Friday, August 31, 2007

சென்னை மத்தியப்பேருந்து நிலையம் இடமாற்றமா?


நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய பரிசீலிப்பதாக தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி அறிவித்துள்ளதாக செய்தித்தாள்களில் வந்துள்ளது.

இப்பொழுது அது அவசியமா ,

சென்னை மத்தியப்பேருந்து நிலையம் பற்றி,

*ஆசியாவிலேயே மிக்கபெரிய பேருந்து நிலையம், 37 ஏக்கர் பரப்பு,
*103 கோடி செலவில் கட்டப்பட்டது!
*300 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் வண்ணம் பேக்கள் உள்ளது.
*2000 பேருந்துகள் வந்து செல்கின்றன!
*இலவச கழிப்பிடம் , வாகனம் நிறுத்தும் இடம் , கடைகள் ,உணவுவிடுதிகள் அனைத்தும் உள்ளது!
*தற்போது சிறப்பு நிலை பேருந்து நிலையமாக அங்கீகரிக்கப்பட்டு ISO:9001:2000 சான்றளிக்கப்பட்டுள்ளது.அப்படி சான்று பெற்ற ஒரே இந்திய பேருந்து நிலையம் இது தான்!

இப்படி சகல வசதிகளுடன் புதிதாகக்கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அதற்குள் மாற்ற வேண்டும, புதிதாக புறநகர் பகுதிகளிலில் மூன்றாக பிரித்து திருவான்மியூர், தாம்பரம் , பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நல்ல யோசனைப்போல தோன்றினாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை முன்னரே கணக்கிட்டு , அப்பொழுதே மூன்றாகவோ அல்லது இன்னும் கொஞ்சம் புற நகரான பகுதியில் கட்டி இருக்கலாமே.

புதிதாக கட்ட பெரும் செலவு , ஏற்கனவே கட்டியதில் செலவிட்ட 103 கோடியும் தண்டம் , ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் ஞானோதயங்களுக்கு ஏற்றார் போல திட்டங்களை தீட்டிக்கொண்டு போனால் அதற்கு யார் பணம் செலவு ஆகிறது , எல்லாம் மக்கள் பணம் தானே!

பேருந்து நிலையதிற்கு ISO சான்று அளித்த போது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்...
"After a detailed survey, keeping in mind the traffic density by 2015, the CMDA constructed the "terminus, which was unique in many ways, more particularly the ultra-modern facilities provided for the operation of buses." It was built at an estimated cost of Rs.103 crores, including the cost of 37 acres of land."

2015 இல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள் ஆனால் அதற்குள் , மாற்ற வேண்டும் என ஆலோசிக்கிறார்கள்! புதிய திட்டங்கள், புதிய ஏல ஒப்பந்தம் , புதிய வருமானம் என்ற கணக்கில் செய்கிறார்கள் போல!

சமிபகாலமா 100 அடி சாலையில் கிண்டி கத்திப்பாரா - கோயெம்பேடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது காரணம், மோசமான சாலைகள், சாலை ஆக்ரமிப்புகள் , முறையற்ற பார்க்கிங்கள், ஷேர் ஆட்டோக்கள் நடு சாலையில் நின்று பயணிகளை ஏற்றுவதும் , இறக்குவதும்,கத்திப்பாரவில் மேம்பாலம் கட்டுகிறேன் என்று சாலையை கொத்திப்போட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடப்பது என பல காரணங்கள் உள்ளது.இவற்றை முதலில் சரி செய்தாலே பாதி நெரிசல் குறைந்து விடும்.

சிறிது காலத்திற்கு முன்னர், ஆம்னி பஸ்கள் நகரில் வராமல் மதுரவாயல் புறநகர் சாலை வழியாக சென்று வரவேண்டும் என உத்திரவிட்டார்கள் , தனியார் பேருந்துகளுக்கு நட்டம் ஏற்படும் என அவர்கள் யாரையோ கவனித்து மீண்டும் நகருக்குள் வர அனுமதி வாங்கிக்கொண்டார்கள்.முன்னர் போல அவர்களை புறநகர் சாலையில் செல்ல சொல்லலாம் போக்குவரத்து நெரிசல் குறையும்.

அல்லது அனைத்து பேருந்துகளும் நகருக்கு வரும் போது மதுர வாயல் புறநகர் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வரவேண்டும், சென்னையில் இருந்து செல்லும் போது 100 அடி சாலை மார்க்கமாக வழக்கம் போல செல்லலாம் , இதனால் பேருந்துகளுக்கு பயணிகள் வருவதும் தடைபடாது , நெரிசலும் ஓரளவு குறையும்.

மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்தால் பயணிகள் சுமைகளை தூக்கிகொண்டு வேறு வேறு ஊர்களுக்கு செல்லும் இணைப்பு பேருந்துகளை பிடிக்க அலைய வேண்டி இருக்கும்.