Thursday, September 06, 2012

என்ன கொடுமை சார் இது-8

(ஹி...ஹி வளைவுகள் ஜாக்கிரதை)


பதிவரசியல்.

தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெற்றிகரமாக நடைப்பெற்றதை பெரும்பாலோர் அறிவார்கள்.

எந்த ஒரு நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்துவது என்பது சிரமமான ஒன்றே என்றளவில் நடத்திய மற்றும் பங்குப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்நிகழ்வை ஒட்டி சிலப்பதிவர்களுக்கு தெரியவில்லை, அல்லது அழைக்கவில்லை என ஒரு பேச்சு ஓடியது,

இதனை ஒட்டி ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை ,அனைவரும் நிகழ்ச்சி அறிவிப்பினை பதிவில் பார்த்துவிட்டு மட்டுமே வந்தார்கள் என விளக்கம் அளித்தார், யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க தேவையில்லை எனவே இவ்விளக்கம் ஏற்கக்கூடியதே, ஆனால் அவர் விளக்கம் சொல்லிய சில நாட்களுக்கு பிறகு வந்த பதிவுகளில் பார்த்தால் இன்னாரை நான் போன் செய்து அழைத்தேன் என ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பதிவு போடுகிறார், இன்னொரு "முக்கிய" பதிவரோ இன்னின்னார் என்னை தொலைப்பேசியில் அழைத்து கலந்து கொள்ள சொன்னார்கள் எனப்பதிவிடுகிறார்.

அழைக்கவில்லை என சொன்னவர்களையும் அனைவரும் அறிவர், அழைப்பு விடுவிக்கப்பட்ட சிலரையும் அறிவார்கள், ஆரம்பத்தில் யாரையும் அழைக்கவில்லை என சொல்லிவிட்டு உடனே அழைப்புவிடுவிக்கப்பட்டதாகவும் முன்னுக்கு பின்னாக பதிவுகள் வருவது சரியாகப்படவில்லை, பாகுபாடற்ற அணுகுமுறையில்லையோ என்றே நினைக்க வைக்கிறது.

மேலும் அனைத்துப்பதிவுகளிலும் சென்னையில் தமிழ்ப்பதிவர்களின் முதல் சந்திப்பு என மறக்காமல் அழுத்தம் கொடுப்பதும் ஏதோ ஒன்றினை குறியீடாக சொல்கிறதா?

என்ன நடந்தால் உனக்கென்ன ..நீ என்ன கலந்துக்கொண்டாயா எனக்கேட்பாங்க எனவே வாயை மூடி சும்மா இருடா வவ்வாலு :-))

என்ன கொடுமை சார் இது!

---------------
வாய மூடி சும்மா இருடா!

சமீபத்தில் தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் என பெருமையாக சொல்லிக்கொண்டு வந்த திரைப்படம் "முகமூடி'ஆனால் ஏனோ அனைவரும் கிழித்து தொங்கவிட்டு விட்டார்கள்(முகமூடி என்ற பெயர் பிடிக்கலையோ), படம் நல்லா இருக்கா இல்லையா என்பதை பதிவர்களின் விமர்சனம் வைத்து கணிக்கவே முடியாதப்படியான அளவு கோல்களின் அடிப்படையில் படத்தினை பதிவர்கள் விமர்சிக்கிறார்கள் .நாயகியாக எப்படி இவரைப்போடலாம் எந்த கோணத்தில் பார்த்தாலும் பெண்ணுக்குரிய "அம்சங்களே' இல்லை என சாமுத்திரிகா லட்சண குரு போல சொல்கிறார் ஒரு பதிவர் ,

இன்னொருவரோ ஏன் நாயகி வீட்டில் புத்தர் சிலையைக்காட்டுறாங்க என்கிறார், ஒரு வேளை பிள்ளையார் பொம்மையை காட்டினால் பாராட்டியிருப்பாரோ என்னமோ. படத்தில் மேலும் பலக்குறியீடுகளை இயக்க்குனர் திணித்து தனது உலக திரைப்பட அறிவைக்காட்டியிருப்பதாக ஒரு மாபெரும் வதந்தி பதிவர்களால் கிளப்பிவிடப்பட்டுள்ளதால், அக்குறியீடுகளை கட்டுடைத்து ஒரு விமர்சனமும் எழுதி மக்களை சோதிக்கலாம் என அடிமனதில் ஒரு அல்ப ஆசை ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்கிற்கு படம் பார்க்க போய் 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இம்முறை திரையரங்க நுழைவு நிச்சயம் ,ஆனால் பன்னரங்கு காட்சியகம் செல்லாமல் ஏதேனும் ஒற்றைத்திரையரங்கு செல்வேன், பெரும் அரங்குகள் என்னைப்போல ஏழைகளுக்கு உகந்தது அல்ல!

இப்போதைக்கு முகமூடியின் இப்பாடல் எனக்கு தத்துவார்த்த ரீதியான ஒருப்பாடலாக படுகிறது ...


எனவே படம் எப்படியிருந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன் , என்னைப்படம் பார்க்க தூண்டிய ஒரே விடயம் படத்தின் பெயர் "முகமூடி" :-))

என்ன கொடுமை சார் இது!

----------
அரசியல் விளையாட்டு.

சென்னை நேரு கால் பந்தாட்ட மைதானத்தில் பயிற்சிக்கு வந்திருந்த இலங்கைக்கால்பந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டு ,நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்கள். மேலும் அனுமதி அளித்த அரசு உயர் அலுவலரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காரணம் இலங்கை தமிழர் பிரச்சினை நிலவும் நிலையில் இலங்கை வீரர்கள் எப்படி தமிழ் மண்ணில் பயிற்சி செய்யலாம் என்பதாகும்.

அம்மையாரின் அதிரடி கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இதில் உள்ள நகைச்சுவை என்னவெனில் இது போல மட்டைப்பந்தாட்ட அணியினரை திருப்பி அனுப்பியிருக்க முடியுமா என்பதே , ஆண்டு தோறும் இலங்கை அணி இந்தியாவில் போட்டிகளில் கலந்து கொள்ள வருகிறது, சென்னையிலும் போட்டிகளில் ஆடியுள்ளார்கள், மேலும் இலங்கை வீரர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும் இருக்கிறார்கள்.

மேலும் பல ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் எம்.ஆர்.எஃப் வேகப்பந்து வீச்சு பயிற்சி மையத்தில் டென்னிஸ் லில்லி தலைமையில் இலங்கை பந்து வீச்சாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர், சமிந்தா வாஸ், லசித் மலிங்கா உட்பட பலர் எம்.ஆர்.எஃப் பயிற்சி மையத்தின் தயாரிப்பே.

மட்டைப்பந்தாட்ட அணியை ஆடவிட்டு வேடிக்கைப்பார்க்கும் அரசியல்வாதிகள் கால்பந்தாட்ட அணியை மட்டும் விரட்டி வீரம் காட்டுவது நகை முரண் ஆகும் , ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி கதையாக இருக்கு.

என்ன கொடுமை சார் இது!
---------------------
பணங்காய்ச்சி மரம்.

சமீபத்தில் சென்னையில் பள்ளிப்பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையின் வழியே விழுந்து ஒரு சிறுமி பலியானாள், அச்சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் ஓயும் முன்னரே க.க நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி ரஞ்சித் என்ற மாணவன் இறந்துப்போனான்.

மாணவன் ரஞ்சித் , மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர் என்பவரின் ஒரே மகன் ஆவார்.

இச்சம்பவத்தில் கேள்விக்குறியை ஏற்படுத்துவன,

# 26 மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டும் ,ஒரே ஒரு பயிற்சியாளர் மட்டுமே இருந்துள்ளார், இன்னொரு பயிற்சியாளரோ, உதவியாளரோ இல்லை.

# காலையில் பள்ளிக்கு வந்ததும் ஏன் நீச்சல் பயிற்சிக்கு மாணவர்களை பள்ளி நிர்வாகம் அனுப்ப வேண்டும்? பெரும்பாலும் உடல் திறன் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மாலையில் தானே வைப்பார்கள்?

எனது கணிப்பு என்னவெனில் பல மாணவர்களை நீச்சல் பயிற்சியில் சேர்த்து பணம் வசூலித்துவிடும் பள்ளி நிர்வாகம் ,அனைவருக்கும் ஒரே நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்க காலையில் இருந்து மணிக்கு ஒரு அணியாக பயிற்சிக்கு அனுப்பி சமாளித்து இருக்க வேண்டும். இதனால் பயிற்சியாளருக்கு மாணவர்கள் மீது பெரிதாக கவனம் இருக்க வாய்ப்பில்லை.

# மாணவன் இறந்தவுடன் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு எதுவுமே நடவாதது போல தொடர்ந்து பள்ளியை நடத்தியுள்ளனர், பல மாணவர்களின் பெற்றோரும் கூடி போராடிய பின்னரே ,பள்ளிக்கு விடுமுறை விட்டுள்ளனர்.

# சென்னை சேலையூர் சியோன் பள்ளி நிர்வாகி இதே போன்ற வழக்கில் கைதாகி ,பிணையில் கூட வர இயலாமல் சிறையில் இருந்தார் ஆனால் அதே போன்ற சம்பவத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகி பெயருக்கு கைதாகி சில மணி நேரங்களில் பிணையில் வெளிவந்து விட்டார்.

சட்டம் அனைவருக்கும் சமம் என அரசியல் நிர்ணய சட்டம் சொல்கிறது.

என்ன கொடுமை சார் இது!
------------------------------------

பின்குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி,

கூகிள்,யூட்யூப் தளங்கள்,நன்றி!
*******