
பில்லா-2 : ஒரு கண்ணோட்டம்.
பில்லா-2 ஒரு வழியா பார்த்தாச்சு , படம் வெந்ததும் வேகாததுமா பொங்கின சோறாட்டம் இருக்கு .அதுக்கு முதல் காரணம் "corporate film production house"கள் முதல் பிரதி அடிப்படையில் படம் எடுக்கும் சமீபத்திய தயாரிப்பு கலாச்சாரம் தான் காரணம் எனலாம்.
அஷோக்லெய்லாண்ட், ஃபோபர்ஸ் ஊழல் புகழ் இந்துஜா குழுமத்தின் படத்தயாரிப்பு பிரிவான "IN Entertainment"(ine)க்கு முதல் பிரதி அடிப்படையில் பழைய நடிகரும் தயாரிப்பாளரும், மோகன்லாலின் மாமனாருமான அமரர்.கே.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸின் "சுரேஷ் பாலாஜி "கூட்டில் wideangle creations இப்படத்தினை தயாரித்துள்ளது.
முதல் பிரதியாக படம் எடுப்பது என்றால் தயாரிக்கும் போதே ஒரு தொகையை ஒதுக்கிவிடுவது கோடம்பாக்கம் கலாச்சாரம் அதன் அடிப்படையில் பணத்தை ஒதுக்கியதன் விளைவால் படம் ஏனோ தானோ என உருவாகியிருக்கிறது, பிரமாண்டம் எல்லாம் வார்த்தையில் தான் , ஹெலிகாப்டர் பயன்ப்படுத்தி ,வெளிநாட்டில் படம் எடுத்தால் பிரமாண்டம்னு சொல்லிக்கலாம்னு செய்து இருக்காங்க, உண்மையில் வெளிநாட்டில் படம் எடுப்பது இந்தியாவில் படம் எடுப்பதை விட சிக்கனமானது. இப்படத்திற்கு கூட ஜியார்ஜியா அரசு ஹெலிகாப்டர் எல்லாம் இலவசமாக கொடுத்தது முதல் பல உதவிகள் செய்துள்ளது.
பல நாடுகளில் அவங்களுடைய "லேண்ட் மார்க்,சுற்றுலா தலங்களை" படத்தில் காட்டினால் உதவி தொகை கூட கொடுப்பது வழக்கம். மலேஷியாவில் பெட்ரோனாஸ் டவர் படத்தில் தெரியும் படிக்காட்டினால் உதவித்தொகை உண்டாம்.எல்லாம் அவர்கள் நாட்டுக்கு சுற்றுலா விளம்பரமாக அமையும் என்று தான்.
அஜித்துக்கு சம்பளம் கொடுத்தது தான் படத்தில் மிகப்பெரிய செலவு, அப்புறம் கோட்டு ,கருப்பு குளிர்க்கண்ணாடி வாங்கிய வகையில் தான் அதிகம் செலவு ஆகி இருக்கும் :-))
மற்ற எல்லாரையும் அஜித் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு என "தூண்டில்" போட்டு அடிமாட்டு சம்பளத்திற்கு பிடிச்சு போட்டு இருப்பாங்க போல, பட்ஜெட்டை செயற்கையாக சுருக்கியதால் பில்லா-1 எடுத்த விஷ்ணுவர்தன்,நிரவ் ஷா எல்லாம் சம்பளம் கட்டுப்படியாகாமல் கழண்டுக்கொள்ள சக்ரி டோலெட்டி போன்ற அப்ரண்டீஸ் வச்சு படம் எடுத்துட்டாங்க போல.
படத்தில் தங்கள் இருப்பை ஓரளவுக்கு காட்டியவர்கள், கதையின் நாயகன் அஜித், ஒளிப்பதிவு இயக்குனர் ஆர்.டி.ஆர், "லார்ட் ஆஃப் தி ரிங் புகழ் "கணினி வரைகலை நிபுணர்,மது சூதனன் ஆகியோர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் பெயர்ப்பட்டியலில் போட மட்டுமே பயன்ப்பட்டிருக்கிறார்கள்.
பார்வதி ஓமணக்குட்டி ..ஓணான் குட்டி போல இருக்கு, சொன்னால் தான் காதலா படத்தில் மும்தாஜ் அறிமுகம் ஆனப்போது ஓணான் குட்டியை விட அழகாய் இருந்தாப்போல தெரியுது,அழகிப்போட்டியில் எல்லாம் கலந்துக்கொண்டப்பார்ட்டின்னு பில்ட் அப் வேற,அழகிப்போட்டியில எதைப்பார்த்து அழகின்னு முடிவு பண்ணாங்களோ :-))
பிரேசில் அழகின்னா சும்மா செதுக்கி வச்ச சிலையாட்டம் இருக்கும்னு பார்த்தால் செத்துப்போன பல்லியாட்டம் இருக்கு புருணா அப்துல்லா , T.B patient கு எல்லாம் பிகினி போட்டு நடமாட விட்டு இருக்காங்கப்பா :-))
படத்தின் முக்கிய பெண் கதாப்பத்திரங்கள் ரெண்டும் நடமாடும் செட் பிராப்பர்டி என்ற அளவிலேயே படத்தில் பயன்ப்படுத்தப்பட்டு இருக்காங்க,அதுக்கு மேலோ/கீழோ சொல்ல எதுவும் இல்லை :-))
கதையின் நாயகன் அஜித் antagonist என்பதால் கொலைகளுக்கும் நியாயம் கற்பிக்கிறார்கள்.பகவான் ஶ்ரீகிருஷ்ணாவுக்கு அடுத்து omni potent and omni present உள்ளவரா பில்லா ...டேவிட் பில்லா ஆக நடிச்சு இருக்கார் தல, எல்லாம் வல்லவராக வீழ்த்த முடியா மாவீரனாக எல்லா இடத்திலும் தோன்றுகிறார்(trivia:ajith means unconquered in sanskrit) உச்சபட்சமாக வில்லன் டிமிட்ரியின் ஹெலிகாப்டரிலும் பிரசன்னம் ஆகி ,டிமிட்ரியை(oosaravelli,force fame vidyut jamwal) சம்ஹாரம் செய்கிறார்.
பில்லாவின் மண்டையில அடிச்சாலும்,சுட்டாலும்,கத்தியால் குத்தினாலும் terminator -2 இல் வரும் cyborgT-1000 போல அசராம திரும்ப திரும்ப வந்து நிறைய பேரின் கதையை டெர்மினேட் செய்றார், பேசாம டெர்மினேட்டர்-2 என்றே படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம் :-))

கேங்க்ஸ்டர் படம் என்பதால் கொலைகளும் மாபியா ஸ்டைலில் இருக்க வேண்டும் என கழுத்தில்/தொண்டையில் குத்துகிறார்கள். கிளைமாக்சில் கோவா அமைச்சரை காதில் குத்துகிறார்கள் என நினைக்கிறேன் படத்தில் சென்சார் கருதி சரியாக காட்டவில்லை.
ஐஸ் கட்டி உடைக்கும் "ice pick" வைத்து காதில் குத்தி கொல்வது மாபியா ஸ்டைல், அதே போல கழுத்தில்/தொண்டையில் பல முறை குத்துவார்கள், மேலும் ஒவ்வொரு கொலைக்கும் ஒரு பொருள் உண்டு,அதன் மூலம் ஒரு மெசேஜ் சொல்வார்கள். மாபியாக்கள் கொலை செய்யும் முறைக்கு "execution" என்பார்கள்.
வாயில் சுட்டுக்கொன்றால் ரகசியத்தினை உளறியதற்கு தண்டனை, காதில் சுட்டாலோ,குத்திக்கொன்றாலோ அவனுக்கு ஏதோ ரகசியம் தெரிந்துவிட்டது என்பதால் கொன்றதாக பொருள்.கண்ணில் சுட்டால் ,ஒருவன் பார்க்க கூடாத ஒன்றை பார்த்த சாட்சி விட்டு வைக்க கூடாது எனக்கொன்றதாக பொருள்.
காவல் துறை கொலை நடந்த முறை வைத்து மாபியாக்கள் செய்த கொலையா இல்லை தனி நபர் செய்த கொலையா என முடிவு செய்து அதன் அடிப்படையில் விசாரணை செய்வார்கள்.
பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பது போல படத்தில் அடிக்கடி சூட் கேஸ் கொடுத்து சூட் கேஸ் வாங்குறாங்க ,அப்படினா கள்ளக்கடத்தல் செய்றாங்களாம், கஸ்டம்ஸ்ல மாட்டிக்கிட்ட சரக்கை சர்வசாதாரணமா போய் எடுத்துக்கிட்டு வராங்க, அதில கூட புதுசா எதுவும் யோசிக்கவில்லை.
கதைப்படி படம் 90களில் நடப்பதாக வருகிறது,ஆனால் நடு நடுவே மொபைல் போனில் எல்லாம் பேசிக்கிறாங்க, அந்த காலக்கட்டத்தில் மாபியாக்களுக்கு தனியா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்த ராசா யாரோ ?
புலம்பெயர் தமிழர் முகாமில் இரவில் ஒருவனை சர்வசாதாரணமாக சுட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரி பில்லாவை மட்டும் போட்டு தள்ளாமல் கடத்தல் நாடகம் எல்லாம் ஆடுகிறார்.
வசனம் இரா.முருகன் மற்றும் ஜாபர் முகம்மது, எல்லா வசனமும் "குத்து வசனங்களா" பார்த்து பார்த்து செதுக்கி இருக்காங்க :-))
அஞ்சு நிமிஷம் முன்னரே போனால் வேலைவெட்டி இல்லாமல் அலையுறான் சொல்லிடுவாங்க, லேட்டா போனால் பொறுப்பில்லை சொல்லிடுவாங்க,சரியான டைமுக்கு போனால் தான் நம்பிக்கை வரும்னு ஒரு நிர்வாகவியல் தத்துவ வசனம் எல்லாம் இருக்கு,இதை எடுத்துக்கொடுத்தது அனேகமா நிர்வாகவியல்பற்றி புத்தகம் போட்ட அந்த பிரபலப்பதிவராக தான் இருக்கும்னு நினைக்கிறேன்:-))
சந்தை மதிப்புள்ள நாயகன் அஜித்தை வீண் அடித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம், இதே கதையை கொஞ்சம் ,பட்டி ,டிங்கரிங் பார்த்து எடுத்திருந்தால் சூப்பர் ஹிட் ஆகும் வாய்ப்புள்ளது ,தவறவிட்டு விட்டார்கள், அல்லது கார்ப்பரேட் பணம் ,நமக்கு என்ன எதையோ எடுத்து சுருட்டிக்கொடுத்துவிட்டு லாபத்துடன் ஒதுங்கிக்கொள்ளலாம் என முதல் பிரதி எடுத்த wide angle creations நினைத்து இருக்கலாம்.
இதற்கு முன்னர் ஆட்லேப்ஸ், மோசர் பேயர், பிரமிட் சாய்மீரா, அய்ங்கரன் போன்ற கார்ப்பரேட் படத்தயாரிப்பாளர்களுக்கு இப்படி படம் எடுத்து தான் சங்கு ஊதினார்கள், இது போல படம் எடுத்துக்கொண்டிருந்தால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கார்ப்பரேட்கள் படம் எடுக்க முன் வரமாட்டார்கள் என்பதை executive producer ஆக செயல்படும் தமிழ் தயாரிப்பு படாதிபதிகள் உணர வேண்டும்.
hollywood பாணியில் prequel ஆக வந்த முதல் தமிழ்/இந்தியப்படம் என்ற அளவில் தமிழ் சினிமா வரலாற்றில் பில்லா-2விற்கு ஒரு பெயர் கிடைக்கும்,மற்றப்படி ஹாலிவுட்டிற்கும் பில்லா-2 விற்கும் சுமார் 8,969 மைல் தூரம் (சென்னையில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் அவ்ளோ தூரத்தில் இருக்கு)
இது திரைப்படத்தின் மீதான விமர்சனம் அல்ல , படத்தின் மீதான என்னுடைய கண்ணோட்டமே, நீங்கள் விமர்சனம் என நினைத்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல :-))
என்ன கொடுமை சார் இது !
*****
பூட்டாத பூட்டுக்கள்.

தலைவரே டாஸ்மாக்கிற்கு பூட்டுப்போடும் போராட்டம்னு அறிவிச்சாலும் அறிவிச்சிங்க ராத்திரி பத்து மணியானால் போதும் டாஸ்மாக் மதுபானக்கடையில இருந்து போன் போட்டு "கடைய பூட்டுற டைம் ஆச்சு சீக்கிரம் பூட்டு எடுத்துக்கிட்டு வாங்கன்னு" சொல்லிக்கலாய்க்கிறாங்க ...என்னால நிம்மதியா தூங்க முடியலை ...தூங்கி ஒரு வாரம் ஆச்சு அவ்வ்!
என்ன கொடுமை சார் இது!
*****
A Train to Hell.

புது தில்லியில் இருந்து கடந்த சனியன்று சென்னைக்கு புறப்பட்ட தமிழ்நாடு விரைவு தொடர் வண்டி இன்று (30-07-12)அதிகாலை நெல்லூர் அருகே வரும் போது பெரும் தீவிபத்தில் சிக்கியுள்ளது, தீவிபத்திற்கு காரணம் மின் கசிவு என்கிறார்கள், எஸ்-11 தூங்கும் வசதியுள்ள பெட்டியில் பயணித்த 72 பயணிகளில் சுமார் 50 பேர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலோனோர் தமிழகத்தினை சேர்ந்தவர்களாக இருப்பதற்கே வாய்ப்புள்ளது என்பது மிகவும் வருந்த தக்கது.
வழக்கம் போல மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் தலா 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இழப்பீடு இழந்த உயிர்களை மீட்டு தருமா?
தமிழகத்தில் திருச்சி ரயில் விபத்திற்காக பதவியை துறந்த அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் அமரர்."லால் பகதூர் சாஸ்திரியின்" ஆன்மா மன்னிக்குமா இவரை?
அவரது கட்சி தலைவி மம்தாவுக்கோ அரசியல் சண்டைப்போடவே நேரம் போதவில்லை, கட்சியின் அமைச்சர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என எங்கே கவனிக்க போகிறார்.
பெரும்பாலான இந்திய ரயில்ப்பெட்டிகள் பராமரிப்பு இன்றி குப்பை வண்டிப்போலவே இருக்கிறது. தண்டவாளங்களும், சிறியதும் பெரியதுமான பழைய பாலங்களும் பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்டவையே,அவை அனைத்தும் வலுவிழுந்து இப்பவோ அப்பவோ இடிய,உடைய தயாராக இருக்கின்றன.
இதனாலேயே இந்தியாவில் அடிக்கடி தொடர் வண்டிகள் தடம் புரள்வது, தண்டவாளத்தில் வெடிப்பு என்றெல்லாம் நடக்கிறது.பலவீனமான சிறிய பாலங்களில் இரயில்கள் மெதுவாக இயக்கபடுவதாலே பயண நேரம் அதிகம் ஆகிறது. உலகிலேயே சராசரி வேகம் குறைவாக உள்ள ரயில்வே அமைப்பு இந்தியாவாகும்.

இந்திய ரயில்வே துறை தான் உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட ,உலகின் நான்காவது பெரிய இருப்பு பாதை ஸ்தாபனம் ஆகும், மொத்தம் 64,015 கி.மீ நீளம் கொண்ட இருப்பு பாதைகளும், ஒரு நாளுக்கு 10 மில்லியன் பயணிகள் பயணிக்கும் வசதியும் கொண்டது.மேலும் இங்கிலாந்தில் முதல் ரயில் இயக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே இந்தியாவில் மும்பை -தானே இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1853 இல் பயணிகள் புகைவண்டி பயணம் துவங்கப்பட்டுவிட்டது.
அதற்கும் முன்னரே 1837 இல் சென்னையில் ரெட் ஹில்லுக்கும் பரங்கிமலைக்கும் இடையே கற்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது.1856 இல் சென்னையில் முதல் பயணிகள் புகைவண்டி ராயபுரத்திற்கும் வாலாஜாவிற்கும் இடையே இயக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு வரலாற்று புகழ் வாய்ந்த இந்திய ரயில்வே துறை வெள்ளைக்காரர்கள் விட்டு சென்றப்போது இருந்தது போலவே இன்றும் செயல்ப்பட்டு வருவது நம் இந்திய அரசியல்வாதிகளின் செயல்படும் லட்சணத்திற்கு சான்றாகும்.நமக்கு பின்னால் ரயில் போக்குவரத்து ஆரம்பித்த சீனா எல்லாம் எவ்வளவோ முன்னேறி எங்கோ போய்விட்டது. நாம் தொழில்நுட்பத்திலும், பாதுகாப்பு விஷயத்திலும் இன்னும் அசட்டையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ,உயிரிழப்புகள் சகஜமாகிவிட்டது.தினசரி இந்தியாவின் எங்கோ ஒரு பகுதியில் ரயில் விபத்து என செய்தி வருவது இயல்பான ஒன்றாகிவிட்டது.
இது போன்ற விபத்துக்களுக்கு காரணத்தினை மட்டும் அதிகாரிகள் வக்கணையாக கண்டுப்பிடித்து சொல்வார்கள் ஆனால் மீண்டும் நிகழாமல் தடுக்க எதுவும் செய்ய மாட்டார்கள், கேட்டால் டிவிஷன் ,மண்டலம், மத்தியம் எனப்போய் அமைச்சரிடம் அனுமதி வாங்கி வரவேண்டும் ,அதற்குள் ஆட்சி மாறி புது அமைச்சர் வந்திருப்பார் ,அவர் மீண்டும் ஆரம்பத்தில இருந்து எல்லாம் பார்க்க ஆரம்பிப்பார், இப்படியே ஒரு வேலையும் நடக்காமல் துருப்பிடித்து இற்றுப்போன ரயில்பெட்டிகளை வைத்து ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். அதில் டிக்கெட் வாங்க முண்டியடித்துக்கொண்டு மக்களும் நிற்பார்கள்.உயிரைப்பற்றி மக்களுக்கும் கவலையில்லை ஆள்வோருக்கும் கவலை இல்லை.நம் தேசமே சித்தம் போக்கு சிவன் போக்கு என அதுப்பாட்டுக்கு தானாக இயங்கிக்கொண்டு இருக்கு.
வெளியில் போய் மீண்டும் உயிரோடு வீட்டுக்கு திரும்புவது என்பதற்கு எவ்வகை உத்தரவாதமும் இல்லாத மரண தேசமாக விளங்குகிறது நம் நாடு. அவரவர் உயிருக்கு அவர்களே பொறுப்பு, உயிரோடு பிழைத்துக்கிடப்பது அதிஷ்டம் அல்லது பூர்வ ஜென்ம புண்ணியம் என்று தான் சொல்லவேண்டும்.
இரயில் பயணங்களில் விபத்துகள் முடிவதில்லை!
என்ன கொடுமை சார் இது!
---------
பின் குறிப்பு:
தகவல்,படங்கள் உதவி, விக்கி, கூகிள், யூட்யூப்,இந்து நாளேடு, ஆசியன் கரஸ்பாண்டன்ட் இணைய தளங்கள் நன்றி!
*****