தற்போது நாற்று நட எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது, நமக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம் , ஜப்பான், சீனா , கொரியா போன்ற நாடுகளில் 1970 களில் இருந்தே எந்திர நடவு நடை முறையில் உள்ளது!
நாற்று நடுவது உடல் வலிக்கொடுக்கும் ஒரு வேலை, குனிந்தவாறே தொடர்ந்து இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களின் உடல் நெகிழ்வு தன்மை கொண்டது என்பதால் இதனை எளிதில் செய்வார்கள் எனவே நடவிற்கு பெண்களே அதிகம் நடவு வேலைக்கு பயன்படுத்தப்படுவார்கள்.
நடவு எந்திரத்தில் இரண்டு வகை உள்ளது,
- மனித சக்தியால் இயங்குவது ,
- எந்திர சக்தியால் இயங்குவ்து.
எந்திர நடவிற்கு சாதாரணமாக வளர்க்கப்படும் நாற்றை பயன்படுத்த முடியாது , இதற்கென தனியாக நாற்று வளர்க்க வேண்டும். அதனை பாய் நாற்று என்பார்கள்.
அதிக அடர்த்தி கொண்ட பாலிதீன் விரிப்பின் மீது நன்கு உழுத மிருதுவான வயல் மண்,மணல் , தொழு உரம் இவற்றை கலந்து பரப்பி ஒரு மண் படுக்கையை 3 cm உயரத்திற்கு உருவாக்க வேண்டும். அதன் மீது முளைக்கட்டிய விதைகளை தூவி ,விதைகளை மூடுவது போல சிறிது மண் தூவ வேண்டும். பின் வழக்கம் போல நாற்றுகளை வளர்க்க வேண்டும். இதற்கு குறைவான நீரே போதும் , பூவாளி எனப்படும் நீர் தெளிப்பான் மூலம் நீர் தெளித்தாலே போதும்.
நாற்றுகள் வளர்ந்தவுடன் இரண்டு அடி நீளம் , 1 அடி அகலம் வருவது போல பத்தைகளாக நாற்றுடன் வெட்டி எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.
நாற்று நடும் எந்திரம்:
ஒரே நேரத்தில் எட்டு வரிசைகளில் நடும். சாய்வான நாற்று வழங்கும் வார்ப்புகள் இருக்கும். நாற்றை மனித விரல்கள் போல் எடுக்க 3 முனைகள் கொண்ட பிக்கர் (picker)எனப்படும் கொக்கிகள் இருக்கும். நாற்றுபத்திகளை அடுக்கிகொண்டு எந்திரத்தை ஓட்டி சென்றால் மட்டும் போதும். 3 மணி நேரத்தில் ஒரு ஏக்கரில் நடும். நாற்று வரிசைக்கிடையே உள்ள இடை வெளி(24 cm), ஒரு நாற்று முடிச்சில் எத்தனை நாற்று(3 or 5) இருக்க வேண்டும் என்பது போன்றவற்றை நாம் அமைத்து கொள்ள முடியும்.
ஒரு நாற்று நடும் எந்திரத்தின் விளை 80,000 - 1,50,000 Rs/- வரை எஞ்சின் திறனுக்கு ஏற்ப கிடைக்கிறது.
வழக்கமாக நடவு வேளைக்கு கூலியாக சுமார் 1500 ரூபாய் ஆகும். இதன் மூலம் 600 ரூபாயில் முடித்து விடலாம். இந்தியாவில் நிறைய மனித ஆற்றல் இருந்த போதிலும் தற்போது பெரும்பாலோர் நகரங்களுக்கு இடம் பெயர்வதால் விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது , இத்தகைய சூழலில் நடவு எந்திரம் உதவும்!
டா பே, எஸ்கார்ட்ஸ், போன்ற டிராக்டர் தயாரிப்பாளர்கள் இந்த எந்திரங்களை தயாரிக்கிறார்கள்.
*****