Saturday, January 14, 2012

புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!







தை-1 இல் புத்தாண்டு கொண்டாடப்படும் என அரசு அறிவித்தவுடன் வலைப்பதிவுலகில் பல்வேறு ஆதரவு , எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பிவிட்டது.ஆதரவு தெரிவித்தவர்கள் கூற்று நியாயமாக இருந்தது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதோ வறட்டு விவாதமாக ஒலித்தது.

மாற்றியது தவறு என சொன்னப் பலப்பதிவுகளிலும் , இது சரியான மாற்றம் தான் எனப்பல பின்னூட்டங்கள் இட்டு சொன்னப்போதிலும், அவை சரியானப்படி நிறையப்பேரை சென்றடையவில்லை , எனவே ஒருப்பதிவாக இட்டு எனது கருத்தைப் பதிவு செய்து வைக்கிறேன்.

தைப்புத்தாண்டு தேவையில்லை என்பவர்களின் வாதம்,

1) ஏப்ரலில் வருவது தான் சரி,
2) காலம் காலமாக வருவது
3)விஞ்ஞான முறைப்படி அது சரியானது.
4) தைப்புத்தாண்டு என்பது யாருக்கும் தெரியாத வழக்கில் இல்லாத ஒன்று, திடீர் என அரசு எதேச்சதிகாரமாக அறிவித்துள்ளது

இவை தான் முக்கியமான குற்றச்சாட்டாக எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகிறது. அவர்கள் சொல்வது சரியல்ல என்பதை விளக்கவே இப்பதிவு.

ஏப்ரலில் புத்தாண்டு வருவது சரியா?

அப்போது தான் கோடைக்காலம் துவங்குகிறது அதனால் அப்போது வரவேண்டும் என்கிறார்கள், அது அப்படி இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம். எத்தனையோ பருவங்கள் இருக்க ஏன் கோடையில் வர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தைப்பொங்கலில் இருந்தே கோடையின் துவக்கம் நமக்கு ஆரம்பிக்கிறது, அறுவடை எல்லாம் முடிந்திருக்கும் அப்போது.எனவே அப்பருவத்தின் துவக்கத்தினை புத்தாண்டாக வைத்தால் என்ன?

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதனால் "summer solstice " மார்ச் 21 இல் வருவதை ஒட்டி புத்தாண்டை ஏப்ரலில் கொண்டாலாம் என்கிறார்கள்.(ஆனால் உண்மையில் இந்தியக்காலண்டர்கள் லுனி சோலார் காலண்டர்கள், தமிழ் காலண்டர் முழுக்க சூரியக்காலண்டர் )

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் வருடாந்திர பயணத்தின் அடிப்படையில் ஒன்று அதன் துவக்கத்தில் அல்லது இறுதியில் இருந்து ஆண்டை ஆரம்பிக்கலாமே, ஏன் இடையில். இதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சூரியன் என்பது நிலையானது , அது நகர்வதில்லை ஆனால் பூமியின் சுழற்சி, அதன் 23.5 கோண சாய்வு ஆகியவற்றால் நகர்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, அதன் அடிப்படையிலே இரவு பகல், பருவக்கால மாற்றங்கள் ஏற்படுகிறது.

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது பூமியின் சுழற்சியால், இது தினசரி சூரியனின் நகர்வு நிகழ்வு எனக்கொள்ளலாம்,

இதே போல சூரியனின் வருடாந்திர நகர்வு நிகழுவும் இருக்கிறது, இதற்கு காரணம் பூமி அதன் அச்சில் 23.5 கோணாம் சாய்வாக சூரியனை சுற்றிவருவது.

பூமியை வடக்கு தெற்காக இரண்டு பாதியாக பூமத்திய ரேகை பிரிக்கிறது, பூமி மீது இது போன்ற வளையங்களாக செல்லும் கற்பனைக்கோடுகளே அட்ச ரேகைகள் எனப்படுகிறது.

இதில் முக்கியமான வளையங்கள் பூமத்திய ரேகை, மகர ரேகை, கடக ரேகை.

மகர ரேகை தென் கோளத்திலும், கடக ரேகை வடக்கோளத்திலும் வரும் இடையில் பூமத்திய ரேகை.

சூரிய ஓளி செங்குத்தாக பூமி மீது மகர ,கடக ரேகைப்பகுதிக்குள் மட்டுமே விழும்.

ஒரு ஆண்டில் சூரியன் இரண்டு வளையங்களுக்கும் இடையே சென்று வருகிறான்.பூமி சாய்வாக சுழல்வதால் அப்படி தோன்றுகிறது.

ஜூன் மாதத்தில் (ஜூன் 24) சூரியன் வடக்கோள கடக ரேகையில் இருந்து தென்கோள மகர ரேகைக்கு தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கி , இந்திய முறைப்படி ஜனவரி 14 இல் (சரியான தேதி என்றுப்பார்த்தால் டிசம்பர் 21)மகர ரேகைக்கு வந்து பின்னர் அங்கிருந்து கடக ரேகைக்கு வடக்கு கோளத்தை நோக்கி பயணிப்பான். அதாவது ஆறு மாதம் இந்தப்பக்கம் ஆறு மாதம் அந்த பக்கம் .

இந்த மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள் இதைப்புனிதமானது என்பார்கள்,அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது.

எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அது ஏன் சூரியனின் பயணத்தில் இடைப்பட்டக்காலத்தில் ஏப்ரலில் வர வேண்டும்!

மகர ரேகை என்பது இந்தியாவிற்கு தெற்கே கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ளது அங்கிருந்து இந்தியா நோக்கி சூரியன் வரும் நாளை வருடத்தின் துவக்க நாளாக கொள்வது தவறில்லையே. அதாவது சூரியக்காலண்டர் அடிப்படையில் சூரியனின் பயணம் துவங்குவது முதல் நாள்!

இதனாலேயே ஒருக்காலத்தில் ஆங்கில முறையில் ஏப்ரலில் வந்த புத்தாண்டு கூட ஜனவரிக்கு இடம் பெயர்ந்தது.

wikki இல் இருந்து எடுக்கப்பட்ட உதாரணம்,

//France was one of the first nations to make January 1 officially New Year's Day (which was already celebrated by many), by decree of Charles IX. This was in 1564, even before the 1582 adoption of the Gregorian calendar (See Julian start of the year). Thus the New Year's gifts and visits of felicitation which had been the feature of the 1st of April became associated with the first day of January, and those who disliked or did not hear about the change were fair game for those wits who amused themselves by sending mock presents and paying calls of pretended ceremony on the 1st of April.//

தமிழர்கள் எந்த அளவுக்கு தீர்க்க தரிசனத்தோடு இருந்தால் அக்காலத்திலேயே வரப்போகும் சூரியனை வரவேற்று , சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக்கொண்டாடி இருப்பார்கள்!

மேற்கண்ட விளக்கத்தின் மூலம் ஏப்ரலில் வருவது, விஞ்ஞான ரீதியாக சரி என்று சொல்வதெல்லாம் தவறு என்று காட்டி இருக்குமே!

சித்திரை புத்தாண்டு காலம் காலமாக வருவது என்கிறார்கள், அக்காலத்தில் கூட காலம் காலமாக உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் எல்லாம் இருந்தது அதை எல்லாம் சட்டம் போட்டு ஒழிக்கவில்லையா? அதையும் புனிதமாக நினைப்பவர்கள் இருந்தார்கள் என்று அரசு ஆதரிக்க முடியுமா?

இப்போது அரசு திடீர் என்று மாற்றம் செய்து விட்டது என்று சிலர் சொல்கிறார்களே அது எப்படி ?

1921 இல் திருவள்ளுவர் கி.மு 31 இல் பிறந்தாரரென்ற கூற்றின் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு என்று உருவாக்கப்பட்டுள்ளது,அதில் தை இரண்டு அன்று புத்தாண்டு வருவதாக மறைமலை அடிகள், திரு.விக, கி.ஆ.பெ எல்லாம் இதுக்குறித்து பல தமிழ் ஆய்வுகள் செய்து தெரிவித்துள்ளார்கள், இதனை அரசும் ஏற்கும் விதமாக வெகு காலம் முன்னரே அரசு நாட்காட்டியில் திருவள்ளுவர் ஆண்டை ஏற்று வெளியிட ஆரம்பித்தது. சில தரமான தனியார் காலண்டர்களிலும் இந்த ஆண்டு முறை இடம் பிடிக்க ஆரம்பித்தது.

தற்போது ஏற்கனவே பலகாலமாக இருந்த ஒன்றுக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் வண்ணம் அரசாணை வெளியிட்டுள்ளது. தை இரண்டு என்பதற்கு பதில் முழுதாக தை 1 என்ற சிறிய திருத்தம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.


எனவே இந்த அறிவிப்பு ஒன்றும் திடீர் புரட்சி அல்ல, பலகாலமாக இருந்து வந்த தமிழறிஞர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது அரசு.


பின்குறிப்பு:

இது ஒரு மீள்ப்பதிவுங்கோ!!!