Tuesday, January 15, 2013

கால்நடைச் செல்வம்.


(ஹி...ஹி..கண்ணா கரும்பு தின்ன ஆசையா?)

அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!

பாரத நாடு பழம் பெரு நாடு நீரதன் புதல்வர் இந்நிலை மறவாதீர் , இப்பாடல் நமக்கு மட்டும் அல்ல நம்ம ஊரு மாடுகளுக்கும் பொருந்தும், நம்ம நாடு உலகிலே மிக அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை கொண்ட நாடு, இச்சாதனை இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் சாதனையாகும்.

விவசாயமே பிரதான பொருளீட்டும் தொழிலாக கொண்டு உலகம் இயங்கிய காலத்தில் விவசாயத்தொழிலின் உச்சத்தில் நின்ற நாடு இந்தியா, எனவே உலக அளவில் செல்வ செழிப்பான நாடுகளில் முதலிடத்தில் இருந்தது.

விவசாயம் செய்ய நிலத்துக்கு அடுத்து இன்றியமையாத மூலதனம் கால்நடைகள் ஆகும், கால்நடைகளில் உழவு மாடு, கறவை மாடு, இரண்டுக்கும் பயன்ப்படும் வகை என உண்டு. அனைத்து வகை கால்நடைகளிலும் மிக அதிக எண்ணிக்கையில் உற்பத்தி திறனுடன் இந்தியா விளங்கியதாலேயே விவசாயத்தின் உச்சத்தினை தொட முடிந்தது.


உழவு மாட்டினை உயிருள்ள டிராக்டர் எனலாம், டிராக்டருக்கு எரிபொருள் செலவு செய்தால் உழலாம் ஆனால் உரம் கொடுக்காது, அதே சமயம் உழவு மாட்டுக்கு உணவு கொடுத்தால் உழும், வண்டி இழுக்கும், கறவை மாடுகளின் இனவிருத்திக்கு பயன்ப்படும், மேலும் சாணமானது உரமாகவும் பயன்ப்படும்.

மாட்டுக்கு  என தனியாக உணவு  உற்பத்தி செய்யத்தேவையில்லை, மனிதர்கள் பயன்ப்படுத்தாத தாவர கழிவுகள், வைக்கோல், பிண்ணாக்கு என எஞ்சியவையே உணவாக பயன்ப்படும், எனவே விவசாய உற்பத்தியில் எந்த பொருளும் விரயமாகாமல் சிக்கனமாக விவசாயம் செய்யலாம்.

(காங்கேயம் காளை,காங்கேயன்=கங்கையின் மைந்தன்,முருகன்)

எந்திர மயமாக்கல் விவசாய உற்பத்திக்கு தேவை எனினும், இந்தியா போன்ற கால்நடை மிகுந்த நாட்டில் எந்திர மயமாக்கல் விவசாய செலவீனங்களை அதிகரிக்கவே செய்கிறது, பாரம்பரிய எளிய விவசாயத்தில் உற்பத்தி செலவினை விவசாயி தீர்மானிக்க முடியும், எந்திர மயமாக்கப்பட்ட விவசாய உற்பத்தியில் எரி பொருள், இரசாயன உரம், பூச்சி மருந்து விலை என அனைத்தும் புறக்காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன, எனவே உற்பத்தி செலவு இன்னதென விவசாயியால் திட்டவட்டமாக முடிவு செய்ய இயலாது, அதே சமயம் விளைப்பொருளின் கொள்முதல் விலையும் விவசாயி கையில் இல்லாத சூழலில் , உற்பத்திக்கும் வியாபாரத்துக்கும் இடையில் விவசாயி வெறும் பொம்மையாக உழைப்பை சிந்திவிட்டு பலனை யார் கொடுப்பார்கள் என தெரியாத சூழலில் வாழ்கிறான்.

(சிவப்பு சிந்தி மாடு)

அதிக அளவில் கால்நடைகள் இந்தியாவில் இருந்த போதிலும் பால் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருக்கிறோம், இதற்கு காரணம் இந்திய மாடுகளின் பால் உற்பத்தி திறன் குறைவாக உள்ளது என நம்ம நாட்டு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், இதனை நிவர்த்தி செய்ய ஐரோப்பிய நாடுகளின் உயர் உற்பத்தி ரக மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசு பல திட்டங்களைப்போட்டு செயல்படுத்தி வருகிறது, கேட்பதற்கு மிகவும் நல்ல திட்டம் போல தெரிந்தாலும் உண்மை வேறாக உள்ளதாக பல வேளாண் அறிஞர்களும், உயிர் தொழில்நுட்ப வல்லுனர்களும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

அது எப்படி எனப்பார்ப்போம்.

அமெரிக்காவில் மாட்டிறைச்சி மற்றும் பால் பண்ணை தொழில் மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு தொழிலாகும்.

அவர்கள் கூடுதல் இறைச்சி மற்றும் பால் உற்பத்தி பெருக்கத்திற்கு நம்பி இருப்பது இந்திய வகை மாடுகளை தான் என்பது மறைக்கப்பட்ட உண்மையாகும்.

(பிரம்மன் வகை காளை- Bos indicus)

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரம்மன் வகை எனப்படும் Bos indicus மாடுகள் பெரிதாக,வலுவாக வளரக்கூடியவை, இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கு பயன்படுபவை.மிக அதிக இழுவைத்திறன் கொண்டவை.

ஐரோப்பிய வகை மாடுகளை Bos taurus என்பார்கள், மறபணு ரீதிய இந்திய மாடுகளை விட தரம் குன்றியவை,இந்திய வகை மாடுகளின் சிறப்பம்சம் என்னவெனில்,

குறைந்த வெப்பமும் தாங்கும், அதிக வெப்பமும் தாங்கும்.இந்திய மாடுகளின் வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை மிக அதிகம் இருப்பதே இதற்கு காரணம்.

மேலும் வெகு அடர்த்தியான உரோமங்கள் உள்ளவை, உரோமங்களுக்கு அடியில் கருமை நிறத்தோல் இருப்பதால் வெப்பத்தினை சீராக பராமரிக்க வல்லவை.

மேலும் பிரம்மன் வகை மாடுகள் தளர்வான மேல் தோலினை கொண்டவை எனவே தேவைக்கு ஏற்ப உடல் மேற்பரப்பினை அதிகரித்து வெப்ப வெளியீடும் அளவை அதிகரிக்க ,குறைக்க வல்லவை.

இவ்வகை மாடுகளின் உடலில் இயற்கையாக ஒருவகை திரவம் சுரக்கும் ,இது பூச்சிகளை இயல்பாக விரட்ட வல்லது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம்.

(சாஹி வால் மாடு)

இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டப்பொழுது ,இந்திய பிரம்மன் வகை மாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, அவற்றை போஸ் ஈரோப்பியன் வகையுடன் கலப்பினம் செய்தார்கள்,மேலும் நெல்லூர், கிர், கிருஷ்ணாவாலி வகை மாடுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் கலப்பினம் செய்யப்பட்டது.

ஆதாரப்ப்பூர்வமாக  Dr. Hilton Briggs, author of Modern Breeds of Livestock என்ற நூலில் இத்தகவல்கள் உள்ளது. இவரது நூலில் உள்ள தகவல் என்னவெனில்,

1849 இல் Dr. James Bolton Davis of Fairfield County, South Carolina, என்பவர் இரண்டு ஜோடி போஸ் இன்டிகஸ் காளைகளை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்து ,கலப்பின முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், இவர் அப்போது துருக்கி சுல்தானுக்கு கால்நடை ஆலோசகராகவும் செயல்ப்பட்டு வந்துள்ளார், இதனால் அங்கும் இந்திய மாடுகள் பரவியது.

பின்னர் 1854 இல் St. Francisville, LA வை சேர்ந்த Richard Barrow என்ற வேளாண் அறிஞரின் சேவையைப்பாராட்டி பிரிட்டீஷ் அரசே ஒரு ஜோடி போஸ் இன்டிகஸ் மாடுகளை அன்பளிப்பாக அளித்துள்ளது,அவர் உருவாக்கிய கலப்பினத்துக்கு பாரோவ் பிரீட் என்றப்பெயர் வைக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக கலப்பினங்கள் செய்யப்பட்டு இன்றைய அமெரிக்க பிரம்மன் வகை மாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய மாடுகளே இன்றைய அமெரிக்காவின் மாட்டிறைச்சி மற்றும் பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் மிக அதிக அளவில் இந்திய மாடுகளை கொண்டு உருவாக்கிய கலப்பினங்களே உள்ளன. அவர்கள் சுய உற்பத்திக்கு மட்டுமில்லாமல் இப்பொழுது இம்மாடுகளை இனவிருத்தி செய்ய என்று பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள், மலேசியாவில் உள்ள மாடுகள் அனைத்தும் இந்திய கலப்பின மாடுகளே ஆனால் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்வதை ஜெனிட்டிக்கல் பைரசி என்கிறார்கள், இப்போது நாமே நினைத்தாலும் இந்திய மாடுகளை ஏற்றுமதி செய்ய இயலாது, ஏன் எனில் போஸ் இன்டிகஸ் வகை மாடுகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் போன்றவை தங்கள் நாட்டு மாடு என பதிவு செய்துக்கொண்டுள்ளார்கள்.

(இந்திய கிர் வகை பசு-பிரேசிலில் அதிகம் பால் கொடுத்து சாதனை)

பிரேசிலில் கடந்தாண்டு மிக அதிக பால் கொடுத்த மாடு என சாதனை செய்திருப்பது குஜராத்தினை சேர்ந்த கிர் வகை மாடு ஆகும், ஷேரா எனப்பெயரிடப்பட்டுள்ள இம்மாடு ஒரு நாளில் 62 லிட்டர் கறந்துள்ளது.வெப்பமான நாடுகளில் வெப்பத்தினையும் தாங்கி கொண்டு பால் உற்பத்தியும் அதிகம் கொடுக்கும் வகை என்பதால் இவ்வகை மாடுகளை பல நாடுகளும் விரும்புகின்றன.

எனவே பிரேசிலில் உற்பத்தி செய்யப்படும் மாடுகளுக்கு உலக அளவில் நல்ல சந்தை ஏற்பட்டுள்ளது, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளை ஏற்றுமதி செய்வதில் பிரேசில் முன்னணி வகிக்கிறது ஆனால் அவை யாவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாட்டினங்கள். இந்தியாவிற்கு தான் அதன் மறபியல் உரிமை உண்டு ,நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டதால் அவர்கள் திருடி தங்கள் பொருளாக அறிவித்துவிட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம் என சொல்லிக்கொண்டு குளிர்நாடுகளான டென்மார்க்,ஹாலந்து, ஆகிய நாடுகளில் இருந்து ஜெர்சி வகை மாடுகளை இறக்குமதி செய்து கலப்பினம் உருவாக்கிக்கொண்டுள்ளோம்.

மேலும் இந்திய மாடுகளில் ஜீன்களில் சர்க்கரை நோயை குறைக்கும் ஏ2 ஜீன் அல்லிகள் உள்ளதாகவும்,ஐரோப்பிய மாடுகளில் ஏ 1 அல்லில்கள் தான் உள்ளது எனவும் இது சர்க்கரை நோய்,உடல் பருமன், மற்றும் இதயநோய்களை அதிகரிக்கும் எனவும் கர்நாலில் உள்ள தேசிய கால்நடை  மறபணு ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

செய்தி:

 A recent study by Karnal-based National Bureau of Animal Genetic Resources (NBAGR) showed Indian cows have a rich A2 allele gene which helps them produce healthier milk. The frequency of this A2 allele in Indian breeds is 100 per cent whereas in exotic cattle breeds it is less than 60 per cent. Imported breeds posses A1 allele, which is considered to be associated with diabetes, obesity and cardiovascular

http://news.outlookindia.com/items.aspx?artid=725938

இவற்றை எல்லாம் பார்க்கும் போது அன்றே மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய(நடித்த) பாடல் தான் நினைவுக்கு வருகிறது,

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

ஒழுங்காய் பாடு படு வயல்காட்டில்

உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில் ...

விவசாயி ...விவசாயி!


(என்னா ஆக்டிங்க் ....என்னா ரன்னிங்க் ...தலிவரு ஆல்வேய்ஸ் ராக்ஸ்)

பிற்சேர்க்கை:

 கலப்பினமாக்கலால் அழிந்து வரும் இந்திய நாட்டு மாடுகள் குறித்து முன்னர் இட்ட இடுகைகள்.


1)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2


--------------------
பின்குறிப்பு:

தகவல்கள் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி,

http://www.ansi.okstate.edu/breeds/cattle/brahman/

http://www.ilri.org/InfoServ/Webpub/fulldocs/SmHDairy/chap5.html

http://devinder-sharma.blogspot.in/2012/07/brazil-is-biggest-exporter-of-indian.html

http://agritech.tnau.ac.in/animal_husbandry/animhus_cattle%20_breed.html
இணைய தளங்கள் ,நன்றி!
-----------------------

அஃதே,இஃதே-6.


(ஹி...ஹி மனதை பொங்க வைக்கும் பொங்கல்!)

தை-1 :தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 தைப்பொங்கலின் இன்சுவையை மென்மேலும் கூட்டும் வகையில் தை முதல் நாளே தமிழ்ப்பொங்கும் தமிழ்ப்புத்தாண்டும் பிறப்பது சர்க்கரை பொங்கலில் தமிழ்த்தேனும் கலந்துண்பதற்கு ஒப்பாகும்.

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தை முதல் தேதியே தமிழ்ப்புத்தாண்டு என விரிவாக விளக்கும்  சில கட்டுரைகள்:

# http://tamilvalluvam.org/KuralArticalPage.asp?Id=13

# http://valavu.blogspot.in/2007/01/blog-post.html

கி.பி 1921 இல் மறைமலை அடிகள் தலைமையில் ஒரு தமிழறிஞர்கள் குழு கூடி , தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டினை கணக்கிட்டு , அதன் அடிப்படையில் ஒரு தமிழ் நாட்காட்டி உருவாக்கினார்கள்.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என எடுத்துக்கொண்டு அது முதல் ஆண்டுக்கணக்கினை துவக்கினார்கள், எனவே இவ்வாண்டு 2012 +31 எனக்கூட்டினால் 2043 வரும்.

தமிழ் மாதங்கள்:

சுறவம்- தை

கும்பம் - மாசி

மீனம் - பங்குனி.

மேஷம் -சித்திரை

விடை- வைகாசி

இரட்டை- ஆனி

கடகம் - ஆடி

மடங்கல்- ஆவணி

கன்னி -புரட்டாசி

துலை - அய்ப்பசி

நலி- கார்த்திகை

சிலை- மார்கழி.

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என முன்னர் நான் இட்ட இடுகை:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

*****

பண்டிகைகளும் பயணங்களும்:

உலகம் முழுவதும் நவீன வளர்ச்சியின் தாக்கத்தால் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு,மனிதர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் இந்தியாவில் அதன் தாக்கம் என்னமோ அனைவரையும் சென்றடையவில்லை என்றே நினைக்க வைக்கிறது ,ஒவ்வொரு முறை மேற்கொள்ளும் விழாக்கால பயணங்கள்!

சில முன் யோசனை முத்தண்ணாக்கள் வெகுஜாக்கிரதையாக பொங்கலுக்கு ஒரு மாதமுன்னரே இருக்கைகளை முன்ப்பதிவு செய்திருந்தார்கள் அவர்கள் பாடு கொண்டாட்டம் தான், ஆனால் தங்கள் புறப்பாடு எப்போது என தீர்மானிக்க இயலாத நடுத்தட்டு மக்கள் ,எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்து பொங்கலுக்கு முதல் நாள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து , அரசையும் ,போக்குவரத்து கழகத்தையும் சுத்த மோசம் என வசைப்பாடிக்கொண்டிருந்தார்கள் :-))

சென்னையில் பேருந்து, தொடர்வண்டி என அனைத்திலும் கால் வைக்க இடமில்லாத அளவுக்கு பிதுங்கி வழிந்தாலும் மக்கள் கொஞ்சமும் அசராமல் எப்படியோ தொற்றிக்கொண்டு ஊர் போய் சேர்ந்தால் போதுமென கிடைத்த கேப்பில் எல்லாம் தங்களை சொறுகிக்கொண்டு , பொங்கல் கொண்டாட ஊர் நோக்கிப்பயணப்படலானார்கள்.

சொந்தமாக கார் வைத்திருந்தவர்கள் வளர்ப்பு நாய் சகிதம் மூட்டைக்கட்டிக்கொண்டு கிளம்பி விட, கார் இல்லாத மக்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது ரெண்டு பசங்களையும் , பின்னாடி மனைவி, இன்னொரு பையன் என ஏற்றிக்கொண்டு வீரப்பயணம் கிளம்பிவிட்டார்கள். ஒருவர் தனது ஸ்கூட்டரில்  மொத்த குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு சென்றதையும் பார்த்தேன் , தேசிய நெடுஞ்சாலை 45 இல் இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் உண்டானது,இதனால் எல்லா டோல் கேட்டிலும் பெரும் வரிசை உருவாகி , டோல் கேட்டை கடக்கவே அரைமணி நேரத்திற்கு மேலானது.

டோல் கேட்:



இவ்வளவு அரும்பாடுப்பட்டு ஊருக்கு வந்தாலும் வழக்கம் போல தொலைக்காட்சிகளில் காட்டப்படும் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என கூவிப்போடப்படும் பாடாவதி தமிழ்ப்படங்களையும், தொலைக்காட்சிப்பெட்டிக்கண்டுப்பிடித்த நாள் முதலாக அரங்கேறி வரும் சாலமன் பாப்பையா வகையறாக்களின் என்ன மக்களே நான் சொல்லுறது சரி தானய்யா பட்டிமன்ற பேச்சுக்களையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இதுக்காய்யா படிக்கட்டில தொங்கிட்டு 200-300 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டீர்கள் :-))

இதுக்கு பேசாமா ஊருல ஊட்டோட இருந்து இருக்கலாமே!

*******
புத்தக சந்தை- 2013: A TEASER.

பொங்கலுடன் சேர்ந்தாற்ப்போல புத்தக திருவிழாவும் வருவது சென்னையின் சிறப்பு எனலாம், ஆனால் அச்சிறப்பே பல நேரங்களில் மண்டையை குடைய வைக்கிறது, என்னிக்கு ஊரு கிளம்புவது என்றே தீர்மானிக்க இயலாத ஆசாமி நான் இதில் என்னிக்கு புத்தக சந்தைக்கு போவது என தீர்மானம் எடுக்க வேண்டிய கூடுதல் சுமை வேறு வந்து மண்டையை குடைந்தால் என்ன தான் செய்வதாம் , வழக்கம் போல இன்று போய் நாளைவானு ஒத்தி வைப்பு தீர்மானம் தேன் :-))

பொங்கல் முடிந்தவுடன் போய் ஒரு ரவுண்டு அடிக்கலாம்னு எழுதப்படாத தீர்மானம் இயற்றியாச்சு , ஒரு வாரத்திற்குள் எல்லா நூல்களையும் கபளீகரம் செய்துவிட மாட்டார்கள்  சென்னை வாழ் பெருமக்கள் என்ற  ஒரு அபார நம்பிக்கை தான் :-))

சில பழங்கால பதிவர்கள் வழக்கம் போல சுஜாதா தாத்தாவின் கத புத்தகங்களையே காணததை கண்டது போல இன்னும் தொடர்ந்து அள்ளிக்கொண்டிருப்பார்கள் என்பதால் ,மற்ற நூல்கள் எல்லாம் புத்தக சந்தை துவக்க நாளன்று வச்சது வச்ச மாதிரியே இருக்கும் ,இனிமேல் நான் போய் தான் எல்லாத்தையும் கலைச்சு போடணும் :-))

என்ன ஒரு தலைக்கனம்னு நினைக்கலாம், நம்ம பதிவர்கள் எழுதும் புத்தக சந்தைப்பதிவுகளை தொடர்ந்து படிச்சாலே தெரியும் ,எல்லா ஆண்டும் ஒரே மாதிரியே எழுதியிருப்பார்கள் , ஒரு வேளை முன்னர் எழுதிய புத்தக சந்தை பற்றிய பதிவையே காபி&பேஸ்ட் செய்வார்களோ என்னமோ?

வலைப்பதிவுகளின் மூலம் பலப்பதிவர்களும் எழுத்தாளராக அவதாரமெடுக்கும் வேகம்  ஆண்டு தோறும் மர்மக்காய்ச்சலை விட வேகமாக பரவுவது ஏற்கனவே அவதாரமெடுத்து எழுத்து சிம்மாசனத்தை ஆக்ரமித்துக்கொண்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது :-))

பல ஒலக எலக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை விட அதிகமாக நம்ம பதிவர்களின் நூல்கள் விற்பது , தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் பதிவர்களின் சாதனை எனலாம்.

பதிவர்களின் சில படைப்புகளும் இவ்வாண்டு அச்சுவடிவில் வெளியாகின்றன ,அவைப்பற்றி,

 பிரபலப்பதிவர் திருப்பூர் ஜோதிஜி  லோகநாயகரை விட பெரிய ஆளா இருப்பார் போல ,அவரோட டாலர் நகரம் எனும்  நூலை பொங்கல் ரிலீஸ் இல்லைனு  சனவரி 27 அன்று திருப்பூரில் வெளியிடுகிறார் :-)),

வாழ்த்துக்கள் ஜோதிஜி!



மேலதிக தகவல்களுக்கு ஜோதிஜியின் வலைப்பதிவினை காண்க,

http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_13.html

#பலப்பதிவர்களின் வலைப்பதிவுகளை தொகுத்து எதிர்க்குரல் என்ற பெயரிலும் ஒரு நூல் வெளியாகிறது. கொஞ்சம் "மார்க்க"மான நூலாக அச்சிலும் கொண்டு வந்திருப்பார்கள் போல , "Tag line" உம் இஸ்லாமோ போஃபியா VS இஸ்லாமியப்பதிவர்கள் என ஒரு மார்க்கமாக இருக்கு :-))

எதிர்க்குரல் நூல் வெளியீட்டு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!



மேலதிக தகவல்களுக்கு பதிவர் சிராஜின் வலைப்பதிவினை காண்க,

http://vadaibajji.blogspot.in/2013/01/vs.html

# மேலும் சிலப்பதிவர்களின் நூல்களும்  வெளி வருகின்றன என தகவல்கள் உலா வருகின்றன,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
---------------------