"பாஷை , வெறும் சொற்களில் மட்டும் தங்கி நிற்கிற ஒன்றல்ல,சொற்கள் தம்முடைய ஸ்தூல நிலையில் வெறும் சப்தம் தான். அவற்றுக்குக் கிடைக்கும் அர்த்தம், அவற்றை உபயோகிக்கிற ஒப்புதல்களை இயல்புப்படுத்துதல் ஆகும்.
ஒரே சப்தம் ,ஒரு மொழியில் பெறும் பொருள் வழக்கை இன்னொரு மொழியில் கொள்வதில்லை, இதனால் தான் இயல்பான ஒப்புதல் என்பது "வழங்கப்படுதல்" என்ற நிலைமைக்கு சார்பாகி,"வழக்கொழிந்த சொற்கள்" என்று ஒரு பகுதியை பிரித்து விடுகிறது. இதன் தவிர்க்க முடியாமையை ஏற்காத உள்ளங்கள், உயிர்த்தன்மையற்றதாகவே இருக்கும்.
உபயோகம்தான் மொழியின் இயக்கம்,- உயிர் - என்று கொள்ளும் போது ,"வலிந்து ஏற்கும் உபயோகத்தை அல்ல", இயக்கத்தின் இயற்கை ஏந்தி வரும் உபயோகத்தையே நாம் ஏற்கவேண்டும். வழக்கொழிந்த சொற்கள் இந்த இயக்கத்தின் இயற்கையினின்றும் பின் தங்கிவிட்டவை. இதனாலாயே ,பழந்தமிழ் சொற்களை மீண்டும் உபயோகிப்பதென்ற தனித்தமிழ் இயக்கம் ,இயற்கை தன்மையோ உயிரோ அற்று ,நவீன அனுபவங்களையும் சந்திக்க இயலாமல் நின்றுவிடுகிறது.
இயக்கத்தின் இயற்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதால், பிறமொழிச்சொற்கள் இன்றைய தமிழில் நவீனமான விஷயங்களையும் அனுபவங்களையும் சொல்ல உதவுகின்றன. தமிழின் நவீன - அதாவது இன்றைய காலத்தில் - படைப்பியக்கம், வழக்கொழிந்த சொற்கள் மூலம் அல்ல ,இயங்கும் சொற்களின் மூலமாக மட்டுமே சாத்தியமாகிறது.
மொழியின் ஸ்தூலமான சொற்களின் விஷயத்தில் 'தூய்மை பாராட்டியவர்கள், சிந்தனை அனுபவம் என்பவற்றால் உந்தப்படவில்லை ,இவர்களது எழுத்துக்களில் ,பழம்பெருமை, பொதுப்புத்தியை மீறாத ஒழுக்கவியல், இவற்றை "அழகாக" கூறுவதாக எண்ணிக்கையாளப்பட்ட சொல்ஜோடனை ஆகியவைதாம் இருந்தன., இருக்கின்றன.
இவர்களது சமகாலத்திய சிருஷ்டி,கர்த்தாக்களிடமோ ,வாழ்வின் உண்மைத்தன்மைகளும் சமூகவரம்புகள், ஒழுக்கங்கள்,நீதி அநீதிகள் ஆகியவற்றை அனுபவசாத்தியத்தின் தளத்தில் நிறுத்திச்செய்கின்ற விசாரணைகளும் ,இவற்றை எவ்விதமான உள்ளம் சந்திக்கிறதோ, அதன் பாத்திர இயல்புக்கு ஏற்ற மொழிப்பிரயயோகத்தில் எழுதப்பட்டன.
கருத்தைப் பிரதானமாக வைத்துப் புதுமைப்பித்தன் எழுதியவை இந்தவகை இயக்கத்தின் சிகரமாகும். புதுமைப்பித்தனின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களது தமிழ் , இதனாலாயே ஜீவத்துடிப்புள்ள தமிழ் என்றாகிறது.
இன்னொரு புறம், பரவலான வாசகத்தேவைகளையும் வியாபாரத்தையும் இலக்காக்கி, "கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எழுதியவை. ஆழமற்ற சில்லறைத்தளம் ஒன்றில் தமிழ் எழுத்தைச் செயல்பட வைத்துள்ளன. இதை பத்திரிக்கைத்தமிழ் என்று அதன் உடனடிப்பரிவர்த்தனைக்காக ஏற்றுக்கொள்ளும் போதே, இதன் இயல்பான வெகுஜனத்தன்மையை இலக்கிய இயக்கத்தின் தன்மைகளிலிருந்து பிரித்துக் கண்டுக்கொள்ள வேண்டும்.
உணர்ச்சி வெளியீட்டைப் பொறுத்தவரையில் கூட தனித்தமிழ் ,சிருஷ்டி, வியாபாரம் என்ற மூன்று தளங்களும் சுத்தமாகப் பிரிந்து நிற்கின்றன. தனித்தமிழ் இயக்கத்தில் அரசியலின் பாமரத்தன்மையும், சிருஷ்டி இயக்கத்தில் முதிர்ந்து புடமிடப்பட்ட செம்மையும், வியாபார எழுத்தில் கவர்ச்சித்தன்மையும் , உணர்ச்சி வெளியீட்டை நிர்ணயித்துள்ளன.ஒரு வகையில் உணர்ச்சி வெளியீட்டுத் தளத்திலேயே முதன்மையாக இந்த மூன்று தமிழ்களின் குணங்களும் பிணங்க ஆரம்பித்து ,அனுபவம்,சிந்தனை, ஆகிய துறைகளில் இந்தப்பிணக்கு இவற்றிடையே நீடிக்கிறது என்றும் கூறலாம்.
-------------------
தமிழ்ப் பழமை வழிபாடு எவ்வளவுக்குப் பாமரத்தனமானதோ , அவ்வளவு பாமரத்தனம் தான் மேலுள்ள வகையான சமஸ்கிருத மனோபாவமும் இரண்டுமே இந்தியத்தின் சாபக்கேடான ஜாதியத்தில் வேருன்றிப்பிறந்தவை. எனது உனர்வின் நவீனத்துவம் இத்தகைய விஷநிலத்தில் இருந்து விளைந்த ஒன்றல்ல. இந்த விஷநில விளைச்சல்களுக்கு நான் தனித்தமிழ் இயக்கத்தை விமர்சித்த பார்வை உபயோகமாகிவிட இதனால் இடமற்றுவிடுகிறது. எனது முன்னோடியான புதுமைப்பித்தனைப் பொறுத்தும் இதையே கண்டுக்கொள்ள வேண்டும். சமஸ்கிருத சநாதனத்துக்கு "உபயோகமாக" ஒரு வெளிப்படையான தீவிர நிலையாக என் நேர்ப்பேச்சுக்கள் தென்ப்பட்டுள்ளன.
--------------------------
ஒரு மொழியின் சிறப்பு ,அதன் உபயோகத்தைச் சார்ந்தது, கிரீசின் பரிபாலான காலத்தைத் தொடர்ந்து ரோம சாம்ராஜ்யத்தில், கிரீசின் மொழியான கிரேக்கம் தான் உயர்ந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த கணிப்பை புறந்தள்ளியவர்கள் ரோமின் லத்தீன் கவிஞர்கள், நாடகாசிரியர்கள், தொடர்ந்து ஐரோப்பாவில் பேக்கனின் காலம் வரை, லத்தீன் உயர்ந்த உபயோகங்களைப்பெற்றுள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் , லத்தீனையன்றிச் சுயமொழியையே ,சிருஷ்டிகளுக்கும் ,இதர படைப்புகளுக்கும் உபயோகிக்கிற விழிப்பு ஏற்படலாயிற்று .
இதன் அடிப்படை, சுய அனுபவத்தினை - தர்சனத்தை - தனது மன இயக்கத்துடன் நெருங்கித்துடிக்கிற ஒரு சுய மொழியில் தரும் இயற்கையாகும். ஆங்கிலத்தை ,பிரெஞ்சை, ஜெர்மனை ,ரஷ்யனை விட லத்தீன் உயர்வானது என்றோ லத்தீனை விட கிரீக் உயர்ந்தது என்றோ ஐரோப்பிய நகரங்களின் வாடகை ரூம்களில் லத்தீனியப்பூணூல் ,கிரேக்கப்பூணூல் அணிந்த சநாதனிகள் பேசிக்கொண்டு காலங்கழிப்பதை நாம் காண முடியாது. ஆனால் தமிழை விடச் சமஸ்கிருதம் உயர்ந்தது, தமிழ் காட்டுமிராண்டி பாஷை என என்று அவங்க பெரியாரே சொல்கிறாரே என்று கதை அளக்கும் நவீன சநாதனிகளை நான் கண்டிருக்கிறேன், - நமது பாரதத்துச் சென்னை நகர் வாடகை ரூம்களில் இவர்களது குழுக்கள் 'நவீன இலக்கிய இயக்கங்களாக"க்கூட முனைப்புப் பெற்றுள்ளன
ஒரு மொழியை விட இன்னொரு மொழி உயர்வானது என்று கூறுவதை விட மொழிகளின் உபயோக சாத்தியத்தைப்பற்றிப்பேசுவதே பொறுந்தும். தமிழ் இன்றைய மொழி , அதாவது நான் தமிழ் பழமைவாதத்தை நிராகரித்துக் கூறுவது இது.இன்றைய மொழி எனும் பொழுது, அது பழந்தமிழாக அன்றி ,"சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழியின் சொற்களைக்கூட ஜீரணித்துத் தமிழாக இயங்குகிறது" என்பதையே அர்த்தம் கொள்கிறேன். இந்த ஜீரணிப்புக்கு ஏற்றவகையாக, தனது பிரயோகக் கட்டுமானங்களைப்புதுப்பித்து நிற்கிற உரம் தமிழுக்கு இருக்கிறது; சமஸ்கிருதத்துக்கு இல்லை, உதாரணமாக அது இன்றைய அனுபவங்களைச் சரளமாக பரிவர்த்தனை செய்யக்கூடிய இயற்கை வளர்ச்சியை சமஸ்கிருதம் அடையவில்லை.
---------------------
அக உலக கலைஞர்கள்:
'அகநானூறு போன்ற துணுக்குக் கவிதைகளில் செய்யப்பட்ட மன உலகப் பரிசோதனைகள், தமிழிலக்கியத்தின் இடைக்கால இருளின் முன் மறுப்பட்டுவிட்டன. இன்று ஒரு புது விழிப்பு ஏற்பட்ட பிறகும், அது முழுதாக உணரப்படவில்லை ,காரணம், அந்த இடைக்காலத்தின் பின்பு வந்துள்ள தமிழ்ப்பண்டிதப்படிப்பு எதுவும் அந்த அக உலக ஓட்டத்தை எட்டவில்லை,எனினும் இயல்பிலேயே சுரணையுள்ள படைப்பாளிகள் அதை உணர்ந்துக்கொண்டார்கள்.
அதனால் தான் புதுமைப்பித்தன் அன்று மவுனியிடம் சொன்னார், 'அகநானூற்றின் மன உலகம் இந்தப்பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தால் இன்று உன் கதைகளையும், என் கதைகளையும் புரியவில்லை, தெளிவில்லை என்று இவர்கள் சொல்ல மாட்டார்கள்.
.....
தமிழ் பண்டிதர்கள் போனாலும் போனார்கள் ,இன்று இங்கிலீஷ் பண்டிதர்கள் அவர்கள் இடத்தைப்பிடித்துக் கொண்டார்கள். பாஷை என்னவானாலும் பண்டிதர் பண்டிதர் தான் என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள். இங்கிலீஷ் இலக்கிய பரிச்சயம் என்ற போர்வை ,இவர்களது குறுகிய பார்வைகளுக்குப் போர்வையிடுகிறது. இங்கிலீஷ் மணமே தெரியாத வெற்றிலை கடைக்காரர்களும், ஜவுளிக்கடைக்காரர்களும் உணர்ந்து ரஸிக்கிற எழுத்தை ,இவர்கள் தங்கள் பாண்டித்யத்தின் மேடையில் நின்று விசிறிவிடுகிறார்கள்.
--------------------
மேற்சொன்ன எழுத்து விவரணங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் அடியேனது அல்ல ...ஹி...ஹி அதான் எங்களுக்கு தெரியுமே ... உனக்கு விக்கிப்பீடியாவை காப்பி அடிச்சு மொழிப்பெயர்த்து எழுதத்தானே வரும், இது போல முதல் தரமான இலக்கிய சம்பாஷணைகள் எல்லாம் செய்ய வராதேனு ,மனசுக்குள்ள நீங்க சொல்லுற அந்த "மைண்ட் வாய்ஸ்' எனக்கும் கேட்குது அவ்வ்!
(கவிஞர்.தருமு சிவராம் என்கிற பிரமீள்)
தருமு அரூப் சிவராம்(கி.பி 1939-1997) , இலங்கை திருகோணமலையில் பிறந்து , தமது 20 ஆம் வயதுகளின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு வந்து , நவீன தமிழ்ப்படைப்புலகில் சல சலப்பை உண்டு பண்ணும் பல படைப்புகளை தந்தவர். இக்காலத்திலும் பின்நவீனத்துவ படைப்பாளிகளின் ஆதர்சமாக விளங்கக்கூடியவர். நவீன தமிழிலக்கியத்தின் நடமாடும் துன்பியல் சின்னமாக அக்காலத்தில் அலைந்து திரிந்து கி.பி 1997 இல் வேலூர் அருகே கரடிக்குடி எனும் இடத்தில் அநாதரவாக இயற்கை எய்தினார்.
சு.ரா அவர்களின் சமகாலத்தவர், நட்பாக இருந்து ,பின் பூசலாக மாறி போட்டுக்கொண்ட இலக்கிய சண்டைகள் பற்றி எழுத்துலகில் மர்மக்கதை போல ஒரு அத்தியாயம் இன்னும் ஓடிக்கொண்டிருப்பது சிறப்பு! இந்த கட்டுரையில் கூட "ஜவுளிக்கடை முதலாளிகள்' என ஊமக்குத்தாக குத்தியிருப்பது சு.ராவையே :-))
எதுக்கு இந்த பழங்கதைய இப்போ பேசிட்டு ,இதெல்லாம் இலக்கியவியாதிகள் சமாச்சாரமாயிற்றே ... வடை சுடுற எடத்தில வவ்வாலுக்கு என்ன வேலைனு கேட்கலாம் , மேட்டர் இருக்கே, தற்காலத்தில் தமிழை நவீனப்படுத்தவும் ,சாஸ்வதமாக நிலைத்திருக்க செய்யவும் லத்தின் லிபியில் தமிழ் எழுதப்பட வேண்டும் போன்ற செயமோகத்தனமான ஆலோசனைகளுக்கு , இக்கட்டுரையில் ஒரு பதில் உள்ளது, எனவே தான் அடியேன் சிரமம் பாராது அந்நூலில் இருந்து எடுத்தாண்டுள்ளேன்( டேய் ...காப்பி அடிச்சுட்டு என்னா பேச்சு பேசுற அவ்வ்)
# தருமு சிவராம் அவர்கள் , ஆரம்பத்தில் தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வமுடன் பங்கேற்றுவிட்டு , தனித்தமிழ் என்பது சிருஷ்டி எழுத்துக்களுக்கு தடையாக இருக்கும் என பின்னர் முடிவெடுத்து , தனித்தமிழ் இயக்கத்தினை விமர்சித்து அதற்கு எதிராக செயலாற்றியவர், அப்போ தமிழின துரோகியானு அவசரப்பட்டு 'ரப்பர் ஸ்ஸ்டாம்ப்" எடுக்காதிங்க அவ்வ்!
தமிழ் புதிய சொற்களை சுவீகரித்துக்கொள்ள வேண்டும், அப்படி இருந்தும் தமிழ் - தமிழாகவே நிலைத்திருக்கும் , தமிழே சிறப்பான நவீனப்படைப்பிலக்கிய மொழி என்பதே அவரின் பார்வையாகும்.
அவரின் பலக்கருத்துக்கள் சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் இருக்கும், இக்கட்டுரைத்தொகுப்பிலும் அத்தகைய முரண்கள் உள்ளன.
# நவீன படைப்பாளிகள் அக உலகத்தர்சனத்தின் அடிப்படையில் எழுதுபவர்கள், மொழி அடிப்படையில் வெற்று வார்த்தை கோர்வைகளாக பார்க்காமல் ' அவற்றில் உள்ள "மீ மொழி" (meta language)யை வாசகன் கண்டுக்கொண்டால் அக உலக தர்சனம் கிட்டும் என்கிறார். அக உலக தர்சனத்தினை காண கைய புடிச்சு அழைத்து செல்வது மட்டுமே எழுத்தாளனின் வேலை ,வாசகனுக்கு அங்கே என்ன அனுபவம் கிடைக்கும், தர்சனத்தின் முடிவென்ன என்பதெல்லாம் அல்லவாம்!
ஆனால் அக உணர்வுகளின் வெளிப்பாட்டை "பழந்தமிழ் அதாவது தனித்தமிழ்' வெளிப்படுத்தாது என்பதே அவரின் குறைப்பாடு,ஆனால் புதுமைப்பித்தன் ,மவுனியிடம் ,அகநானூற்றின் அக உணர்வு நிலையை தான் உதாரணம் காட்டி நவீன எழுத்தாளர்களின் அக உணர்ச்சி படைப்புக்களை ஒப்பீட்டு பேசியுள்ளார் எனக்குறிப்பிடுகிறார், எனவே பழந்தமிழிலும் அக உலக தர்சனம் காட்டக்கூடிய எழுத்துக்கள் இருந்துள்ளது,ஆனால் நம்ம நவீன எழுத்தாள மக்களுக்கு தான் "பழந்தமிழ் சொல்லறிவு" மட்டுப்பட்டு விட்டமையால் , அக உலக பார்வையில் பழந்தமிழில் எழுத இயலாமல் போச்சு, ஆகவே குறைபாடு என்பது மொழியில் இல்லை அதனை பிரயோகிப்பவரிடம் தான் உள்ளது என்பதை எளிதாக உணரலாம்.
# 1960 களில் அக உலகப்பார்வையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எழுத்துக்களே மேன்மையானது , மற்றவை எல்லாம் சில்லறை வியாபார எழுத்துக்கள் என குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியின் எழுத்துக்களை எல்லாம் அப்படித்தான் ஒதுக்கி தள்ளுகிறார்.
இதில் கவனிக்கத்தக்கது என்னவெனில் இருவருமே தனித்தமிழ் என்ற "கான்செப்ட்"டை விரும்பாதவர்கள். ஆனால் தருமு சிவராமுக்கு கல்கியின் எழுத்துக்கள் ' வர்த்தக பரிவர்த்தனை ,சில்லறை எழுத்துக்களாகவே" பட்டிருக்கு.
ஆனால் தருமு சிவராம் ,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தினை விட தமிழ் மேலான மொழி எனவும் கருத்தாக்கம் கொண்டவர், இதனை அவரது விமர்சனக்கட்டுரைகளில் பல இடங்களில் காணலாம்.
நிகழ்காலத்தில் செயமோகர் போன்றவர்களும் தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது , எனவே இலத்தின் எழுத்துருவில் பதிப்பிக்கணும் என்கிறார், உண்மையில் வாசிக்கும் பழக்கம் , புத்தக விற்பனை குறைவாக இருக்கானா ,அப்படிலாம் இல்லை, பல நூல்கள் நல்லாத்தான் விற்பனை ஆகிட்டிருக்கு. அப்புறம் ஏன் இப்படியான புலம்பல்கள் என்றால் ,எல்லாம் அவரவர் படைப்புக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே "கணிப்பு" சொல்கிறார்கள், போதாக்குறைக்கு அதை வச்சே ஒட்டு மொத்தமாக தமிழுக்கே ஒரு புதிய மாற்றம் வேண்டும் என்கிறார்கள்.
தருமு சிவராமால் சில்லறை எழுத்து என புறம் தள்ளப்பட்ட கல்கியின் படைப்புகள் இன்றும் புத்தக சந்தையில் அதிகம் விற்பனையாகி ,தமிழ் வாசகர்களின் இடையே வாசிக்கும் பழக்கத்தை தூண்டுகிறது என்பது மிக ஆச்சர்யமான ஒரு முரண் நகை.
சில்லறை எழுத்தோ அல்லது அக உலக உணர்ச்சிகளை காட்டும் உன்னத சிருஷ்டி எழுத்தோ , ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் தமிழ் படைப்புலகில் இருந்துக்கொண்டுதானுள்ளது, அதனதன் சந்தைக்கு எவ்வித பங்கமும் இல்லை, ஆனால் இந்த அறிவு சீவி எழுத்தாளர்கள் தான் எல்லாக்காலத்திலும் ஏதேனும் ஒரு முறைப்பாட்டுடன் புலம்பி வந்துள்ளார்கள், அது இன்றும் செயமோகனத்தனமாக தொடர்வது காலத்தின் கட்டாயம் அவ்வ்!
நாம் கூட ,பொன்னியின் செல்வன் முழுத்தொகுதி - 240 ரூ (மலிவுப்பதிப்பு), சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - 240 ரூ(மலிவுப் பதிப்பு) ஆகியவற்றை புத்தக சந்தையில் வாங்கினேன், ஒவ்வொரு புத்தகமும் சுமார் 500 பக்கங்கள், அதுவும் ஏ-4 அளவில், கெட்டி அட்டையுடன் உள்ளது. கொடுத்த காசுக்கு மதிப்பு ,மீண்டும் படிக்கவும் தூண்டுகிறது. எனவே தமிழன்(ஹி..ஹி அடியேனே) இப்பவும் தமிழில் படிக்க ஆர்வமாத்தான் உள்ளான் , அவனுக்கு புரியும் படியும், நியாயமான விலையிலும் புத்தகங்கள் வந்தால் , ஆர்வத்துடன் வாங்கிப்படிக்கவே செய்வான்,ஆனால் அதை எல்லாம் விட்டுப்புட்டு தலகாணி சைசில் புரியாத வார்த்தை ஜோடனைகளில் எழுதிவிட்டு , 500 ரூபானு விலை வச்சால் எப்படி வாசிக்க முன்வருவான்?
எனவே உத்தம படைப்பாளிகள் தங்களுக்கான சந்தை என்ன , வாசகர்கள் யார் என உணர்ந்து அதற்கேற்ப படைப்புகளை செம்மையாக வழங்க முனைப்புக்காட்டினால் படைப்புலகில் அழியாப்புகழ் கிடைக்கும் என்பதே யதார்த்தம்!
-----------------------------------------
பின்குறிப்பு;
# எலக்கியம் பத்திலாம் அதிகம் பேசாமல் வாசிக்க மட்டுமே விரும்புவேன் ,ஆனால் இந்த எலக்கியவியாதிகள் கடைசீல என்னையும் எலக்கியம் பேச வச்சிடுறாங்களே அவ்வ்!
# தகவல் மற்றும் படங்கள் உதவி,
விக்கிப்பீடியா, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
# கவிஞர் பிரமீள் குறித்து இணையத்தில் காணக்கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகள்,
# http://maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=158&Itemid=34
# http://solvanam.com/?p=24488
# http://www.blog.beingmohandoss.com/2007/10/blog-post_30.html
# http://ravisrinivas.blogspot.in/2008/07/blog-post_03.html
நன்றி!