(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ)
நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பயன் படுத்தி வந்தாலும் ,பலரும் அதனை கருத்தில் கொள்ளாமல் மேலோட்டமாக படித்து செல்கிறார்கள் ,அப்படி சென்றாலும் பரவாயில்லை ஒரே மட்டையடியாக பொதுவாக தமிழில் அறிவியல் சொற்கள் இல்லை, மேலும் பல வடமொழிச்சொற்கள் தான் இருக்கு ,எனவே தமிழின் மொழி வளம் குறைவு என மட்டையடிக்கிறார்கள் , தமிழில் சுமார் ஏழு லட்சத்திற்கும் மேல் தனித்தமிழ் சொற்கள் உண்டு(வைரமுத்தே சொல்லிக்கீறார்), மேலும் இன்றைய உலகவழக்கிற்கு தேவையான அறிவியல் சொற்களையும் உருவாக்கிக்கொள்ளலாம், அதற்குத்தமிழில் இடம் உண்டு, தமிழ் ஒரு நெகிழ்வான மொழியாகும்.எனவே அவ்வப்போது தனித்தமிழ் சொற்களை பட்டியலிட்டு வரலாம் என நினைக்கிறேன்.
அல்லக்கை:
இது ஒரு தெள்ளுத்தமிழ் சொல்லாகும்.
அல்ல= இல்லை ,+கை ,அதாவது இல்லாத கை, ஒரு பெரும்புள்ளிக்கு அவரது வழக்கமான கரம் போக இல்லாத மூன்றாவது கரமாக செயல்ப்படும் ஒருவரை குறிப்பது.
வழக்கமாக ஒரு முக்கியமானவரின் நெருங்கியவரை இவரு அவரோட ரைட் ஹேண்ட் (right hand)என ஆங்கிலத்தில் சொல்வதுண்டல்லவா.
மேலும் அல்ல என்பதற்கு தீயவை என்றும் பொருள் உண்டு.
"அல்லவை நீக்கி நல்லவை நாட வேண்டும்"
பெரும்பாலும் அல்லக்கையாக இருக்கும் மனிதர் ,தலைவரு சொன்னாருன்னு ஏகப்பட்ட ஆட்டம் ஆடுவார்,பலருக்கும் கெடுதல் செய்வது வழக்கம்.
அல்லக்கை என்றால் தீயவர், இன்னொருக்கு அடிப்பொடி எனலாம்.
அதிகாரி:
இது வடமொழியாகும்,
அதி= கூடுதலாக , உயர்வாக,
காரி = செய்பவர் , காரியம் செயல்.
அதிகாரி என்றால் ஒரு செயலை செய்பவர், வேலை செய்பவர்.
இணையான தமிழ்ச்சொல் அலுவலர்.
ஆணி:
இதுவும் வடமொழியே, இரும்பு முளை என்று பொருள்.
ஆட்டோ ரிக்ஷா (auto riksha):
ஆங்கில,ஜப்பானிய கலவை சொல்.
ஆட்டோ= தானியங்கி
ரிக்ஷா =கையால் இழுப்பது.
எனவே தமிழில் அப்படியே மொழிப்பெயர்க்காமல்,
ஆட்டோ ரிக்ஷா =தானியங்கி மூவுருளி.
மூன்று சக்கரங்களை கொண்ட மோட்டார் வாகனம் எனப்பொருள்.
Bicycle:
இதற்கு தமிழில் மிதிவண்டி என்பார்கள், இன்னொருப்பெயரும் இருக்கிறது "ஈர் உருளி" இரண்டு சக்கரங்களை கொண்ட வண்டி.
கிரேன்(crane):
ஓந்தி= உயரத்தூக்குதல், உந்துதல் என்றால் முன்னால் தள்ளுதல் ,ஓந்துதல் என்றால் உயரத்தில் தள்ளுவது,தூக்குவது.
ஆகாயவிமானம்(aeroplane):
வடமொழி, இதற்கு தமிழில் வானூர்தி ,இல்லை எனில் பறக்கும் எந்திரம் என சொல்லலாம். ஏன் எனில் ரைட் சகோதரர்கள் முதலில் கண்டுப்பிடித்த போது "ஃப்ளையிங் மெஷின்" (Flying machine)என்று தான் பெயர் வைத்தார்கள்.
அத்தகைய வானுர்தியில் இரண்டு அடுக்கில் சமதளமான இறக்கைகள் இருக்கும் இதனால் அதனை "பை பிளேன்" (bi-plane)என்று அழைத்தார்கள், ஏர்-ஏரோ என்றால் காற்று எனவே ஏரோ பிளேன் ஆயிற்று.
ஹெலிகாப்டர்(helicopter);
இணையான தமிழ் சொல்:
உலங்கு வானூர்தி:
உலங்கு = சுழலுதல் , ஹெலிஹாப்டரில் மேல் உள்ள விசிறிகள் சுழன்று அதன் மூலம் பறப்பதால் உலங்கூர்தி.
முதலில் ஹெலிஹாப்டருக்கு "ஏர்ஸ்க்ரு" (airscrew)என்று பெயர் வைத்தார்கள், திருகாணிப்போல விசிறிகள் சுழல்வதால் ,பின்னர் ஹெலிகாப்டர் ஆயிற்று. ஹெலி (heli)என்றாலும் சுழலுவது தான்.
திசைகளும் காற்றும்:
கிழக்கு- கொண்டல் காற்று
மேற்கு: மாருதம்*
தெற்கு :தென்றல்
வடக்கு: வாடைக்காற்று.
*மாருதம் , இதில் இருந்து மாருதி வருகிறது அப்படியானால் வட மொழி என தோன்றலாம், ஆனால் தமிழிலிருந்தும் பல சொற்கள் வடமொழிக்கு சென்றுள்ளது, உதாரணமாக கூலி என்ற சொல், திருக்குறளிலும் உண்டு.
காளிதாசர் மேகதூத் என்ற காவியம் எழுதியுள்ளார், இதனை தமிழில் மேகதூது எனலாம், மேகம் வட மொழி என்றாலும், தூது வட மொழி என சொல்ல முடியாது ,தூது என்றே திருக்குறளில் ஒரு அதிகாரம் உள்ளது, மேலும் சங்க இலக்கியங்களில் தலைவி தலைவனுக்கு தூது விடுவதாக நிறையப்பாடல்கள் இருக்கிறது. எனவே தூது தமிழில் இருந்து வடமொழிக்கு சென்று இருக்கலாம்.
மேகம்;
தமிழ் சொற்கள்: கொண்டல் ,முகில்,மாரி, மஞ்சு ஆகியவை.
காக்கா:
இதுவும் வடமொழியே, கா என்றால் சமஸ்கிருதத்தில் யார், காக்கா கரையும் போது கா ..க்கா என ஒலிப்பது யார்..யார் என சமஸ்கிருதத்தில் கேட்பது போல இருப்பதால் காக்கா என பெயர் வைத்துவிட்டார்கள்.
தமிழ் இணைச்சொல்: முட்டம்
நாகர்கோவிலில் முட்டம் என்ற ஊர் உள்ளது.
ஶ்ரீமுஷ்ணம் என்ற ஊரினை தமிழில் திருமுட்டம் என்பார்கள், அவ்வூரில் ஒரு காக்கா மோட்சம் அடைந்தது என்பது தலபுராணம்.
மேலும் வேலூர் அருகே குரங்கணிமுட்டம் என ஊர் உள்ளது , குரங்கு ,அணில்,முட்டம்(காக்கா) ஆகியவை மோட்சம் அடைந்ததாக தலபுராணம், எனவே மூன்றின் பெயரை சேர்த்து ஊருக்கு குரங்கணிமுட்டம் என பெயர் வந்துள்ளது.
தொடரும்...
---------
பின் குறிப்பு:
#இங்கு சில சொற்களை நானே உருவாக்கியும் ,மேலும் முன்னர் படித்தவற்றின் நினைவில் இருந்தும், தமிழ் விக்ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகரமுதலி ஆகியவற்றின் உதவியுடனும் தொகுத்துள்ளேன், பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும். நன்றி!
#இப்பதிவிற்கு கோவியாரின் "பந்தயம்" குறித்தான பதிவும் ஒரு தூண்டுகோல், வழக்கமான பந்தயம் என்ற சொல்லுக்கே ஆராயும் நிலையில் தமிழ் சொற்களை பொருளுணர்ந்து பயன்படுத்தும் நிலை அருகி வருவதாக தோன்றியதால் ,அவ்வப்போது தனித்தமிழ் சொற்களை தனியே பட்டியலிட்டால் என்ன என தோன்றியது.
---------