Thursday, November 17, 2011

பேருந்து,மின்சாரம், பால் இன்ன பிற விலையுர்வை செய்த மாண்புமிகு தமிழக முதல்வரைப்பாராட்டுவோம்! ஆதரிப்போம்!



பேருந்து,மின்சாரம், பால் இன்ன பிற விலையுர்வை செய்த மாண்புமிகு தமிழக முதல்வரைப்பாராட்டுவோம்! ஆதரிப்போம்!




மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா, அவர்களை துணிவுள்ளம் கொண்ட இரும்பு பெண்மணி என்று வர்ணிப்பார்கள் , அவர் எதை செய்தாலும் தீர்க்கமாக செய்வாராம். அவர் அளவுக்கு துணிவுள்ள அரசியல்வாதி இந்தியாவில் இல்லை என்றால் அது மிகை ஆகாது.

சட்டமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து , மக்கள் சேவை செய்ய வாய்ப்பை பெற்றவர், ஊழல் செய்தவர்கள் வெற்றிகரமாக வீட்டுக்கு அனுப்பியவர் , ஆனால் உள்ளாட்சியிலோ கூட்டில் இருந்தவர்களுக்கு விடுதலை அளித்து , சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொடுத்த ராசதந்திரி, துணிச்சலாக தனியாக களம் கண்டு பெருவாரியாக வென்றுக்காட்டிய வித்தகர்.

தொலைநோக்கு கொண்ட சிறந்த அரசியல்நிர்வாகியான அவர் , இனிமேல் பாராளூமன்ற தேர்தல் மட்டுமே அடுத்து வரும் என்பதையும் சிறப்பாக கணித்து உள்ளார். அடுத்த சட்ட மன்ற தேர்தலோ நான்கு ஆண்டுகளுக்கு அப்பால் தான். இடைப்பட்டக்காலத்தில் அதிரடிக்காட்ட வாய்ப்பில்லாமல் போய் விட்டதே, துணிச்சலைக்காட்ட என்ன செய்யலாம் , என மற்றவர்களைப்போல் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் , , கணிதம்,புள்ளியியல் ,பொருளாதார அறிவினை செயல்ப்படுத்தி துணிச்சலாக பால், மின்சாரம், பேருந்துக்கட்டணம் ஆகியவற்றை மிகவும் நியாயமாக உயர்த்தியுள்ளார்!

முதல்வராக இருக்கும் போதே வழக்கு மன்றத்தில் மரக்கூண்டு
(" குற்றவாளி"க்கூண்டுனு சொன்னா கோவி திட்டு வார்)ஏறி துணிச்சலாக நீதிபதிகளே வியக்கும் வண்ணம் பதில் கூறி சாதனைப்படைத்தவரின் மணி மகுடத்தில் மேலும் ஒரு நவரத்தினமாக விலையுர்வு அறிவிப்பு ஜொலிக்கிறது என்று சொன்னால் மிகையல்ல!

இந்த விலையுயர்வினை அனைவரும் மனம் திறந்து பாராட்டி; வரவேற்க வேண்டும், எதிர்ப்பவர்கள் பொருளாதார அறிவில்லாதவர்கள், நம் நாட்டின், குறிப்பாக தமிழ் நாட்டின் கலாச்சாரம், வரலாறு அறியாதவர்கள் ஆவார்கள்.

மாட்டு வண்டி, குதிரை வண்டியில் கட்டு சோறுக்கட்டிக்கொண்டு பயணித்தை மறந்து அடிக்கடி பேருந்தில் ஏறி பயணம் செய்யலாமா, நம் பாரம்பரியம் என்னாவது. மாடு,குதிரை புகை விடாது, சாணிப்போடும் அவை இயற்கை உரம், அப்படி இருக்கையில் புகை கக்கும் பேருந்தில் போக ஆசைப்படுவது சுற்று சூழலுக்கு கேடு.

சுற்று சூழல் காக்க வேண்டும்,புவி வெப்பமாதல் தடுக்க வேண்டும் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள், என்பதால் , கட்டணத்தை உயர்த்தினாலாவது பேருந்து பயணம் தவிர்ப்பார்கள் ,மேலும் பலர் பூட் போர்டில் தொங்கி கையைக்காலை உடைத்துக்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டுல எல்லாம் மலிவா இருப்பதால மத்திய அரசு எவ்வளவு தான் பெட்ரோல் விலை ஏத்தினாலும் கவலைப்படாம வாங்கி ஊத்திக்கிட்டு,பக்கத்து தெருவிற்கு போக கூட மாமானார் வாங்கிக்கொடுத்த பைக்கிலோ, அல்லது தவணையில் தறான்னு வாங்கிய வண்டியிலோ போறாங்க,இதனால் இளம் வயதிலே தொப்பை,கொழுப்பு எல்லாம் வருது, வாக்கிங் போக சொன்னா கேட்பதில்லை,என்பதால் தான் மதியூகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளார் நம்ம முதல்வர்.

இதனால் இப்போ எத்தனை நன்மைகள்,தமிழனோட பணம் தமிழ் நாட்டிலயே செலவாகும், இனிமே மத்திய அரசை நிதிக்கேட்க தேவையில்லை, மத்திய அரசுக்கு விலை ஏற்ற இருக்கும் உரிமை மாநில அரசுக்கும் இருக்குனு காட்டி மாநில உரிமையை வலுவாக்கி இருக்கோம். என்பதை மானமுள்ள தமிழர்கள் சற்றே எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த காலத்தில் வீட்டுக்கு குவளையில் பால் எடுத்து வந்து ஊற்றிய கோவிந்த சாமி, கோபால் போன்ற நம்ம ஊரு பால்காரர்களை நன்றீக்கெட்ட தனமாக மறந்து விட்டு இரண்டு நாளுக்கு முன்னர் கறந்து ,வெண்ணை எடுக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பழையப்பாலை பாலித்தீன் கவரில் அடைத்து விற்றால், அதை வாங்கிக்குடிக்க எப்படி பழகிக்கொண்டோம். இது ஏகாதிபத்திய நாடுகளின் சதி, இதனால் பாலித்தீன் உறைகள் அதிகரித்து மண்ணை மாசுப்படுத்துகிறது.

மேலும் வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னர் வரை வரக்காபி தான் குடித்து வந்தோம் என்பதையும் மறந்து விட்டோம். திடீர் என வெள்ளைக்காரனைப்பார்த்து வெள்ளைப்பால் வாங்கி குடித்தோம் ,மானகெட்ட தமிழனை எப்படி திருத்துவது. பழசை எப்படி நினைக்க வைப்பது , எனவே போட்டார்கள் மதியூக மந்திரிகள் கூட்டத்தை , ஏற்றினார்கள் பால் விலையை என்ன ஒரு துணிச்சல்,ராச தந்திரம். இது போன்ற திறமைகள் இந்தியாவில் ஏன் உலகத்திலேயே நம்ம முதல்வர் அம்மாவை தவிர வேற யாருக்காவது இருக்குமா?

இதன் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் விளைந்துள்ளது, பழைய பாரம்பரியம் மீண்டும் நியாபகம் வந்துள்ளது.வரக்காபியில் சுக்கு, மிளகு,பன வெல்லம் போட்டு குடித்தால் தொண்டைக்கு நல்லது., சளீ காய்ச்சல் ,தும்மல், இருமல் வராது, நமக்கு மருத்துவ செலவு மிச்சம் ஆகும்.ஆரோக்கிய வாழ்வு லைப்பாய் சோப் போட்டுக்குளிக்காமலே அனைவருக்கும் வரும்.

மேலும் பாலித்தீன் உறையில் அடைக்கப்பட்ட பழைய பால் வாங்குவது குறையும், அப்படியே பால் ஊத்திக்காப்பி குடிக்க ஆசைப்படும் பேராசைக்காரர்களும் உள்ளூரில் மாடு வைத்து பால் கறந்து விற்கும் கோவிந்தன், கோபாலனை நாடுவார்கள், இதனால் உள்ளூர் வேலை வாய்ப்பு பொருளாதாரம் கூடும்.பாக்கெட் பால் விற்பதால் ஏகாதிப்பத்திய பெரு முதலாளீகள் மட்டுமே கொள்ளையாக லாபம் ஈட்டுவார்கள்.

மேலும் இலவச,ஆடு,மாடுகள் வழங்கப்பட இருக்கிறது அதை வைத்து எளிதாக பிழைக்க முடியும். மாட்டுப்பால் கிடைக்காத போது காந்திய வழியில் ஆட்டுப்பாலும் வாங்குவார்கள்.பாலித்தீன் பாக்கெட்கள் குறையும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.

இதெல்லாம் சரி மின்சாரக்கட்டணம் ஏன் ஏற்ற வேண்டும் என்றுக்கேட்கலாம். பின்ன என்ன மின்சாரம் தாராளமா ,மலிவாக்கொடுத்தா அறிவு வளர மாட்டேன்குது , மக்கள் டீவி தான் பாக்குது. அந்த காலத்தில எல்லாம் நல்லாப்படிச்சு பெரிய ஆளானவங்கள கேட்ட நான் தெருவிளக்கு வெளிச்சத்தில படிச்சு பெரிய ஆளானேனுசொல்வாங்க, இப்ப யாராவது அப்படி சொல்றாங்களா? மீண்டும் அப்படி பெருமையா சொல்ல வைக்க வேண்டாமா?

நிறையப்பேரு சும்மா மின்விசிறி, விளக்கு எல்லாம் போட்டு வைக்கிறாங்க, ஆஃப் பண்ன மாட்டேன்கிறாங்க, மின்சாரத்தை சேமிக்க சொன்னா கேட்கிறாங்களா? விலையை ஏத்தினா அப்படி செய்வாங்களா? அதான் ஒரு திட்டம் போட்டு மின்சாரத்த சேமிக்கவும், புவி வெப்பமாதலை தடுக்கவும் 4 மணி நேரம் மிந்தடை செய்துப்பார்த்தோம் அப்பவும் அடங்காம காசு  இருக்கும் திமிரில் இன்வெர்ட்டர் வாங்கிப்போட்டு மின்விசிறி,விளக்கு எறிய வைக்கிறாங்க.சிலபேர் அப்போ கூட டீவி சீரியல் பாக்கிறாங்க!

இன்வெர்ட்டர் வாங்குகிற அளவுக்கு காசு இருக்க மக்கள் கஷ்டப்படுகிற அரசாங்கத்துக்கு வருமானம் வர வழி செய்யக்கூடாதா அதான் மின் கட்டணம் உயர்வு.இனிமே மின்சாரம் விரயமாகாது, புவி வெப்பம் ஆகாது, நிறைய அறிஞர்கள் தெரு விளக்கில் படித்து உருவாகுவார்கள்.

இப்படி எதை செய்தாலும் துணிவுடனும், மக்கள் நலனுக்காகவும் பல நோக்கு பார்வையில் தாயுள்ளத்துடன் செய்பவர் தான் தமிழக முதல்வர் அம்மா அவர்கள், அவர்களை நாம் அனைவரும் மனம் திறந்து பாராட்ட வேண்டும் தினம் "அம்மானா சும்மா இல்லைடா "என துதிக்க வேண்டும்.அப்படி செய்யாம பதிவுப்போட்டு வசைப்பாடினா ,பதிவுகளுக்கு சேவை வரி விதிக்கப்படும்.குறிப்பா சினிமா பதிவுகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படும்.