Thursday, July 26, 2012

DAYLIGHT ROBBERY-கல்வி வியாபாரம்.

(மரத்தடிப்பள்ளி)

கல்வி வியாபாரம்:

தற்போது பொறியியல் படிப்பிற்கான இடங்களை நிரப்புவதற்கான ஒற்றை சாளர முறை கலந்தாய்வு அண்ணாப்பல்கலை,சென்னையில் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்.இதில் அரசுப்பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், அண்ணாப்பல்கலையுடன் இணைப்பு பெற்ற சுமார் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 50% சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைப்பெறும்.

இதனையொட்டி தனியார்ப்பொறியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ஒதுக்கப்ப்படும் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு பொறியியல்ப்படிப்புகளுக்கான புதிய கல்விக்கட்டணத்தினை ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் உயர்த்தி அண்ணாப்பல்கலை அறிவித்துள்ளது,
கட்டண உயர்வு விவரம்

கவுன்சிலிங் இடங்கள்:

பழைய கட்டணம்: ரூ.32,500
புதிய கட்டணம்: ரூ.40,000
அதிகரித்த கட்டணம்: ரூ.7,500

நிர்வாக ஒதுக்கீடு இடங்கள்:

பழைய கட்டணம்: ரூ.62,500
புதிய கட்டணம்: ரூ.70,000
உயர்வு: ரூ.7,500

இவற்றில், தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவருக்கு, ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம், 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகளில் சேரும் மாணவருக்கு, 40 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டண அறிவிப்பில் கவனிக்க வேண்டியது என்னவெனில் ,அண்ணாப்பல்கலை அறிவித்துள்ள இக்கட்டணம் ஓர் ஆண்டு முழுவதற்குமான கட்டணம், ஆனால் கல்லூரிகளோ இக்கட்டணத்தினை ஒரு செமஸ்டருக்கு என வசூலித்து வருகின்றதாக தெரிய வருகிறது. இது இப்போது மட்டுமல்ல ,முன்னர் இருந்தே ஆண்டுக்கட்டணத்தினை செமஸ்டர் கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்கள்.ஆனால் அப்போது சில கல்லூரிகளே அப்படி செய்து வந்துள்ளன. , தற்சமயம் அனைத்துக்கல்லூரிகளும் இந்நடவடிக்கையில் ஈடுபடுகின்றனவாம்.

தேசியத்தரக்கட்டுப்பாட்டு சான்று பெற்றக்கல்லூரிகளில் 45,000,மற்றவை 40,000 என ஓர் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினை ஒரு செமஸ்டருக்கு வசுலிப்பதன் மூலம் ஆண்டுக்கு இரு மடங்கு கட்டணமாக முறையே 90,000, மற்றும் 80,000 ஆயிரம் என மாணவர்களிடம் வசூலித்து கொள்ளையடிக்கின்றன தனியார் பொறியியல் கல்லூரிகள். இது மட்டும் அல்லாமல் விடுதி, பேருந்து , புத்தகம்,நோட், லேப் என பல கட்டணங்கள் உண்டு.

பல்கலை கழக வட்டாரத்தில் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்ததில் இது ஆண்டுக்கட்டணம் என்றே சொல்கிறார்கள், ஆனால் மாணவர்கள் வட்டத்தில் செமஸ்டருக்கு என்று சொல்கிறார்கள்.அரசு அறிவித்த கட்டணம் மட்டும் வசூலிப்பதாக சொல்லிக்கொள்ளும் கல்லூரிகளும் இப்படியாக இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது , மாணவர்களின் பெற்றோருக்கும் தெரியவில்லையா, இல்லை அரசுக்கும் தெரியவில்லையா , இது பற்றி வெளியில் அதிகம் தெரியாமலே பெரும் கல்வி கட்டணக்கொள்ளை நடப்பதாக தெரிகிறது.

இது குறித்து முறையான அரசு அறிவிப்பின் நகல் கிடைக்குமா என தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைத்தால் சரியான விளக்கம் கிடைக்கும்.

இது நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்வது , எந்தளவு சரியாக இருக்கும் என தெரியாததால் கொஞ்ச நாளாக தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் ஆண்டுக்கட்டணம் என உறுதியாக சொல்லிவிட்டார்கள், கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டண நிலையை உறுதி சொல்ல முடியாத நிலை காரணம் ,பல கல்லூரிகளில் பலப்பெயரில் வசூலிக்கிறார்கள், பலரையும் கேட்டுவிட்டேன் அனைவரும் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் தான் சொல்கிறார்கள்.சென்னையில் ஒரு பெயர்ப்பெற்ற கல்லூரியில் ஆண்டுக்கு 1,70,000 வாங்குகிறார்களாம். இதெல்லாம் எந்தக்கணக்கில் என்றே புரியவில்லை :-))

வங்கியில் கல்விக்கடன்:

பெரும்பாலும் வங்கியில் கல்விக்கடன் கொடுக்கவில்லை மாணவர்களை அலையவைக்கிறார்கள் ,மாணவர்கள் பாவம் என்பது போலவே செய்திகள் அதிகம் வருகின்றது. ஆனால் வங்கிக்கல்விக்கடனின் மறுபக்கத்தினை பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது.

இது வரையில் கல்விக்கடன் பெற்றவர்களில் 50% சதவீதம் பேர் கடனை திருப்பி செலுத்தவே இல்லையாம். மேலும் கல்விக்கடன் கொடுக்கும் வங்கிகள் எல்லாம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே , தனியார் வங்கிகள் கல்விக்கடன் கொடுப்பதில்லை. கடன் வசூலாகவில்லை எனில் அதனை வாராக்கடன் என அறிவித்து , செயல்ப்படாத சொத்து (Non performing assets)என தேசிய வங்கிகள் அறிவித்து விடும்.புள்ளி விவரத்தில் பார்த்தால் அவை வங்கியின் சொத்து மதிப்பாக தெரியும் ஆனால் வங்கியின் உண்மையான சொத்து மதிப்பு குறைவாக இருக்கும் என்பதால் ஆண்டு தணிக்கை அறிக்கையில் வங்கியின் நிகர லாபம் குறைவாகவே இருக்கும்.

வங்கி நட்டம் அடையும் எனில் அதனை சரிக்கட்ட அரசு தான் நிதி ஒதுக்க வேண்டும், அது மக்கள் பணம் தானே, எனவே வங்கியில் கடன் வாங்கிப்படித்துவிட்டு கட்டாமல் போகும் மாணவர்கள் எல்லாம் மக்கள் பணத்தில் படித்தவர்களே. அவர்கள் மக்கள் பணத்தினை எடுத்து தனியார் கல்வி வியாபாரிகளுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறார்கள்.

(சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளி)

வங்கியில் கல்விக்கடன் கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் எல்லாம் உண்மையான ஏழை மாணவர்களே, ஓரளவு நடுத்தர வர்க்க மாணவர்கள் யாரையாவது சிபாரிசு பிடித்து ,வங்கி நிர்வாகியை சரிக்கட்டி கடன் வாங்கிவிடுகிறார்கள்,அவர்களே கடைசியில் கடனைக்கட்டாமல் போவது.

மேலும் பொருளாதர் ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் கீழ் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டிக்கு அரசு மாநியம் அளிக்கிறது.ஆனால் இம்மாநியமும் நடுத்தரவர்க்க மாணவர்களுக்கே போய் சேர்கிறது.ஆனால் அரசின் பார்வையில் எல்லாம் ஏழை மாணவர்களுக்கு போய் சேர்வதாக கணக்கில் வந்து விடுகிறது. நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏழை மாணவர்களின் மாநியத்தினை அனுபவிக்க வங்கி கடன் கொடுக்க வேண்டுமா?

வங்கிகள் கல்விக்கடன் கொடுப்பதிலும் பாரபட்சமாக நடந்துக்கொள்வதால் உண்மையான ஏழை மாணவனின் கல்விக்கனவு நிறைவேறாமல் இன்றும் கஷ்டப்படுகிறான், ஆனால் ஊடகங்களோ வங்கிகளை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு , மாநியத்தினை முறைகேடாக அனுபவிக்கும் மாணவர்களை கண்டுக்கொள்வதில்லை.

கல்விக்கட்டணம் எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை , அதனை வங்கிக்கடனாக கொடுக்க வேண்டும், திருப்பிக்கட்டுவதும் கட்டாததும் எங்கள் இஷ்டம் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் போலும். வங்கிக்கடன் கொடுக்கவில்லை என்று குறை சொல்லும் முன்னர் , கடன் வாங்கிப்படிக்க வைக்கும் அளவுக்கு கல்விக்கட்டணம் அதிகமாக இருப்பதை ஏன் என கேள்விக்கேட்க ஒருவரும் முன்வருவதில்லை.

வங்கியின் பணமோ, மக்களின் பணமோ ,எப்படியாவது வசூலித்து கல்வி வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதையே இன்றைய கல்வி வியாபாரிகள் கொள்கையாக வைத்துள்ளார்கள்.

நம் மக்களும் சரியான வேலைக்கிடைக்காவிட்டால் இக்கடனை எப்படி அடைப்பது என்று யோசிப்பதில்லை, வேலை கிடைக்கவில்லை என்றால் கடனை கட்ட தேவையில்லை, யார் வந்து கேட்கப்போகிறார்கள் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டதாக தெரிகிறது.

இன்றைய நிலையில் ஒரு பொறியல் கல்லூரி மாணவனுக்கு வேலை உத்தரவாதமோ இல்லையோ நான்கு லட்சத்துக்கு குறையாமல் கடன்காரன் ஆகிடுவது நிச்சயம்.இப்படியான கல்வி சூழல் நிலவும் ஒரு நாடு வளமான,வலிமையான நாடாக எப்படி மாறும்.

வசதியில்லாத எத்தனையோ மாணவர்கள் வங்கிக்கடன் வாங்கும் சூத்திரம் தெரியாமல் கலைக்கல்லூரியில் தான் படித்துக்கொண்டிருக்கிறார்கள், வசதிப்படைத்த ,வங்கியில் கடன் வாங்கும் சூத்திரம் தெரிந்தவர்களே பொறியியலில் சேர முடிகிறது. அந்த சூத்திரம் என்பது வேறொன்றும் இல்லை எல்லா வங்கியிலும் கமிஷன் வாங்கிக்கொண்டு கடன் பெற்று தர ஏஜெண்டுகள் உள்ளார்கள். அவர்களுக்கு உரிய கட்டிங்க் கொடுத்து விட்டால் , கேள்வியே இல்லாமல் கடன் கொடுக்கப்பட்டுவிடும்.கமிஷன் கொடுக்க தேவைப்படும் குறைந்த பட்ச பணமும் கையில் இல்லாத ஏழைமாணவர்களுக்கு வங்கிக்கடன் எட்டாக்கனியே.

இதன் மூலம் கல்வி வியாபாரிகளுக்கு வியாபாரமும் நன்றாக நடக்கிறது. ஊடகங்களும் கடன் கொடுக்காத வங்கியினை மட்டுமே வெளிச்சம் போட்டுக்காட்டும், ஆனால் கடன் வாங்கியவர்கள், மற்றும் கட்டாதவர்கள், போலியாக வறுமைக்கோட்டுக்கு கீழ் என சொல்லி வட்டியில் மானியம் பெற்று பலன் அடைந்த வசதியானவர்களையோ அல்லது கட்டணக்கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்களையோ கண்டுக்கொள்வதே இல்லை.

நம் நாட்டில் கடனோ ,கல்வியோ ஏழைகளுக்கு என்றும் எட்டாக்கனி தான் ,ஏழைகளின் பெயரால் யாருக்கோ பலன் போய் சேர்ந்துவிடும்.

----------
பின் குறிப்பு:

படம் உதவி, கூகிள், இந்து நாளேடு,நன்றி!

*****