இரண்டு சம்பவங்கள்!
(பட உதவி :கூகிள் படங்கள்,நன்றி)
சமிபத்தில் செய்தித்தாள்களிலும், பதிவுகளிலும் இரண்டு சம்பவங்களைப்பற்றி பெருங்கவலையுடன் பேசப்பட்டது, படுகின்றது. உண்மையில் கவனிக்கப்படவேண்டிய, கவலைப்பட வேண்டிய ஒன்றே அவை , ஆனால் அச்சம்பவங்களின் அடிப்படையை யாரும் நோக்காமல் இப்போ காலம் கெட்டுப்போச்சு, முன்னைப்போல இல்லை, எல்லாம் கலிகாலம் என்பதாகவே ஊடகங்களின் பேச்சும் , மக்களின் பார்வையும் இருப்பதாகவே எனக்கு படுகின்றது.
சம்பவம் ஒன்று:பலிவாங்கிய இந்தி!
சென்னைப் பாரி முனைப்பகுதியில் உள்ள ஒரு தனியார்ப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் அவரது இந்தி ஆசிரியை அவர்களை ஒரு இருபது ரூபா கத்தியினால் 7 முறை குத்திக்கொன்றுவிட்டார்.
காரணம் இந்திப்பாடத்தில் குறைவாக மதிப்பெண் வாங்கியதாக பெற்றோருக்கு தகவல் குறிப்பு/ முன்னேற்ற அட்டை/புத்தகத்தில் குறிப்பு எழுதி அனுப்பிவிட்டார் ஆசிரியை.
இதில் யார் குற்றவாளி , மாணவனா, ஆசிரியையா, பெற்றோரா, பள்ளியா , சமூகமா?
என்னைப்பொருத்தவரை பெற்றோரே முதன்மையான குற்றவாளி என்பேன்!
ஏன் எனில் நமது பள்ளிக்கல்வியில் தமிழ் தவிர அனைத்துப்பாடங்களும் அந்தந்த வகுப்புக்கு கட்டாயப்பாடம் ஆகும். தமிழ் அல்லது வட்டார மொழி என்பது மட்டும் விருப்ப பாடம் ஆகும்.
தமிழ் நாட்டில் மும்மொழிக்கல்வி இல்லை. பெரும்பாலான பெற்றோர்கள் வீட்டில் ,வெளியில் தமிழ்ப்பேசுகிறோம் அதுவே போதும் , அதை வேறு தனியாக படிக்கனுமா, அதுக்கு புதுசா ஒரு மொழி கற்றுக்கொண்டால் எதிர்க்காலத்துக்கு நல்லது என நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.பெரும்பாலும் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் நிலை இதுவே.
எனவே இப்படி ஆசைப்படும் பெற்றோர்களை கவர பல தனியார்ப்பள்ளிகளும் விருப்ப மொழிப்பாடமாக தேர்வு செய்ய தெலுங்கு, இந்தி , உருது, சமச்கிருதம், பிரெஞ்ச், ஜெர்மன், எனப் பல மொழிகளும் வைத்துள்ளார்கள்.எவ்வளவுக்கு எவ்வளவு பிற மொழி பயிற்றுவிக்க வசதி இருக்கோ அவ்வளவு பெரியப்பள்ளி அது :-))
தற்கால கல்விச்சூழலில் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனால் தனது விருப்ப மொழிப்பாடம் எது என்பதை தீர்மானிக்கும் உரிமை இல்லாதவனே.
தனது புத்திரனை பன்மொழி வித்தகனாக உருவாக்க ஆசை அல்லது பேராசைப்பட்ட ஒரு பெற்றோர், தமது மகனுக்கு எது எளிதில் வரும் என்பதை மறந்து விட்டு அந்நியமான இந்தியை படிக்க திணிக்க ஆசைப்பட்டதின் விளைவே , அவனை இளங்கொலைக்காரான் ஆக்கிவிட்டது.
இப்போது பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் எல்லாம் வீட்டுக்கு அஞ்சலட்டை மூலம் மாதம் ஒரு முறை மாணவரது கல்வி, வகுப்பு அறை நடவடிக்கை குறித்து அனுப்பிவிடுகிறார்கள், மேலும் ஒரு சிறிய புத்தகம் போட்டு நடவடிக்கை, மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டிய தகவல் என எழுதி மாணவரிடம் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். அதில் கையொப்பம் வேறு பெற்றோர் இட்டு அனுப்ப வேண்டும், சந்திக்க சொல்லி தகவல் இருந்தால் போய்ப்பார்க்க வேண்டும்.
இது ஏன் எனில் பள்ளியில் மாணவரது செயல்ப்பாடு, முன்னேற்றம் குறித்து பெற்றோர் உடனக்குடன் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே.இதுப்போல கிடைக்கும் தகவலின் அடிப்படையில் பெற்றோர்கள் மாணவருடன் பேசி அவரது பிரச்சினை, விருப்பம் என்ன எனக்கேட்க வேண்டும். அது தான் தகவல் அளிக்கும் முறையின் நோக்கமே?
ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது, இந்தியில் தேர்வாகவில்லை, குறைவான மதிப்பெண் என குறிப்பு வந்தால், அம்மாவோ/அப்பாவோ பெல்ட், ஸ்கேல் , துடைப்பக்கட்டை இன்ன பிற வஸ்துகளைக்கொண்டு நாலு விளாசு விளாசிவிட்டு, எப்போ பாரு கார்ட்டூன் டீவி, விளையாட்டு, ஒழுங்கா படிக்க துப்பில்லைனு வசவு கூடவே பக்கத்துவிட்டு அருணைப்பாரு , உன் வயசு தான் கிளாஸ் ஃப்ர்ஸ்ட் வரான்னு அவங்க அம்மா என்னா பெருமையா சொல்லிக்கிறாங்க என்று நீட்டி முழக்கி இன்னும் நாலுப்போடும் பெற்றோரே மிக அதிகம்!
இப்படி பெற்றோரிடம் உதையும் , திட்டும் வாங்கிய பிறகு மாணவனுக்கு பெற்றோர் மீது வெறுப்பு வரும் ஆனால் காட்ட முடியாது, அதை விட ஒப்பீட்டுக்கு சொல்லப்படும் பக்கத்து விட்டு பையன் மீது இன்னும் வெறுப்பு வரும் :-))
பள்ளி மேலும் கல்வி மேலும் வெறுப்பு வரும், கடைசியாக இதுக்கெல்லாம் காரணம் இந்த வாத்தியார் தானேனும் வெறுப்பு , கோவம் வரும் .
இது போன்ற மனச்சூழலுக்கு ஆளாகாத மாணவர்களே இல்லை எனலாம், 90 சதவீத மாணவர்களுக்கு இது போன்ற மன அழுத்தம் வருகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு என்ன செய்வது எனத்தெரியாமல் அப்படியே வாழ பழகிக்கொள்கிறார்கள்.
மேலும் இத்தகைய நெருக்கடி முன்னர் எல்லாம் 10 ஆம் வகுப்புக்கு பின்னர் தான் வரும் ஆனால் இப்போது முன்னரே 9 ஆம் வகுப்பிலேயே வருகிறது,ஏன் ?எல்லாம் பெற்றோரின் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பும், அதனை பயன்ப்படுத்தி பணம் செய்ய துடிக்கும் தனியார் கல்வி நிலையங்களின் போக்குமே காரணம் ஆகும்.
இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர்ப்பணி என்பதும் சேவை என்ற நிலை மாறி தொழில் என்றே ஆகிவிட்டது. தனித்தனியே கவனம் செலுத்தி குறைக்கேட்டு பாடம் நடத்துவது எல்லாம் வழக்கொழிந்து விட்டது. பாடம் நடத்துதல், சிலபஸ் முடித்தல், தேர்வு வைத்தல் என ஒரு சடங்கு மட்டுமே பள்ளியில் ஒரு ஆசிரியரின் பணியாகப்பார்க்கப்படுகிறது.அதுவே நிர்வாகத்தின் குறிக்கோளும் கூட. ஒரு மாணவரின் மேம்பாடு , ஒழுக்கம் என்பது பெற்றோர்களின் மீதே மறைமுகமாக திணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதனை எத்தனைப்பெற்றோர்கள் உணர்ந்த்திருப்பார்கள்? பெரும்பாலானா பெற்றோர்களின் எண்ணம் எப்படி எனில் நல்ல பள்ளியில் சேர்த்து இருக்கேன் , இவன் வயசுப்பசங்க எல்லாம் நல்லாப்படிக்கும் போது இவனுக்கு என்னக்கேடு என்றே நினைப்பார்கள்.
புரியாத ஒரு மொழியை ஏக் காவ் மே ஏக் கிசான் ரக தாதானு படிறா என்று சொன்னால் எப்படிப்படிப்பான்? அவனா எனக்கு இந்தி விருப்ப பாடமாக எடுத்துக்கொடுனு கேட்டான்,இல்லையே! சரி இந்தில தள்ளியாச்சு, குறைவா மதிப்பெண் வாங்குவதாக தெரிந்தால் என்ன செய்து இருக்க வேண்டும் , தமிழை விருப்ப மொழியாக மாற்றிக்கொடுத்து இருக்கவேண்டும் .அல்லது ஒன்றும் பெருசா மார்க் வாங்க வேண்டாம் இந்தில பாஸ் ஆகிற அளவுக்கு படிச்சா போதும்னு சொல்லி இருக்கனும் பெற்றோர். ஆனால் அப்படி செய்ததாக தெரியவில்லை.
இந்த இடத்தில் பள்ளி நிர்வாகம்/ ஆசிரியர் என்ன செய்திருக்க வேண்டும் , உங்கள் மகனுக்கு இந்தி கற்பதில் சிரமம் இருக்கு எனவே தமிழுக்கு மாற்றி விடுங்கள் என சொல்லி இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவங்க கற்பிக்கும் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்து, விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் தொடர்ந்து இருக்கிறார்கள்.
வீட்டிலும் புரிந்துக்கொள்ளவில்லை, கல்வி நிலையத்திலும் புரிந்துக்கொள்ளவில்லை.மனதில் ஆத்திரமும் வெறுப்பும் மண்டியவனுக்கு பலி ஒரு அப்பாவி ஆசிரியை.
ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் கல்வியால் ஏற்படும் மன அழுத்தம் ,விரக்தியால் பெரும்பாலும் என்ன செய்வான் எனில் , பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடுவான், அல்லது வீட்டில் பள்ளிக்கு செல்லமாட்டேன் என அடம்பிடிப்பான். அதிக பட்சமாக வீட்டை விட்டு ஓடி விடுவான்(ஹி..ஹி..சொந்த அனுபமுண்டு, ஒரு தபா ஓடிப்போய் வந்திருக்கேன்).
தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் கூட அவ்வயதுக்கு மீறிய செயல் எனும் போது கத்தி வாங்கி ஆசிரியையை கொலை செய்கிறான் எனில் இது போன்ற சிந்தனைகள் எப்படி அவனுக்குள் விதைக்கப்பட்டிருக்கும்.(நான் படிக்கிர காலத்தில் இப்படி நினைத்திருந்தால் ஒரு பத்து பேராவது போய் சேர்ந்திருப்பாங்க).
மேலும் சென்னையில் பெரும்பாலான மாணவர்கள்/இளம் சிறார்கள் அவர்களை விட பெரியவர்களுடன் நட்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் பேசு மொழியில் பெரும்பாலும் ங்கோத்தா, பாடு, போடுறா அவன , தூக்கிடுவேன் என்பதே அதிகம் தென்படும்.இது வட சென்னைப்பகுதிகளில் மிக அதிகம்.புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஆனந்தபவன் அருகில் ஒரு மேநிலைப்பள்ளி இருக்கிறது காலையில் போனால் , தெரியும் ,இவர்கள் எல்லாம் மாணவர்கள் தானா என்று கேட்பீர்கள்?
பல இளஞ்சிறார்கள் சவகாச தோஷம் , சினிமா,இணையம் என பிஞ்சில் பழுத்தும் விடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
மேலும் தற்கால ஊடகங்களின் போக்கு எனவும் சொல்லலாம். தொ.கா, திரைப்படம் என அனைத்திலும் வன்முறை ,ஆபாசம்( சினிமாஸ்கோப் கண்டுப்பிடித்ததே நாபிக்கமலத்தை பெருசா காட்டத்தானோ? )எல்லாமே அளவுக்கு அதிகமாக காட்டப்படுகிறது. ஆனால் அவை யாவும் சமூகத்தில் தினசரி நிகழ்வுகள் சரியான வாழ்வியல் அறமென நியாயம் கற்பிக்கப்படுவது போல கதை சொல்லி இருப்பார்கள்.
ரேஷன் கடையில் பொருட்கள் இல்லை என சொல்லிவிட்டு வில்லன் கூட்டம் கள்ள மார்க்கெட்டில் விற்கும் அப்போது ஹீரோ பறந்து வந்து அநியாயத்தை தட்டிக்கேட்கும் காட்சியிலும் முதலில் ஓடிவரும் வில்லனின் அல்லக்கையை ஒரே அடியில் வீழ்த்தி கழுத்தை திருகிப்போட்டு விட்டு தாண்டிப்போவார். ஒரு 40 பேரை எலக்டிரிக் போஸ்டை புடுங்கி விளாசுவார். அடுத்தக்காட்சியில் காக்கும் கடவுளே தானைத் தலைவா என மக்கள் கூட்டம் வாழ்த்திப்பாடும். இது போன்றக்காட்சிகள் புரஜக்டர் கண்டுப்பிடித்த காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் வெகு சகஜமப்பா :-))
ஒரு ரெண்டு லிட்டர் மண்ணெணைக்காகவும், 10 கிலோ அரிசிக்காகவும் அடிக்கும் அடியில் பலர் உயிர்போனது போல அடிவாங்கி விழுவதாக ஏன் காட்ட வேண்டும். ஒருவர் கழுத்தை திருகினால் செத்து விட மாட்டார்களா? ஆனால் ஹீரோ கொலை செய்துவிட்டார்னு காட்டாமல் கொண்டாடுவதாக காட்டப்படுவது.மனமுதிர்ச்சி இல்லாத இளஞ்சிறார் வயதில் பார்க்கும் ஒருவருக்கு என்ன தோன்றும்.நாளுப்பேர ரத்தம் வர , மூச்சுப்பேச்சு இல்லாமல் அடிக்கிரவன் தான் நல்லவன்னு நினைக்க தோன்றாதா?
வன்முறையை , வன்முறையாளனை சமூகம் கொண்டாடுவது போல ஊடகங்களில் தொடர்ந்துக்காட்டப்படுவதால் இளம் வயதினருக்கு ஒரு தவறான புரிதலே உருவாகும். இளம் வயதில் கொலை செய்தால் தூக்கு தண்டனைக்கிடையாது என்பது போலவும் , குற்றப்பின்னணி உள்ள கதாபாத்திரத்தை கதாநாயகனாக காட்டுவதாகவும் திரைப்படங்கள் அதிகம் வருகிறது(அவனைத்தான் ஒருத்தி உருகி உருகி காதலிப்பா). அவை குற்றவியல் கல்விபோதனையாகவும், குற்றம் புரிந்தால் தப்பில்லை என்பது போன்ற எண்ணங்களையும் இளம்வயதினர் மனதில் விதைக்கக்கூடும்.
ஒரு புறம் வன்முறை தவறல்ல என்பது போல ஊடக திணிப்பு, மறுபுறம் புரியுதோ இல்லையோ சொல்லிக்கொடுப்போம் மதிப்பெண் எடுக்கணும் என்று செயல்படும் பள்ளிகள், மேலும் பிள்ளைகள் மீது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பினை சுமத்தும் பெற்றோர் என அனைத்து திசைகளிலும் ஒரு மாணவருக்கு நெருக்கடிகள் மட்டுமே எஞ்சுகிறது.
இங்கு பேசப்படும் சூழல் நடுத்தர மற்றும் கடைநிலை குடும்பம், மாணவர்களுக்கான சூழல். உயர் நடுத்தர, மற்றும் உயர் வசதி குடும்பம், மாணவர்கள் சூழல் வேறு, ஆனால் அங்கு தான் பெற்றோர்கள் சரியாக மாணவப்பருவத்தைக் கையாள்கிறார்களோ என தோன்றுகிறது.நீ +2 பாஸ் செய்தா போதும் உன்னை டாக்டர் ,எஞ்சினியர் என்ன வேண்டுமோ படிக்க வைக்கிறேன்னு சுதந்திரம் கொடுக்கிறார்கள்.
அப்போ பணம் இருந்தா தான் படிக்கணுமா என்று கேட்கலாம்? எல்லாருமே படிக்கலாம் ஆனால் ஒரு பந்தயம் போல ஓடிப்போய் ஏன் படிக்க வேண்டும்?
முதலில் அவன் என்னப்படிக்க வேண்டும் என்பதை அவனே தீர்மானிக்கட்டும், எல்லாரும் பொறியியல், மருத்துவம் தான் அவங்க பசங்க படிக்க வேண்டும்னு நினைப்பதால் தான் கல்வி வியாபாரம் ஆகிடுச்சு. இதில் வெளியில் தெரியாத உண்மை 50 % பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்பது.MBBS மட்டும் படித்தவரால் 10000 சம்பாதிக்க மூச்சு முட்டுது.ஆனாலும் பொறியியல் , மருத்துவம் படிக்க போட்டி இருப்பதால் இந்தியாவிலேயே மிக அதிக தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கு. அதே போல மருத்துவக்கல்லூரிகளிலும் இரண்டாம் இடம்.
பெரும்பாலான மாணவர்கள் இத்தகைய கல்வியியல் வாழ்விற்கு அடங்கி போக கற்றுக்கொள்கிறார்கள். விதிவிலக்காக யாரேனும் ஒருவர் இப்படி ஆயுதம் தூக்கி விடுகிறார்கள். எனவே நமது சமூகமும், கல்வி அமைப்புகளும், குறிப்பாக பெற்றோர்களும் விழிப்படைய வேண்டிய தருணமிது. கல்வி என்ற சித்தாந்தக்கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.
பின்குறிப்பு:
# மிக இளம் வயதில் கொலை செய்தார் என்பதே சமூகத்தின் அவலத்தைக்காட்டுகிறது. இளஞ்சிறார் குற்றவாளி என்பதால் அவரது புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்பது தார்மீகம். எனக்கு தெரிந்து பெரும்பாலும் பத்திரிக்கைகளிலும் வரவில்லை.
பிற்சேர்க்கை: குறிபிட்டவுடன் தக்க புரிதலுடன் அச்சிறுவனின் புகைப்படத்தை பதிவர் நீக்கிவிட்டார். நன்றி http://www.mathavaraj.com/2012/02/blog-post_10.html">மாதவராஜ்!
# ஹி..ஹி!... சம்பவம் இரண்டு அடுத்தப்பதிவில்.