலீடும் செய்துள்ளார்கள்,அதில் இருந்து லாபம் ஈட்ட அதிக வாடிக்கையாளர்களை இழுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.எனவே 3ஜீ யை தான் முன்னெடுத்து செல்ல முயல்வார்கள் ,ஆனால் இப்பொழுது மீண்டும் 2ஜீயை அதிக முதலிட்டில் வாங்கினால் அதில் இருந்து லாபம் ஈட்ட அதிக வாடிக்கையாளர்களை கவர அதனையும் முன்னெடுத்தால் மக்கள் என்ன செய்வார்கள் விலை குறைவாக இருக்கு என 2ஜீ ஐயே தொடர்ந்து பயன்ப்படுத்துவார்கள்.3ஜீ க்கு என புதிதாக வாடிக்கையாளர்கள் பிறந்து வரப்போவதில்லை எனவே தொடர்ந்து 3ஜீ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயராது.

அதிக விலைக்கொடுத்து 2ஜீ என்ற பழைய நுட்பத்தினை வாங்கி அதனை முன்னெடுத்து செல்வதை விட , ஏற்கனவே முதலீடு செய்த 3ஜீ யை முன்னெடுத்து செல்லலாம், கட்டணத்தினை சிறிது குறைத்தால் போதும் மக்கள் 2ஜீ யில் இருந்து 3ஜீக்கு மாறிவிடுவார்கள்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர உயர கட்டணம் குறையும் என்பது வியாபார நியதி, எனவே அடுத்த ஆண்டுக்குள் 3ஜீ கட்டணம் தற்போதுள்ள 2ஜீ கட்டணம் அளவுக்கு குறைந்துவிடும், எனவே அப்போது 2ஜீ சேவை பயன்ப்படுத்த ஆட்கள் இருப்பார்களா என்பதே சந்தேகம்.

எனவே இன்னும் குறுகிய காலமே நிலைக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் தொழில்நுட்பத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம் , Break even அடைய ஆகும் காலம் அதிகம் ஆகும் ,என தற்போதைய 2ஜீ ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

2ஜீ முற்றிலும் வழக்கொழிந்து விடுமா என்றால் ,நுகர்வோர் பார்வையில் ஒரு காலத்தில் 2ஜீ சேவை பயன்ப்பாட்டில் இல்லாமல் போகலாம், ஆனால் அலைப்பேசி நிறுவனங்கள் தொடர்ந்து 2ஜீ அலைக்கற்றையை Back-Up Airwave ஆக பயன்ப்படுத்துவார்கள் ஏன் எனில்,

3ஜீ யின் அலைவரிசையின் அதிகப்பட்ச வீச்சு(coverage) 5 கி.மீ , நகரப்பகுதியில் 1.5 கி.மீ தான் , எனவே 1.5 கி.மீக்கு ஒரு கோபுரம் என அமைத்தால் தான் 3 ஜீ சேவை தங்கு தடையின்றி தொடர முடியும், பயனர் அடர்த்தியுள்ள இடம் எனில் அவ்வாறு நிறைய கோபுரங்கள் வைக்கலாம், ஆனால் கிராமப்புறங்களில் ,மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் எல்லாம் அதிக 3ஜீ கோபுரங்கள் அமைப்பது லாபகரமான ஒன்றல்ல. எனவே அங்கெல்லாம் 2ஜீ கோபுரங்களே செயல்படும், இதன் மூலம் அதிக தொலைவினை கவரேஜ் செய்யலாம்.

இனி வருங்காலங்களில் 2ஜீ அலைக்கற்றை ஒரு உதவி அலைக்கற்றையாக மட்டுமே செயல்படும், ஏற்கனவே பல நாடுகளில் 3ஜீ, 4ஜீ, 5ஜீ என அடுத்தக்கட்ட தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் 2ஜீ கைப்பேசிகள் விற்பனை செய்வதையே நிறுத்திவிட்டார்கள்.

வண்ண தொலைக்காட்சி வந்த பின் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியை ஆரம்பத்தில் கொஞ்ச நாள் வாங்கினார்கள் ,இன்று வாங்கவும் ஆள் இல்லை தயாரிக்கவும் ஆள் இல்லை, அதே நிலை தான் 2ஜீக்கும், மக்களுக்கு இனிமேல் 2ஜீ தேவைப்படாது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மட்டும் Back-up  அலைக்கற்றையாக சிறிதளவே பயன்படும்.


இப்பொழுது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்  2008 இல் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்க வாய்ப்பிருந்ததா இல்லையா ?

----------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,
http://www.indiabandwidth.com/db/article/757

http://www.ofcom.org.uk/static/archive/ra/topics/mpsafety/school-audit/mobilework.htm

http://www.coai.in/technology.php

இந்து, விக்கி, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!

# பிழை திருத்தம் , இன்னும் சில மாற்றங்கள் செய்யவில்லை ,பின்னர் சரி செய்யப்படும்.
----------------------------