Friday, January 04, 2013

அஃதே,இஃதே-5.

(ஹி...ஹி அழகை அனுபவிக்கனும் ஆராயக்கூடாதாம்)

DTH-SWOT ANALYSIS:

பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் ஒரு பொருள் அல்லது சேவையினை புதிதாக அறிமுகப்படுத்துவதற்கு முன் ,சந்தைப்படுத்துவதில் உள்ள சாதக,பாதகங்கள் மற்றும் வெற்றிகரமாக இயங்க உள்ள வாய்ப்புகளை முன்கூட்டியே கணிக்க SWOT ANALYSIS என்ற முறையினை பயன்ப்படுத்துவதுண்டு , 


SWOT என்பது ஒரு பொருள்,அல்லது சேவையின் வெற்றியினை தீர்மானிக்க வல்ல நான்கு முக்கிய காரணிகளான ,

S- STRENGTH

W- WEAKNESS

O- OPPORTUNITY

T- THREATS

ஆகியவற்றின் சுருக்கம் ஆகும்.

இந்நான்கு காரணிகளுக்கு தொடர்பிலான விவரங்களை தொகுத்து , பாதகங்களை விட சாதகங்களின் சதவீதம் அதிகமாக இருக்குமெனில் அப்பொருள் அல்லது சேவை சந்தையில் வெர்றியடையும் என முன்னதாக தீர்மானிக்க இயலும், இதன் அடிப்படையிலே தயாரிப்பதா இல்லையா என முடிவெடுப்பார்கள்.

தமிழ் சினிமாவில் இது போன்று முறைப்படுத்தப்பட்ட்ட சந்தை சிந்தனைகள் இல்லை என்றாலும் ஒரு தோராயமான கணக்கீடுகள் ,கணிப்புகள் செய்வதுண்டு.

தயாரிப்பு முன் ஆலோசனைகளின் போது,ஒரு படத்தின் கதையை கேட்டதும் இது வில்லேஜ் சப்ஜெக்ட் வில்லேஜில் எடுபடும் நகரத்தில் ஓடாது , ராமராஜன் நடித்தால் எடுபடும், மாதவனுக்கு செட் ஆகாது என்பது போன்ற முன்கணிப்புகளை இவ்வகையில் சேர்க்கலாம்.

இப்போது அரங்க வெளியீட்டுக்கு முன்னர் , டிடிஎச் மூலம் திரையிடுவதற்கு ஸ்வாட் ஆய்வு செய்து பார்க்கலாம்.

பலம்(S- STRENGTH):

# படம் பார்க்க விருப்பமிருந்தும்,திரையரங்கு செல்ல விரும்பாதவர்கள்.

#திரையிட வாய்ப்பில்லாத இடங்களிலும் உள்ள பார்வையாளர்களை சென்றடைதல்.

நேர்மறை எண்ணிக்கை = +2

பலவீனம்(W- WEAKNESS):

# பெரிய திரையில் பார்க்கும் அனுபவத்தினை அளிக்காது.

# படம் நன்றாக இல்லை எனில் , நெகட்டிவ் விமர்சனம் பரவுதல்.

# திரையரங்குகளின் ஓப்பனிங் கலெக்‌ஷன் பாதிப்படைதல்.

#டிடிஎச் இல் பார்த்தவர்கள் மீண்டும் திரையரங்கு செல்ல மாட்டார்கள்.

#மிக அதிக கட்டணம்.

# ஒரே முறை மட்டுமே ஒளிபரப்புதல்.

எதிர்மறை எண்ணிக்கை = -6

மேற்கண்ட இரண்டுகாரணிகளும் அகக்காரணிகள், மேலும் இவற்றின் சாதக அம்சங்களை தீர்மானிப்பது உற்பத்தியாளரின் வசம் உள்ளது,எனவே அதிக பட்சமாக சாதகமான வகையில் சந்தைப்படுத்தலுக்கு ஏற்றார்ப்போல செயல்படும் வகையில் திட்டமிட முடியும்.



வாய்ப்புகள்(O- OPPORTUNITY):

# வழக்கமான வருவாய் வாய்ப்போடு புதிய வருவாய் வாய்ப்பினை உருவாக்குதல்.

நேர்மறை எண்ணிக்கை= +1

மிரட்டல்கள்(T- THREATS):

# அரங்க வெளியீட்டுக்கு முன்னர் ஒளிபரப்புவதால், விரைவாகவும், தரமாகவும் திருட்டு டிவிடி உருவாகும் வாய்ப்பு.

# பகிர்வு முறையில் ஒரே கட்டணத்தில் பலரும் பார்க்க வாய்ப்புள்ளது.

# கேபிள் டீ.வி போன்றவற்றில் டிடிஎச்  ஃபீட் ஒளிபரப்பும் வாய்ப்புள்ளது.

# மின் தடையினால் சேவை பாதிப்பு.

# மோசமான வானிலையால் ஒளிபரப்பு தடை பட வாய்ப்புள்ளது.

# 1000 ரூபாய் செலவழித்து பார்க்கும் வருவாய் திறனுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது.

# திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு.

எதிர்மறை எண்ணிக்கை= -7

வாய்ப்புகள்,மிரட்டல்கள் இரண்டும் புறக்காரணிகளாகும் எனவே இவற்றின் சாதக,பாதகங்களை உற்பத்தியாளர் தீர்மானிக்க முடியாது, அதிக எதிர்மறைகூறுகள் உருவாகாத வகையில் நிர்வகித்து சந்தைப்படுத்துதல் வேண்டும்.

சாதக,பாதக கணக்கீடு:

மொத்த நேர்மறை = +3 

மொத்த எதிர்மறை = -13

நிகர மதிப்பு= -10

முடிவு:

 டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன்னர் வெளியிடுவதில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் மேலோங்கி இருப்பதால், இத்திட்டம் வெற்றியடைய வாய்ப்புகள் மிகவும் பலவீனமாக உள்ளது எனலாம்.
**********

மனித வேட்டை:




ZERO DARK THIRTY  என்ற ஹாலிவுட் திரைப்படம் , ஒசாமா பின் லேடனை அமெரிக்க கப்பற்படை அதிரடி வீரர்கள் வேட்டையாடி கொன்றதை , சி.ஐ.ஏ நிபுணர்களின் கலந்தலோசனையுடன் ,உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற விளம்பரத்துடன் ,கடந்த டிசம்பர் மாதம்  வெளியாகி நல்ல பாராட்டினையும் பெற்றுள்ளது.

ZERO DARK THIRTY என்றால் அதிரடிப்படையினரின் சங்கேத மொழியில் நள்ளிரவு பன்னிரண்டு மணி முப்பது நிமிடம் என்பதாகும். ஒவ்வொரு வகையான அதிரடிப்படையின் ஆபரேஷனுக்கும் ஒரு சங்கேத பெயர் சூட்டுவது வழக்கம், ஆபரேஷன் நடத்த திட்டமிட்டநேரத்தினையே சங்கேதப்பெயராக வைத்து படம் எடுத்துள்ளார்கள்.

TRAILER:



ஆனால் சி.ஐஏ அதிகாரிகள்,அமெரிக்க செனட்டர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு , அப்படம் முழுக்க கற்பனையானது, அதிகாரப்பூர்வமாக யாரும் சம்பவங்களை விவரிக்கவில்லை, மேலும் அமெரிக்க அரசின் அதிரடி நடவடிக்கையை கொச்சைப்படுத்தும் வண்ணம் உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தினை அறிய கைது செய்யப்பட்ட அல்கய்தா தீவிரவாதிகளை கடுமையாக சித்திரவதை செய்து பெறப்பட்ட தகவல்களின் உதவியுடனே அமெரிக்க அதிரடிப்படை செயல்படுவதாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதே , அரசு அதிகாரிகளின் எதிர்ப்புக்கு காரணமாகும்.

ஆனால் அமெரிக்க ஊடகங்களும் ,விமர்சர்களும், இப்படம் ஒபாமா அரசுக்கு ஆதரவான படம், அமெரிக்க தேர்தலுக்கு முன்னர் ஒபாமாவின் இமேஜை உயர்த்திக்காட்ட வெளியிடுவதாக இருந்து,பின்னர் எதிர்ப்புகளால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு டிசம்பரில் வெளியானது என்ன்கிறார்கள்.

இந்த படத்தில் இன்னொரு சுவாரசியம் என்னவெனில் பாகிஸ்தானில் படப்பிடிப்பு செய்வது ஆபத்தானது என கருதி, இந்தியாவில் சண்டிகரில் படம் பிடித்தார்கள், சில செட்டுகள்,கிராபிக்ஸ் மூலம் சண்டிகரை இஸ்லாமாபாத்தாக படத்தில் காட்டியுள்ளார்கள்.

கடந்தாண்டு மார்ச்சில் சண்டிகரில் படம்பிடிக்கும் போது பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்து படப்பிடிப்பு செய்தது அப்போது சர்ச்சையை உருவாக்கியது சிலருக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தினை இயக்கியவர் , ஹர்ட் லாக்கர் திரைப்படத்தின் மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் இயக்குனர் எனப்பெருமை பெற்ற "Kathrine Bigelow" ஆவார்.வழக்கமாக பெண் திரைப்பட இயக்குனர்கள் என்றால் பெண்ணியம் சார்ந்த மென்மையான கதையம்சங்கள் உள்ள படைப்புகளை தான் உருவாக்குவார்கள் என்ற பிம்பம் உண்டு, அதனை உடைத்து பல அதிரடி ஆக்‌ஷன் ,அட்வெஞ்சர் வகை படங்களையே இவர் உருவாக்கி வருகிறார். டைட்டானிக்,அவதார், போன்ற ஆஸ்கர் விருதுகள் வென்ற படங்களை இயக்கிய புகழ்மிகு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னால் மனைவி  "Kathrine Bigelow" என்பது குறிப்பிட தக்கது. ஆஸ்கார் ஜோடின்னு கூட சொல்லலாம்.

************

காற்றுள்ளபோதே கரண்ட் எடுத்துக்கொள்:




தமிழகத்தில் வழக்கமாகவே மின்வெட்டு தலைவிரிச்சு டான்ஸ் ஆடும், அதுவும் கோடைகாலம், காற்றடிக்காத காலம் என்றால் இன்னும் அதிகமாகிடும், இதனை எல்லாம் தீர்க்க நிரந்தரமாக மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றாலும், நாம் பயன்படுத்தும் மின்னுற்பத்தி திட்டங்களில் இன்னமும் சில புதுமைகளை புகுத்த வேண்டியது அவசியமாகும்.

அணு,அனல்,புனல், சூரிய சக்தி,காற்றாலை என பல வகையிலும் மின் உற்பத்தி திட்டங்கள் இந்தியாவில் செயல்ப்படுத்துப்பட்டு வந்தாலும், அவை எல்லாம் வெகுகாலத்துக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட அமைப்பிலும், தொழில்நுட்பத்திலுமே பயன்ப்படுத்தி வருகிறோம்.

காற்றாலை மின் உற்பத்தியிலேயே பல நவீன மாற்றங்கள்,மற்றும் நடைமுறை படுத்துவதில் புதிய வழிகளை மேலை நாடுகளில் கொண்டு வந்துவிட்டார்கள்.

நம் நாட்டில் ஒரு காற்றாலை அதிக பட்சமாக 1.25 மெகா.வாட் என்ற அளவிலேயே வடிவமைக்கப்படுகிறது, ஆனால் மேலை நாடுகளில் ஒரே காற்றாலை மூலம் 3 -5 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய அளவில் வடிவமைத்துப்பயன்படுத்த துவங்கிவிட்டார்கள். இதன் மூலம் குறைவான இடத்தில் அதிக காற்றாலை மின் உற்பத்தி பெறமுடியும்.

ஒரு காற்றாலை மின் உற்பத்தி அமைப்பில்  ,,அதன் உற்பத்தி திறன்(capacity), மற்றும் ஆற்றல் திறன்(efficiency) ஆகிய இரண்டு காரணிகள் முக்கியமானது ஆகும்.

1.26 மெகாவாட் என்பது அதன் உற்பத்தி ஆற்றல் அளவு. ஆனால் சராசரியாக அதன் உற்பத்தி திறன் 30% மட்டுமே ஆகும்.

உற்பத்தி திறன் என்பது காற்றின் இயங்கு விசையோடு தொடர்புடையது,  காற்றாலை அமைக்க இடம் தேர்வு செய்ய அதிக இயங்குவிசையோடு காற்று வீச வாய்ப்புள்ள இடங்களையே தேர்வு செய்வார்கள்.

ஒரு காற்றாலை எத்தனை திறனுடன் காற்று விசையை ,மின்சாரமாக மாற்ற வல்லது எனக்கணக்கிட, காற்றாலை விசிறியின் வீச்சு பரப்பினையும்,காற்றின் இயங்கு திசைவேகம் மற்றும் விசை ஆகியவற்றினை கணக்கிட வேண்டும்.

காற்றாலையின் திறன் என்பது ,கிடைமட்டத்தில் வீசும் காற்றின் இயங்கு விசையை ,செங்குத்து அச்சில் சுழலும் விசிறிகள் வெட்டுவதால் எத்தனை சதவீதம் திருப்பு விசையாக மாற்றி மின் உற்பத்தி செய்கிறது என்பதாகும்.

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு இயங்கு விசையில் காற்றாலை சக்தி கிடைக்கும் எனக்கணக்கிட்டு ,அதற்கு ஏற்ப அங்கு காற்றாலை பண்ணைகள் அமைக்கலாமா ,வேண்டாமா என முடிவெடுப்பார்கள்.

காற்றாலை திறனை மதிப்பிடல்:

ஒரு காற்றாலையின் நிகர உற்பத்தி திறன்

=காற்றின் இயங்கு விசை* விசிறிகளின் குறுக்குவெட்டு வீச்சு* உற்பத்தி திறன்.

ஒரு இடம் கடல் மட்டத்திலிருந்து இருக்கும் உயரம், மற்றும் வீசும் காற்றின் வேகத்தினை வைத்து அவ்விடத்தின் சாராசரி இயங்கு விசை கணக்கிடப்படும்.இது வாட் அல்லது கிலோ வாட்டில் அளவிடப்படும்.

காற்றாலை விசிறிகளின் நீளத்திற்கு ஒரு வட்டமாக சுழல்கிறது, எனவே விசிறியின் நீளத்தினை ஆரமாக கொண்ட வட்டத்தின் பரப்பளவே குறுக்கு வெட்டு பரப்பு.

3 மெ.வாட் மின்னுற்பத்தி ஆற்றல் உள்ள காற்றாலையின் விசிறியின் நீளம் 45 மீட்டர்கள் இருக்கும்.

எனவே வட்டத்தின் பரப்பு= பை*ஆரம்*ஆரம்
                                  =22/7*45*45
                                  =6360.ச.மீ.

இங்கிலாந்தின் காற்றாலை ஆணையத்தின் தளத்தில் இருந்து இத்தகவல்களை பெற்றுள்ளேன்,அவர்கள் கெண்ட் என்ற இடத்தின் சராசரி காற்றின் இயங்குவிசையை வைத்து கணக்கிட்டுள்ளார்கள்,எனவே அதனை அப்படியே பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.

காற்றின் இயங்கு விசை = 713வாட்/ஹவர்

ஆற்றல் திறன்=30% 


எனவே ஒரு காற்றாலை செய்யும் மின்னுற்பத்தி

  = 6360*713*30/100

  =1.36 மெ.வாட்.

சீராக காற்றுவீசினால்,ஒரு மூன்று மெகாவாட் காற்றாலையால் ஒரு மணி நேரத்துக்கு  1.36 மெ.வாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்ய முடிகிறது எனில் நம் நாட்டில் 1.25 மெ.வாட் காற்றாலை ஒரு மணி நேரத்துக்கு சுமார் 400 கிலோ வாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்ய முடியும் என்பதனை கணிக்கலாம்.

எனவே நமது மின் தேவையை மரபுசாரா ஆற்றல் மூலம் பூர்த்தி செய்ய அதிக ஆற்றல் உள்ள காற்றாலைகளை நிறுவ வேண்டியது அவசியம் ஆகும்.

ஆனால் மேலை நாடுகளில் இதோடு விடவில்லை, காற்றாலை மின் உற்பத்தியில் காற்றாலையின் அளவு மற்றும் ,திறன் ஆகியவை ஒரு லிமிட்டிங் ஃபேக்டராக இருந்தாலும் காற்றின் இயங்கு விசை (kinetic energy)சார்ந்து ஆய்வு செய்ததில், கடல் மட்ட உயரம் குறைய குறைய காற்றின் இயங்கு விசை கூடுவதை அறிந்தார்கள், மேலும் நிலப்பரப்பில் உள்ளதை விட கடல் பரப்பில் வீசும் காற்றின் இயங்கு விசை அதிகம் என அறிந்தார்கள்.



நிலபரப்பில் இருந்து கடலுக்குள் செல்ல செல்ல காற்றின் இயங்கு விசை அதிகம் ஆகிறதாம், இதற்கு காரணம் காற்றின் அடர்த்தி நீர் பரப்பின் மீது கூடுதலாக இருப்பதும் ஒரு காரணம்.

எனவே நிலபரப்பில் காற்றாலைகளை அமைப்பதை விட ,கடற்பரப்பில் காற்றாலைகள் அமைத்தால் அதிக மின்னாற்றல் பெற முடியும் என கண்டுப்பிடித்து ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடலில் ஆழம் குறைவான இடங்களிலும், ஆழம் அதிகமான இடத்திலும் கூட நிலை நிறுத்தப்பட்ட மிதவை அமைப்புடன் காற்றாலை நிறுவி அதிக காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்து நிலபரப்பிற்கு ஆழ்கடல் மின்வடங்கள் மூலம் மின்சாரம் கொண்டு வருகிறார்கள்.

நம் நாட்டிலும் சுமார் 6,500 கிலோ மீட்டர் நீளகடற்கரை உள்ளது அதனை ஒட்டிய கடல் எல்லைப்பரப்பும் மிக அதிகம் , மேலும் கச்சத்தீவு ,இந்தியா - இலங்கை இடையே ஆழம் குறைவான கடற்பரப்பும் உள்ளது, அங்கெல்லாம் காற்றாலைகள் அமைத்தால் காற்றாலை மின் உற்பத்தி பெருகும், மின் வடம் மூலம் நிலப்பரப்புக்கு மின்சாரம் கொண்டு வந்துவிடலாம்.

கடலில் காற்றாலை அமைப்பதன் மூலம் விலைமதிப்புள்ள பெருமளவு இடங்கள் மீதமாகும் அவற்றினை மற்ற தொழில் தேவைகளுக்கு பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.

----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

hollywoor reporter,the guardian,washington post,wiki,google,youtube இணைய தளங்கள் நன்றி!
--------------------------