விவசாயி படும் பாடு!-1
உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற சொலவடை வால்மார்ட், யூக வணிகம் , அந்நிய முதலீடுகள் என்ற சொற்பதங்களை எல்லாம் நாம் கேள்விப்படும் காலத்திற்கு முன்னர் இருந்தே தமிழ்நாட்டில் நிலவி வருவது.
எனவே இக்காலத்தில் விவசாயம் எந்த அளவு லாபகரமானது , அதை தொடர்ந்த்து விவசாயிகள் செய்ய ஏதுவாக இருக்கிறதா என இப்பதிவில் பார்க்கலாம்.
தற்சமயம் நாங்கள் விவசாயம் செய்வதில்லை என்பதால் தமிழ் நாட்டில் ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய எவ்வளவு செலவு ஆகும், என்ன வருமானம் கிடைக்கும் என்பதை இணையத்தில் தேடிப்பார்த்தேன்.
கோவை வேளாண் பல்கலைகழக தளத்தில் கீழ்கண்ட விவரங்கள் கிடைத்தது. அத்தளத்தில் உள்ள தகவல்கள் எந்தக்காலத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.நடைமுறையில் இதே அளவு செலவு செய்து விவசாயம் செய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
COST OF CULTIVATION (ACRE) in Rs.
Land Preparation ->1500 ரூ
Seeds & sowing -> 2000 ரூ
Manures & Manuring ->2500 ரூ
Weeding after cultivation & Irrigation ->1620 ரூ
Plant protection -> 803 ரூ
Harvest and other Expenses (Rs.) -> 2300 ரூ
______________
செலவு= Total 10723
வருமானம்:
Yield (Kg) -> 2100
Gross Income (Rs.): ->15123-10723=4400 ரூ.
Net income (Rs.) : -> 4400
சுட்டி:
கோவை வேளாண்ப்பல்கலை
கோவை வேளாண்ப்பல்கலைக்கழக தகவல்கள்ப்படியே விவசாயம் செய்யப்பட்டிருந்தாலும் கிடைக்கும் நிகர லாபம் என்பது ரூபாய் 4,400 மட்டுமே என்பதைப்பார்க்கவும்.
கால அளவின் படி நெல் வகைகள்:
#குறுகிய காலப்பயிர்: 110-125 நாட்கள்
#இடைக்காலம் முதல் நீண்டக்காலப்பயிர்: 120-170 நாட்கள்.
#நீண்டக்காலப்பயிர் : 170 நாட்கள்.
ஒரு குறுகிய கால நெல் சாகுபடி என்பது சுமார் 115- 125 நாட்கள் கொண்டது. அதாவது சுமார் நான்கு மாதங்கள் என வைத்துக்கொள்ளலாம்.
நான்கு மாதங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய் சுமார் 4,400 ரூபாய் மட்டுமே வருகிறது, ஒரு சிறு விவசாயிக்குடும்பத்தில் தாய்,தந்தை,மகன்,மகள் என நான்கு நபர்கள் இருக்கிறார்கள்,அவர்கள் நான்குப்பேரும் அந்த ஒரு ஏக்கரில் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள், அதன் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள்.
அப்படியானால் ஒருவருக்கு என்ன வருமானம் கிடைக்கும் =4,400/4= 1100 ரூபாய்.
இந்த 1100 என்பதும் ஒரு மாத வருமானம் அல்ல ஒருவருக்கு நான்கு மாத உழைப்பிற்கு கிடைக்கும் வெகுமதி!
அப்படி எனில் ஒருவருக்கு ஒரு மாதத்தில் என்ன வருமானம் கிடைக்கும்,
1100/4= 275 ரூபாய் மட்டுமே!
ஒரு தனி நபர் மாதம் 275 ரூ வருமானத்தில் என்ன வாழ்க்கை வாழ முடியும் இந்தியாவில்?
இது ஏதோ நானே கணக்கிட்டு மிகைப்படுத்தி சொல்லவில்லை, கோவை வேளாண்ப்பல்கலையில் காஸ்ட் ஆப் கல்டிவேஷன் என பட்டியல் இட்டு வைத்திருப்பதன் அடிப்படையில் சொல்கிறேன்.சந்தேகம் இருப்பவர்கள் அச்சுட்டியில்ப்போய்ப்பார்த்துக்கொள்ளலாம்.
ஆனால் உண்மையில் விவசாயிக்கு மாதம் அந்த 275 ரூபாய் கூட கிடைப்பதில்லை, வரவை விட செலவு அதிகம் ,என ஒரு ஆய்வு சொல்கிறது. ஒவ்வொரு போகத்திலும் சுமார் இரண்டாயிரம் நட்டம் அடைகிறானாம்.
மாநில வாரியா நெல் சாகுபடியில் ஏற்படும் நட்டம்:
சுட்டி:
நெல்சாகுபடிவருவாய்
அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது விவசாய செலவினை ஈடுகட்டுவதாக இல்லன என்பதை தெளிவாக காட்டியுள்ளார்கள்.இந்த சுட்டியில் போய்ப்பார்த்தால் நிகர நட்டம் வருவதாகவே சொல்லி இருக்கிறார்கள்.அதில் உள்ள அட்டவணையையும் பார்க்கவும்.
திடீர் வெள்ளம், மழை இல்லா வறட்சி, பூச்சி தாக்குதல், குறைவான விளைச்சல் என இதில் ஏகப்பட்ட சோதனைகள் வேறு. அதை எல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே அந்த குறைந்த தொகையான 275 ரூபாயை ஒரு விவசாயிக்கண்ணால் பார்க்க முடியும் நம் நாட்டில்!
ஒரு மனிதன் 3 வேளையும் பசியாற நாளுக்கு 32 ரூபாய் போதும் என சொன்ன திட்டக்கமிஷன் அறிக்கையை விட இத்தொகை மிக குறைவு.
பலருக்கும் நன்றாகவே தெரியும் 32 ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு மனிதனால் வாழ முடியாது என, அதனால் திட்டக்கமிஷனின் அறிக்கையை பலரும் கிண்டல் செய்தோம், ஆனால் யதார்த்த வாழ்வில் ஒரு விவசாயிக்கு மாதம் 275 ரூபாய் தான் வருமானம் வருகிறது.
திட்டக்கமிஷன் பரிந்த்துரைப்படி ஒருவருக்கு மாத வருமானம் = 32 ரூX30 =960 rs வரவேண்டும்.
ஆனால் அந்த தொகையை விட பல மடங்கு குறைவானதாக இருக்கே.
இப்படி எல்லாம் இருந்தும் விவசாயி எப்படி ஜீவித்திருக்கிறான், அவன் வயலில் வேலை செய்த நாட்களைப்போக பிற நாட்களில் கூலி வேலைக்கு போயே வாழ்கிறான்.மேலும் நமக்கெல்லாம் நயமான பொன்னியை விளைவித்துக்கொடுத்துவிட்டு புழுத்துப்போன அரசின் இலவச அரிசியே அவன் பசியைப்போக்குகிறது.
இத்தனை சோதனைகளுக்கும் நடுவிலும் விவசாயத்தை விடாமல் யாருக்காக அவன் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறான்?
எல்லாம் நமக்காக தானே! உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்,
2010 ஆம் ஆண்டில் 132 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நமக்கு தேவை 128 மி.மெ.டன் தான். அதாவது விவசாயி எத்தனை கட்டம் வந்தாலும் அதை விட மனம் இல்லாமல் தொடர்ந்து விவசாயத்தில் இருப்பதாலேயே நமக்கு தேவைக்கு உணவு உற்பத்தி ஆகிறது. இது எத்தனைக்காலம் தொடரும்.
இப்பொழுதே கிராமப்புரத்தில் வறுமை, வேலை வாய்ப்பின்மையால் பலரும் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் அங்கே விவசாய வேலை ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு.
ஆட்கள் தட்டுப்பாடால் நடவு முதல் , அறுவடைவரை எந்திரம் ஆகி விட்டது.
கட்டுமானத்தொழிலுக்கு வேலைக்கு போனால் குறைந்த பட்சம் 200 ரூ ஆனால் விவசாய வேலைக்கு அதிக பட்சமே 150 ரூ தான்! சம்பளம் அப்போ ஆட்கள் எங்கே வேலைக்கு போவார்கள்.
எவன் எப்படி போனா என்ன , எனக்கு வெளிநாட்டுக்காரன் நல்லா சம்பளம் தறான் , வாங்கி தின்ன பொருட்கள் இருக்குனு இருக்கவங்க எல்லாம் , விவசாயம்னா என்னனு எனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லைனு இருக்காங்க, ஒரு காலம் வரும் விவசாயம் செய்ய ஆளே இருக்காது, விளை நிலங்கள் எல்லாம் தரிசாக விடப்படும்,உணவுப்பொருட்கள் எல்லாம் பணக்காரர்களுக்கே ஆடம்பரம் ஆகும், அப்போ 120 கோடி மக்களுக்கும் எங்கே உணவுக்கு கை ஏந்துவார்கள்!
இந்தியாவில படிச்சுட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவாங்களாம், அவன் கிட்டே வேலைக்கு சேர்வாங்களாம், இந்தியாவிலவும் அவன் கம்பெனி வச்சா வேலைக்கு போவாங்க,ஆனா அவன் கடை வச்சா விவசாயம் அழியும் சொல்வாங்க.
எனவே வெளிநாட்டில /இந்தியாவில் மென்பொருளில் போய் வேலை செய்து தனது குடும்பத்தை மட்டும் வளமாக்குபவர்கள் சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய்!
ஆனால் ஆதி காலம் தொட்டே விவசாயிக்கு ஒரு ரூபாய் கூட லாபம் வராம செய்தவங்க வெளிநாட்டுக்காரங்களா? இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா அந்நிய மூல தன எதிர்ப்பை சொல்லுங்க மக்களே!
சிறு நகரங்களை சுற்றியுள்ள இடங்களோ வீட்டு மனைகளாக மாறி வருவதால் விளைநில பரப்பு சுருங்கி வருகிறது.
மேலும் அதிக பணம் வைத்திருப்பவர்கள் எதிர்கால முதலீடாக நிலங்களை வாங்கிப்போட்டு விவசாயம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இந்த வேலையை பெரும்பாலும் செய்வது அயல்நாடு வாழ் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நில மூலதனம் செய்யவில்லை.
ஏன் எனில் சமிபத்தில் சென்னை நகரில் தான் வீடு வாங்க முடியவில்லை கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என புறநகர்ப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கலாம் என விசாரித்தேன் எல்லாம் 50-70 லட்சம் சொல்கிறார்கள் 1000-1200 சதுர அடி அடுக்ககத்தை.ஒரு கோடிக்கு கூட மகிந்திரா சிட்டியில் வைத்திருக்கிறார்கள். அருண் எக்செல்லோவில் 70 லட்சம்என பீதிக்கிளப்புகிறார்கள்.
ஏன் இப்படி புறநகரிலேயே இந்த விலை எனக்கேட்டதுக்கு கிரவுண்ட் விலையே ஏறிப்போச்சு, எல்லாம் எதிர்காலத்திற்காக சும்மா வாங்கிப்போட்டு இடத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். இந்த அடுக்கு மாடியில் எல்லாம் மென்பொருள், அயல்நாடு வாழ் இந்தியர்கள் தான் முன்பதிவு செய்திருக்கிறார்கள் என குண்டைப்போட்டார் விற்பனை மேலாளர்.
நிலத்தின் மீது மதிப்பு ஏறுது ஆனால் அதில் விளையும் விளைச்சல் மீது எதுவும் ஏறவில்லை! இவங்க எல்லாம் வருங்காலத்தில என்ன விலைக்கு விற்றாலும் சாப்பிடுவாங்களோ?
இப்படி பல வகையிலும் விவசாயத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தால் விவசாயிகள் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் இருப்பார்கள்.
மூலப்பொருட்கள் ஆன உரம், பூச்சி மருந்து, விதை நெல் , மின்சாரம் , டீசல் ,மேலும் விவசாய தொழிலாளர் சம்பளம் என அனைத்தும் வேகமாக விலை ஏறி வருகிறது ஆனால் அதே வேகத்தில் அவன் விளைச்சளுக்கு ஆன விலை ஏறுவதில்லை.
இடைத்தரகர்களும், கமிஷன் மண்டிக்காரர்களும் அரசு என்ன குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கிறதோ அதன் மீது ஒரு 10 ரூபாய் குவிண்டாலுக்கு வைப்பார்கள்.
சமயத்தில் அரசின் தமிழ்நாடு வாணிபக்கழகம் போதுமான நெல்லை கொள்முதல் செய்யவில்லை, அல்லது அப்பருவத்திற்கான கொள்முதலை நிறுத்தி விட்டால் , தரகர்கள், கமிஷண் மண்டிக்காரர்கள் வைப்பதே விலை.
இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை:
4. Accordingly, the Government hereby permit the Tamil Nadu Civil
Supplies Corporation to procure paddy under the Decentralized Procurement
System, during the Khariff Marketing Season 2011-2012, i.e. from 01.10.2011 to
30.9.2012, at the price of Rs.1180/- per quintal for Grade ‘A’ paddy and Rs.1130/-
for Common variety of paddy by opening adequate number of procurement
centers in the Cauvery delta region and other paddy growing areas in the State, in
consultation with the District Collectors on need basis.
சுட்டி:
tngov.msp for paddy
எம்.எஸ் சுவாமிநாதன் பரிந்துரை என்னவெனில் குறைந்த பட்ச ஆதரவு விலை என்னவோ அதனுடன் 50% விலை அதிகம் வைத்து நெல்லை விற்பனை செய்தால் மட்டுமே விவசாயிக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என உள்ளது.
தமிழ்நாட்டில் இடுப்பொருட்களின் விலை விவரம்:
யூரியா ஒரு மூட்டை= 310 ரூ
டிஏபி ஒரு மூ= 900 ரூ
பொட்டாஷ் ஒரு மூ =620
சூப்பர் காம்ப்ளக்ஸ் ஒரு மூ= 870 ரூ.
மேற்சொன்ன விலை ஒரு விவசாய இடுப்பொருட்கள் கடையில் நேரடியாக விசாரித்துபோட்டுள்ளேன்.
#அரசு நிர்ணயம் செய்துள்ள உரங்களின் விலை, இந்து செய்தித்தாளில் இருந்து,
//The government has fixed Rs. 278.88 as the price per 50 kg bag of urea, Rs. 312 for IPL Potash, Rs. 315 Zuari potash, Rs. 624 for Iffco DAP, Rs. 630 for Zuari DAP, Rs. 656 for Spic DAP, Rs. 488.50 for Factamfos 20:20:20:0, Rs. 520 for Iffco 20:20:20:13 and Rs. 567.60 for Zuari 10:26:26, a press release says.//
சுட்டி:
the hindu
நடைமுறை விலை மற்றும் அரசு நிர்ணயத்திற்கும் வித்தியாசம் இருப்பது தெரியும்.
விவசாய வேலையாட்களின் சம்பள நிலவரம்:
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்ணயத்தின் படி ,
ஆண்= 100ரூ (6 மணி நேரம் வேலை) ஆனால் நடைமுறையில் ஆணுக்கு 150 ரூ
பெண்=80(5 மணிநேர வேலை, 100 ரூ)
விவசாயம் முதல் பல்வேறு வேலைக்களுக்கான சம்பளத்தினை இங்கு காணலாம்,
சுட்டி:
அரசு சம்பளநிர்ணயம்
பின்னர் பூச்சி மருந்து தேவைக்கு ஏற்ப எப்படியும் ஒரு ஏக்கருக்கு 1000 ரூ, விதை நெல் ஒரு 1000 ரூபாய் வரும்.
இப்படி அனைத்து இடுப்பொருட்களின் விலையும் வருடா வருடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏறி வருகிறது ஆனால் ,விளைச்சலுக்கான விலை மட்டும் மெதுவாக நகர்கிறது.
இப்படி ஒரு குவிண்டால் நெல் 1130-1180 விலைக்கு விற்பனையாகும் நெல் நம்மிடம் அரிசியாக வரும் போது மட்டும் அதிக விலைக்கு வருவதேன் இடையில் லாபம் அடைவது யார் என்பதை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.
தொடரும்...