Tuesday, August 12, 2014

நூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014


(ஆடிப்போனால் ஆவணி வரும் தாவணி வருமா? ஹி...ஹி)


ஆடிப்போய் ஆவணி கூட வந்திரும் போல இருக்கு(அப்படியே ஆவணி வந்திட்டாலும் டாப்புல வர்ராப்போல அவ்வ்) இந்த வவ்வாலு இன்னும் ஒருப்பதிவு கூட எழுதக்காணோமேனு என்னோட ரசிகப்பெருமன்றத்தினர்(அப்படி யாரேனும் இருக்கிங்களா?) இணையப்பெருவீதியில் பெருந்திரளாக கூடி கோஷமெழுப்பியது எமது குகையின் சுவர்களில் பட்டு எதிரொலித்து ரீங்காரமிடுவதான ஒரு கற்பனை மண்டையை உலுக்கவே , சரி எதாவது எழுதி வச்சி "பருவ மழையையாய் கருத்து மழையை" பொழிவோம்னு சிறு மூளையை கசக்கி பார்த்தும் ஒரு சொட்டு "சொற்துளி" கூட கசியக்காணோம் , படைப்பூக்கத்தின் வசந்தகால நதி அசந்து விட்டதா?  அய்யகோ இனி சீறிளமை ததும்பும் கன்னித்தமிழைக்காப்பது எங்கணம்?

அடங்குடா நொண்ணை , வர்ரவன் போறவன் எல்லாம் தமிழைக்காப்பாத்தனும், வாழ வைக்கணும்னு பில்டப் கொடுக்கிறதே வேலையா போச்சு , தமிழ் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா இல்லை தத்துப்பிள்ளையா என கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்து யாரோ அறச்சீற்றம் காட்டுறாப்போல தெரியுது எனவே வந்த வேலைய பார்ப்போம் ..ஹி..ஹி!

ஊரு நாட்டுப்பக்கம் போறப்போலாம் அந்தப்பக்கம் என்ன நிகழ்வுகள் நடக்குதுனு கவனிச்சு முடிஞ்சா ஆஜராகி அட்டென்டன்ஸ் போடுவது வழக்கம் என நான் சொல்லாமலே நம்ம மக்களுக்கு தெரியும் தானே அப்படியாக  இம்முறையும் ஊரோரமா போகச்சொல்லோ நிலக்கரி சுரங்கத்துல இவ்வாண்டுக்கான(2014-ஜூலை) புத்தக சந்தை நடப்பதாக "கரிச்சான் குருவி" ஒன்னு காதோரமாக கூவிச்செல்லவே , நாம அடியெடுத்து வைக்கலைனா சந்தைக்கு காலத்தால் அழியாத தீரா அவச்சொல் உருவாகிடுமே என பெரு முயற்சி செய்து பயணம் புறப்பட மூட்டை கட்டலானேன்.நிலக்கரி சுரங்க நகராம் நெய்வேலி நகரியத்தின் நடுவண் பேருந்து நிலையம்.  

இம்முறை பேருந்திலேயே சென்று விடுவதாக திட்டமிட்டு ,அங்கிருந்து அழைத்து செல்ல உறவினரின் மகிழுந்தினை பேசி வைத்தாயிற்று , ஏனெனில் நெய்வேலி நகரியத்தின் உட்ப்புற பயணம் அவ்வளவு சிலாக்கியமானதல்ல, பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பச்சைக்கலர் பேருந்துகளை தவிர வேறு பொதுப்போக்குவரத்து கருவிகளை கண்ணில் காணவியலாது ,மேலும் ஒவ்வொரு வட்டமும் பல ஃபர்லாங்குகள் தொலைவில் இருப்பதால் என்னைப்போன்ற சாமானியர்க்கு தானி*க்கு கட்டண தீனி போடுவதும் கட்டுப்படியாகாது அவ்வ்!

*தானி - தானியியங்கி மூவுருளி = ஆட்டோ ரிக்‌ஷா.

சொல்லாக்க உதவி , தமிழ் அறிவியல் கலைக்களஞ்சியம்,மணவை முஸ்தபா.

மேற்கொண்டு வள வளக்காமல் படங்காட்டி கதை சொல்லி செல்கிறேன்.

#

புத்தகச்சந்தை இதுக்குள்ள தான் நடக்குது( நிக்குது).

# நுழைவு வாயில், வள்ளுவரை வச்சு வடிவா செட் போட்டிருக்காங்க( சிவாசியை வச்சு ஏன் செட் போடலைனு எனக்கு தெரியாதுங்க அவ்வ்)தோட்டக்கலைத்துறையின் அரங்கு.


நுழைவு வாயிலுக்கு எதிர்ப்புறம் தமிழக தோட்டக்கலைத்துறையின் அரங்குகள் இரண்டினை வச்சிருந்தாங்க ,அது மட்டுமில்லாமல் பழ மரக்கன்றுகள் இலவசம்னு கொட்டை எழுத்தில பேனரும் இருக்கவே " பேராசையும், பெரும் ஆவலும் பிடறியில் உந்தித்தள்ள , இலவசம்னா எனக்கு ரெண்டு மரக்கன்று கொடுங்கனு அல்பத்தமிழனாய் அவதாரமெடுத்தேன் (எப்பவுமே நீ அல்பந்தாண்டானு ஒரு வேண்டாத அசரிரீ கேட்குது அவ்வ்)

சுரங்கத்துல கரி அள்ளுறவங்களுக்கு மட்டும் தான் இலவச மரக்கன்று என ஒத்தை சொல்லால் ஊதி அணைத்துவிட்டார் எனது பேராசை பேருந்தீயை அவ்வ்!!!


வழக்கம் போல ஹி...ஹி என அசடு வழிந்தாலும் இதெல்லாம் நமக்கென்ன புதுசா என்னனு , சமாளித்துக்கொண்டு, அப்புறம் எதுக்கு எல்லாருக்கும் இலவசமா கொடுக்கிறாப்போல "இலவச பழமரக்கன்று" என பேனர் வச்சீங்க ,அத மாத்துங்க இல்லைனா டிபார்ட்மெண்ட்ல புகார் கொடுப்பேன் என லைட்டா கெத்துக்காட்டிவிட்டு , சந்தைக்கு தாவினேன்.

சென்ற முறை 3 ரூ நுழைவு கட்டணம் இம்முறை 5 ரூ ஆக உயர்த்தப்பட்டிருந்தது , பா.ஜக ஆட்சியில் விலைவாசி உயர்வுக்கு இதுவே சாட்சி என நுண்ணரசியலாக கம்மூனிஸ்ட் கட்சிக்காரங்க போல "பொங்கல்" வைக்கலாமானு தோன்றியது!

#

இந்த வழியில் தான் பயணம் ஆரம்பம்!

#
கொற்கை.


கொற்கை என்றால் ஏதோ கொக்கிற்கும் காக்கைக்கும் கலப்பினமாக பொறந்த உயிரினமாக இருக்குமோனு பாமரத்தனமாக யாரும் நினைக்கப்படாது, அது ஏதோ தமிழின் ஆகச்சிறந்த சமகால இலக்கியமாம் , ஜோ.டி.குரூஸ் எழுதி இருக்காரு,  மத்திய அரசாங்க அவார்டு வாங்கிய எழுத்தாளர் என்பதால் கனமான கருத்தாக்கத்தினை உள்ளடக்கமாக கொண்டிருக்கும் என நினைக்கிறேன்.

 புத்தகமும் நல்லா "பல்க்" ஆக இருந்தது ,  வாங்கி வைத்துக்கொண்டால் எதிரிகளை தாக்க நல்ல தற்காப்பு ஆயுதமாக பயன்ப்படக்கூடும் , ஓங்கி அடிச்சா "தோர்" சம்மட்டியால் அடிச்சதை விட நல்ல விளைவுகள் கிடைக்கக்கூடும் :-))

புத்தகத்தை கையில் எடுத்துப்பார்க்கும் போதே சுட்டது, அம்புட்டு விலை , இதெல்லாம் படிக்க மனசு மட்டும் இருந்தால் போதாது என்ற நிகழ்கால வாழ்வியல் யதார்த்தம் மாயக்கரங்களால் செவுளில் அறைந்தது.

#
வரலாறு பேசும் பண்டாரம்.

இந்த அரங்கில் சமய நூல்கள், சமயம் சார்ந்து தமிழ், வரலாறு என ஏகப்பட்ட நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, நமக்கு தமிழையும், வரலாற்றையும்  சமய சார்பற்று அணுகவே பிடிக்கும் என்பதால் , அட்டைகளை மட்டும் நோட்டமிட்டு விட்டு கிளம்பியாச்சு.

# விகடன் அரங்கம்.விகடனில் வெளியான தொடர்கள் எல்லாம் புத்தகங்களாக பரிணாமம் பெற்றிருந்தன , வழக்கம் போல பார்வை மேய்ச்சல் மட்டுமே. பதிவர் அமுதவன் அவர்கள் எழுதிய நூல்களைக்கேட்டுப்பார்த்தேன் , சரக்கு கைவசம் இல்லை என்றார்கள், சும்மா வெறுங்கையோட போவானேன் என " நூல் விலைப்பட்டியலை" கைப்பற்றிக்கொண்டு கிளம்பினேன்!!!

கிழக்கு பதிப்பகம்.

கிழக்கின் அரங்கு மேற்கை பார்த்து அமைந்திருந்ததது, அதை  தவிர பெருசா கவனிக்க தக்க நூல்கள் எதுவும் நம்ம கண்ணில் படவில்லை.

# நிழல்.  உலக சினிமாவினைப்பற்றி பேசும் ஒரு திரைப்பட பத்திரிக்கை நிழல் என்றப்பெயரில் வருகிறதாம், அதன் அரங்கு ,  நிழலின் பழைய ,புதிய இதழ்களை  நிறைய வைத்திருக்கிறார்கள், ஆனால் எல்லாம் ஒரே விலை தான் அவ்வ்.

 உலக சினிமா , உள்ளூர் சினிமா என அலசும் பல நூல்கள் அங்கிருந்தன , ஆனால் பெரும்பாலான நூல்களை திருநாவுக்கரசு என்ற ஒருவரே எழுதியிருந்தார் , பெரிய உலகசினிமா அப்பாடக்கரா இருப்பார் போல இருக்கே என நினைத்துக்கொண்டே , ஒரு நிழல் இதழை புரட்டினால் ,அதில் ஆசிரியர் என அவர் பெயரே போட்டிருக்கு  ,நல்லா செய்றாங்கப்பா தொழில் அவ்வ்!!!

உண்மைத்தமிழன் அண்ணாச்சிக்கு சொந்தமோ என்னமோ தெரியலை உலக சினிமா பத்தி திறனாய்வுப்பார்வையில் எழுதாமல் "அதோட முழுக்கதையும்" சீன் --1 ,சீன் -2 என போட்டு கதை வசனமாக எழுதி வச்சிருக்கார். நமக்கு எதாவது உலக சினிமா கதைப்புரியலைனா வாங்கிப்படிச்சிக்கலாம், எனக்கு ரொம்ப நாளா அகிரா குரோசோவேயின் " ரோஷமான்" கதைல குழப்பம் உண்டு என்பதால் , அதோட கதை வசன நிழல் இதழும் இன்னும் சில இதழ்களும் பொறுக்கிக்கொண்டேன்.

#
இவ்விடம் கதை திரைக்கதை ,வசனம் பழுதுப்பார்க்கப்படும் என ஒரு புத்தகம் கண்ணில் பட்டது எடுத்துப்பார்த்தால் ,அவதாரை இப்படி எடுத்திருக்கலாம், கஜினி படத்தினை இப்படி மாத்தி எடுத்திருந்தால் இன்னும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் என்பதான கட்டுரைகள், ஒரு வேளை புத்தகத்தை போட்டவர் பதிவரோ அவ்வ்!

புத்தகங்கள் எதுவும் என் சிற்றறிவுக்கு தேவைப்படாத தரத்தில் இருந்ததால் வாங்கவில்லை.

#


வீரப்பன் செத்தது வியாபார ரீதியாக நக்கீரனுக்கு பெரும் பின்னடைவு எனலாம், புதுசா பரபரப்பாக போட சரக்கில்லாமல் ,யட்சிணி வசியம், தேவவசிய முத்திரைகள், ஜாதக பலன்கள் என பளப்பள அட்டையில் புத்தகம் போட்டு விக்குறாங்கப்பா அவ்வ்!

# கல்கியை எல்லாம் தூக்கி சாப்பிடுறார் பாலகுமரன், உடையார் நாவல் தொகுதி ரூ 1570 என தெகிரியமாக அட்டையில் எழதி வச்சி விக்குறாங்க, இந்த விலையில் இதெல்லாம் வாங்கிப்படிக்கும் அளவுக்கு தமிழார்வம் மக்களுக்கு இருக்குமெனில் , தமிழில் படிக்கும் விருப்பம் தமிழர்களிடம் குறைந்து விட்டது என எழுத்தாளுமைகள் ஏன் பொலம்புறாங்கனே தெரியலை அவ்வ்!

மேலும் சில படங்கள்.------------------

பின் குறிப்பு:

# படங்கள் அனைத்தும் அடியேன் சுட்டது தான் , சில படங்கள் கலங்களாக இருக்கும், அதுக்கு உற்சாக பானம் எதுவும் காரணமல்ல, அப்படியே போய்கிட்டே எடுத்தவை, மேலும் இம்முறை "புத்தக சந்தையில் யாரும் புகைப்படம் எடுக்காதீர்கள்"என மைக் கட்டி அவ்வப்போது அறிவிப்பு வேற செய்தார்கள் , சுரங்கம் தோண்டுறவங்க கடமை உணர்ச்சிய நினைச்சா ஃபுல்லரிக்குது அவ்வ்!

# போன மாசம் நடந்த புத்தக சந்தை , இப்போ தான் எனக்கு பதிவு போட வாய்த்தது அவ்வ்.
----------------------------

40 comments:

பால கணேஷ் said...

புத்தகத்தை கையில் எடுத்துப்பார்க்கும் போதே சுட்டது, அம்புட்டு விலை , இதெல்லாம் படிக்க மனசு மட்டும் இருந்தால் போதாது என்ற நிகழ்கால வாழ்வியல் யதார்த்தம் மாயக்கரங்களால் செவுளில் அறைந்தது.///// இதுவேதான் என் நிலைமையும். அதுலயும் சில பதிப்பகங்கள் மட்டமான நியூஸ் ப்ரிண்ட்லயே புக்கை அச்சடிச்சுட்டு 150 பக்க புக்குக்கு 140 ரூபா விலை வெக்கறாங்க மனச்சாட்சியே இல்லாம. அதெல்லாம் நான் பாக்கறதோட சரி. என்ன எளவு எலக்கியமா இருந்தாலும் வேணாம்னு விட்ருவேன்.

பால கணேஷ் said...

கொற்கை / இந்தப் பேருக்கு நீர் நினைச்ச விளக்கம் அடிப்பொளி. புத்தகத்தின் உபயோகம் பத்திச் சொன்னதும்... ஹா... ஹா.. ஹா..

பாலகுமாரன் மட்டுமென்ன... ஜெயமோகனோட நிறையப் புத்தகங்கள் இப்படி டைனோசர் விலைதான். எனக்குத் தூக்கம் வரலைன்னா உதவிக்கு வர்றது பாலகுமாரன் புத்தகங்கள் தான்ங்கறதால விலை குறைவான அவர் புத்தகங்கள் மட்டும் வாங்குவேன்.

Anonymous said...

கண்காட்சி பதிவு அருமை...என்ன ரெம்ப ரெம்ப சிறிய பதிவாக உள்ளது.


மேலும் சொல்லறது என்னென்னா.....

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மற்றும் ப.ம.க தேர்தல் வோட்டு பதிவு கருவி வழக்கு குறித்த செய்திகளின் போதும் தீர்க்கதரிசியான உமது நினைவு வந்து, பதிவு ஏதேனும் இருக்கானு தேடினேன். ISIS பத்தியெல்லாம் பதிவு போடுங்கள்.

--கொங்கு நாட்டான்.

தி.தமிழ் இளங்கோ said...

நல்லாத்தான் சொன்னீங்க நாலு வார்த்தை!

Alien said...
This comment has been removed by the author.
Alien said...

தலைவரே!!! வணக்கம்
தாங்கள் நலமா?
படங்கள் நல்ல கிளாரிட்டி...(பாண்டிச்சேரில எடுத்தது மாதிரி இல்ல...ஹி..ஹி..ஹி..)
அப்பபோ ஒரு சின்ன பதிவாவது போடுங்க....
நானே வந்து உங்களுடைய கடைசி பதிவில் கமெண்ட் போட்டு நலம் விசாரிக்கலாம் என்றிருந்தேன்....அதற்குள் புது பதிவே போட்டுட்டீங்க.


வாழ்க வளமுடன்.....

Amudhavan said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் என்றதும் வேகமாக வந்து படித்தேன். பதினைந்து நாட்களாக நமக்கு இண்டர்நெட் இணைப்பு இல்லை. பிஎஸ்என்எல் தந்த வரம். அங்கங்கே நண்பர்கள் வீட்டில் என்று எப்போதாவது பார்த்ததுதான்.
இந்தப் பதிவும் நிறைவாக இல்லை.சும்மா போகிற போக்கில் பஸ்ஸில் தெரிந்த முகம் மாதிரிதான் இருந்தது.
உங்களின் வழக்கமான டச் கொற்கைக்கான விளக்கத்திலும் கிழக்குப் பதிப்பக கடையை மேற்கில் போட்டிருக்கிறார்கள் என்பதிலும்தான் இருந்தது. கொஞ்சம் வேறுமாதிரி பதிவுடன் வாருங்களேன்.

வவ்வால் said...

முதலில் தாமதமான பதிலுரைக்கு அனைவரும் மன்னிக்கவும், ஹிஹி கொஞ்சம் லேட்டாயிருச்சு அவ்வ்!
---------------

அன்பின் பாலகணேஷர்,

வாங்க,நன்றி!

கணேஷ் சதுர்த்தி வாழ்த்துக்கள், கொழுக்கட்டை ,கொழுக் ,முழுக்க்கென கட்டைலாம் பார்க்கும் நன்னாள் அதுவே அவ்வ்!

#//இதுவேதான் என் நிலைமையும். அதுலயும் சில பதிப்பகங்கள் மட்டமான நியூஸ் ப்ரிண்ட்லயே புக்கை அச்சடிச்சுட்டு 150 பக்க புக்குக்கு 140 ரூபா விலை வெக்கறாங்க மனச்சாட்சியே இல்லாம. அதெல்லாம் நான் பாக்கறதோட சரி. என்ன எளவு எலக்கியமா இருந்தாலும் வேணாம்னு விட்ருவேன்.//

ஹி...ஹி நமக்கும் ஒரு கம்பெனி இருக்கு ,என்னைப்போலவே மிரண்டிருப்பிங்க போல!

# தெங்காசிக்காரவோட ரொம்ப கூட்டு வச்சு அடிப்பொலி ,தேங்காபோளிலாம் பேச ஆரம்பிச்சுட்டிங்க அவ்வ்!

செயமோகர் பேர பார்த்தாலே , எகிறிடுவேன், அதெல்லாம் பணக்காரத்தமிழகளின் தமிழாராரத்துக்கான புக்கு அவ்வ்!
-------

கொங்குநாட்டார்,

வாரும்,நன்றி!

பெருசா போட்டா பெருசா இருக்குனு சொல்றது, சின்னடா எழுதினா என்ன சின்னதா இருக்குனு சொல்றதும், பதிவே போடலைனா ஏன் போடலைனு ஆரம்பிக்க வேண்டியது, முடியலைடா சாமி அவ்வ்!

#//விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மற்றும் ப.ம.க தேர்தல் வோட்டு பதிவு கருவி வழக்கு குறித்த செய்திகளின் போதும் தீர்க்கதரிசியான உமது நினைவு வந்து, //

இதெல்லாம் பார்க்க ராச நடைய தான் காணோம் :-))

# //ISIS பத்தியெல்லாம் பதிவு போடுங்கள்.//

அதைப்பத்தி தான் படிச்சிட்டு இருக்கேன் , போதுமான தகவல் கிடைச்சதும் பதிவிடுகிறேன் , இதுவும் சிஐஏ விளையாட்டாக இருக்கவே நிறைய சாத்தியம் இருக்கு ,பார்ப்போம்.

-------------
தி.தமிழ் இளங்கோ சார்,

வாங்க, கருத்துக்கு நன்றி!
-----------

வேற்றுகிரகம்,

வாரும்,வணக்கம்,நன்றி!

பாண்டியிலும் நாம நிதானமாத்தான் படமெடுட்தோம் ,பாண்டி காத்து சரியில்லை போல அவ்வ்!

அவ்வப்போது எதாவது எழுதலாம்னு நினைச்சு ,அப்படியே கிடப்பில போய்டுது, இனிமேலாச்சும் , தொடர்ச்சியாக "தமிழ்சேவை" செய்யப்பார்க்கணும் ஹி..ஹி!

வாழ்வோம், வளமுடன்!

-------------
அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

//பதினைந்து நாட்களாக நமக்கு இண்டர்நெட் இணைப்பு இல்லை. பிஎஸ்என்எல் தந்த வரம். //

எனக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்குனு சொன்னால் சாடிஸ்ட்னு சொல்லிடுவிங்களோனு பயமா இருக்கு ஹி...ஹி ஏன்னா எனக்கும் இணைய இணைப்பு ரொம்ப நாளா இல்லை, எதோ கைப்பேசிய வச்சு கரணம் அடிச்சிட்டு இருக்கேன் , அதுக்கும் சமீப காலமாக ஆப்பு அவ்வ்!

அவ்வப்போது ஓசி அகலப்பட்டை கிடைக்குதோ வண்டி ஓடுது, நல்ல வேளை தினம் ஒருப்பதிவு எழுதலைனா கைநடுக்கிற வியாதிலாம் இன்னும் எனக்கு வரல்ல :-))

# //இந்தப் பதிவும் நிறைவாக இல்லை.சும்மா போகிற போக்கில் பஸ்ஸில் தெரிந்த முகம் மாதிரிதான் இருந்தது. //

பெருசா எழுத இயலாத சூழல் எனவே போயிட்டு வந்த கதையாவது எழுதி வைப்போம்னு செய்தேன். அடுத்த முறை எதிர்ப்பார்ப்புக்கேற்றார் போல எழுத முயல்கிறேன்.(அட நம்பக்கிட்டேயும் ஏதோ எதிர்ப்பார்க்கிறாங்களெ , நல்ல முன்னேற்றம் தான்)

# //வழக்கமான டச் கொற்கைக்கான விளக்கத்திலும் கிழக்குப் பதிப்பக கடையை மேற்கில் போட்டிருக்கிறார்கள் என்பதிலும்தான் இருந்தது//

குறிப்பாக கவனிச்சு இருக்கிங்களே,நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பி.எஸ்.என்.எல் பாரபட்சமற்ற சேவை அவ்வப்போது தமிழ் கூவும் நல்லுலகை
காப்பாற்றி வருவதை அறிய முடிகிறது..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முன்பே நெய்வேலி புத்தகக் கண்காட்சி பிரசித்தம்.ராட்டினம் சுற்றவும் பெரிய அப்பளம் தின்னவும் நிறையப் பேர் வருவார்கள். நெய்வேலி நூலகத்திற்கு அருகில்தான் இந்த புத்தகக் கண்காட்சி நடக்கும் . நீங்கள் குறிப்பிடும் இடமும் அதுதானா என்று தெரியவில்லை.எனது சகோதரர் நெய்வேலியில் இருந்ததால் எனது தந்தை புத்தகக் காட்சி காலங்களில் நெய்வேலி செல்வார்.அப்போது உடன் செல்வதுண்டு. முன்பு எப்போதோ அங்கு ஆர்வக் கோளாறில் வாங்கிய புத்தகங்கள் சில இன்னும் படிக்காமலேயே பழுப்பு நிலக்கரி போல் ஆகிவிட்டன.
*****************
நெய்வேலி நூலகம் எனக்கு பிடித்தமான ஒன்று. ரொம்ப அமைதியா இருக்கும்.(புத்தகத்தை எடுத்தவுடன் தூக்கம் வந்துவிடும் ஹிஹிஹிஹி)

சார்லஸ் said...

ஹலோ அவ்வ் சார்

சந்திச்சு ரொம்ப நாளாச்சு . என் பதிவுக்குள் வந்தீர்கள் என்றால் களைகட்டும் . வாரீகளா?

http://puthukaatru.blogspot.in/2014/10/3.html

Anonymous said...

புதுக்காற்று தளத்தில் எதோ ஒரு ஜந்து வவ்வாலைப் பற்றி உளறி விட்டுப் போயிருக்கிறது. பறந்து வரவும்.

Anonymous said...

உம் மேல் எமக்குக்கோபம் இருந்தாலும் உமது புதிய பதிவு வராதது சிறிது வருத்தம் தான்.
அனந்த ராமகிருஷ்ணன்

Nat said...

வவ்வால் இன்னும் பறக்குதா? நலமா?

எசப்பாட்டு பாடுறதுக்கு ஆள் இல்லைன்னு இடத்தைக் காலி பண்ணிட்டீங்களோன்னு நினைச்சேன்.

ஆமா!இம்புட்டு புஸ்தகங்கள் கிடைக்குதே1அப்புறமேன் உதவி விக்கிலீக்ஸ்,விக்கிபீடியான்னு போடுறீங்க:)

Nat said...

வந்ததுக்கு கொஞ்சம் பின்னூட்டம் ஆடித்தான் பார்ப்போமே!

பால கணேஷ் அவர்களுக்கு! தற்போதைய விலைவாசி காலச்சூழலில் புத்தகங்களின் விலை அதிகம் என்கிற மாதிரி தெரியவில்லை.சாரு ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரீ என்றெல்லாம் கூவி விக்கிறராரு.ஆனாலும் வாங்குவதற்கு ஆட்களைக் காணோம்.

மாற்று நுகர்வுக்கலாச்சாரம் வந்து விட்டதால் புத்தக படிப்பில் நிறைய பேருக்கு ஆர்வம் இல்லை என்பதே உண்மை.முந்தைய கால கட்டங்களை ஒப்பிட்டால் சினிமா,ரேடியோ,புத்தகம் தவிரி பொழுது போக்கு இல்லை.

Nat said...

கொங்குநாட்டாரே!நலமா? உங்க மாதிரி ஆளை உசிப்பி விட ஆட்கள் இல்லாமல்தான் வவ்வால் குறைவா பறக்குதோ:)

ISIS பத்தியெல்லாம் பதிவு போட்டா பதிவு ரத்தக்களரியாத்தான் இருக்கும்.உங்களுக்கு வேணுமின்னா விக்கிலீக்ஸ் மாதிரி liveleaks போய் தேடுங்க.இவுனுங்க ஒருத்தன் தலையை இன்னொருத்தன் வெட்டிக்கிட்டு சாவறதால பக்கத்துல இருக்குற இஸ்ரேலை இன்னும் குறைந்தபட்சம் 500 வருசத்துக்கு அரபுகள் ஒருத்தனும் பக்கம் அண்ட முடியாது.

மனுசனுங்களா இவர்கள்?

Nat said...

//இதெல்லாம் பார்க்க ராச நடைய தான் காணோம் :-))//

வவ்வால்!சுருதி சேத்தறதுக்கு நாமதான் தோது:)

முந்தைய பின்னூட்டங்கள் வரிசையா படிச்சிகிட்டே வந்ததுல மனசுல பட்டது. இப்பத்தான் உங்கள் மறுமொழிகளை பார்வையிட்டுகிட்டு வாரேன்.

முதல் முறையா ஐஎஸஐஎல் என பெயர் பார்த்ததும் பாகிஸ்தான்காரனோன்னு நினைச்சு குழியை தோண்டினா சி.ஐ.ஏ,இஸ்ரேல் ஒரு களம்,சவுதிக்கும்,ஈரானுக்குமான சுன்னி,ஷியா பிரிவு மற்றும் ஈராக் மீதான சதாமுக்கு பின்பான ஆதிக்கம் என மறுபுறம். இதற்கிடையில் ஜார்ஜ்புஷ்,ரம்ஸ்பீல்டு ஆடுன ரம்மில காணாமல் போன சதாமின் ராணுவ வீரர்கள் தவிர்த்து மிஞ்சியவர்கள் ஜார்ஜ் புஷ் காலத்திலேயே உருவாக்கிய உள்நாட்டு கலவரக்காரர்கள் ( Hurt Locker படம் பாருங்கள் ) இன்னொரு பக்கம் என்ற சூழலில் நீங்கள் சொன்ன சிஐஏ வின் அனுமதியுடனோ அல்லது அவர்களோடு இணைந்தோ சவுதி,கத்தார்,குவைத் கிடைத்த பணம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆள்பலம் என உருவாக்கப்பட்டதே ஐ.எஸ்.ஐ.எல் பின்பு ஐ.எஸ் என்ற கட்டெறும்பாகி நிற்கிறது.

துருக்கி மற்றும் குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கை என்ற காரணியும் கூட ஐ.எஸ் காரன் சிரியாவில் போகனுமின்னா துருக்கியோட உதவி தேவை என்ற நிலை. மொத்த வளைகுடா நாடுகள் அனைத்தும் முன்பு துருக்கிய நாட்டின் ஆளுகையில் இருந்து பிரிந்தவை.இருந்தாலும் இப்போதைய கலிபா தேச உருவாக்கம் துருக்கிக்கு எதிரான ஒன்று என்ற போதும் ஐ.எஸ்க்கு எர்தான் துருக்கி பிரதமர் தலைமையிலான உதவி கிடைப்பது குர்திஸ்தான்க்கு எதிரான தனிநாடு உரிமையை மறுப்பது.

குர்திஸ்தான் கதை கிட்டத்தட்ட நம்ம தனி ஈழம் கோரிக்கை மாதிரி கொங்குநாட்டாரே!

எப்படி மொழி நில அடிப்படையில் தமிழகம்,இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்களோ மற்றும் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் மாதிரி குர்திஸ்தான் இயக்கமும் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்ட சிரியா,ஈராக்,துருக்கி எல்லைப்பகுதிகளைக் கொண்ட தனிமொழி பேசுபவர்கள் குர்திஸ்தானியர்.

அமெரிக்கா உட்பட புலிகள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட மாதிரி குர்திஸ்தான் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டவர்கள். சதாமுக்குப் பின்பான புதிய ஈராக் ராணுவ வீரர்களால் வெல்ல முடியாத ஷரியா கலிபா தீவிரவாதிகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றவர்கள் குர்திஸ்தானியர்கள்.ஈழப்பெண் போராளிகள் போலவே குர்திஸ்தானியப் பெண்களும் போர்க்களத்தில் முன்நிலையில் நிற்கிறார்கள்.

ஒபாமாவுக்கோ இருதலைக்கொள்ளி நிலை.ஜார்ஜ் புஷ் அனுப்பிய அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவது என்ற தேர்தல் அஜெண்டாவால் இன்று படைகளை அனுப்புவதிலும் சிக்கல்.எனவே விமான தாக்குதல் மட்டுமே என்ற நிலைப்பாட்டில் நிலத்தில் போராடுவதற்கு குர்திஸ்தானுக்கு ராணுவ உதவி செய்வதோடு குர்திஸ்தான் போராடுவதோடு மொத்த ஈராக்கையும்,சிரியாவையும் கூறுபோடும் அமெரிக்க,இஸ்ரேல் திட்டம் நிறைவேறுமானால் குர்திஸ்தானுக்கு தனிநாடு கிடைக்கலாம் எதிர்காலத்தில்.இல்லையென்றாலும் அமெரிக்கா,இஸ்ரெல் நலன் திட்டங்களுக்கு பாதகமில்லாமல் ஒருவரை ஒருவரை சுட்டுக்கொண்டு சாகச் சொல்லி தமது நலங்களை அரபிகளுடன் துணையோடு பாதுகாத்துக்கொள்ளலாம்.

Nat said...

//ராட்டினம் சுற்றவும் பெரிய அப்பளம் தின்னவும் நிறையப் பேர் வருவார்கள்.//

திரு.டி.என்.முரளிதரன்! ராட்டினம் சுத்தறது சரி!அதென்ன பெரிய அப்பளம்? ஒருவோளை நீங்க சன்னா பதுரா என்னும் வடநாட்டு அப்பளத்தை சொல்றீங்களோ?

Nat said...

//செயமோகர் பேர பார்த்தாலே , எகிறிடுவேன்//

வவ்வால்!ஜெயமோகனின் முழுப்புத்தகத்தையோ அல்லது எதிர்க்கடை போட்டிருக்கும் சாருவின் புத்தகத்தையோ வாசிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.ஆனாலும் இணையத்தில் மேய்ந்த வரை இருவரின் எழுத்து நடையில் சாருவின் சுயபுராண எழுத்தாக இருந்தாலும் எளிமை இருக்கிறது.ஜெயமோகன் கொஞ்சம் அதிமேதாவித்தன இந்துத்வா மாதிரி காட்டிக்கொள்கிறார்.

Nat said...

பின்னூட்டத்துக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறதுக்கு யாருமே இல்லையேன்னு பழைய பதிவுகளையும்,பின்னூட்டங்களையும் கொஞ்சமா மேய்ந்தேன்.கூகிள்காரன் ஓசுல பட்டா போட்டுக்கோன்னு சொல்லிட்டு எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அப்படியெல்லாம் சம்பாதிச்சுகிட்டிருக்கான்.ஓசி பட்டா,கருத்துக்கள்,எண்ணங்கள் பலருக்கும் போய் சேர்வது,நண்பர்கள் குழு,விடாம மல்லுக்கட்டி வாங்கி கட்டிக்கொள்வது:) என்ற சில நன்மைகளைத் தவிர எழுத்தின் உழைப்பு நேரம்,இலவச கருத்துக்கள் என்பவற்றையெல்லாம் பிளாக் விழுங்கிக் கொள்கின்றன.இருந்தாலும் இத்தனை ஸ்கோர் அடிச்சிருக்கீங்களேன்னு நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள் என்ற பூஸ்ட்.

Nat said...

ராப்பறவையை பிராண்டுலாமுன்னு பார்த்தா எசப்பாட்டு பாடுறதுக்கு ராப்பறவையையும் காணோம்.பின்னூட்ட வாத்தியங்களையும் காணோம்.

புத்தக வாசிப்பை கைபேசிக்கு கொண்டு போகனும்ன்னு அய்யா அப்துல்கலாம் அவர்கள் சொன்னதைப் பார்த்தேன். புத்தக பதிவுக்கான வரவுகளைப் பார்த்தால் தெரியல கைபேசி திட்டம் என்ன பலன் தருமென்று.வாசிப்பு பழக்கம் வேண்டுமென்றால் ஜீ பூம்பான்னு அனைத்து நுகர்வு கலாச்சாரங்களும் காணாமல் போயிடனும் ப்ழைய காலத்து சினிமா,ரேடியோ,புத்தகம் மாதிரி.கூட வேணும்ன்னா இந்த மூன்றுக்கும் கூகிளின் தேடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.எப்படியோ அமெரிக்கா காசு நல்லா சம்பாதிக்குது தற்போதைய சூழலில்.

Nat said...

அய்யா வவ்வாலு!எங்கேய்யா போனீங்க? ஒரு வேளை முகநூல் பக்கம் ஓடிட்டீங்களோ இப்பவெல்லாம் அங்கதான் கூட்டம் அதிகம்ன்னு கேள்வி. அல்லது இணைய இணைப்பு கிடைக்காம பாட்டிலோடு மல்லாந்து படுத்து யோசிக்கிறீங்களோ:)

சரி வந்ததுக்கு ஒரு விசயம் சொல்லிட்டுப் போறேன். எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க! நல்ல மாடு உள்ளூர் சந்தையிலே வித்திடும்ன்னு.உதாரணம் வேணுமின்னா நம்ம நயன். தனிவாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு அப்புறமும் தமிழ்நாட்டுல கொடி கட்டிப்பறக்குது. உங்களுக்கு சந்தேகம்ன்னா ஸ்ப்பா... செம அழகுன்னு டயலாக்கிலேயே வழியும் விஜய் சேதுபதிய கேளுங்க:)

உங்க அசின் என்னடான்னு தமிழக சந்தைய விட்டுட்டு இலங்கையில் போய் விரிக்கிறேன்னு போய் வீணா மாட்டிகிட்டு மும்பையிலாவது கடை போடுவோம்ன்னு போச்சா? உங்களுக்கு வில்லனா சல்மான்கான் வர அந்தாளு என்னடான்னா காபி வித் கரன்ல நான் இன்னைக்கு வரைக்கும் வெர்ஜினாக்கும்ன்னு முகத்துல எந்த பாவமும் இல்லாமல் சொல்றாரு.அசின் இங்க அங்க சுத்தி பேஷனுக்கு பேஷா போஸ் கொடுத்ததை பாலிவுட் சேனல் ஒன்றில் பார்த்தேன்.அரைக்கிழவியாகி விட்ட அசினை நீங்க இன்னும் பதினாறு வயசு சிரிதேவி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து தாவணி படமெல்லாம் போட்டு அப்பாவி பின்னூட்ட வாசகர்களை இன்னும் ஏமாத்திட்டிருக்கீங்களே:)

பெரியார் தளம் தமிழ் ஓவியா மாதிரி தனி ஆவர்த்தன பின்னூட்டம் போட்டுகிட்டிருக்கேன். யாராவது துணைக்கு ஆட வாங்கய்யா!வவ்வால் நீங்களாவது?

Nat said...

வவ்வால் மறுபடியும் வனவாசமா? உன்னைக் காணாத....விஸ்வரூபம் கமல் ராகத்தில் பதிவர் அமுதவன் வவ்வாலை எங்கே காணோம் என்று தேடுகிறார்.கடைப்பக்கம் வர இயலாத சூழ்நிலையென்றாலும் இரண்டு வரி பதிவிடலாம்.எங்கிருந்தாலும் கடைக்கு உடனே பறந்து வரவும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பலரும் வவ்வாலை நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் வருக

Alien said...

வவ்வால்,
நீங்கள் நலமா?

நீர் எங்கயா இருக்கிறீர்?
எல்லோரும் உம்மை வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறார்கள். Leave போடுறது தான் போடுறீர், சொல்லிவிட்டு விடுமுறை எடுக்கலாம் அல்லவா? சீக்கிரம் வாரும்.
http://amudhavan.blogspot.com/2014/12/blog-post.html

Nat said...

வவ்வாலை காணவில்லை என்று கடையில் பதிவர் அமுதவனும், நானும் போஸ்டர் ஒட்டியிருக்கிறோம். பதில் தரவும்.

Nat said...
This comment has been removed by the author.
Nat said...

வவ்வால்! வேற கடைகளில் ஏதாவது கும்மியடிக்கிறீங்களோன்னு கூகிளை தேடினால் உங்க கடைக்கு 147 டாலர் விலை பேசுகிறது கூகிள். ஒரு வேளை கூகிள்காரன்கிட்ட டூ விட்டுட்டுப் போயிட்டீங்களோ?நீலகிரி,வால்பாறை மாதிரியான உயரமான இடத்தில் கூட இப்பவெல்லாம் சிக்னல் கிடைக்குதாம். எனவே முன்பு மாதிரி சிக்னலே கிடைக்கலே பாட்டு வேண்டாமே!

Nat said...

வவ்வால்! இன்னுமொரு புத்தக சந்தை சென்னையில் வந்நுவிட்டது.

இன்றைய பொங்கல் நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டு பின்னுட்ட மறுமொழிக்காக இன்னும் காத்திருக்கிறேன்.

Anonymous said...

where are you vovs?????? .........

Kongunaattaan

Anonymous said...

Last post Aug 12, 2014.

Aug 22, 2015.


One year without Vovs.....Very sad...

-KPS.

அப்பாதுரை said...

புத்தகங்களின் விலையைப் பார்க்கும் பொழுதெல்லாம் இதே எண்ணம் தோன்றும் :-)

கொற்கை - ஹிஹி..

படங்களை வைத்துப் பார்க்கும் பொழுது கடைகள் சற்று ஒழுங்காக இருப்பது போல் தோன்றுகிறது. சில வருடங்களுக்கு முன் சென்னைப் புத்தகப் புண்காட்சியில் கிடைத்த தழும்புகள் இன்னும் மறையவில்லை. கிழக்குப் பதிப்பகத்தில் இப்பல்லாம் வாடிக்கையாளர்களை மதிச்சு நடத்துறாங்களா?

அப்பாதுரை said...

விகடன் கடை சந்தைக்கடை போல் இருந்தது - சென்னைக் காட்சியில். கடுமையான பொது இட ஆக்கிரமிப்பு - கேள்வி கேட்பார் இல்லை.

Anonymous said...

சகோ.
நீங்கள் நலமாக இருக்க என் பிரார்த்தனைகள்.
திரும்ப வாருங்கள்.
நன்றி

Anonymous said...

Vovs...

We miss you a lot....come backkkkkkkk.............


-K.N.

Kalyan Kumar said...

என்னாச்சு சார்

Abdul Rahim said...

Dear Sir

What happen We really miss you

A Abdul RahimAnonymous said...

Vovs...

We miss you a lot....come backkkkkkkk.............


-K.N.(kongunaataan)

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர் | தினத்தந்தி