Friday, September 07, 2012

கற்றது தமிழ்-2



தமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு.

இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்களோ தங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம், மேம்படுத்தப்படும். நன்றி!

பரவாயில்லை.

இச்சொல் பர்வா நஹி என்ற வட மொழி சொல்லில் இருந்து உருவானது.

பர்வா = கேர் (care), நஹி (nahi)=இல்லை,

பர்வா நஹி என்றால் ஐ டோண்ட் கேர்(i don't care) அல்லது நோ பிராப்ளம் (no problem, no mention)என சொல்வதாகும்.

அதனை அப்படியே தமிழ்ப்படுத்தி பரவாயில்லை என்றாக்கிவிட்டார்கள்.(தெலுங்கில் பர்வாலேது)

பரவாயில்லைக்கு இணைச்சொல் ,

கவலையில்லை,

பொருட்படுத்தவில்லை .

என சொல்லலாம்.

புத்தி.

புத்தி ( buddhi)என்பதும் வடமொழி இதற்கு ஞானம் என வடமொழியில் பொருள்,

buddhi-> buddha->buddhar ->.buddham

புத்தியுடையவர் புத்தர், அதாவது ஞானம் பெற்றவர், ஞானத்தினை உள்ளடக்கமாககொண்ட ஒன்று புத்தகம்.

புத்தியினை புகட்டும் செயல் போதித்தல் இதன் பெயர்ச்சொல் போதை , அதாவது ஞானம். போதி தருமர் , ஏழாம் அறிவெல்லாம் நினைவுக்கு வருமே.

புத்திக்கு இணையான தமிழ்ச்சொல் அறிவு,

ஞானம் என்பது அறிவு என்றாலும் அதில் உச்ச நிலை ஆகும் எனவே அதனை அறிவொளி எனலாம்.

எனவே

#புத்தி (knowledge)- அறிவு

#ஞானம் (wisdom)- அறிவொளி.

* முன்னர் தமிழக துவக்கப்பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்திற்கு அறிவொளி இயக்கம் என்றே பெயரிடப்பட்டிருந்தது, பின்னர் மத்திய அரசின் நிதியுடன் "சர்வ சிக்‌ஷா அபியான்" என மாற்றம் பெற்றது.

*அறிவொளி என்ற பெயரில் புகழ்மிக்க பட்டிமன்ற நடுவர் ஒருவரும் உள்ளார்.

#போதித்தல்(educate)- கற்பித்தல்

#புத்தகம்(book)- நூல்

---------------

ஐஸ் கிரீம்(ice cream):



ஐஸ்கிரீம் என்பது பால்,சர்க்கரை , மற்றும் சுவையூட்டி இவற்றினை காற்று ,நீர் கலந்த கூழ்ம (colloidal emulsion)வடிவில் உறைவித்து தயாரிப்பது ஆகும். எனவே இதனை ,

உறைகூழ் அல்லது

பனிக்கூழ் அல்லது

குளிர் கூழ் எனலாம்

முதன் முதலில் பனிக்கூழினை உண்ணக்கூடிய கூம்பு வடிவ ரொட்டியில் (cone icecream) வைத்து கொடுத்தது Charles Menches / Arnold Fomachou ஆவார்கள் ,அமெரிக்காவில் கி.பி 1904 இல் World's Fair in St. Louis. இது நிகழ்வுற்றது.
-------------

#சம்பவம் வடமொழி.

நிகழ்வு தமிழ்.

# மனிதன் வடமொழி ,

மனுஷ் , மனுஷன்,- மனிதன்

எனவே சரியான தமிழ் சொல்

மாந்தர்,மாந்தன்.

எடுத்துக்காட்டு:

தொட்டனைத் தூறு மணற்கேணி "மாந்தர்க்கு "
கற்றனைத் தூறும் அறிவு

# நபர் -அரபி,

தமிழ்ச்சொல் - ஆள், அல்லது ஒரு நபர்=ஒருவர்/ஒருவன், சில நபர்= சிலர்


#personality- ஆளுமை.

# பிரபலம் வடமொழி,

இணையான தமிழ்ச்சொல்.

புகழ்ப்பெற்றவர், புகழாளர்,

பிரபல பதிவர் என சொல்லாமல் புகழ்ப்பெற்ற பதிவர் எனலாம் :-))

#சந்தேகம் வடமொழி,

அய்யம் ,அய்யுறுவு என்பதே தமிழ்.

#சந்தோஷம் வடமொழி ,

இணையான தமிழ்ச்சொற்கள்:

மகிழ்ச்சி , குதூகலம்*,களிப்பு, உவகை, பெரு மகிழ்ச்சி எனில் பேருவுவகை எனலாம்,

*களிப்பு என்பதில் இருந்து குதூகளம் என வந்திருக்கலாம் என நினைக்கிறேன், சார்வாகன் கூறியப்படி குதூகலம் என மாற்றியுள்ளேன், சரியான சொல்லினை மீண்டும் சரிப்பார்க்க வேண்டும்.

# சந்திரன் வடமொழி,

நிலா, திங்கள், மதி என்பன தமிழ்.

# சூரியன் வடமொழி,

கதிரவன், பகலவன், ஆகியன தமிழ்.

# அம்மாவாசை ,வட மொழி , அமாவாஸ்ய என்பதில் இருந்து மருவிய சொல்,

நேரடியாக மொழிப்பெயர்த்தால் முதல் வளர் நிலவு நாள் என வரும், இதனை "இருட்மதி நாள்"(நிலவற்ற நாள்) என சொல்லலாம் என நினைக்கிறேன்.

*மதியிலி நாள், ஆக்கம் சார்வாகன்.(மதியிலி நாள் என்றால் முட்டாள் தினம்-ஏப்ரல்-1 என நினைத்துவிட்டால் என்ன செய்வது?)

மேலும் புதுப்பிறை நாள் எனவும் அழைக்கலாம் என நினைக்கிறேன்.

சரியான சொல்லினை தெரிந்தவர்கள் கூறலாம்.
---------------
வலைப்பதிவர் சொல்லகராதி:

பெரும்பாலோருக்கு வலைப்பதிவில் பயன்ப்படுத்தும் வலைப்பதிவு சார்ந்த இணையான தமிழ் சொற்கள் தெரிந்திருக்கும் ஆனாலும் மீண்டும் நினைவுறுத்த எனக்கு தெரிந்த சில சொற்களை தொகுத்துள்ளேன்.

Blog - வலைப்பூ, வலைப்பதிவு

web address-உரல்

link-சுட்டி, தொடுப்பு

comment- மறுமொழி,பின்னூட்டம்,

comment moderation-மறுமொழி மட்டுறுத்தல்

followers-பின் தொடர்பவர்கள்

follow up- பின் தொடர

up load- தரவேற்றம்.

down load-தரவிறக்கம்.

search engine-தேடு பொறி.

mouse-எலிக்குட்டி ,சுட்டுவான்.

keyboard-தட்டச்சுப்பலகை.

hard disk-வன் தட்டு/வட்டு, இறுவட்டு.

dvd-குறுவட்டு.

computer monitor- காட்சி திரை,கணினி திரை.

central processing unit(cpu)- நடுவண் செயல் அலகு,நடுவண் இயங்கலகு,செயலி.

தொடரும்...
----------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், தமிழ் விக்‌ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகர முதலி தளங்கள்,நன்றி!
-------------