Saturday, March 31, 2012

மிரட்டும் மின்சாரக் கொள்(ளை)கை!



மிரட்டும் மின்சாரக் கொள்(ளை)கை!





எதிர்பாரத நேரத்தில் ஒரு நிகழ்வுக்கு நாம் ஆளானால் அது அதிர்ச்சி , அது வலிக்கொடுத்தால் துன்ப அதிர்ச்சி, மகிழ்வு கொடுத்தால் இன்ப அதிர்ச்சி என்போம். பேருந்தில் பக்கத்து சீட்டில் பாட்டி உட்கார்ந்தால் துன்ப அதிர்ச்சி ,அதுவே ஒரு கட்டிளம் வாளைக்குமரி அமர்ந்தால் இன்ப அதிர்ச்சி :-))

ஆனால் சபிக்கப்பட்ட நம்மளுக்கு இன்ப அதிர்ச்சி வாய்ப்பதேயில்லை, தொரத்தி தொரத்தி துன்ப அதிர்ச்சியை மட்டுமே எல்லோரும் கொடுக்கிறாங்க அதுவும் மக்கள் சேவை செய்யவே பிறவி எடுத்த அரசியல் மகான்கள் ஏ.சி ரூம் போட்டு யோசிச்சு டிசைன் டிசைனா துன்ப அதிர்ச்சிக்கொடுக்கிறாங்க ,பால் விலையை ஏத்தினாங்க, பஸ் டிக்கெட் ஏத்துனாங்க, இப்போ மின் கட்டணமும் ஏத்தியாச்சு இனிமே புல்டோசர் மேல ஏற்றாதது ஒன்று தான் பாக்கி, அதையும் சர்வாதிகார நாடாக இருந்தால் செய்திருப்பார்கள்.

சரி மின் கட்டணத்தை அவங்க தேவைக்கு ஏற்ப ஏற்றீயாச்சு அப்போ மக்கள் தேவைக்கு மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்குமா என்று கேட்டால் வாயே திறக்க மாட்டாங்க.

கிடைக்கிற கொஞ்ச மின்சாரத்துக்கும் அணு உலை இருந்தால் தான் சாத்தியம்னு ஒரு அபாயகரமான திட்டம் வேற சொல்வார்கள். அது தான் மலிவானது என்பார்கள். அப்படியெனில் அபாயம் குறைவான, அல்லது முழுவதும் தீங்கற்ற மலிவான மின் உற்பத்தி சாத்தியம் இல்லையா?

சாத்தியமுண்டு ,ஆனால் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஐடியா கொடுக்கும் மெத்தப்படித்த அதிகாரிகளும் திட்டமிட்டே பொய் பரப்புரைகள் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.


கேடு விளைவிக்காத சூரிய சக்தி,காற்றாலை எல்லாம் ஏன் அதிக அளவில் பயன்ப்படுத்த கூடாதா எனக்கேட்டால் அவற்றின் விலை மிக அதிகம் என்பார்கள் அரசியல் விஞ்ஞானிகள் , அதில் எந்த அளவுக்கு  உண்மை இருக்கு என பார்ப்போம்.

மெகா வாட் கணக்கு:

1000 மெகா வாட் மின் நிலையம், என்று சொல்கிறார்கள் அப்படி எனில் 1000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் 1000 மெகாவாட் என்பது ஒவ்வொரு வினாடியும் கிடைக்குமா? எந்த அடிப்படையில் 1000 மெகா  வாட் உற்பத்தியாகும் எவ்வளவு நேரத்துக்கு கிடைக்கும் என்று சொல்வதில்லை, உற்பத்தியாகும் மின்சாரத்தை எப்படி,எவ்வளவு பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதையும் யாரும் வெளிப்படையாக சொல்வதேயில்லை.

அப்படியெனில் மெகாவாட்டுக்குள் என்ன தான் ஒளிந்து இருக்கு?


ஒரு ஆண்டு மின்  உற்பத்தி என்று  சொல்லும்  போது மட்டும் ஒட்டு மொத்தமாக இத்தனை மில்லியன் யூனிட் /மெகாயுனீட்/கிகா யூனிட்,/டெரா யூனிட் என்று அப்போது மட்டும் யூனிட்டில் சொல்வார்கள். அப்படி எனில் மெகாவாட் திறனுக்கும், பயன்ப்பாட்டு அளவுக்கும் வேறு ஒரு தொடர்பு இருக்கிறது என்று தானே பொருள்.

நம் வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்ப்படுத்தினோம் என்பதை மின் யூனிட்டில் சொல்வதைப்பார்த்திருக்கிறோம்.

ஒரு யூனிட் என்பது 1000 வாட்ஸ் மின்சாரத்தை ஒரு மணி நேரம் பயன்ப்படுத்துவது.

1000 வாட்ஸ்/மணி = ஒரு கிலோ வாட்ஸ்/மணி.

இப்போ ஒரு சந்தேகம் வரும் 1000 மெ.வா மின் நிலையம் எனில் 1000 மெ.வா எவ்வளவு கால அளவில் உற்பத்தி செய்கிறது என்று. அப்படி கணக்கிட்டால் எவ்வளவு மின் யூனிட் உற்பத்தியாகும் ?.1000மெ.வா என்பது ஒவ்வொரு வினாடிக்கும் உற்பத்தியாகுமா என்றால் ஆகாது. அப்படி கால அளவுக்கும் வாட்ஸுக்கும் தொடர்பு படுத்தி கிடைப்பதே உண்மையில் பயன்படுத்த கூடிய நுகர்வு மின்சக்தி என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒரு எளிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம் ,

ஒரு லிட்டர் ரைஸ் குக்கரில் ஒரு லிட்டர் சாதம் சமைக்கலாம். இப்போது அதன் திறன் என்ன? ஒரு லிட்டர் என்று சொன்னால் அதன் கொள்ளவைப்பொறுத்து மட்டுமே.கிடைக்கும் அவுட் புட் அளவு என்னவாக இருக்கும்? எவ்வளவு நேரத்தில் எவ்வளவு சாதம் கிடைக்கும் என்பதை வைத்தே சொல்ல முடியும்.

ஒரு லிட்டர் அரிசி சோறாக வேக எவ்வளவு நேரம் ஆகும் 15 நிமிடம் எனில் 15 நிமிடத்துக்கு ஒரு லிட்டர் சாதம் ஒரு மணி நேரத்துக்கு 4 லிட்டர் அரிசு வேக  வைத்து 4 லிட்டர் சாதம் கிடைக்கும். 24 மணி நேரத்தில் 56 லிட்டர் சாதம் கிடைக்கும் இப்போது அதன் திறன் என்ன என்று எப்படி சொல்வது?

அதனை ஒரு லிட்டர் குக்கர் என்பதா அல்லது 56 லிட்டர் குக்கர் என்பதா? 

எளிதாக ஒரு மணிக்கு 4 லிட்டர் சாதம் உற்பத்தி செய்யும் குக்கர் என்று சொன்னால் அதன் உண்மையான செயல் திறன் விளங்கும்.இப்போது 10 நிமிடத்தில் அரிசி வெந்தால் அதே ஒரு லிட்டர் குக்கரில் இருந்து அதிக சாதம் கிடைக்குமல்லவா?

அப்படித்தான் 1000 மெ.வாட் மின் நிலையம் என்று சொல்வதும் எளிதாக ஏமாற்றும் ஒரு ஒரு திறனளவு. ஒரு மணி நேரத்துக்கு எத்தனை வாட்ஸ்/மெகா வாட்ஸ் என்று சொல்ல மாட்டார்கள் ஒவ்வொரு வகையான மின் உற்பத்திக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும்.

1000 மெ.வா அனல் மின் நிலையமும் 1000 மெ.வா அணு மின் நிலையமும் ஒரு மணி நேரத்தில் ஒரே அளவு மின் உற்பத்தி செய்யாது. என்பதை சுலபமாக மறைத்துவிட்டு இணையானது அல்லது திறன் மிகுந்த மின் நிலையம் என்பது போல 1000 மெ.வா என்பதையும் யூனிட் மின்சார செலவையும் ஒரு கணக்காக காட்டி நம்ப வைக்கிறார்கள். மேலும் எவ்வளவு ஆற்றலை (எரிசக்தியை )மின்சாரம் ஆக மாற்றுகிறது என்பதை வைத்து திறனை சொல்கிறார்கள் அது கணக்கீடுக்கு வேண்டுமானால் சிறப்பாக இருக்கலாம் . நடை முறைக்கு ஒரு மணியில் கிடைக்கும் மின் யூனிட்டே முக்கியம் ஆகும்.

உண்மையில் வெகு திறனான மின் உற்பத்தி முறை நீர் மின் உற்பத்தி, காற்றாலை, அனல் , சூரிய சக்தி ஆகும் அணு மின்சாரம் கடைசியே.

சூரிய சக்தி  மின்சாரம் விலை அதிகம் என்பதும் ஒரு மாயையே அது எப்படி என இறுதியில் பார்ப்போம். இப்போது ஒரு மணியில் உற்பத்தி செய்யும் மின்யூனிட்கள் அடிப்படையில் திறனை ஒப்பிடலாம்.

சூரிய சக்தி நீங்கலாக மற்ற எல்லா மின் உற்பத்தியிலும் இறுதியில் மின்சாரம் உற்பத்தியாவது டர்பைனுடன் இணைந்த  ஜெனெரேட்டர்கள் மூலமே.எனவே ஜெனெரேட்டர்களை இயக்குவதில் எம்முறை அதிக உற்பத்தி கொடுக்கிறதோ அம்முறையே சிறப்பான மின் உற்பத்தி முறை ஆகும்.

உதாரணமாக ஒரு மெகா வாட் டர்பைனுடன் கூடிய ஜெனெரேட்டரை பார்ப்போம்.

இயக்கியவுடன் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிவிடாது , ஒரு மெகாவாட் உற்பத்தியை  டர்பைன் ஜெனெரேட்டர் எட்ட ஆகும் காலம்  மாறுபடக்கூடியது.

பொதுவாக ஒரு ஜெனெரேட்டருக்கு ஒரு மெகாவட் மின் உற்பத்தியை எட்ட 10 நிமிடம் ஆகிறது எனில் ஒரு மணியில் 6 முறை 1 மெ.வா மின் உற்பத்தியை எட்டும். அப்படி எனில் அதன் மின் உற்பத்தி திறன் 6 மெகாவாட்ஸ்/மணி ஆகும்.6000 கிவாட்ஸ்/மணி அதாவது 6000 யூனிட் மின்சாரம்.

ஒரு மெகாவாட்ஸ் உற்பத்தி ஆக எடுக்கும் காலத்தினை ரேம்ப் அப் ரேட்(ramp up rate) என்பார்கள். ஒரு மணியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவை வைத்து அதனை ரன் அப் ரேட்(run up rate) என்பார்கள்.

ரேம்ப் அப் ரேட் (time to  reach peak power output)குறைவாக இருக்கும் மின் உற்பத்தி அமைப்பே சிறந்த ஒன்று , அதன் அடிப்படையிலேயே எவ்வளவு மின்சாரம் கிரிட்டுக்கு கிடைக்கும் என்பதை சொல்ல முடியும்,கிரிடுக்குள் பாயும் மின்சாரமே பயன்பாட்டின் லோடுக்கு போகும் , பயன் பாட்டின் அடிப்படையில் பேஸ் லோட்(base load) , பீக் லோட் (peak load), சராசரி (avg load) என்றெல்லாம் கணக்கிட்டு தேவைக்கு ஏற்ப கிரிட்டில் மின்சாரம் செலுத்தப்படும். வெறுமனே 1000 மெவா மின் நிலையம் என்பதை வைத்து பயன்ப்பாட்டுக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை சொல்ல முடியாது. அது ஒரு லிட்டர் குக்கர் என்று  சொல்வது போலவே.

இப்போது வகை வாரியாக பார்க்கலாம், அனைத்தும் ஒரு மெகாவாட் என்ற உதாரணத்தின் அடிப்படையில்.



 நீர் மின்சாரத்தின் ரேம்ப் அப் ரேட் மிக அதிகம், ஒரு மணியில் ஒரு மெ.வா டர்பைன் 8  மெவா/மணி உற்பத்தி செய்யும்.


அடுத்து அனல் மின் டர்பைன் மூலம் 6 மெவா /மணி கிடைக்கும்.

ரொம்ப மெச்சப்படும் அணு மின் டர்பைன் மூலம் 2 மெவா/மணியே .

காற்றாலை என்பது காற்றின் வேகத்தை பொறுத்து அடிக்கடி மாறக்கூடியது ஆனாலும் நிலையாக காற்று வீசினால் அதன் ரேம்ப் அப் ரேட் அனல், புனலுக்கு அருகில் செல்ல கூடியது.

உதாரணமாக காற்று நிலையான வேகத்தில் 12 மைல்/மணி காற்று வீசினால் காற்றாலை முழு திறனில் செயல்ப்படும், 6 மைல் எனக்காற்று வேகம் இருந்தால் குறைந்து விடும்.  காற்றின் வேகத்தினை போல 8 மடங்கு வேகத்தில் சுழலக்கூடியதாக காற்றாலை டர்பைனில் கியர்  அமைப்பு உள்ளதே காரணம் ஆகும். இதனால் காற்றின் வேகத்தின் மும்மடிக்கு காற்றாலையின் சக்தி இருக்கும். காற்றாலையின் பிளேட் நீளம் கூட கூட அதிக  திருப்பு விசைக்கிடைக்கும் இப்போது பெரும்பாலும் 1.25 மெ.வா திறனுடன் ஒரு  தனிக்காற்றாலை அமைக்கப்படுகிறது. 5 மெ.வா வரைக்கும் வடிவமைக்க சாத்தியமுள்ளது.

ஒரு தனிக்காற்றாலை சராசரியாக நல்லக்காற்றுள்ள சூழலில் 1.25 மெவா காற்றாலையில் இருந்து 6 மெ.வா/மணி என மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

எனவே ஒரு மெ.வா என ஒப்பிடும் போதே அணு மின் உற்பத்தி திறனை விட மற்ற எல்லாம் சிறப்பாக இருக்கும் போது அணு மின்சாரம் எப்படி மலிவானது என சொல்கிறார்கள்.அதில் தான் மிகப்பெரிய பித்தாலட்டமே இருக்கிறது. அணு பிளவை எரிப்பொருளின் விலையை மட்டும் கணக்கில் வைத்து  ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை கணக்கிடுகிறார்கள்.

மின் உற்பத்தி செய்ய ஆகும் செலவை பொதுவாக எப்படி கணக்கிட வேண்டும் எனில்,

நிறுவும் செலவு + எரிப்பொருள் செலவு +இயக்கும் செலவு +பராமரிப்பு செலவு ஆகியவற்றை மொத்தமாக கூட்டி , உற்பத்திக்கு ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு என கணக்கிட வேண்டும். மேலும் அணு மின்சாரத்தில் உற்பத்தி காலம் முடிந்த பின் பாதுகாப்பாக அணு உலையை செயல் இழக்க செய்ய ஆகும் செலவையும் சேர்க்க வேண்டும் அப்படி எல்லாம் கூட்டி கணக்கிட்டால் அணு மின்சாரம் மலிவானதே அல்ல.

மின் நிலையங்களுக்கான செலவின் அடிப்படையில் ஒரு ஒப்பீடு:

அணு மின்சாரம்:

நிறுவும் செலவு - உண்டு,அதிகம்.

எரி பொருள் செலவு- உண்டு

இயக்கும் செலவு - உண்டு

பராமரிப்பு - உண்டு

டி கமிஷன் செலவு =உண்டு(மிக அதிகமும்)

அபாயம்,= மிக அதிகம்.

சுற்று சூழல் கேடு: தவறு ஏற்பட்டால் உண்டு.

அனல் மின்சாரம்:

நிறுவும் செலவு = உண்டு, மிதமான முதலீடு.

எரி பொருள் செலவு= உண்டு

இயக்கும் செலவு =உண்டு

பராமரிப்பு செலவு=உண்டு

அபாயம்= மிதமானது.

,சுற்று சூழல் கேடு: உண்டு.

புனல் மின்சாரம்:

நிறுவும் செலவு =உண்டு,மிதமானது

எரி பொருள் செலவு =இல்லை

இயக்கும் செலவு= குறைவானது

பராமரிப்பு செலவு= உண்டு, குறைவானது.

சுற்று சூழல் கேடு = இல்லை/குறைவானது

அபாயம் :மிதமானது.

காற்றாலை மின்சாரம்:

நிறுவும் செலவு= உண்டு

எரி பொருள் செலவு= இல்லை

இயக்கும் செலவு = மிக மிக குறைவு

பராமரிப்பு செலவு = மிக மிக குறைவு.

அபாயம் &சுற்று சூழல் கேடு= இல்லை

இப்போது சூரிய சக்தி மின் உற்பத்தியை கவனிக்கலாம்.

நிறுவும் செலவு =  உண்டு

எரி பொருள் செலவு=இல்லை

இயக்கும் செலவு= வெகு சொற்பம்

பராமரிப்பு செலவு= வெகு சொற்பம்

சுற்று சூழல் கேடு & அபாயம்: இல்லை

இயக்கும் செலவு* என்பது மின் நிலையத்தினை இயக்க தேவைப்படும் ஊழியர்கள் சம்பளம் உட்பட இன்ன பிற செலவுகள் ஆகும். அனு மின்  நிலையம், அனல் மின் நிலையம் ஆகியவை இயக்க அதிக ஊழியர்கள் தேவை அவர்களுக்கு ஆண்டு தோறும் செலவிடப்படும் தொகையை வெளிப்படையாக அரசு சொல்வதில்லை. ஆனால் மலிவான மின்சாரம் என அரசு சொல்லும்.

அதே சமயம் சூர்ய சக்தி,காற்றாலை, புனல் மின் சாரம் ஆகியவற்றிற்கு ஊழியர்கள் தேவை குறைவு,எனவே இயக்கும் செலவும் குறைவே.

அனைத்தையும் ஒப்பிடுகையில் சூர்ய சக்தி மின்சாரம் மலிவாக இருக்க வேண்டுமே பின் ஏன் அதிக செலவு என அனைவரும் சொல்கிறார்கள் என்றால் அதிலும் ஒரு கோல் மால் வணிக கணக்கு இருக்கிறது என்னவென பார்ப்போம்.

மற்ற அனைத்திலும் 24X7 என ஆண்டு முழுவதும் இயக்கி மின்சாரம் எடுக்கலாம் என தோராயமாக சொல்லலாம். நீர் இருக்கும் போது மட்டும் நீர் மின்சாரம் ,காற்றடித்தால் தானே காற்றாலை மின்சாரம் என்பதை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு வருவோம் இப்போதைக்கு.

சூர்ய சக்தி மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்ய ஒரு அடிப்படையாக அனல் மின் உற்பத்தியை வைத்துக்கொள்கிறார்கள்.

24X7 என 365 நாட்களும் அனல் மின் நிலையத்தை இயக்க முடியும்.  எனவே தொடர் மின் உற்பத்தி செய்து தொடர்ந்து மின்சாரம் விற்று காசு சம்பாதிக்கலாம்.

ஆனால் சூர்ய சக்தி பகலில் மட்டுமே எனவே இரவில் மின்சாரம் உற்பத்தி ஆகாது விற்க முடியாது. எனவே இரவில் உற்பத்தி செய்யாமல் இருப்பதற்கும் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.மின் உற்பத்தியை அல்லது வெப்பத்தை சேமித்து இரவில் பயன்ப்படுத்தலாம். ஆனாலும் அது பகலில் கிடைத்த 10 மணி நேர உற்பத்தியே.

 சூர்ய மின் உற்பத்தி குறித்தான  எனது முந்தைய பதிவு.

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_08.html">சூர்ய சக்தி மின்சாரம்

ஒரு நாளில் 10 மணி நேரம்  மின் உற்பத்தி ஆகிறது 14 மணி நேரம் ஆகவில்லை. 10 மணி நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு மட்டும் காசு கொடுத்தால் அது அனல் மின் நிலைய விலையிலே இருக்கும். ஆனால் மொத்தமாக 24 மணி நேரம் ஒரு மெகாவாட் அனல் மின் நிலையம் இயக்கினால் எவ்வளவு மின் சாரம் உற்பத்தியாகுமோ அதே அளவு கணக்கிட்டு அதனை 10 மணி நேரம் உற்பத்தி செய்யும் சூரிய மின்சக்திக்கு விலையாக நிர்ணயிக்கிறார்கள். எனவே ஒரு யூனிட் சூர்ய சக்தி மின்சாரத்தின் விலை கூடிப்போகிறது.

ஷேர் ஆட்டோவில் ஆளுக்கு 5 ரூபாய்  கட்டணம் , ஒரு 10 பேர் ஏறினால் தான் வண்டி எடுப்பான் , நான் ஒருவர் மட்டும் ஏறிக்கொண்டு உடனே வண்டி எடுக்க சொன்னால் எடுக்க மாட்டன், அதே சமயம் 10 பேர் ஏறினால் கிடைக்கும் தொகையை நானே கொடுக்கிறேன் என்றால் ஆட்டோவை எடுப்பான் அல்லவா அப்படித்தான் சூர்ய சக்தி மின்சாரத்துக்கும் விலை  நிர்ணயிக்கப்படுகிறது. இது தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்த செய்யப்பட்டது. அதனை வைத்துக்கொண்டு சூர்ய  சக்தி மின்சாரம் தயாரிக்க செலவு அதிகம் ஆகும் என பரப்புவது சரியல்ல.

சூர்ய சக்தி மின்சாரத்துக்கு ஆகும் செலவு அனைத்தும் நிறுவும் செலவே , மற்ற செலவுகள் எல்லாம் இல்லை. ஒரு முறை நிறுவினால் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேற்படி செலவுகள் இல்லாமல் மின்சாரம் கிடைக்கும். அப்படிப்பார்த்தால் ஆண்டு தோறும் குறையும் விலை விகிதத்தில் கட்டணம் நிர்ணயம் செய்யலாம்.ஆனால் அரசின்  கொள்கை முடிவு எடுப்பவர்கள் சரியாக புரிந்துக்கொள்ளாமல் விலை நிர்ணய  கொள்கையை வடிவமைக்கிறார்கள் அல்லது திட்டமிட்டே அப்படி செய்தார்களா எனத்தெரியவில்லை.

இக்கதை காற்றாலைக்கும் பொருந்தும், செலவே இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் கிடைப்பதால் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கும் போது நல்ல லாபம் கிடைக்கும்.சீராக காற்று வீசும் பட்சத்தில் சில ஆண்டுகளில் போட்ட முதலீட்டினை எடுத்து விடலாம் பின்னர் வருவதெல்லாம் லாபமே.

காற்றாலை, சூர்ய சக்தி மின்சாரத்தில் இப்படி லாபம் ஈட்ட வாய்ப்பு இருப்பதாலேயே தனியார்கள் இப்போது போட்டிப்போட்டுக்கொண்டு களம் இறங்குகிறார்கள்.

தனியார்களை ஊக்குவிக்க இயங்காத காலத்துக்கும் சேர்த்து கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்கிறார்கள்,அரசே செய்தால் அப்படி உயர்த்தப்பட்ட விலை கொடுக்க வேண்டி இருக்காதே. ஆனால் அரசு செய்யாது ஏன் எனில் மாற்று எரிசக்தி திட்டத்தில் கமிஷன் அடிக்க வாய்ப்பு குறைவு. திட்ட மதிப்பீட்டில் 90% செலவு செய்தால் தான் ஒரு திட்டத்தையே நிறுவ முடியும்.காரணம் நிறுவ ஆகும் செலவை குறைக்க முடியாது.

ஆனால் அனல் , அணு போன்றவற்றில் திட்ட மதிப்பீட்டில் 60% தொகையை செலவு செய்தாலே மின் நிலையங்களை கட்டி விட முடியும் மீதி எல்லாம் பல்வேறு மட்டங்களில் கமிஷனாக போய்விடுகிறது.கமிஷன் தொகை எல்லாம் சேர்த்து போடும் மதிப்பீடே மொத்த திட்ட செலவு ஆகும்.

இந்தியாவிலேயே சூரிய சக்தி பேனல்கள் தயாரிக்கப்பட்டால் ,ஒரு மெகா வாட் சூர்ய சக்தி மின்நிலையம் அமைக்க 5 கோடியே போதுமானது அப்படியானால் ஒரு 1500 மெ.வா நிலையம் அமைக்க 7500 கோடி ஆகும். நம் நாட்டில் இப்போது 12 கோடி ஆகிறது காரணம் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுவதால்.

சுட்டி:

http://news.cnet.com/Shrinking-the-cost-for-solar-power/2100-11392_3-6182947.html">மலிவாகும் சூரிய சக்தி

மலிவான விலையில் சூர்ய சக்தி மின் உற்பத்தி திட்டம் ஒடிஷாவில் வர இருக்கிறது.
சுட்டி:

http://www.bloomberg.com/news/2012-02-27/alex-green-energy-wins-india-solar-project-with-record-low-bid.html">யூனிட் 7 ரூ சூர்ய மின்சாரம்

ஆனால் திருவள்ளூரில் 1500 மெ.வா அனல் மின் நிலையம் அமைக்க 8000 கோடி செலவு செய்துள்ளார்கள். மேலும் ஆண்டு தோறும் எரிப்பொருளாக நிலக்கரி வேறு வாங்க வேண்டும் அப்படி எனில் சூர்ய சக்தியை விட அனல் மின் நிலையம் அமைக்க ,செயல்படுத்த தானே செலவு அதிகம் ஆகிறது. பின் ஏன் தொடர்ந்து அனைவரும் சூர்ய சக்தியைப்பற்றி முரணாக சொல்கிறார்கள் எல்லாம் கமிஷன் படுத்தும் பாடு அன்றி வேறென்ன!

பின்குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி கூகிள்.நன்றி!

Wednesday, March 21, 2012

சிட்டுக் குருவிகளும் கட்டுக்கதைகளும்- உலக குருவி தினம்! மார்ச்-20



சிட்டுக் குருவிகளும் கட்டுக்கதைகளும்- மார்ச்-20: உலக குருவி தினம்!



மயன் நாட்காட்டியின் படி உலகம் 2012 இல்  அழியப்போகிறது என்று புனையப்பட்ட இணையக்கதைகளுக்கு சற்றும் குறையாமல் சிட்டுக்குருவிகள் அழிய போகிறது என  யாரோ சிலர் இணையத்தில் கிளப்பிவிட்டு , உலக சிட்டுக்குருவி தினம் என ஒன்றை சிலர் திட்டமிட்டே உருவாக்கி  ஒரு இணைய தளத்தையும் ஏற்படுத்தி அக்கதையினை  மிக நன்றாக பராமரித்தும் வருகிறார்கள்.உண்மையில் சிட்டுக்குருவிகள் முன்பிருந்த எண்ணீக்கையை விட சற்றுக்குறைந்திருக்கிறது ஆனால் இன்றும் மிக அதிக எண்ணிக்கையிலெ இருக்கு என்பதை விளக்கமாக சொல்லவே இப்பதிவு.

 தெரு தெருவா சுற்றி பரபரப்பான செய்தி சேகரிக்க அல்லாடும் ஊடகக்காரங்களை விட மிக அதிக பரபரப்பில் பதிவு போட அல்லாடும் நம்ம மக்களுக்கு இந்த குருவி செய்தி அல்வா ஆக மாட்டவும் ஆளாளுக்கு குணா கமல் போல குருவி பாசம் மண்டைய கொத்த ஈகலப்பைய எடுத்து உழுது  தள்ளி அவர்களின் ஜீவகாருண்ய அபிமானத்தை சாரு பிழிந்து சக்கையாக கொட்டித்தள்ளுறாங்க பதிவுகளில் :-))

உண்மையில் சிட்டுக்குருவிகள் அழிய போகிறதா அல்லது அழிந்துக்கொண்டு வருதா எனப்பார்ப்போம். சிட்டுக்குருவியின் அறிவியல் பெயர் பேஸர் டொமெஸ்டிகஸ்  யூரோப்பியன் ஆகும். ஐரோப்பாவில் இருந்து நாடுப்பிடிக்க கிளம்பின வெள்ளைக்காரர்கள் கையோடு குருவிகளையும் கூண்டுகளில் எடுத்து சென்று ,சென்றமிடமெல்லாம் பறக்கவிட்டார்கள், அப்படித்தான் இந்தியாவுக்கும் வந்தது, இந்தியாவில் அதன் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இப்போது தாயக பறவை நிலை கொடுக்கப்பட்டாச்சு.

சிட்டுக்குருவியின் அறிவியல் வகைபாடு கீழே:

Scientific Name: Passer domesticus
Common Name/s: English House Sparrow
French Moineau domestique

Taxonomy
                           
 Kingdom -ANIMALIA 
 
Phylum- CHORDATA  

Class - AVES 


Order  -PASSERIFORMES 

Family-PASSERIDAE

Species Authority: (Linnaeus, 1758)

உலகத்தில் அதிகம்காணப்படும் பறவையினம் எதுவெனில் கொக்கரக்கோ அதாவது கோழி(gallus gallus domesticus) தான் ,ஏன் எனில் மனிதனுக்கு உணவாக பயன்படுகிறது, எதெல்லாம் மனிதனுக்கு தேவையோ அதை அழிய விட மாட்டான். கோழிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாக சொல்லப்படும் பறவையினம் எதுவென பார்த்தால் அழியப்போவதாக பூச்சாண்டிக்காட்டப்படும் சிட்டுக்குருவிகளே , வகைப்படுத்தப்பட்டே 25 இனங்கள் இருக்கு, மேலும் ஸ்பானிஷ் சிட்டுக்குருவி, வழக்கமான வீட்டு சிட்டுக்குருவி ஆகியவை ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில்  உணவு தானியங்களை அழிக்கும் உயிரிகளாக (pest on cereals) பட்டியலிடப்பட்டுள்ளது. அப்படி எனில் மிக அதிக எண்ணிக்கையில் பெருகி தானியங்களை உண்டு அழிப்பதாக பொருள்.

உலக அளவில் அழிந்து வரும் உயிரினங்களை பட்டியலிடும் சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு மையமும் (INTERNATIONAL UNION OF CONSERVATION AND NATURE=IUCN) சிட்டுக்குருவிகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அழிந்துவிடும் கவலையில்லாத பாதுகாப்பான பறவையினம் என வகைப்படுத்தியுள்ளது. அவர்களே உலக அளவில் உயிரினங்களை கணக்கெடுத்து அழிந்த ,அழியப்போகிற என பலவகையில் பட்டியலிட்டு "ரெட் லிஸ்ட்"(red list on endangerd and threatended sps) ஒன்று தயாரித்து அதன் அடிப்படையில்  உயிரினங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்பவர்கள். அந்த ரெட் லிஸ்ட் அடிப்படையில் உலக நாடுகளும் செயல்படுகின்றன, இதற்கு யுனெஸ்கோவின் ஆதரவும் உண்டு.

கீழே அளிக்கப்பட்டுள்ளது சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு மையத்தின் சிட்டுக்குருவிப்பற்றிய அறிவிப்பு. அவர்கள் அழிந்திடும் என்று கவலைப்பட தேவையில்லாத இனம் என வகைப்படுத்தியுள்ளார்கள்.

கீழ்காணும் சுட்டியை அழுத்தினால் அவர்கள் தளத்துக்கு போகலாம் , அங்கே செர்ச் பாக்சில் "பேசர் டொமெஸ்டிகஸ் என ஆங்கிலத்தில்  தட்டினால் நீங்களே கீழ்காணும் அறிக்கையையும் காணலாம்!

IUCN link:

passer domesticus

sparrow distribution map

அறிக்கை:

 Assessment Information [top] Red List Category & Criteria: Least Concern     ver 3.1
Year Published: 2009
Assessor/s: BirdLife International
Reviewer/s: Bird, J., Butchart, S.

Justification:
 This species has an extremely large range, and hence does not approach the thresholds for Vulnerable under the range size criterion (Extent of Occurrence <20,000 km2 combined with a declining or fluctuating range size, habitat extent/quality, or population size and a small number of locations or severe fragmentation). Despite the fact that the population trend appears to be decreasing, the decline is not believed to be sufficiently rapid to approach the thresholds for Vulnerable under the population trend criterion (>30% decline over ten years or three generations). The population size is extremely large, and hence does not approach the thresholds for Vulnerable under the population size criterion (<10,000 mature individuals with a continuing decline estimated to be >10% in ten years or three generations, or with a specified population structure). For these reasons the species is evaluated as Least Concern.
History: 2008 Least Concern
2004 Least Concern


அப்படியானால் மார்ச் --20 உலக சிட்டுக்குருவிகள் தினம் என்றெல்லாம் யார் முடிவு செய்தது வழக்கம் போல இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலை தான். தனியா ஒரு தளமும் உலக சிட்டுக்குருவிகள் தினம்னு வைத்திருக்கிறார்கள்.

முன்னர் உலக அதிசயம் தேர்வு செய்யப்போகிறோம்  என சொல்லி சிலர் பரபரப்பை கூட்டியது போல தான், அப்போது மக்களும்  கைக்காச செலவு செய்து போட்டிப்ப்போட்டு ஓட்டு எல்லாம் போட்டார்கள். உலக அதிசய தளத்துக்கு  நல்ல விளம்பரம் வருமானம் கிடைத்தது தான் மிச்சம் மதுரை மீனாட்சியம்மன் உலக அதியசம் ஆகாமலே இன்னமும்  அதிசயம் ஆகவே இருக்கிறார் :-))

உண்மையில் மிக குறைந்த எண்ணிக்கையில் இப்போவோ அப்பவோ என அழியும் நிலையில் நம் நாட்டிலே சிலப்பறவைகள் இருக்கு அதுக்கு எல்லாம் இப்படி யாரும் முயற்சிக்க அல்லது மூச்சு விட்டதாக கூட எனக்கு  தெரியவில்லை. எல்லாம் எனக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை , முயற்சிகள் பல இணையத்தில் பகிரப்படாமலே நடந்துக்கொண்டிருக்கிறது. நான் குறிப்பிட்டது நம்ம பதிவுலக மக்களை மனதில் வைத்தே ஏன் எனில் இன்று மட்டும் சுமார் 10க்கு மேற்பட்ட குருவி புராணம் கண்ணில் பட்டது.


நிலகிரி பிப்பிட் அ பைப்பர்  (Nilgiri Pipit (Anthus nilghiriensis) எனப்ப்படும் தென்னிந்திய பறவை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது, விரைவில் அழியக்கூடிய அபாயமுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் நமது தேசிய பறவையான மயிலும் எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.இன்றைய நிலையில் 1947ல் இருந்த எண்ணிக்கையில் 50% அளவிலேயே இருக்கிறது, விரைவில் கிரிட்டிக்கல்லி என்டேஞ்சர்டு வகையில் சேர சாத்தியமுள்ளது.

தமிழ் நாட்டில்  விராலி மலை, மதுரை ஒத்தக்கடை பக்கம் உள்ள விவசாயிகள் பயிர்களை காக்க விசம் வைத்தும் பொறி வைத்தும் மயில்களை கொல்வது வழக்கம், சில இடங்களில் இறைச்சிக்காகவும் , தோகைக்காகவும் வேட்டையாடப்படுகிறது. அப்படி செய்வது வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றம் ஆனால் பெரிதாக யாரையும் தண்டிப்பதில்லை , சென்னையில் திநகர் பாண்டிப்பசார் போன்றப்பகுதிகளில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் மயில் தோகைகளை விற்பவர்களை  காணலாம். ஏன் எனில் சட்டத்தில் உள்ள ஓட்டையே காரணம் , இயல்பாக உதிர்ந்த தோகை என சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. அதனையும் கட்டுப்படுத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மேனகா காந்தி முயன்று முடியாமல் போயிற்று, இப்போது என்ன நிலை எனத்தெரியவில்லை.

மயில்கள் வேட்டையாடப்படுவது குறித்த செய்தி

 http://www.tribuneindia.com/2004/20040502/spectrum/main1.htm">அழியும் மயில்கள்

மேலும் இப்படி அழியக்கூடிய பட்டியலில் வங்கப் புலி, இந்திய சிங்கம், காண்டா மிருகம், நீலகிரி தார் என நிறைய உயிரினங்கள் நம் நாட்டில் இருக்கு.. அழிவின் நிலையில் உள்ள இந்திய உயிரினங்களின் பட்டியல்

http://en.wikipedia.org/wiki/List_of_endangered_species_in_India">அழியும் இந்திய உயிரினங்கள்
நீலகிரி தார்

இணையத்தில் யாராவது புரளியக்கிளப்பிவிட்டால்  போதும் திடிர் என எல்லாரும் இயற்கைப்பாதுகாவலர்களாக உருமிக்கொண்டு கூட்டம் கூட்டமாக பதிவுப்போட  ஆராவாரத்தோட கிளம்பிடுவாங்க மக்கள் , சிலர் சின்ன வயசில என் மண்டையில தான் குருவி கூடுக்கட்டும் அதுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் போட்டு வளர்ப்பேன் இப்போ எல்லாம் குருவியப்பார்க்கவே முடியலை எல்லாம் பாழாப்போன செல் ஃபோனால் தான்னு கேட்கும் போதே கண்ணுல ஜலம் வந்துப்போச்சுன்னு புழிஞ்சு எடுக்கிறார்கள், ஆனால் உண்மையில் கவலைப்பட வேண்டியதை சுலபமாக மறந்து விடுவார்கள்,,  யாராவது விழிப்புணர்வு மெயில் அல்லது முகநூல், துவித்தர்னு தேவ செய்தி அனுப்பினால் குதித்தெழுவார்களாயிருக்கும்.

---------
பின்குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி ,கூகிள்,விக்கிப்பீடியா, IUCN இணைய தளங்கள்.

Saturday, March 17, 2012

பட்ஜெட் பம்மாத்து!-1



பட்ஜெட் பம்மாத்து!-1

பட்ஜெட் என தாக்கல் செய்வது ஒரு ஜனநாயக கடமையாகவே ஆண்டு தோறும் நடக்கிறது.பட்ஜெட் வரைவுக்கும் வளர்ச்சிக்கும் உண்மையில் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? பட்ஜெட் ஒதுக்கீடுப்படி செலவு செய்யப்பட்டு அதன் பலன் கண்கூடாக காணப்பட்டுள்ளதா என்றெல்லாம் பார்த்தால் பெரிதாக ஒன்றுமே நடந்து இருக்காது. பின்னர் எதுக்கு இந்த காகித அறிக்கை அதற்கு  பெரிதாக மீடியா விளம்பரம் எல்லாம்? அரசியல்வாதிகளான நாங்களாம் பொறுப்பானவங்க, அரசு வருமானத்தை கணக்கு வழக்கில்லாம செலவு செய்யவில்லைனு மக்களை  நம்ப வைக்க தான் :-))

மக்களும் வருமான வரி சலுகை உயருமா, டிவி போட்டி ,ஐஸ்பொட்டி , ஐப்பாடு விலை குறையுமா ஏறுமானு கொஞ்ச நேரம் டீவில ஆர்வமாக பார்ப்பாங்க ,அவங்க எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப சில அறிவுப்புகள்  வரும் , அவ்வளவு தான் மக்களும் வழக்கமான எதிர்ப்பார்த்த பட்ஜெட் தான் னு வழக்கம் போல சொல்லிட்டு டீவி சீரியல் அல்லது மொக்கை டீமை இந்திய அணி வீழ்த்திய கிரிக்கெட் போட்டினு பார்த்து ரசிக்க கிளம்பிடுவாங்க.

பட்ஜெட் புள்ளிவிவரம் எல்லாம் சலிக்க சலிக்க பார்த்து ,படிச்சு இருப்பீங்க மீண்டும் நான் சலிக்க விரும்பவில்லை. எனவே  ஒரு சில பட்ஜெட் பம்மாத்துகளை மட்டும் அலசுகிறேன்.

திட்ட செலவு VS திட்டமில்லாத செலவு:

அரசாங்கத்தின் கணக்குபிள்ளையான நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் பல தலைப்புகளில் நிதி நிலைகளை சொல்லி இருப்பாங்க, அவை மொத்த நிதி, மூலதன வருவாய்,வரி வருவாய், செலவு, பற்றாக்குறை இத்தியாதி என போகும். அதில செலவு வகையறா எதுவென பார்த்தா திட்ட செலவு(plan expenditure), திட்டாத செலவு(non-plan expenditure) என்றெல்லாம் இருக்கும், 

இந்த இடத்தில தான் அரசியல்வாதிங்க வித்தைக்காட்டுவாங்க, திட்ட செலவு மீது தான்  பெருமளவு விவாதம், கணக்கு வழக்கு, மத்திய தணிக்கை என கிடுக்கிப்பிடிகள் உண்டாம் திட்டாத செலவுக்கு ஒன்றும் பெரிதாக கட்டுப்பாடுகள் கிடையாது , தோராயமாக இவ்வளவுனு சொல்லிட்டு ஒதுக்கி வைத்துக்கொள்வது.அப்போ சனநாயக நாட்டில மக்கள் பணத்தை செலவு செய்ய ஒரு கணக்கு இருக்கனும் தானே நிதி நிலை அறிக்கைனு கேட்கலாம் அதுக்கு அதான்யா இதுனு நிதி நிலை அறிக்கைய காட்டுவாங்க :-))

திட்ட செலவு நிதியே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ஒதுக்கப்படுவது , திட்டமில்லா செலவு அரசின் செலவீனங்களுக்காகவும் ,கடன்,மான்யம், இன்ன பிற என ஒதுக்கப்படுவது.திட்டமில்லா செலவு நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பட்ஜெட் பொருளாதார பார்வையில் சரியான பட்ஜெட் ஆக கருதப்படுவதில்லை.

2012-13 நிதி நிலை அறிக்கையில்...

மொத்த செலவு =1490925.29
திட்ட செலவு= 521025.00
திட்டமில்லா செலவு= 969900.29
(கோடிகளில்)

இதில் பார்த்தால் திட்ட செலவை விட திட்டமில்லா செலவுகள் அதிகமாக இருப்பது தெரியும், அது மொத்த  செலவில் 65%  ஆகும்.அதாவது திட்டமிட்டு மக்களவை, தணிக்கை என ஒப்புதலுடன்  செய்யும் செலவுகள் குறைவாகவும் , முன் திட்டமிடப்படாமல் , தன்னிச்சையாக ஆள்வோர்  விருப்பப்படி செய்யப்படும்  செலவுகள் மிக அதிகம் என்பதும் தெளிவாகும்.திட்டமில்லா செலவுகளும் மத்திய தணிக்கைக்கு உட்பட்டது ஆனால் அதிகம் கேள்விகள் கேட்க முடியாது , மேலும் பல பாதுகாப்புகள் அரசுக்கு உண்டு, பாராளுமன்ற /அமைச்சரவை முன் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக செலவு செய்யலாம்.உ.ம் இந்த நிதியறிக்கையில் இலங்கைக்கு கடனாக 290 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் ,இப்படியான அயலுறவு செலவீனங்களாக 5148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதெல்லாம் வெளியில் பேசப்படவே செய்யாது, ஆண்டு தோறும் இப்படி நடக்கிறது.

மத்திய திட்டக்குழுவுக்கான நிதி , இன்ன  பிற நிதிகளை திட்டமில்லா நிதி என்றப்பெயரில் ஒதுக்கி கையில் வைத்துக்கொண்டால் மத்தியில் ஆள்வோர் விருப்பம் போல ஒதுக்கலாம், செலவு செய்யலாம். 65% நிதி இப்படி மாட்டிக்கொள்வதால் தான் மாநிலங்கள் அவ்வப்போது மத்திய அரசை கெஞ்சுகின்றன. இணக்கமாக இல்லை எனில் காசுகிடைக்காது.

மேலும் இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் ஒவ்வோரு நிதியறிக்கையிலும் துண்டு விழுகிறது  என்பார்கள்  அது கோ ஆப்டெக்ஸ் துண்டல்ல நிதி துண்டு அதனை எப்படி சமாளிப்பார்கள் எனில் கடன் வாங்கியோ இல்லை பொது துறை பங்குகளை விற்றோ தான். பெரும்பாலும் துண்டு பெருசாக இருக்கும் போது சமாளிக்க  முடியாமல் அறிவித்தபடி சிலவற்றுக்கு நிதி ஒதுக்க மாட்டாங்க அப்படி நிதி நிறுத்தப்படும் வகையறாவில் திட்டமில்லா செலவு வராது  , எது எக்கேடு கெட்டாலும் இருக்கிற நிதியில் மிக அதிகபட்சம் திட்டமில்லா செலவுக்கு ஒதுக்கப்பட்டுவிடும் , மிச்சம் மீதி  இருக்கும் நிதி , இனிமேல் வாங்கப்போற கடன் என காசு கிடைத்தால் திட்ட செலவுகளுக்கு நிதி கிடைக்கும் இதனாலேயெ பல திட்டங்கள் ஆண்டாண்டுகாலமாக அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும் அவற்றின் இலக்கை அடைவதே இல்லை.இப்படி பாதியில் நிதி இல்லாமல் நின்று விடும் திட்டங்களுக்கு அடுத்த திட்டமில்லா செலவில் நிதி ஒதுக்கப்படும் என்று சொல்லப்படும் ஆனால் எந்த அளவுக்கு என்பது அப்போதைய நிலையைப்பொறுத்தே.திட்டமில்ல செலவு நிதி என்பது ஆள்வோரின் வசதிக்கு ஏற்ப பயன்ப்படுத்திக்கொள்ள சுதந்திரம் தரும் ஒரு கருவியாகும்.

திட்டமில்லா செலவு வகையில் பெரும்பகுதி போவது  ஆள்வோரின், அரசு அதிகாரிகளின் செலவுக்கே ,  அதுக்கு இல்லாத பணமா ? எடுத்துக்கோ என எடுத்துக்கொள்ள போடுவது தான் பட்ஜெட் :-))  அதனால் தான் பொறுப்பா எம்.பி,எம்.எல்.ஏ சம்பளத்தை அப்போ அப்போ ஏற்றிக்கொள்வது வீட்டுப்படி,பயணப்படி, இலவச தொலைப்பேசி, அப்போ அப்போ சுற்றுலா என எல்லாத்துக்கும் பணம் ஒதுக்கப்பட்டுவிடும்.

நம்ம பிரதமர் வாய தொறந்து உள்நாட்டிலேயே பேசுவதில்லை ஆனாலும் சும்மாச்சுக்கும்  ஒரு டைம் பாஸுக்கு வெளிநாட்டுக்கு போய் ஒரு டீக்குடிச்சுட்டு கை குலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே பல கோடிகள் செலவு ஆகும் .இப்படி பல்ல பயணங்கள் ,செலவுகள் ,பாதுகாப்பு என எல்லாம் திட்டமில்லா செலவு என்றப்பெயரில் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாலேயே சாத்தியமாகிறது!இதில் அமெரிக்க அதிபரை ஒப்பிடுகையில் நம்மாளுக்கு செலவு கொஞ்சம் தான் என்பது ஒரு ஆறுதலான சமாச்சாரம் :-))

மகளீர் நலன் , குழந்தைகள் நலன், கிராமப்புற மேம்பாடு என ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதி  ஒதுக்கப்படுவதாக வரும் அறிவிப்புகளை நாமும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் , இந்த 50 ஆண்டுக்காலத்துக்கும் மேலான அறிவிப்புகளின் படி நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் இந்தியாவில் இருக்க எல்லா பெண்களும், குழந்தைகளும், கிராமங்களும் பலன் அடைந்து எங்கோ போய் இருப்பாங்க ,கல்விக்கு என அறிவிக்கப்பட்ட நிதி அறிவித்தார் போல கொடுக்கப்பட்டிருந்தால் இந்தியா 100% கல்வி அறிவுப்பெற்று இருக்கும், எல்லாக்கிராமத்திலும் அதி நவீன பள்ளிகள் இருந்திருக்கும். ஆனால் அப்படியான அதிசயம் எதுவுமே நிகழவில்லையே ஏன்?


கடந்த பத்தாண்டுகளாக பார்த்தால் இந்திய நிதிநிலை அறிக்கையின் மதிப்பு உயர்ந்துக்கொண்டே வந்திருக்கும் ஆனால் அதே விகிதத்தில் வளர்ச்சி  உயர்ந்திருக்காது இந்த இடத்தில் ஜிடிபி மொத்த மதிப்பு உயர்ந்து தானே இருக்கு என கேட்கலாம் ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை ,உணவுப்பொருள் விலை வீக்கம்,பணவீக்கம்  ஆகியவை குறைந்தபாடில்லை, நாட்டின் வளர்ச்சி ஆமைவேகத்தில் மட்டுமே  என்பதையும் கவனிக்க வேண்டும். அம்பானி 2003 இல் இருந்ததை விட பெரிய பணக்காரர் ஆக 2012 இல் உயர்ந்தது போல தான் நாட்டின் வளர்ச்சி இருக்கு. பணக்காரன்மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழை மேலும் ஏழை ஆகிறான், காரணம்  நம்ம ஆட்சியாளர்கள் நிதியை சரியான முறையில் முதலீடு செய்யாமையே.

அரசின் வருவாய் 2003-12 காலத்தில்,

475146 ,506382 ,526626 ,578869 ,739842 ,839935 ,1025883 1190898 ,1343384, 1490713

2003 இல் அரசின் மொத்த வருவாய்=  475114 கோடிகள்,

2012 இல் அரசின் மொத்த வருவாய் =1490713 கோடிகள்

ஒப்பிட்டு பார்த்தால் முழுசாக பத்து லட்சம் கோடி ரூபாய் அரசின் வருவாய் அதிகரித்து இருப்பதைக்காணலாம்.

இப்போது ஒரு சாதாரண குடிமகனின் வருவாய்க்கேற்ற வாழ்கை தர முன்னேற்றம் எப்படி மாறும் என்பதை ஒப்பீட்டு பார்த்தால் அரசின் செயல்படா தன்மை நன்கு விளங்கும்,

2003 இல் 10000 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தால் வாழ்க்கை தரம் சுமாராகவே இருக்கும் , சென்னை புற நகரில்  தவணையில் கூட வீடு வாங்க முடியாது ஆனால் 2012 இல்  அவரது சம்பளம் 50000 என உயர்ந்திருக்குமானால் அவருக்கு கார், வீடு என மாத தவணையில் வாங்கும் திறன் கண்டிப்பாக வந்திருக்கும். அதாவது வாழ்கை தரத்தில் மேம்பாடு சம்பள உயர்வுடன் ஏற்படுவதைக்கண்கூடாக காணலாம்.

அதே மேம்பாடு நாட்டிற்கு ஏன் ஏற்படவில்லை? ஏன் எனில் வருவாய் உயர உயர  விரய செலவுகளை ஆள்வோர் அதிகரித்துக்கொண்டே போனது தான் காரணம்.

உதாரணமாக தினக்கூலி வேலை செய்பவன் 100 ரூ சம்பளம் வாங்கும் போது 50க்கு சரக்கு அடித்துவிட்டு 50ரூ வீட்டு செலவுக்கு கொடுக்கிறார்,அதை வைத்து குடும்பத்தை ஏதோ சமாளித்து ஓட்டுகிறார் அவர் மனைவி. அதே நபர்  200 சம்பளம் வாங்கும் போது 150க்கு சரக்கு அடித்துவிட்டு 50 ரூ வீட்டுக்கு கொடுத்தால் வீட்டில் சுபிட்சம் நிலவுமா? வறுமையும் பற்றாக்குறையுமே தாண்டவமாடும்.

மேற்சொன்ன கதை தான் அரசாங்கத்திலும் நடக்கிறது வருவாய் உயர உயர திட்டமில்லா செலவுகளில் அதிகம் செலவு செய்து வளர்ச்சியை பின் தள்ளுகிறார்கள். திட்டமில்லா செலவில் அமைச்சர்கள், எம்பிக்கள் , அரசு அதிகாரிகள் என அவர்களுக்கான செலவே அதிகம்.  வருவாயை திரட்டி மக்களுக்கு செலவு  செய்ய ஆகும் சர்வீஸ் சார்ஜ் ஆக ஆள்வோர் எடுத்துக்கொள்வது அதிகம் , அதாவது சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் கதை தான்!

இந்தியா பிறந்ததில் இருந்து பல நிதி நிலை அறிக்கைகளை மவுன சாட்சியாக பார்த்து வந்திருக்கிறது  ,இத்தனைக்கண்டபிறகும் ஏதும் பெரிதாக மாற்றம் வந்தப்பாடில்லை . அவற்றை எல்லாம் ஒரே பதிவில் அலசிவிட முடியாது , எனவே சில முக்கியமான துறைவாரியாக அடுத்தடுத்து பார்க்கலாம் ,அதற்கான  ஒரு முன்னுரையே இப்பதிவு.அடுத்த பதிவில் விவசாயத்திற்கான ஒதுக்கீடு அது யாருக்கு பலன் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

Sunday, March 04, 2012

அரவான் மற்றும் காவல்கோட்டம் உண்மையான வரலாற்றினை பேசுகிறதா?





பண்டைய தமிழகத்தில் குடும்ப வழி,குல வழியாக மக்கள் பல தொழில்களை செய்து வந்தார்கள் பின்னர் தொழிலே ஜாதியாக திரிபுற்று ஜாதி ரீதியாக இனக்குழுக்கள் உருவானது தமிழ் சமூக வரலாறு என்பதை அனைவரும் அறிவோம்.

படைத்தொழில் சார்ந்தும் அப்படி சில ஜாதிய இனக்குழுக்கள் உருவானது. அப்படி உருவான இனக்குழுவை மறவர்கள் என்றார்கள், அதிலும் அவர்களின் சேவைக்கு ஏற்ப பிரிவுகள் உண்டு.

அமரம் சேவகம்:

இப்பிரிவினர் மன்னருக்கு மிகவும் விசுவாசமானவர்கள். இவர்கள் செய்யும் படை சேவைக்கு பணமாக அல்லாமல் அவர்களுக்கு என நிர்வகிக்கவும் வரி வசூலிக்கவும் நிலம் ஒதுக்கிவிடுவார்கள். அதில் கிடைக்கும் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கினை மன்னருக்கு கொடுத்துவிட்டு 2 பங்கினை வைத்துக்கொள்வார்கள்.

மேலும் ஒரு சிறு படையை உருவாக்கி பயிற்சி,பராமரிப்பு செலவுகள் எல்லாம் இவர்கள் பொறுப்பே நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.இவர்களுக்கு தளபதி அல்லது  குறுநில மன்னர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும்.

இப்பிரிவினரே பெரும்பாலும் தளபதிகளாகவும் ,முக்கியமான படைப்பொறுப்பிலும் இருப்பார்கள்.போர்க்காலங்களில் ஆயுதங்கள், படை என திரட்டிக்கொண்டு மன்னருக்கு உதவ செல்ல வேண்டும். இவர்களில் கோட்டை காவலை பெற்ற குடும்பம் அகமுடையார் எனப்படும். அகம் என்பது கோட்டை உள் இருப்பவர்கள் எனப்பொருள்.போர்க்காலத்தில் பெரும்படை களத்துக்கு சென்றாலும் கோட்டையை காவல் காக்க இவர்கள் கோட்டையை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும், அதனையே அகமுடையார்கள் என்று சொல்லப்பட்டு பின்னர் ஜாதிப்பெயராகவும் மாறியது.

கோட்டை முழுவதும்  இவர்கள் பாதுகாப்பில் இருக்கும் , கோட்டைக்குள்,வெளியே இவர்கள் அனுமதி இன்றி யாரும் செல்ல முடியாது. மன்னர்   திக்விஜயமாக தூர தேசங்களுக்கு படையுடன் சென்றிருக்கும் வேளையிலும் கவனமாக கோட்டையை பாதுகாப்பார்கள். மன்னர் இல்லாத நேரத்தில் எதிரிகள் படை எடுத்து வந்தாலும் கோட்டைக்கதவை மூடிவிட்டு உள் இருந்தே ,கோட்டைக்குள் புக முயலும்  முயற்சிகளை முறியடிப்பார்கள்.

இது  போன்ற பல முற்றுகைகளை முறியடித்த வரலாறு தமிழ் இலக்கியங்களிலும் இருக்கிறது.இப்பொழுது கோச்சடையான் என்ற பெயர் ரஜினி படம் புண்ணியத்தால் மிக பிரபலமாகிவிட்டது. அவர் காலத்தைய முற்றுகை ஒன்றைப்பார்ப்போம், பாண்டிய மன்னன் கோச்சடையான் 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்,வீரத்திற்கு பெயர் பெற்றவர். அப்போது சேர நாடும் கோச்சடையான் ஆளுகை கீழ் இருந்தது ,சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க படையுடன் கோச்சடையான் சென்றிருந்த வேளையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாத்தன் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்திருந்தார், வரும் வழியில் பல்லவர்களை ஒரு கை  பார்த்து விட்டு, அப்படியே மதுரைக்கும் வந்தார்.

மன்னரும், பெரும் படையும் சேர நாட்டில் எனவே மதுரைக்கோட்டை வாசலை அடைத்து விட்டு உள்ளிருந்து கோட்டையைப்பாதுகாக்க துவங்கினார்கள். அப்பொழுது பாண்டிய அரசி கோட்டையில் இருந்தார் அவரே களம் இறங்கி வீரர்களை ஊக்கப்படுத்தி வழி நடத்தி கோட்டையை காவல் காக்க செய்தார் எனவும் தகவல் உண்டு.

பெரும் படையுடன் வந்திருந்த விக்கிரமாதித்தன் பல நாட்கள் முற்றுகையிட்டு உள் நுழைய போராடியும் கோட்டைக்காவலர்கள் சுற்று சுவரில் அரணாக நின்று உள் நுழையும்  முயற்சிகளை எல்லாம் முறியடித்தார்கள். நாட்கள் செல்லவே விரக்தியடைந்த விக்கிரமாதித்தன் மதுரை வீழ்ந்தது என அவராகவே வெற்றியை அறிவித்துக்கொண்டு மதுரைக்கு அந்த பக்கம் இருக்கும் குறு நில மன்னர்களையும் அடக்கி மொத்த தமிழகத்தையும் கைப்பற்ற மேற்கொண்டு முன்னேறி திருநெல்வேலி வரை முன்னேறி சென்று முகாமிட்டார்.

இதற்கிடையே தகவல் கிடைத்த கோச்சடையான் கடுங்கோவத்துடன் பெரும்படையுடன்  பாண்டிய நாடு திரும்பி,நேராக நெல்லைக்கு சென்று அங்கே வைத்தே விக்கிரமாதித்தனுடன் மோதினார் கடும் போரில் கோச்சடையானுக்கே வெற்றி கிட்டியது. தப்பித்தால் போதும் என பின் வாங்கி ஓடி வந்த விக்கிரமாதித்தனை காவிரி கரை வரைக்கும் கோச்சடையான் விரட்டி வந்தார்.

விக்கிரமாதித்தன் போரில் கிடைக்கும் விழுப்புண்களை பெருமையாக நினைப்பவர் என்பதால் அவருக்கு ரணரசிகா என்று பட்டப்பெயர் உண்டு.எனவே விக்கிரமாதித்தனை வென்றதால் ரணதீரன் கோச்சடையான் என பாண்டிய மன்னன் பெயர்ப்பெற்றான்.

அகமுடையார்கள் கோட்டைக்காவல்ப்பணியில் பெரும் வல்லமைக்கொண்டவர்கள் என்பதை விளக்கவே இந்நிகழ்வை சொன்னேன்.

அமரம் சேவகம் என சொல்வது ஏன் எனில்  இது பரம்பரையாக கொடுக்கப்படும் வேலை.அப்பா கோட்டை தலைவராக /சமஸ்தான தலைவராக இருந்து இறந்தால் அப்பணி அவரது மகனுக்கு செல்லும்.

இதற்கு அடுத்த படை  சேவகம்,

கட்டுப்பிடி சேவகம்:

அதாவது கட்டுப்படியாக கூடிய ஒரு ஊதியத்துக்கு படை சேவகம் செய்வது, இப்பணி மறவர் பிரிவில் பெரும்பாலும் தேவர்கள் எனப்படும் இனக்குழுக்களுக்கு கொடுக்கப்படும். செலவினை சமாளிக்க நிலத்தில் கிடைக்கும் வருவாய் பயன்ப்படும், ஆனால் இந்த பணி பரம்பரையாக சேராது. ஒரு சிறு படைப்பிரிவுக்கு தலைவராக இருந்து ஒருவர் இறந்தால் அவரது வாரிசு தலைவராக முடியாது. அடுத்த திறமையானவருக்கு பொறுப்பினை மன்னரே பார்த்து வழங்குவார். வாரிசும் திறமையான வீரர் எனில் வாய்ப்பு கிடைக்கலாம் ஆனால் கட்டாயமில்லை. இவர்களுக்கும் உபதளபதி அல்லது சமஸ்தான தலைவர் அந்தஸ்தும் கொடுக்கப்படும். போர்க்காலங்களில் ஆயுதம் ,படை என திரட்டிக்கொண்டு சென்று மன்னருக்கு உதவ வேண்டும்.

மூன்றாவது படைச்சேவகம் ,

கூலிப்படை சேவகம்:

போர் நடக்கும் காலத்தில் உடல் வலிமையான, போர்திறன் உள்ளவர்களை தினக்கூலி அடிப்படையில் படையில் சேர்த்துக்கொள்வார்கள். இப்படை சேவகம் செய்பவர்கள் பெரும்பாளும் கள்ளர் இனக்குழு மக்களே. இவர்களின் நிரந்தர தொழில் களவாடுதல். ஒவ்வொரு சமஸ்தான படைத்தலைவர் அவர் ஆளுகைக்குட்பட்ட பகதிகளை  சேர்ந்த கள்ளர் இனக்குழு மக்களை திரட்டிக்கொண்டு வருவார்.போர்க்காலத்தில் சேவை செய்ய முன் வரும் மக்கள் என்பதால்  சமஸ்தான தலைவர் இவர்களுக்கு ஒரு சலுகை அளிப்பார், சொந்த சமஸ்தானத்தில் திருடக்கூடாது, அப்போதைய பொது வழிகள் என அறியப்பட்ட சாலைகளில் மட்டும் களவாடலாம் என்பதாகும்.

எனவே ஒரு குறு நில மன்னர்/சமஸ்தானத்தை சேர்ந்த கள்ளர்கள் அங்கே களவாட மாட்டார்கள், பக்கத்து சமஸ்தானங்களிலும், பொது வழிகளிலும் யாத்ரிகர்கள், வியாபாரிகளை தாக்கி கொள்ளையடிப்பார்கள்.போர்க்காலத்தில் உதவி செய்ததற்கு அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமை இது.

இம்மூன்று இனக்குழுக்களையும் பெரும்பிரிவாக கொண்டு முக்குலத்தோர் என பொதுவாக அழைக்கப்படுகிறது.

இப்படித்தான் பழம் தமிழகத்தில் படைச்சேவகம் செய்த இனக்குழுக்களைப்பற்றி வரலாற்று ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில இனக்குழுக்களும் படை சேவகம் செய்துள்ளார்கள் ஆனால் அவர்களும் இம்முறையின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் உப பிரிவாக செயல்ப்பட்டவர்களே.

வரலாற்றூ ரீதியாக ஆய்வுகள் செய்து காவல் கோட்டம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள் ஆனால் அதில் மேற்கண்டவாறு சொல்லப்பட்டிருப்பதாக இது வரைப்படித்த நூல் விமர்சனங்களில் யாரும் சொல்லவில்லை , கள்ளர்கள் தான் கோட்டை,ஊர்க்காவலும் செய்தார்கள், களவில் இருந்து காவல் என்று சொல்வதாகவே சொல்கிறார்கள் விமர்சகர்கள்.நான் இன்னும் காவல் கோட்டம் படிக்கவில்லை ,பக்கங்களின் எண்ணிக்கையையும், விலையையும் பார்க்கும் போது படிப்பேன் எனவும் நம்பிக்கை இல்லை.

அரவாண் திரைப்படம் காவல் கோட்டத்தின் பின்ப்புலத்தோடு எடுக்கப்பட்ட ஒன்று அதுவும் தமிழர் வரலாற்றை பேசுகிறது என சொல்கிறது.ஆனால் மூலத்திலேயே வரலாறு  சரியாக சொல்லப்பட்டிருக்கிறதா எனத்தெரியவில்லை.

மேலும் நாயக்கர்  ஆட்சிக்காலத்திலும் காவல் பொறுப்பு தேவர்கள் பிரிவிடம் இருந்ததாகவே வரலாறு சொல்கிறது. மதுரை நாயக்க மன்னர் முத்துக்கிருஷ்ண நாயக்கர் ,முதன் முதலில் சடைக்க தேவரை கள்ளர்களை அடக்க நியமித்தார் என்றும் அவருக்கு ராமேஷ்வரம் செல்லும் பாதையை காக்கும் பணிக்கொடுக்கப்பட்டு பின்னர் ராமநாதபுரத்தை தலைமையகமாக கொண்டு செயல்ப்பட்டு ஒரு சமஸ்தான மன்னராக இருந்தார் என சொல்கிறது ராமநாதபுரம் சேதுபதிகள் வரலாறு.

மேலும் ராமநாதபுரம் சமஸ்தான மன்னராக இருந்த ரகுநாத சேது பதி, திருமலை நாயக்கருக்கு மைசூர் மூக்கறுப்பு போர் உட்பட பலப்போரில்  நிறைய உதவிகள் செய்து வெற்றியடைய வைத்ததால் வரி விலக்கு கொடுக்கப்பட்டு திருமலை சேதுபதி எனப்பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் கிழவன் சேதுபதி காலத்தில் ராணி மங்கம்மாளூடன் போரிட்டு வென்று சுயாட்சி பெற்ற சமஸ்தானமாக ராமநாதபுரம் சமஸ்தானம் மாறியது என்பதும் வரலாறு.

பாண்டியர்கள்  காலத்தில் இருந்து கள்ளர்கள் என்பவர்கள் களவுத்தொழிலையே பிரதானமாக கொண்டிருந்தார்கள் , நாயக்கர்கள் காலத்திலும் அப்படியே தொடர்ந்திருக்கிறது.  கள்ளர்களை அடக்க மறவர்களின் மற்றப்பிரிவினரான அகமுடையார், தேவர்கள் பயன்ப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், காவல்ப்பணியை அவர்களே செய்துள்ளார்கள் என தெரிகிறது. ஆனால் காவல் கோட்டமோ வேறு ஒன்றை சொல்கிறது. எது  உண்மை ? பொதுவாக அறியப்படும் வரலாறா இல்லை காவல் கோட்டம் சொல்லும் வரலாறா? ஒரு வேளை காவல் கோட்டம் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொண்டு வந்துள்ளதா?

பின்குறிப்பு:

#நான் நாவலைப்படிக்காததால் எதுவும் தீர்மானமாக சொல்லவியலவில்லை, விமர்சனங்களில் பேசப்பட்ட கருத்தினை வைத்து பொதுவான வரலாற்றுடன் ஒப்பிட்டு எனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளேன்.

# விமர்சனம் செய்த பெரும் அறிவுப்புலம் கொண்டவர்கள் யாரும் இதனைக்குறிப்பிடவில்லை, களவைக்கொண்டாட ஒரு நாவலா என்றே பெரும்பாலும் சொல்கிறார்கள். சமஸ்தான மன்னர்களாக விளங்கிய மறவர்கள் எல்லாம் கள்ளர்களில் இருந்து உருவான இனக்குழுக்களா? காவல் உரிமைக்கொண்டவர்கள் யார்?  உண்மையில் சரியான வரலாறு எது?இதெல்லாம் நாவலிலும் விரிவாக அலசப்பட்டுள்ளதா?

Saturday, March 03, 2012

கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?


கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?

தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கென தனியே ஒரு அடையாளம் மட்டுமல்ல பெரும் வணிக மதிப்பும் உண்டு ,மற்ற நடிகர்களின் படம் ஓடினால் அமோக வசூல் வீழ்ந்தால் அடியோடு நாசம் என இருக்கும் போது சூப்பர் ஸ்டாரின் சுமாரான அல்லது ஓடாத படங்களின் வசூல் கூட அதே சமயத்தில் வெற்றியடந்ததாக சொல்லப்படும் படங்களின் வசூலை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

உதாரணமாக  பாபா படம் சரியாக ஓடவில்லை ,தோல்வி என்றார்கள் ஆனால் அதே காலக்கட்டத்தில் வந்து வெற்றி என்று சொன்னப்படங்களின் வசூலை விட பாபா வசூல் மிக அதிகம் என்பதே உண்மை.

லோக நாயகன் என்று சொல்லிக்கொள்பவரின் படமெல்லாம் ஓடினால் போட்டக்காசு தான் கிடைக்கும் ஊத்திக்கொண்டால் தயாரிப்பாளரின் கோவணமும் உருவப்படும் என்பதான வியாபார வல்லமைக்கொண்ட படங்கள்.அதே நேரத்தில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் ஹிட் ஆனால் அதன் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என அனைவருக்கும் அமோக வசூல் மட்டுமல்லாமல் அடுத்து அவர்கள் யாருடைய படத்திலாவது நஷ்டமடைந்தாலும் தாங்க கூடிய அளவு செழிப்படைவார்கள்.அதே சமயத்தில் சுமாராகவோ, அல்லது தோல்வி(வெகு சிலவே) என சொல்லப்படும் படங்களின் வசூல் கூட மிகப்பெரியதாகவே இருக்கும், எனவே நஷ்டம் என்பது எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்காமல் போனது அல்லது வட்டியின் விகிதத்தை பொறுத்தே நட்டம் ஆனதாக சொல்ல முடியுமே தவிர போட்ட முதலில் எல்லாம் போய்விடாது முழுதுமோ அல்லது  ஒரு ஆரோக்கியமான தொகையோ மீள கிடைத்துவிடும்.

இதனாலேயே தயாரிப்பாளார்,விநியோகஸ்தரின் ஆபத்பாந்தவனாக சூப்பர் ஸ்டார் இன்றும் திகழ்கிறார்.

இத்தனைக்காலமும் சூப்பர் ஸ்டாரின் வணிக பெருமதிப்பை அனைவரும் நன்றாகவே பயன்ப்படுத்திக்கொண்டார்கள், புதிதாக திரை துறைக்குள் நுழைந்துள்ள  அவரின் வாரிசும் இதை எல்லாம் அவதனித்து அவரின் ஸ்டார் வேல்யுவை பயன்ப்படுத்தி பலன் அடைந்தால்  என்ன என நினைக்க துவங்கிவிட்டார்கள் ,அதில் தவறில்லை ஆனால் பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லையே, அவரின் உடல் நிலை நன்றாக இருந்த போதே சிவாஜி படக்காலத்திலேயே  சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்ன புண்ணியம்  அப்படம்  டிரைலருக்கு மேல போகவில்லை. எதாவது தெரிஞ்சா தானே பயன்படுத்தி அனிமேஷன் படமாக எடுக்க :-))

சுல்தான் தி வாரியர்  எடுக்க முடியாமல் ஏன் வாரியது , அனிமேஷன் படங்களின் முதல் தலைமுறை காலமல்ல இப்போது இருப்பது, எல்லா வசதியும் இருக்கு எடுக்க தெரியாமல் சொதப்பியதால் நேரமும், பணம் மட்டுமே விரயம் ஆனதால்  மீண்டும் சூப்பர் ஸ்டார் வேல்யுவை பணமாக்க ராணாவுக்கு பூஜைப்போட்டார்கள் ஆனால் அவரவர் மனம் போல நடக்கும் என்பதாக எதிர்பாராத விதமாக சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்ல நேரிட்டது. இப்போது தான் மீண்டு வந்துள்ளார் ஆனால் உடனே மீண்டும் ஒரு படம் சூப்பர் ஸ்டாரை வைத்து என்று துவங்கிவிட்டார் வாரிசு , அவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. அனிமேஷன் படமே எப்படி எனத்தெரியாமல் சொதப்பியவர்கள் இப்போது "பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்" என்ற புதிய நுட்பத்தை வைத்து படம் எடுக்க போகிறேன் என குதித்து இருக்கிறார்கள்,( அதனாலே இப்பதிவும் நான் போட வேண்டியதாகிவிட்டது)

இப்போது அனைவருக்கும் நியாயமாக சில கேள்விகள் எழுகின்றன,

# சிவாஜி -தி பாஸ் படக்காலத்தில் துவக்கப்பட்ட சுல்தான் தி வாரியர் -3டி அனிமேஷன் படம் ஏன் முடிக்கப்படவே இல்லை.

# சிவாஜிக்கு பிறகு சில காலம் சும்மா இருந்தார் , பின் எந்திரன் துவங்கி பின்னர் தடைப்பட்டு ஓய்வில் இருந்தார் அப்போது கூட சுல்தான் முடிக்கப்படவே இல்லை, ஏன்?

#பின்னர் அவசரமாக ராணா படம் துவக்கப்பட்டு பூஜை அன்றே உடல் நலன் பாதிக்கப்பட்டு  சிகிச்சைக்கு பின் இப்போது தான் , புணர்ஜென்மம் அடைந்து சூப்பர் ஸ்டார் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய படமாக கோச்சடையானை அறிவித்துள்ளார்கள் கூடவே வந்துள்ள இந்தியாவின் முதல் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர் படம் என்ற அறிவிப்பு தான் ஒரு சந்தேகத்தை தூவியுள்ளது.

அது என்னவெனில் உண்மையில் கோச்சடையானில் சூப்பர் ஸ்டார் நடிப்பாரா என்பதே?

ஏன் எனில் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர்  தொழில் நுட்பம் அப்படியானது, அது ஒன்றும் மிக புதிதான நுட்பம் இல்லை ஏற்கனவே இருந்த மோஷன் கேப்சரிங் நுட்பத்தின் நுணுக்கமான அடுத்த கட்டமே ஆகும்.

மோஷன் கேப்சரிங்க்:

ஒரு நடிகரின் உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் சென்சார்கள் பொருத்தி அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக அகச்சிவப்பு கேமிராவில் பதிவு செய்து , அந்த அசைவுகளை கணினி வரைகலை உருவத்துக்கு கொடுத்து செயல்பட வைப்பது. இதற்கென தனி அகச்சிவப்பு கேமராக்கள் , கணினி , மென்பொருள் எல்லாம் பயன்ப்படுத்துவார்கள், ஆனால் இதில் பெறப்படும் சித்தரிப்பு அத்தனை தத்ரூபமாக இருப்பதில்லை. அசைவுகள் செயற்கையாக இருக்கும்,எனவே தனியாக அசைவுகளை மீண்டும் அனிமேஷனில் கட்டுப்படுத்துவார்கள்.

இந்த குறைப்பாட்டை நீக்க வந்தது தான் பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங்க், இது ஒன்றும் அச்சு அசலாக ஒருவரின் நடிப்பை பிரதிபலித்து படமாக்கவில்லை. மேம்பட்ட சென்சார்கள்  கூடுதலான எண்ணிக்கையில் , எளிதாக ,நேர்த்தியாக அசைவுகளை கணினிக்கு மாற்ற ஒரு உடையோடு கூடிய சென்சார் என ஒரு முன்னேற்றம் அவ்வளவே.இம்முறையில் முன்பை விட சிறப்பாக காட்சியமைப்பு வரக்காரணம் புதிய மென்பொருளும் ஹை டெபனிஷன் கேமிராவுமே.

பெர்பார்மென்ஸ் கேப்சர் செய்யப்பயன்படும் லைக்ரா உடை.


பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் வந்த முதல் படம் அவதார் என்று சொல்லிக்கொண்டாலும் அதுவல்ல முதல் முயற்சி மேட்ரிக்ஸ் படமே ,அதே சமயத்தில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் இல் முற்றிலும் கணினி வரைகலைப்பயன்ப்படுத்தி செய்தார்கள் கோலும் என்ற கதாபாத்திரத்தை. பின்னர் கிங்காங்க், போலார் எக்ஸ்பிரஸ், ஸ்பைடர் மேன் -2 வில் எல்லாம் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள்.

உண்மையான பெர்ஃபார்மென்ச் கேப்சரிங் செய்யும் கருவி எதுவெனில் வழக்கமான திரைப்பட கேமிரா தான், அது தானே நடிகர்களின் பெர்ஃபார்மன்சை நேரடியாக பதிவு செய்கிறது!

 அவதார் படத்தில் அசைவுகளை இணைக்கும் காட்சி:

இம்முறையில் முழுக்க கணினி வரைகலை உருவத்துக்கோ அல்லது நிஜமான ஒரு நடிகரை ஒத்த உருவத்தினை கணியில் உருவாக்கியோ உயிர்க்கொடுக்க முடியும்.மேலும் காட்சியில் இருக்கும் சூழலை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம், வெளிப்புற படபிடிப்பு , இன்ன பிற அரங்க படப்பிடிப்பு எல்லாம் தனியாக பிடித்துக்கொண்டு அதில் கதாப்பாத்திரங்களை புகுத்திக்கொள்வார்கள்.எனவே ஸ்டூடியோவை விட்டு நடிகர்கள் போகாமலே மொத்த படமும் எடுக்க முடியும்.

உடல் அசைவுகளை தெளிவாக காட்ட உடலோடு ஒட்டிய லைக்ரா மோஷன் கேப்சர் உடைப்பயன்படுத்துவார்கள் ,அதில் சென்சார்கள் பதிக்கப்பட்டிருக்கும். முக அசைவுகளை படம் பிடிக்க ஒளிப்பிரதிப்பளிக்கும் வண்ணத்தினை கொண்டு முகத்தில் தேவையான இடங்களில் மார்க் செய்வார்கள். முன்னர் ஒளி உமிழும் எல் ஈ.டி பயன்ப்படுத்தியதால் அதிக மார்க்கர்களை உருவாக்க முடியவில்லை.

பின்னர் அகச்சிவப்பு கேமிராவில் படம் பிடித்து கணினிக்கு அனுப்பிவிட்டால் , தேவையான உருவத்துடன் இணைத்து ஒருங்கிணந்த அசைவுகளை கொடுத்துவிடும்.

ஸ்பைடர் மேன் -2 ல் முதுகில் எந்திரக்கரங்களுடன்ன் ஒரு விஞ்ஞானி பாத்திரம் டாக்டர் ஆக்டோபஸ் என வரும் ,சில குளோஸ் அப் காட்சிகள் தவிர மற்றதெல்லாம் பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்கில் எடுக்கப்பட்ட 3டி மாடல் தான் அப்பாத்திரம்.

முகத்தினை மறைக்காமல் நிஜ நடிகரின் முகத்தினை, பாவனைகளையும் 3டி மாடலுக்கு கொண்டு வந்திருப்பார்கள்.


தத்ரூபமாக முகத்தினைக்காட்ட அரைவட்ட வடிவில் விளக்குகள் பொருத்தி (லைட் ஸ்டேஜ்) அதன் நடுவே நடிகரை உட்கார வைப்பார்கள் பின்னர் அனைத்து கோணங்களிலும் சுழன்று ஹை டெபனிஷன் கேமிராவில் 8 நிமிடத்தில் 2000 படங்கள் எடுக்கப்படும் அதனை கணினியில் உருவாக்கிய 3டி மாடலின் உருவத்தில் முகம் இருக்கும் இடத்தில் பொருத்திவிடுவார்கள். இப்போது 3டி உருவத்தினை எந்தக்கோணத்தில் திருப்பினாலும் அதற்கேற்ப முகம் தெரியும். இதெல்லாம் மென்ப்பொருளே கவனித்துக்கொள்ளும்.ஸ்பைடர் மேன் படத்தில் முகமூடியுடன் வரும் ஸ்பைடர் மேன் எல்லாமே 3டி மாடலே.முகம் தெரியாத நிலை என்பதால் இன்னும் எளிதான வேலை.

முகத்தினை தத்ரூபமாக படம் பிடித்தார் போல முழு உடலையும் கூட செய்ய முடியும், ஆனால் அதை கணினி வரைகலையில் செய்துக்கொள்வார்கள் ஏன் எனில் உண்மையில் குள்ளமாக,ஒல்லியான உருவம் உள்ள நடிகரை உயரமாக ,சிக்ஸ் பேக்குடன் என எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளவே.



இந்த முறையிலே மேட்ரிக்ஸ் படத்தில் வரும் வில்லன் ஏஜன்ட் ஸ்மித் ஒரே நேரத்தில் 100 பிரதிகளாக வரும் காட்சியில் 100 வெவ்வேறு ஆட்கள் தான் நடித்திருந்தார்கள், பின்னர் முகத்தினை மட்டும் இப்படி பிடித்து பொறுத்திவிட்டார்கள்,அப்போது இதற்கு யுனிவர்சல் கேப்சர் என்று பெயர்.அப்போது 5 கேமிராவைக்கொண்டே அனைத்து கோணத்திலும் தெரிவது போன்று முகபாவங்களை படம்ப்பிடித்துக்கொண்டார்கள்.சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து சண்டைப்போட்டதெல்லாம் 3டி மாடல்களே.


ஆண்டி செர்கிஸ்

முழுக்க கணினியில் உருவாக்கிய உருவமான கோலும்( Gollum ), பின்னர் பிளானெட் ஆப் தி ஏப்ஸ் படத்தில் கொரில்லாவிற்கு எல்லாம் உடல்,முக அசைவுகளை பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் ஆண்டி செர்கிஸ் என்பவரே கொடுத்தார்.இதற்காக உடல் அசைவுகளை 52 கேமிராவிலும்,   முக அசைவுகளை 20 கேமிராவிலும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் பதிவாக்கியுள்ளார்கள்,இதனாலே அந்த 3டி கணினி வரைகலை கொரில்லா தத்ரூபமாக காட்சியளித்தது.மேலும் நுணுக்கமாக முக அசைவுகளை படம் பிடிக்க தலையில் கேமராவுடன் இணைந்த கவசம் அணிந்துக்கொள்வார்கள்.




போலார் எக்ஸ்பிரஸ் படத்தில் டாம் ஹேங்ஸ் 4 கதாபாத்திரங்களை அவரே இத்தொழிட்பத்தின் மூலம் நடித்திருப்பார்.

டாம் ஹேங்ஸ் அசைவுகள் 3டி உருவத்திற்கு கொடுப்பதை விளக்கும் படம்

கியுரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் என்ற படத்தில் வயதாக ஆக குழந்தையாவது போன்ற பாத்திரத்தில் பிராட் பிட் இந்தொழில்நுட்பத்தின் படி பல உருவங்களுக்கு முக பாவனை மட்டுமே கொடுத்து நடித்திருப்பார்.ஹி..ஹி இந்த படத்தின் உல்டா தான் அமிதாப் நடித்த ஃபா!


அவதார்,டின்டின் போன்ற படங்களின் காலத்தில் கணினியின் திறனும், மென்பொருளும் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டதால் சிறப்பாக எடுக்க முடிந்தது.மேலும் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் செய்த நடிப்பை உடனுக்குடன் சூழலுடன் பொருத்தியும் பார்க்கும் வசதியுள்ள வேகமான கணிப்பொறி,மென்பொருளும் பயன்ப்படுத்தப்பட்டது.

அவதார் படப்பிடிப்பில்.

இது போன்று உருவம் மட்டும் கிடைத்து விட்டால் அதற்கான நடிப்பை இயல்பாக அடுத்தவர்களை வைத்துக்கொடுக்க முடியும் என்பதால் இறந்த நடிகர்களையும் நடிக்க வைக்கலாம் , ஆனால் கொஞ்சம் கவனமாக ,செய்ய வேண்டும் ஏன் எனில் அனைத்துக்கோணங்களிலும் முகத்தின் படம் கிடைக்காது என்பதால் ஏதோ ஒரு கோணத்திலேயே காட்ட வேண்டியது இருக்கும்.

மேலும் இனிமேல் ஒரு நடிகர் கேமிரா முன் நிற்காமலே அவரது கணினி முப்பரிமாண உருவத்தை வைத்து ,இன்னொருவரை நடிக்க வைத்து படம் எடுக்கவும் முடியும்.

இப்போது பதிவின் தலைப்பின் பொருள் புரிந்திருக்குமே, கோச்சடையானில் சூப்பர் ஸ்டாரே அவரது உருவத்துக்கு நடிப்புக்கொடுக்க போகிறாரா அல்லது அவரைப்போலவே இமிடேட் செய்யக்கூடிய ஒரு சிறந்த மிமிக்ரி நடிகரை வைத்து பெர்ஃபார்மென்ஸ் கேப்சர் செய்வார்களா என்பதே எனது கேள்வி. குரலை மட்டும் டப்பிங்கில் கொடுத்து விட்டால் போதும் கண்டுப்பிடிக்க முடியாது.

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் விரைவாக கோச்சடையானை துவக்கியதே இப்படியெல்லாம் கேள்விகளை உருவாக்குகிறது.ஏற்கனவே சுல்தான் அனிமேஷன் படமே இது போல ரஜினியின் முகம்,உருவத்தினை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மோஷன் கேப்சரிங்கை வேறு ஒருவர் மூலம் செய்து படமாக்க திட்டமிடப்பட்டது, இப்போது அதே வேலை பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் என்ற பெயரில் கோச்சடையானிலும் நடக்கலாம்,பழைய கள் புதிய மொந்தை :-))

சுல்தான் அனிமேஷன்  படத்திற்காக எடுக்கப்பட்ட முகம், உடல் ஆகியவற்றின் டிஜிட்டல் பிரதிகளை பயன்ப்படுத்திக்கொண்டாலே போதும் மீண்டும் புதிதாக 3டி உருவத்தினை உருவாக்க கூடத்தேவை இல்லை. இம்முறை சொதப்பாமல் படத்தினை முடிக்க வேண்டுமென்பதால் தான் இம்முறை அனுபவம் வாய்ந்த கே.எஸ்.ரவிகுமாரை ,ஸ்டூடியோவில் நன்றாக வேலை செய்யவும் , திரைக்கதையை கவனித்து வேலையை முடிக்கவும் கோச்சடையானில் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.


--------

பின்குறிப்பு:

படங்கள் உதவி: கூகிள் படங்கள்,IMDB,AWN தளங்கள், நன்றி!